Showing posts with label எங்கே பிராமணன்?. Show all posts
Showing posts with label எங்கே பிராமணன்?. Show all posts

Tuesday, August 12, 2014

ஆவணி அவிட்டம் என்பது என்ன?

கேள்வி : இந்த ஆவணி அவிட்டம் என்பது என்ன? பழைய பூணூலை கழற்றி விட்டு, புதிய பூணூலைப் போட்டுக் கொள்ள ஒரு தினம். அதுதானே ஆவணி அவிட்டம் என்பது? அதாவது பூணூலை மாற்றுகிற தினம்தானே அது?
சோ : நீங்கள் சொல்கிற மாதிரிதான் இப்போது ஆகிவிட்டது. ஆனால், ஆவணி அவிட்டம் என்பது அதுவல்ல. ஆவணி அவிட்டம் என்று சொல்லப்படுகிற சடங்கின் உண்மையான பெயர் உபாகர்மா. உபாகர்மா என்றால் ஆரம்பம் என்று அர்த்தம். ச்ராவண மாதத்தில் பிரம்மதேவனுக்கு வேதம் கிட்டியது; அதாவது உபதேசம் ஆகியது. அந்த தினம், ஆவணி மாதம், அவிட்ட நக்ஷத்திரம். அதனால்தான் இதற்கு ‘ஆவணி அவிட்டம்’ என்ற பெயரும் வந்தது. அப்போது பிரம்மனுக்கு வேதம் கிட்டியதால், அவனுக்கு அது ஆரம்பம் ஆகியது. அந்த ஆரம்பத்தை இங்கே மனிதர்கள் கொண்டாடுகிறார்கள். இது வருடா வருடம் செய்யப்படுகிறபோது, வேதத்திற்குச் செய்யப்படுகிற மரியாதையாக இது கருதப்படுகிறது.
வேதத்திற்கு ஆண்டு விழா என்றும் இதைச் சொல்லலாம். ப்ரம்ம தேவனுக்கு உபதேசமாகிய தினம்; அதிலிருந்து வழி வழியாக மனிதர்களுக்குக் கிடைத்தது. அதனால் ஒவ்வொரு வருடமும் அந்த தினத்தைக் கொண்டாடுகிறோம். அது ஆண்டு விழா.
கேள்வி : ஆரம்பம் என்று சொன்னீர்கள். அது என்றோ ஆரம்பமாகி விட்டது. திரும்பவும் ஒவ்வொரு வருடமும் அதைப் புதிதாக ஆரம்பிப்பானேன்? அது எதற்கு? இது பகுத்தறிவுக்கு ஏற்ற விஷயமாக இல்லையே?
சோ : இது பகுத்தறிவுக்கு ஏற்ற விஷயம் இல்லை என்கிறீர்கள்; சரி, இருக்கட்டும். தேசிய ஒருமைப்பாட்டுக்காக – உறுதிமொழி, பிரமாணம் என்று வருடா வருடம் எல்லோரும் எடுத்துக் கொள்கிறார்கள். ‘போன வருடம்தான் இந்த உறுதிமொழி, பிரமாணம் எல்லாம் எடுத்தாகி விட்டதே! அதே தேசம்தான் இருக்கிறது; அதே பிரமாணம்தான் இது. அதை எதற்கு இன்னொரு முறை செய்ய வேண்டும்? தேசம் போய் விட்டதா? அல்லது பிரமாணம்தான் தீர்ந்து விட்டதா? அந்த பிரமாணத்திற்கு ஒரு வருடம்தான் ஆயுளா? ஏன் இதை திரும்பவும் வருடா வருடம் செய்ய வேண்டும்? ஏன்? அந்தப் பிரமாணம் ஆறு மாதத்திலேயே தீர்ந்து போகாதா? அல்லது மூன்று மாதத்தில் தீர்ந்து போகாதா? அல்லது தினம் தினம் அந்த பிரமாணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாதா? ஏன், இப்படி வருடத்திற்கு ஒருமுறை?’ என்றும் கேட்கலாம். ஆனால், அப்படி யாரும் கேட்பதில்லை. அது எப்படி பகுத்தறிவுக்கு உகந்ததாக இருக்கிறதோ, அதே மாதிரிதான் இதுவும்.
தேசம் என்கிற சிந்தனை, ஒருமைப்பாடு என்கிற சிந்தனை ஆகியவற்றை நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்கிறோம். அதற்காக இதைச் செய்கிறோம். அதே மாதிரிதான் இந்த உபாகர்மாவும். இந்த சிந்தனை, வேதம் எவ்வளவு உயர்வானது என்பது பற்றியது. ப்ரம்ம தேவனுக்குக் கிடைத்த தினம் பற்றியது. அங்கிருந்து நமக்கு அது கிடைத்தது என்ற விஷயம் பற்றியது. அந்த மாதம், அந்தத் தேதியில் – அதாவது ஆவணி மாதம் அவிட்ட நக்ஷத்திரத்தில் நாம் இதையெல்லாம் நினைத்துக் கொள்கிறோம். சொல்லப் போனால், இது தேசிய ஒருமைப்பாட்டு பிரமாணத்தை விட, பகுத்தறிவுக்கு உகந்த விஷயம்.
ஏனென்றால், தேசம் என்பது, என்றோ உண்டாகி விட்டது. ஒருமைப்பாடு என்பதும் என்றோ உண்டாகி விட்டது. ஆனால், தேசம் பிறந்த நேரத்திலோ, ஒருமைப்பாடு உண்டான சமயத்திலோ, இந்த பிரமாணத்தை நாம் எடுத்துக் கொள்வதில்லை. இந்த உபகர்மாவை எடுத்துக் கொண்டால் பிரம்மனுக்கு அது எப்போது உபதேசமாகியதோ, எப்பொழுது பிரம்மனுக்கு வேதம் கிட்டியதோ, அந்த மாதம், அந்த தினம் எது என்று பார்த்து, அந்த தினத்தில் நாம் இங்கே அந்தச் சடங்கைச் செய்கிறோம். அன்று நமக்கு வேதம் பயில்வது மீண்டும் ஆரம்பம்.இது பிராமணர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்ட விஷயம் என்று நினைத்து விடக்கூடாது. உபநயனம் என்பது முதல் மூன்று வர்ணத்தாருக்கும் உண்டு. அதாவது பிராமண, க்ஷத்ரிய, வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர்களுக்கு உபநயனம் உண்டு. அவர்கள் மூவருமே வருடா வருடம் இந்த ‘ஆவணி அவிட்டம்’ என்கிற உபாகர்மாவைச் செய்ய வேண்டும். இதை வெறும் பூணூலை மாற்றிக் கொள்கிற விஷயமாகக் கருதி விடாமல், வேதம் நமக்குக் கிட்டியதை கொண்டாடுகிற தினம் என்று நாம் கருத வேண்டும்.
– தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

