Friday, September 26, 2014

கேள்வி – பதில்
*********************
கே: ‘ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலுமாக ஒழிப்போம்’ என்று அதிபர் ஒபாமா சபதம் போட்டுள்ளாரே? இது சாத்தியம் என்று எண்ணுகிறீர்களா?
ப: இது சாத்தியமானதுதான் என்று, இந்த விவகாரத்தை நன்கு புரிந்து கொண்ட சில அயல்நாட்டு விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். இப்படிப் பலம் பெற்று திகழ்வதற்கான காரணங்களில் அமெரிக்காவும் ஒன்று. ஸிரியாவில் ஆட்சி மாற்றத்துக்கு எதிராக ‘மக்கள் கலகம்’ தோன்றியபோது, இந்தத் தீவிரவாதிகள் அதில் கலந்து கொள்ள, அப்போது ஸிரியா அதிபரை எதிர்த்த அமெரிக்கா, இவர்களுக்கு உதவிகள் செய்தது. அதனுடைய பலன் அமெரிக்காவை மட்டுமல்ல, பல்வேறு நாடுகளை இன்று அச்சுறுத்துகிறது. தீவிரவாதத்தை ஊக்குவிப்பது இப்படித்தான் போய் முடிகிறது.
 பிந்தரன் வாலேயை இந்திரா காந்தி தூண்டி விட்டார் – அந்தப் பிந்தரன் வாலே ஆதரவாளர்களாலேயே அவர் கொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசு பல வகைகளில் உதவியது – ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டார். தீவிரவாதத்தை யாருக்கு எதிரானது என்று பார்க்காமல், அந்தக் கொடுமை ஒழிக்கப்பட வேண்டியதுதான் என்ற தீர்மானத்துடன் எல்லா நாடுகளும் இயங்க வேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு காண வழி பிறக்கும்.