Friday, April 1, 2016

துக்ளக் ஆண்டு விழா தொடங்கியது எப்படி ...

துக்ளக் ஆண்டு விழா தொடங்கியது எப்படி ...
வாசகர்களை கூட்டி ஆண்டுக்கொருமுறை விழா நடத்தி அவர்களுடைய விமர்சனங்களுக்கு வழி செய்து அவற்றுக்கு பதில் அளித்து ஓரு கருத்து பரிமாற்றத்துடன் துக்ளக் நடத்தி வருவது பலருக்கு வியப்பாக இருக்கிறது.
நல்ல ஜடியாக்கள் யோசனையின் மூலம் என்க்கு வருவதில்லை அகஸ்மாத்தாக வந்து விடுகின்றன.இந்த ஆண்டு விழா ஏற்ப்பாடும் அப்படித்தான்.
பத்திரிக்கை தொடங்கிய முதல் வருடமான 1970 ல் ஏப்ரல் மாத்த்தில் வாசகர்களோடு ஏதாவது ஏப்ரல் ஃபூல் விளையாட்டு விளையாடலாம் என நினைத்தேன்.துக்ளக்கை தொடர்ந்து நடத்துவதா வேண்டாமா என என முடிவு அறிய வேண்டிய நேரம் வந்து விட்டது.இது பற்றி வாசகர்கள் கருத்தை அறிய விரும்புகின்றேன்.ஏப்ரல் 1 மாலை 6.30 மணிக்கு சென்னை உட்லண்ட்ஸ் ஒட்டலில் கூட்டம் நடக்கும் வாசகர்கள் வந்திருந்து தங்கள் கருத்துகளை தெரிவிக்கவும் என துக்ளக்கில் அறிவித்து விட்டேன்.
என் நினைப்பு இது தான்.ஏப் 1 கூட்டம் என்ற உடனே இது விளையாட்டு என புரிந்து கொண்டு யாரும் வரமாட்டார்கள்,அல்லது 10 அல்லது 15 பேர் இந்த விளையாட்டுக்கு பலியாவர்கள் அவர்களை சமாளித்து விடலாம் என நினைத்தேன்..
அதே போல அன்று மாலை ஒட்டல் வாசலில் துக்ளக்கில் வந்த அறிவிப்பு ஏப்ரல் ஃபூல் தமாஷ் ஏமாந்தவர்கள அஅனைவரும் வீட்டிற்க்கு போய் சேருங்கள் என்ற பலகை தொங்க விடபட்டது.
மாலை 6 மணிக்கு என்க்கு போன் வந்தது.நீ எழுதி வைத்த போர்டை காட்டினால் இங்கு இருக்கும் கூட்டம் எங்களை உதைக்காமல் விடமாட்டாங்க.அதானால் போர்டை எடுத்து உள்ளே வைத்து விட்டோம்.கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை மரியாதையாக வந்து சேர் என அழைப்பு வந்தது..
சரியான வம்பில் மாட்டிக் கொண்டோம் என புரிந்தது.துக்ளக் பிரசுரகர்த்தர் வெங்கட்ராமனையும், ஆசிரியர் குழுவில் சிலரையும் அழைத்து கொண்டு கிளம்பினேன்.நல்லது நடக்க மோகிறது என்றால் தனியாக போகலாம்.தர்ம சங்கடத்தை தனியாக அனுபவிப்பானேன்? என கூடவே இவர்களையும் அழைத்து சென்றேன்.
ஒட்டல் மைதானத்தில் கூடியிருந்த மக்கள் உணர்ச்சி வசப்பட்டு வரவேற்ப்பு அளிக்க அந்த மிதப்பில் மேடைக்கு போய் சேர்ந்த நான் கூட்டத்தை சமாளிக்க துக்ளக்கில் அரசியல் வேண்டுமா வேண்டாமா என ஆசிரியர் குழுவில் இருந்த சுந்தரம் ஆரம்பித்து வைக்க,ஒவ்வோரு வாசகராக வந்து தங்கள் அபிப்ராயம் மற்றும் துக்ளக் மீதான விமர்சனத்தையும் நாட்டு அரசியல் பற்றிய தங்கள் கருத்தையும் முன் வைத்தார்கள் ..ஒவ்வோருவரும் பேசி முடித்தவுடன் அவரவரவர்க்கு பதில் சொன்னேன்.அந்த கூட்டம் ஒரு விவாத மேடையாக உருமாறியது.
அரசியல் விமர்சனத்தை தொடரவேண்டும் என அனேக வாசகர்களும், துக்ளக்கின் துணிவை அனைவரும் பாராட்ட துக்ளக்கோடு தங்களுக்கும் இருந்த் கருத்து வேறுபாட்டை அவரவர் விவரிக்க அதற்க்கு நான் பதில் கூற கூட்டம் சுமூகமான முடிவை நெருங்கியது.
ஏப்ரல் ஃபூல் செய்யலாம் என்று நினைத்து தான் இந்த் கூட்டத்தை கூட்டினோம்.இத்தனை பேர் கூடியதும் கூடியதும் வேறு வழியில்லாமல் கருத்தரங்கமாகவே மாற்றிவிட்டேன்.விளையாட்டாக ஆரம்பித்தாலும் மிகவும் ஆழமான விமர்சனங்களோடு இது முடிந்திருக்கிறது என று நன்றி கூறி முடித்தேன்.
இந்த கூட்டத்தினால் ஏற்பட்ட அனுபவத்தின காரணமே ஆண்டு தோறும் நடக்கும் துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சி...
சோ அவர்களின் அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் ...