Monday, November 21, 2011

எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள்

தர்மம் - 8 - சோ 
ர்மர் எப்பேற்பட்டவர்? ‘நூல் விலக்கிய செய்கைகள் அஞ்சும் நோன்பினோன்’ என்று பாரதியார் கூறுகிறார். அதாவது நூல்களினால் – வேதங்களினால் – விலக்கப்பட்ட செய்கைகள் எவையோ, அவற்றை நினைத்து பயப்படுகிறவர் அவர். அவற்றின் பக்கமே போகக் கூடாது என்று நினைப்பவர். சகுனியோ தனது சூதாட்டத்தை நியாயப்படுத்துகிறான் :

‘...தேர்ந்தவன் வென்றிடுவான் – தொழில்
தேர்ச்சியில்லாதவன் தோற்றிடுவான்
நேர்ந்திடும் வாட்போரில் – குத்து
நெறியறிந்தவன் வெலப் பிறனழிவான்
ஓர்ந்திடும் சாத்திரப் போர் – தனில்
உணர்ந்தவன் வென்றிட உணராதான்
சோர்ந்தழி வெய்திடுவான் – இவை
சூதென்றும் சதியென்றும் சொல்வாரோ?


வல்லவன் வென்றிடுவான் – தொழில்
வன்மையில்லாதவன் தோற்றிடுவான்
நல்லவனல்லாதான் – என
நாணமிலார் சொலும் கதை வேண்டா
வல் அமர் செய்திடவே – இந்த
மன்னர் முன்னே நினையழைத்து விட்டேன்
சொல்லுக வருவதுண்டேல் – மனத்
துணிவு இல்லையேல் அதுவும் சொல்லுக...’