Tuesday, January 12, 2016

காஷ்மீரும் நேருவும் — ஆர். நடராஜன்

காஷ்மீரும் நேருவும் — ஆர். நடராஜன்
பொய்களுக்குப் பூசப்படும் முலாம் வெகுகாலம் தாக்குப் பிடிப்பதில்லை. காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவின் முதல் பிரதமரான நேரு தவறு செய்தார் என்ற உண்மையை, காங்கிரஸ்காரர்கள் பாடுபட்டு இத்தனை வருடங்கள் மூடி மறைத் திருந்தாலும், மும்பையிலிருந்து வெளிவரும் அவர்களது ‘காங்கிரஸ் தர்ஷன்’ என்ற கட்சிப் பத்திரிகையே இப்போது உண்மையை உடைத்து விட்டது. இதற்காக அந்தப் பத் திரிகையின் ஆசிரியர் நீக்கப்பட்டார்.
இந்திரா காந்தியின் மருமகள் என்று சோனியா சொல்லிக் கொள்வது சரி தான். இவரது மாமியார் இப்படித்தான் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த சலபதி ராவ் என்ற அறிஞரை, ஒரு விழாவின் போது நீக்கினார். பரம்பரையாகக் கட்சித் தலைமை, பரம்பரையாக கட்சிப் பத்திரிகையில் தலையீடு, பரம்பரையாக ஊழியர்களைக் கழற்றி விடுதல் ஆகியவை காங்கிரஸ் கட்சியின் மாண்புகளில் சில.
காங்கிரஸ் பத்திரிகை நேருவைப் பற்றித் தவறான தகவலைக் கொடுத்து விட்டது என்பவர்களுக்கு, வரலாறு தெரியாது. காஷ்மீர் மகாராஜா ஹரிசிங் இந்தியாவுடன் இணையத் தயங்கிய போது, உள்துறை மந்திரியாக இருந்த வல்லபாய் படேல், குருஜி கோல்வால்கரைத் தூதுவராக அனுப்பி மகாராஜாவின் சம்மதத்தைப் பெற்றார். மற்ற மாநிலங்களை இந்திய யூனியனுடன் இணைக்க படேல் பாடுபட்டார். காஷ்மீர் பொறுப்பை நேரு ஏற்றுக் கொண்டார். அதில் படேலையும், அம்பேத்கரையும் ஒதுக்கி விட்ட நேருவுக்கு ஏதோ உள்நோக்கம் இருந்திருக்கிறது. அரசியல் சாஸனம் உறுதி செய்யப்படும் முக்கியமான கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், அவர் வெளிநாட்டுக்குச் சென்றார்.
தான் பிரதமராவதற்காகப்பாகிஸ்தான் உருவாகப் போராடிய ஜின்னாவைப் போலவே, ஷேக் அப்துல்லாவும் தான் காஷ்மீர் பிரதமராவதற்காக (அப்போதைய காஷ்மீர் முதல்வர் பதவியின் பெயர் பிரதமர்), காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து கேட்டார். சட்டத்துறை மந்திரியான அம்பேத்கர், அதற்கு உடன்படவில்லை. ஆனால், நேரு மறைமுகமாக ஆதரவு தந்தார். இதற்கு மவுண்ட்பேட்டன் பிரபுவும் உடந்தை என்பதை, வி.சங்கர் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எழுதிய புத்தகத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
தன்னைச் சந்திக்க வந்த ஷேக் அப்துல்லாவிடம், ‘இந்தியா, காஷ்மீரைப் பாதுகாக்க வேண்டும்; பிற மாநில மக்கள் பெறும் சலுகைகளும், உரிமைகளும் காஷ்மீருக்கு வேண்டும் என்று கேட்கும் நீங்கள், அங்கே பிற மாநிலத்தவருக்கு எந்த உரிமையும் இருக்கக் கூடாது என்கிறீர்கள். இதை நான் ஏற்க முடியாது’ என்று அம்பேத்கர் கறாராகச் சொன்னார்.
அம்பேத்கரின் இந்த நிலைப்பாட்டை ஒதுக்க நினைத்த நேரு, அரசியல் சாஸனத்தில் காஷ்மீரின் உரிமைகள், சலுகைகள் பற்றிய வாசகங்களைத் தன் நண்பரான கோபாலசாமி ஐயங்கார் எழுதட்டும் என்றுசொல்லி விட்டார். ஐயங்கார் காஷ் மீரின் முன்னாள் மந்திரி. அவர் தன் பூர்வாசிரம விசுவாசத்தைக் காட்டினார். ஒரு காலத்தில் ஷேக் அப்துல்லாவுக்கு வக்கீலாக இருந்தவர்நேரு. அவரும் தன் கட்சிக்காரருக்கு விசுவாசத்தைக் காட்டினார். இதனால் பாதுகாப்பு, அயலுறவு, நாணயப் புழக்கம், தகவல்தொடர்பு தவிர, காஷ்மீருக்கு மத்திய அரசுடன் வேறு நிர்வாக நிர்பந்தம் ஏதுமில்லை.
ஒரு தனி நாட்டின் அந்தஸ்த்தைப் பெற்றுள்ள காஷ்மீரில் பிற மாநிலத்தவர்கள் சொத்து வாங்க முடியாது.
நேருவைப் பற்றிக் காங்கிரஸ் விசுவாசிகள் மகிமைமிக்க புராணங்களை எழுதியிருந்தாலும், ஒரு உண்மையைப் பலர் கண்டு கொண்டதில்லை. தன் பதவிக் காலம் நெடுகத் தனக்குப் பிடித்தமானவர்களுக்குக் கொடுத்த மதிப்பை, தார்மீக நியதிகளுக்கும் அரசியல் நெறிமுறைகளுக்கும் நேரு கொடுக்கவில்லை.
நேரு செய்த அரசியல் குழப்பத்தின் விளைவுகாஷ்மீர், அவர் காலத்திய வெளியுறவு, பாதுகாப்புத் துறையின் மெத்தனம் ஆகியவை சீனாவுடனான போர் ஏற்படக் காரணமாக அமைந்தன. தீர்க்கதரிசனமில்லாத பொருளாதாரக் கொள்கையின் விளைவினால் தொழில்துறை மந்தமானது. தலைவர் செய்யும் தவறுகளுக்கு, தேசம் துன்பத்தை அனுபவிக்கும் என்பதற்குச் சரியான உதாரணம் நேரு.
— ஆர். நடராஜன் (Thuglak)

Friday, December 26, 2014

இதுதான் ‘துக்ளக்’கின் தர்மம்! (திரும்பிப் பார்க்கிறோம் – 21)

இதுதான் ‘துக்ளக்’கின் தர்மம்! (திரும்பிப் பார்க்கிறோம் – 21)
துக்ளக் பத்திரிகையின் தர்மம் என்ன என்பது பற்றி, அதன் ஆசிரியன் என்ற முறையில் நான் எழுதுவதற்கு இது சரியான நேரம்தான் என்று நினைக்கிறேன். ஆகையால் சுருக்கமாகச் சொல்லுகிறேன்.
துக்ளக் பத்திரிகையில் நான் மனம் போன போக்கில் எழுதுகிறேன் என்று சிலர் சொல்வதை, நான் ஒரு பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறேன். மற்றவர்கள் மனம் போகும் போக்கில் எல்லாம் எழுதி, அவரவர் மனமாற்றங்களுக்குத் தக்கவாறு மாறும் தர்மம் அல்ல துக்ளக்கின் பத்திரிகை தர்மம். காற்றடிக்கும் திசையில் எல்லாம் பறக்கும் தூசியாகத் திகழுவது அல்ல துக்ளக்கின் பத்திரிகை தர்மம்.
என் மனம் போன போக்கில் நான் எழுதுகிறேன் என்றால், ஏனோ தானோ என்ற போக்கில் அல்ல. மனம் என்பதற்கு, ‘மைன்ட்’ என்ற அர்த்தமும் உண்டு என்பதை வைத்துக் கொண்டு பார்த்தால், அதில் அறிவுபூர்வமான அணுகுமுறையும் அடக்கமாகிறது. பல பிரச்னைகளைப் பற்றி என் மனம், என் அறிவு என்ன நினைக்கிறதோ அந்த நோக்கில் எழுதுவதைத்தான் ‘மனம்போன போக்கில் எழுதுகிறான்’ என்று மற்றவர்கள் குறிப்பிடுவதாக எடுத்துக் கொண்டு மகிழ்கிறேன்.
...எதிர்த்து வரும் வாதங்களிலும், கேட்டுக் கொள்ள வேண்டியவை இருக்கலாம் என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்.
அது ஒருபுறமிருக்கட்டும். ‘பல விஷயங்களில் துக்ளக்கின் கருத்து என்ன?’ என்று கேட்டுக் கடிதங்கள் அன்றாடம் வந்த வண்ணம் இருக்கின்றன. ‘இதைப் பற்றி ஏன் எழுதவில்லை?.... அதைப் பற்றி என்ன கருத்து?... இதற்கு ஒரு விளக்கம் கொடுக்கக்கூடாதா?’ என்றெல்லாம் பல வாசகர்கள் அவ்வப்பொழுது எழுதிக் கொண்டேயிருக்கிறார்கள். அப்படி எழுதுபவர்கள் எல்லோருக்குமாகச் சேர்த்து, ஒரு சில விஷயங்களை மேலெழுந்த வாரியாகக் கூறுகிறேன். துக்ளக்கின் போக்கையும், துக்ளக்கில் இடம் பெறுபவை, இடம் பெறாதவை பற்றியும் மேலும் முழுமையாகப் புரிந்து கொள்ள இது உதவும் என்று நம்புகிறேன்.
பலருடைய பொதுவாழ்வுப் பிரச்னைகளைக் கிண்டல் செய்து, கண்டித்து, விமர்சித்துள்ள நான், எந்த ஒரு தனி மனிதருடைய தனி வாழ்வையும், எள்ளளவும் கூட விமர்சித்ததே கிடையாது. இது ஒரு கௌரவம்.
குறை கூற எனக்கு வக்கு இருக்கும்போதுதான் குணத்தைக் கூற என் பேனா தானாகவே இயங்க ஆரம்பிக்கிறது. இது ஒரு விளக்கம்.
வீழ்ந்த நிலையில் இருக்கும் ஒருவனைப் பார்த்து, அவன் பதில் சொல்ல முடியாத விஷயத்தைக் கூறி வாய்ச் சவடால் அடிப்பது என் பழக்கமல்ல. இது ஒரு வியாக்கியானம்.
வளரும் தீமைகளைக் கண்டிக்க வாய்ப்பிருந்தால் கண்டிக்கத் தவறி விடுவது, மடத்தனம் என்று நினைக்கிறேன். இது ஒரு வாதம்.
சில தீமைகளைச் சுட்டிக் காண்பிக்க முடியாமல் போனாலும் – அம்மாதிரி தீமைகளை ஆதரிக்காமலாவது இருக்கிறேன். இது ஒரு திருப்தி.
‘துக்ளக்கில் தெரிவிக்கப்பட்ட அச்சங்கள் எத்தனை மெய்த்து விட்டன?’ என்று நினைத்துப் பார்க்கிறேன். இதில் பெருமையில்லை, வருத்தம்தான்.
‘துக்ளக்கில் தெரிவிக்கப்பட்ட விருப்பங்கள் எத்தனை இன்னமும் ஈடேறாமல் இருக்கின்றன?’ என்றும் எண்ணிப் பார்க்கிறேன். இதில் அவமானம் இல்லை. வேதனைதான்.
எது எப்படி இருந்தாலும் லாபத்திற்காகவோ, அச்சத்தினாலோ எதையும் நான் எழுதியதே கிடையாது. இதில் மட்டற்ற மகிழ்ச்சி.
என்னைவிட எல்லா வகையிலும் பல மடங்கு உயர்ந்ததாக துக்ளக் இருக்கிறது. இது ஒரு சாதனை.
துக்ளக்கின் வாசகர்களில் பலர் துக்ளக்கை முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இது ஒரு அதிர்ஷ்டம் மட்டுமல்ல, பலமும் கூட.
என்றென்றும் ஆசிரியனை விட பத்திரிகை உயர்ந்ததாகவும், வாசகர்களின் எண்ணிக்கையை விட அவர்களுடைய அறிவு அதிகமானதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இது ஒரு நல்லெண்ணம்.
என்னைப் பொறுத்தவரை, துக்ளக்கின் தர்மங்களைச் சுருக்கமாகச் சொல்லப் போனால் இப்படித்தான் சொல்ல முடியும்.
நல்ல முயற்சிகள் உடனடியாகப் பலனிக்காமல் போனாலும், நாளாவட்டத்தில் வெற்றி கண்டே தீரும். இப்படிச் சொல்லும்போது நம்பிக்கையை விட, ஆசையே அதிமாக இருக்கிறது.
- சோ
– (15.10.76 துக்ளக் தலையங்கத்திலிருந்து..)