அவனுக்கு சூதாட்டம் ஒரு சயன்ஸ். ‘பழிக்கவற்றை ஒரு சாத்திரம் எனப் பயின்றோன்’. அதாவது அதை ஒரு சாத்திரமாக, சயன்ஸாகப் படித்தவன். அவனுடைய பகடை, மாயப் பகடை அல்ல. அவனுடைய சூதாட்டத் திறன் அது. அவனுக்கு அது தர்மமாகப் போய்விட்டது. மன்னர் அழைத்தால், ஆட வர வேண்டும் – வந்துதான் ஆக வேண்டும் என்பது அவன் நினைத்த தர்மம்.

சகுனி ஒன்றும் சாதாரணமான ஆள் அல்ல. சமாதானமாகப் போய்விட வேண்டும் என்று துரியோதனனுக்கு எவ்வளவோ எடுத்துச் சொன்னவர்களில் அவனும் ஒருவன். துரியோதனன் அந்தப் பேச்சை ஏற்கவில்லை. பிறகு சகுனியும், துரியோதனனுக்காகப் போரிட்டான்.

இங்கே எது சரியானது? சூதாட்டம் நடந்தது சரியா, தவறா? இதை ஆராயப் புகுந்தால், ‘தர்மர் ஏன் அதற்கு இணங்கினார்?’ என்ற கேள்வி வரும். அவருக்கு சூதாட்டத்தில் ஒரு பலவீனம் உண்டு. தன்னால் வென்றுவிட முடியும் என்ற நினைப்பு அவருக்கு உண்டு. அதனால்தான் அவர் இணங்கினார்.

ஆனால் சூதாட்டத்தின் மூலம் பாண்டவர்களை அழித்துவிட வேண்டும் என்பது சகுனியின் திட்டம். அங்கே நேர்மைத் திறன் இல்லாததால், அதர்மம் புகுந்து விடுகிறது. 

இப்படி சிக்கல் நிறைந்திருப்பதால்தான், தர்மத்தின் பாதை மிகவும் சூட்சுமமானது என்று மஹாபாரதத்தில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. ஞானிகள் கூட அதை உணர்ந்து கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள் என்று வலியுறுத்தப்படுகிறது. 

தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன் 
(தொடரும்) 


தர்மம் – 9 – சோ 
எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள் 

6–7–2011 இதழ் தொடர்ச்சி... 

தர்மத்தின் சூட்சுமம், ஞானிகளுக்கே கடினமான விஷயம் என்றால், நாம் எல்லாம் இதை எவ்வளவு ஆராய வேண்டியிருக்கும்? ஒரு சிறிய பிரச்சனையாக இருந்தாலும், அதில் எது தர்மம் என்பதை ஆராய்ந்துதான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். 

பகவத் கீதையில் அர்ஜுனன், கிருஷ்ணரிடம் கேட்கிறான் : 

கார்ப்பண்ய தோஷா பஹதஸ்வபாவ:
ப்ருச்சாமி த்வாம் தர்மஸம்மூட சேதா:
யச்ஸ்ரேயஸான் நிஸ்சிதம் ப்ரூஹி தன்மே
சிஷ்யஸ்தேஹம் சாதி மாம் த்வாம் ப்ரபன்னம்.

பிறர் பரிதாபப்படத்தக்க நிலையை அடைந்து விட்ட நான், தர்மம் எது என்று அறியாமல் மிகவும் குழம்பிப் போய் கிடக்கிறேன். எது நல்லது என்று நிச்சயம் செய்து எனக்குச் சொல். உன்னுடைய சிஷ்யன் நான். உன்னையே சரணடைந்து கேட்கிறேன். 

கேட்பது யார்? அர்ஜுனன், தர்மபுத்திரருடைய தம்பி. தர்மபுத்திரரோ, தர்மத்தை முழுதும் உணர்ந்தவர். தர்மமே அவதாரமாக வந்துள்ளவர். அவருடைய தம்பி யுத்தகளத்தில் நின்று கொண்டு, ‘எது தர்மம் என்று எனக்குப் புரியவில்லை’ என்று குழம்புகிறான். 