Friday, September 26, 2014

கேள்வி – பதில்
*********************
கே: ‘ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலுமாக ஒழிப்போம்’ என்று அதிபர் ஒபாமா சபதம் போட்டுள்ளாரே? இது சாத்தியம் என்று எண்ணுகிறீர்களா?
ப: இது சாத்தியமானதுதான் என்று, இந்த விவகாரத்தை நன்கு புரிந்து கொண்ட சில அயல்நாட்டு விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். இப்படிப் பலம் பெற்று திகழ்வதற்கான காரணங்களில் அமெரிக்காவும் ஒன்று. ஸிரியாவில் ஆட்சி மாற்றத்துக்கு எதிராக ‘மக்கள் கலகம்’ தோன்றியபோது, இந்தத் தீவிரவாதிகள் அதில் கலந்து கொள்ள, அப்போது ஸிரியா அதிபரை எதிர்த்த அமெரிக்கா, இவர்களுக்கு உதவிகள் செய்தது. அதனுடைய பலன் அமெரிக்காவை மட்டுமல்ல, பல்வேறு நாடுகளை இன்று அச்சுறுத்துகிறது. தீவிரவாதத்தை ஊக்குவிப்பது இப்படித்தான் போய் முடிகிறது.
 பிந்தரன் வாலேயை இந்திரா காந்தி தூண்டி விட்டார் – அந்தப் பிந்தரன் வாலே ஆதரவாளர்களாலேயே அவர் கொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசு பல வகைகளில் உதவியது – ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டார். தீவிரவாதத்தை யாருக்கு எதிரானது என்று பார்க்காமல், அந்தக் கொடுமை ஒழிக்கப்பட வேண்டியதுதான் என்ற தீர்மானத்துடன் எல்லா நாடுகளும் இயங்க வேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு காண வழி பிறக்கும்.

Tuesday, August 12, 2014

ஆவணி அவிட்டம் என்பது என்ன?