அவனுக்கு தர்மத்தை விளக்கிச் சொல்வதற்காக 700 ஸ்லோகங்களுக்கு மேல் சொல்லி, பகவத் கீதையை உபதேசம் செய்த கிருஷ்ண பரமாத்மா, கடைசி கட்டத்தில் அவரிடம் என்ன சொல்கிறார்? 

இதி மே ஞானமாக்யாதம்
குஹ்யாத் குஹ்யதரம் மயா
விம்ருச்யை ஏதத் அசேஷேண
யதேச்சஸி ததா குரு. 

ரகசியங்களில் எல்லாம் மிகப் பெரிய ரகசியமான ஞானத்தை உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன். இதை நன்றாக விமர்சித்து – அதாவது ஆராய்ந்து – அதன் பிறகு நீ என்ன நினைக்கிறாயோ, அதைச் செய். 

அங்கே அந்த சுதந்திரம் அர்ஜுனனுக்குத் தரப்படுகிறது – ‘நீ என்ன நினைக்கிறாயோ, அதைச் செய்’. 

வேறு எந்த மதத்திலும் இதைப் பார்க்க முடியாது. ‘முழுவதும் அனலைஸ் செய்து, அதன் பிறகு எது சரி என்று தோன்றுகிறதோ, அதைச் செய்’. 

– இந்த அணுகுமுறையைக் கடைபிடிக்கத்தான் நாம் எல்லோருமே கடமைப்பட்டிருக்கிறோம். ஒவ்வொரு விஷயத்திலும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாமல், எது சரி என்று முழுமையாக யோசித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். 

தர்மத்தைச் சார்ந்த விதிமுறைகள் மாறுதல் அடைகின்றன என்பதையும் பெரியவர்களே, தர்ம சாஸ்திரங்களில் கூறியிருக்கிறார்கள். ப்ரஹஸ்பதி தன்னுடைய தர்ம சாஸ்திரத்தில் ஒரு விஷயத்தை வலியுறுத்துகிறார். நிறைய தர்ம நூல்கள் இருக்கின்றன. எப்படி மனுஸ்ம்ருதி இருக்கிறதோ, அப்படி ப்ரஹஸ்பதியினுடைய ஸ்ம்ருதியும் இருக்கிறது. 

(தொடரும்) 

தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்


தர்மம் – 10 – சோ 
எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள் 

சென்ற இதழ் தொடர்ச்சி...

நாரத ஸ்ம்ருதி, விஷ்ணு ஸ்ம்ருதி, ப்ரஹஸ்பதி ஸ்ம்ருதி, பராசர ஸ்ம்ருதி... என்று பல இருக்கின்றன.

ப்ரஹஸ்பதி ஸ்மிருதியில் ‘எந்தெந்த விதிமுறைகள் ஒரு கால கட்டத்தில் மக்களால் வெறுக்கத் தக்கவை ஆகிவிடுகின்றனவோ, அவற்றை விட்டுவிட வேண்டும்; காலத்திற்கேற்ப, விதிமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்’ – என்று கூறப்பட்டிருக்கிறது.

அதாவது – தர்ம சாஸ்திரத்திலேயே விதிமுறைகள் மாறத்தக்கவை என்று வருகிறது.

ஆகையால் இந்த விதிமுறைகள் மாறுதலுக்கு உட்பட்டவைதான். தர்மம் என்கிற தத்துவம் ஒன்று – அது நிலையானது; ஆனால் அதற்குட்பட்ட விதிமுறைகள் மாறுதலுக்குரியவை.

ஆக, தர்மம் என்பது சாஸ்வதம். அது ஒருவன் தன் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல், காரியங்களைச் செய்வது என்று கொள்ளலாம். அது சாஸ்வதமானது. 
ஆனால் பெரும் ஜன சமூகத்தில் புழங்கும்போது எது சரியானது, எது தவறானது, எது தர்மம் என்று நிச்சயிக்கிற விதிமுறைகள் மாறுதலுக்குட்பட்டவைதான்.

இன்னொரு அம்சத்தைப் பார்ப்போம்.

மஹாபாரதத்தில் கிருஷ்ணர் எப்படி யுத்தம் நடத்தினார்? எனக்குப் புரிந்த வரையில் கிருஷ்ணர் தர்ம யுத்தமே செய்யவில்லை. அதர்ம யுத்தம்தான் அவர் செய்தார்.