கேள்வி : இந்த ஆவணி அவிட்டம் என்பது என்ன? பழைய பூணூலை கழற்றி விட்டு, புதிய பூணூலைப் போட்டுக் கொள்ள ஒரு தினம். அதுதானே ஆவணி அவிட்டம் என்பது? அதாவது பூணூலை மாற்றுகிற தினம்தானே அது?
சோ : நீங்கள் சொல்கிற மாதிரிதான் இப்போது ஆகிவிட்டது. ஆனால், ஆவணி அவிட்டம் என்பது அதுவல்ல. ஆவணி அவிட்டம் என்று சொல்லப்படுகிற சடங்கின் உண்மையான பெயர் உபாகர்மா. உபாகர்மா என்றால் ஆரம்பம் என்று அர்த்தம். ச்ராவண மாதத்தில் பிரம்மதேவனுக்கு வேதம் கிட்டியது; அதாவது உபதேசம் ஆகியது. அந்த தினம், ஆவணி மாதம், அவிட்ட நக்ஷத்திரம். அதனால்தான் இதற்கு ‘ஆவணி அவிட்டம்’ என்ற பெயரும் வந்தது. அப்போது பிரம்மனுக்கு வேதம் கிட்டியதால், அவனுக்கு அது ஆரம்பம் ஆகியது. அந்த ஆரம்பத்தை இங்கே மனிதர்கள் கொண்டாடுகிறார்கள். இது வருடா வருடம் செய்யப்படுகிறபோது, வேதத்திற்குச் செய்யப்படுகிற மரியாதையாக இது கருதப்படுகிறது.
வேதத்திற்கு ஆண்டு விழா என்றும் இதைச் சொல்லலாம். ப்ரம்ம தேவனுக்கு உபதேசமாகிய தினம்; அதிலிருந்து வழி வழியாக மனிதர்களுக்குக் கிடைத்தது. அதனால் ஒவ்வொரு வருடமும் அந்த தினத்தைக் கொண்டாடுகிறோம். அது ஆண்டு விழா.
கேள்வி : ஆரம்பம் என்று சொன்னீர்கள். அது என்றோ ஆரம்பமாகி விட்டது. திரும்பவும் ஒவ்வொரு வருடமும் அதைப் புதிதாக ஆரம்பிப்பானேன்? அது எதற்கு? இது பகுத்தறிவுக்கு ஏற்ற விஷயமாக இல்லையே?
சோ : இது பகுத்தறிவுக்கு ஏற்ற விஷயம் இல்லை என்கிறீர்கள்; சரி, இருக்கட்டும். தேசிய ஒருமைப்பாட்டுக்காக – உறுதிமொழி, பிரமாணம் என்று வருடா வருடம் எல்லோரும் எடுத்துக் கொள்கிறார்கள். ‘போன வருடம்தான் இந்த உறுதிமொழி, பிரமாணம் எல்லாம் எடுத்தாகி விட்டதே! அதே தேசம்தான் இருக்கிறது; அதே பிரமாணம்தான் இது. அதை எதற்கு இன்னொரு முறை செய்ய வேண்டும்? தேசம் போய் விட்டதா? அல்லது பிரமாணம்தான் தீர்ந்து விட்டதா? அந்த பிரமாணத்திற்கு ஒரு வருடம்தான் ஆயுளா? ஏன் இதை திரும்பவும் வருடா வருடம் செய்ய வேண்டும்? ஏன்? அந்தப் பிரமாணம் ஆறு மாதத்திலேயே தீர்ந்து போகாதா? அல்லது மூன்று மாதத்தில் தீர்ந்து போகாதா? அல்லது தினம் தினம் அந்த பிரமாணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாதா? ஏன், இப்படி வருடத்திற்கு ஒருமுறை?’ என்றும் கேட்கலாம். ஆனால், அப்படி யாரும் கேட்பதில்லை. அது எப்படி பகுத்தறிவுக்கு உகந்ததாக இருக்கிறதோ, அதே மாதிரிதான் இதுவும்.
தேசம் என்கிற சிந்தனை, ஒருமைப்பாடு என்கிற சிந்தனை ஆகியவற்றை நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்கிறோம். அதற்காக இதைச் செய்கிறோம். அதே மாதிரிதான் இந்த உபாகர்மாவும். இந்த சிந்தனை, வேதம் எவ்வளவு உயர்வானது என்பது பற்றியது. ப்ரம்ம தேவனுக்குக் கிடைத்த தினம் பற்றியது. அங்கிருந்து நமக்கு அது கிடைத்தது என்ற விஷயம் பற்றியது. அந்த மாதம், அந்தத் தேதியில் – அதாவது ஆவணி மாதம் அவிட்ட நக்ஷத்திரத்தில் நாம் இதையெல்லாம் நினைத்துக் கொள்கிறோம். சொல்லப் போனால், இது தேசிய ஒருமைப்பாட்டு பிரமாணத்தை விட, பகுத்தறிவுக்கு உகந்த விஷயம்.
ஏனென்றால், தேசம் என்பது, என்றோ உண்டாகி விட்டது. ஒருமைப்பாடு என்பதும் என்றோ உண்டாகி விட்டது. ஆனால், தேசம் பிறந்த நேரத்திலோ, ஒருமைப்பாடு உண்டான சமயத்திலோ, இந்த பிரமாணத்தை நாம் எடுத்துக் கொள்வதில்லை. இந்த உபகர்மாவை எடுத்துக் கொண்டால் பிரம்மனுக்கு அது எப்போது உபதேசமாகியதோ, எப்பொழுது பிரம்மனுக்கு வேதம் கிட்டியதோ, அந்த மாதம், அந்த தினம் எது என்று பார்த்து, அந்த தினத்தில் நாம் இங்கே அந்தச் சடங்கைச் செய்கிறோம். அன்று நமக்கு வேதம் பயில்வது மீண்டும் ஆரம்பம்.இது பிராமணர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்ட விஷயம் என்று நினைத்து விடக்கூடாது. உபநயனம் என்பது முதல் மூன்று வர்ணத்தாருக்கும் உண்டு. அதாவது பிராமண, க்ஷத்ரிய, வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர்களுக்கு உபநயனம் உண்டு. அவர்கள் மூவருமே வருடா வருடம் இந்த ‘ஆவணி அவிட்டம்’ என்கிற உபாகர்மாவைச் செய்ய வேண்டும். இதை வெறும் பூணூலை மாற்றிக் கொள்கிற விஷயமாகக் கருதி விடாமல், வேதம் நமக்குக் கிட்டியதை கொண்டாடுகிற தினம் என்று நாம் கருத வேண்டும்.
– தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

Saturday, May 25, 2013

இரண்டாம் டெசோ

சமீபத்தில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் படம் இரண்டாம் டெசோ.கலைஞர் கிரியேசன் சார்பில் மு.கருணாநிதி கதை வசனம் எழுதி இயக்கி அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ள இந்த படம் வசூலில் தோல்வி கண்டாலும் தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு திரைக்காவியம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

படத்தின் கதை இதுதான்;-
சென்னையில் வாழும் ஹீரோ கருணாநிதி,திமுக என்ற வர்த்தக நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திவருகிறார்.டெல்லியில் வசிக்கும் அவருடைய நண்பர்களான சோனியாவும்,மன்மோஹனும் காங்கிரஸ் என்ற வர்த்தக நிறுவனத்தை நடத்திவருகிறார்கள்.கருணாநிதியும்,அவருடைய டெல்லி நண்பர்களும் இணைந்து ஐக்கிய முற்போக்கு கம்பெனி என்ற வர்த்தக நிறுவனத்தை துவக்கி அதையும் வெற்றிகரமாக நடத்தி பெரும் லாபம் குவிக்கிறார்கள்.

இப்படி இவர்களின் வியாபாரம் ஜரூராக போய்க்கொண்டிருக்கும் வேலையில் பக்கத்து தீவுநாடான இலங்கையில் ஒரு யுத்தம் மூள்கிறது.ராஜபக்சே என்பவரது கொலைப்படைகளும்,பிரபாகரன் என்பவரது கொலைப்படைகளும் இந்த யுத்தத்தில் ஈடுபடுகின்றன.ராஜபக்சே கருணாநிதியின் டெல்லி பார்ட்னர் சோனியாவின் நண்பராவார்.சோனியாவின் கணவர் ராஜீவ் என்பவரை பிரபாகரன் கொன்றுவிடுவதால் அவர் ராஜபக்சேயின் உதவியுடன் பிரபாகரனை ஒழிக்க முயல்கிறார்.

கடுமையான யுத்தத்தின் முடிவில் பிரபாகரனும்,அவரது கொலைப்படைகளும் ராஜபக்சேயின் படைகளால் நிர்மூலமாக்கப்பட்டு அழித்தொழிக்கப்படுகின்றன.அப்போது ஏராளமான அப்பாவி மக்களும் கொல்லப்படுகிறார்கள்.இச்சம்பவத்தினால் தமிழ்நாட்டில் கருணாநிதியின் வர்த்தக நிறுவனம் மேல் மக்களுக்கு அதிருப்தியும்,கோபமும் ஏற்படுகிறது.இதை பயன்படுத்தி அவரது போட்டி நிறுவனமான அம்மா &சும்மா என்ற மற்றொரு கம்பெனிக்கு மக்களின் ஆதரவு பெருகுகிறது.

இதனால் கலக்கமடையும் கதாநாயகன் கருணாநிதி மக்களின் ஆதரவை திரும்பபெறவும்,இழந்த நற்பெயரை மீட்கவும் "இரண்டாம் டெசோ"என்ற அமைப்பை உருவாக்குகிறார். தனது டெல்லி நண்பர்களோடு புதிய "வர்த்தக பேரங்களை"நடத்தி,அதன் மூலமாக எவ்வாறு தனது நிறுவனத்தை அவர் மீண்டும் வெற்றி பாதைக்கு திருப்புகிறார் என்பதை சுவாரஸ்யமாய் காட்டுகிறது இந்த இரண்டாம் டெசோ திரைப்படம்.

படத்தின் ஆரம்பமே போர்கள காட்சிதான்.இலங்கையில் உள்ள முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் இந்த காட்சிகள் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளன.ராஜபக்சேவும்,அவரது தம்பி கோத்தபையாவும் ஏராளமான ஆயுதங்களுடன் பிரபாகரனின் கொலைப்படைகளை தாக்க,பிரபாகரனின் படைகள் வீராவேசத்தோடு பாய்ந்து சென்று அப்பாவி தமிழர்களின் முதுகுகளுக்கு பின்னால் ஒளிந்துகொள்ளும் காட்சி பிரமிப்பூட்டுகிறது.இறுதியில்,கொடியவன் கோத்தபைய்யா அப்பாவி தமிழர்களை சுட்டு கொன்றதும் முதுகின் பின்னாலிருந்து வெளிவரும் பிரபாகரன் படையினர் "நாங்கள் சரணடைகிறோம்.எங்களை கொன்றுவிடாதீர்கள்"என்று போர்குணத்தோடு கண்களில் நீர் மல்க கெஞ்சும் காட்சி கல் மனதையும் கலங்க வைக்கிறது.அவர்களின் கெஞ்சல்களை பொருட்படுத்தாமல் கொலைவெறியன் கோத்தபையா ,சின்னஞ்சிறுவர்கள் என்றும் பாராமல் பிரபாகரனின் கொலைப்படைகளை ஈவிரக்கமின்றி சுட்டுகொல்லும் காட்சியில் நம் கண்கள் குளமாகின்றன.பிரபாகரனின் சடலத்தை காட்டும் காட்சியில் அவர் முன்பொருமுறை பேசிய "நானும்,ராஜபக்சேவும் சகோதரர்கள்.எங்கள் பிரச்னையில் தலையிட எந்த நாயுக்கும் உரிமையில்லை"என்ற வார்த்தைகள் பின்னணியில் ஒலிப்பது "டைரக்டர் டச்"!!!

தனது நண்பன் பிரபாகரன் இறந்த தகவல் கிடைத்தாலும் வர்த்தக நலன் கருதி அதை நம்ப மறுக்கும் காட்சியில் கருணாநிதியின் நடிப்பு சற்று நாடகத்தனமாக அமைந்திருக்கிறது.இரங்கல் கவிதை வாசித்தால் டெல்லி வியாபாரம் பாதிக்கும் என்ற காரணத்தால் நான்கு சுவர்களுக்குள் அவர் அழுது புலம்பும் காட்சியும் நாடகத்தனமே.ஹீரோவுக்குரிய எந்த சாகசமும் செய்யாமல் குடும்பநலன் கருதி அடக்கி வாசிக்கிறார் கருணாநிதி.

ஹீரோ டம்மியாக போனாலும் காமெடி காட்சிகள் படத்திற்கு தோள் கொடுக்கின்றன.காமெடியன்களாக ஹீரோவுடன் வலம்வரும் வீரமணியும்,திருமாவளவனும் தேர்ந்த நகைச்சுவை நடிகர்களாக தங்கள் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.வீரமணி அந்த கால நகைச்சுவை நடிகர் ஈ.வே.ராமசாமி பாணியில் தொட்டதற்க்கெல்லாம் "பார்ப்பன சதி"என்று கூறி குபீர் சிரிப்பை வரவைக்கிறார்.தூங்கிகொண்டிருக்கும் வீரமணியை திருமா எழுப்ப,"என்ன....?அதுக்குள்ள விடிஞ்சுருச்சா ?எல்லாம் பார்ப்பன சதி"என்று சொல்லும் காட்சியிலாகட்டும்,பஸ்ஸில் பயணித்து கொண்டிருக்கும்போது திடீரென்று வண்டி நிற்க ,வீரமணி எழுந்து "என்ன...பஸ் ப்ரேக் டவுனா..?எல்லாம் பார்ப்பன சதி"என்று வசனம் பேசும் காட்சியிலாகட்டும் ,சும்மா சொல்லக்கூடாது....வீரமணி அடிக்கும் லூட்டியில் தியேட்டரில் விசில் சத்தம் காதை கிழிக்கிறது."தந்தை பெரியார் மட்டும் பிறந்திருக்கா விட்டால் ஆபிரகாம் லிங்கனே ஆடு,மாடுதான் மேய்த்து கொண்டிருந்திருப்பார்" என்று அவர் அடிக்கும் "விட்"டில் சிரித்து,சிரித்து வயிறு புண்ணாகிவிடுகிறது.

ஒருபுறம் வீரமணி எவர்க்ரீன் காமெடியில் பட்டையை கிளப்ப,மற்றொருபுறம் திருமா க்ளாஸிக் காமெடியில் கலக்குகிறார்.தமிழ்நாட்டின் மூலை முடுக்கிலெல்லாம் பயணித்து ராஜபக்சேவை "கொலைகாரன்"என்று வசைபாடும் போதும் ,திமுக வர்த்தக குழுவோடு கொழும்பில் ராஜபக்சேவை சந்திக்கும்போது வாயெல்லாம் பல்லாக அவரோடு சிரித்து உரையாடும்போதும் தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார் திருமா.

ராஜபக்சேயிடம் விடைபெற்று கிளம்பும் நேரத்தில் "இப்ப போறேன்.ஆனா..திரும்பி....( சற்று இடைவெளிவிட்டு)..வரமாட்டேன்னு சொல்லவந்தேன்"என்று ஜகா வாங்கும்போது திருமாவின் முகபாவனையை பார்த்து சிரிக்காதவர்களே இருக்கமுடியாது.

கருணாநிதியின் டில்லி பார்ட்னர்களாக வரும் சோனியாவும்,மன்மோகனும் தங்களின் மர்ம நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார்கள்.கருணாநிதி இருவருக்கும் சளைக்காமல் கடிதம் எழுதுவதும்,ஒவ்வொரு முறையும் "நானும் கவலைப்படுகிறேன்"என்று பதில் கடிதத்தை மன்மோகன் எழுதுவதும் படம் நெடுக இடம்பெறுவது பெரும் அலுப்பை ஏற்படுத்துகிறது.

பின்னணி இசையில் கருணாநிதியின் ஆஸ்தான இசையமைப்பாளர் நாகூர் ஹனீபாவின் "சோனியாவிடம் கையேந்துங்கள்.அவர் இல்லையென்று சொல்லுவதில்லை"என்ற பாடல் ரசிக்கவைக்கிறது.

இறுதி காட்சியில் கருணாநிதி ஐக்கிய முற்போக்கு கம்பெனியில் இருந்து விலகுவதாக அறிவிப்பது சற்று நாடகத்தனமாக அமைந்துவிட்டது.எனினும்,இரண்டாம் டெசோ படத்தின் முதல் பாகமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் அடுத்த பாகத்தில் உண்மை நிலவரம் தெரியவரும்.

மொத்தத்தில் கருணாநிதியின் சமீபத்திய தோல்வி படவரிசையில் "இரண்டாம் டெசோ" -வும் ஒரு படுதோல்வி "மொக்க" படமாக அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது!!!.