‘அஸ்வத்தாமா ஹத: குஞ்சர’ – அதாவது அஸ்வத்தாமா என்ற யானை இறந்தது என்பதைப் பிரித்துச் சொல்லி, துரோணரை வில், அம்புகளைக் கீழே போடுமாறு செய்தது; கர்ணனை பலவீனப்படுத்தியது; சூரியன் அஸ்தமனமாகிற மாதிரி தோற்றத்தை ஏற்படுத்தி, ஒருவனை மாய்த்தது...’ என்று பல கட்டங்களிலும் தந்திரங்களை அவர் கையாண்டார்.

அதனால்தான் துரியோதனன் அடிபட்டு கீழே விழுந்து கிடக்கும்போது கிருஷ்ணரைப் பார்த்து, ‘உனக்கு வெட்கமாக இல்லையா?’ என்று கேட்கிறான்.

மேலும் ‘உன்னை மக்கள் இகழ மாட்டார்களா? ஒவ்வொருவரையும் இந்தந்த வகையில் நீ வென்றிருக்கிறாய். இது உனக்குக் கூச்சத்தை ஏற்படுத்தவில்லையா?’ என்று கேட்கிறான்.

அப்படி துரியோதனன் கேட்டபோது, தேவ வாத்தியங்கள் முழங்கின. நாற்புறமும் நறுமணம் வீசியது. தேவர்கள் அவன் மீது பூமாரி பொழிந்தார்கள் – என்று வியாஸர் சொல்கிறார். ஏனென்றால் துரியோதனன் பேசியது உண்மை.
கிருஷ்ணரே கூட ‘அவன் கூறுவது உண்மை. முற்றிலும் தர்ம யுத்தத்தை நாம் நடத்தியிருந்தால், நாம் ஜெயித்திருக்க மாட்டோம்’ என்றே சொல்கிறார்.

ஆனால் அவர் ஏன் இப்படியெல்லாம் செய்தார்?

‘லார்ஜர் குட்’.

தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

(தொடரும்) 




தர்மம் – 11 – சோ 
எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள் 

சென்ற இதழ் தொடர்ச்சி...

‘லார்ஜர் குட்’ – பெருமளவில் நன்மை – அனேகம் பேருக்கு நன்மை – என்கிற நியாயம் முக்கியமானது.

நியாயம் நிலைநாட்டப்படுவதற்கு, யுத்தத்தில் பாண்டவர்கள் ஜெயிக்க வேண்டும். அந்தப் பெரிய நன்மைக்காக அங்கே யுக்திகளை கையாள வேண்டியதாகப் போயிற்று. அந்தப் பெரிய நன்மையை நினைத்துப் பார்க்கும்போது, யுத்த தந்திரங்கள் அதர்மம் என்று நிராகரிக்கப்படத் தக்கதல்ல என்று ஆகிவிடுகிறது.

இந்த அளவுக்கு சிந்தனை, இந்த பூமியில் நடைமுறைக்கு ஏற்றவாறு இருந்திருக்கிறது.

யோக்கியர்களை, சமூக விரோதிகளை போலீஸ் துறை எப்படி நடத்த வேண்டுமென்றால், தயை தாட்சண்யமில்லாமல்தான் நடத்த வேண்டும். இப்படி ஓர் உரிமை தரப்படுவதால், சில தவறுகள் நேர்ந்து விடலாம். ஆனால், இப்படி நடந்து கொள்ள போலீஸாருக்கு உரிமை இருந்தால்தான், சமுதாயத்திற்கு நன்மை என்கிற – லார்ஜர் குட் – சாதிக்கப்படும்.

ஆகையால் ‘பெருமளவில் நன்மை’ என்பதை சமூக அளவிலும், ‘மனசாட்சியின்படி யோசித்து நடப்பது’ என்பதை தனிமனித அளவிலும், கொண்டு பார்க்கும்போது, எது சரியாக அமைகிறதோ, அதுதான் தர்மம். 
‘ஸ்வதர்மம்’ என்பது மனசாட்சியின்பாற்பட்டது. லார்ஜர் குட் என்ற ‘பெருமளவில் நன்மை’ என்பது சமுதாயத்தின் பாற்பட்டது. இவை இரண்டுக்கும் இணக்கமாக எது அமைகிறதோ, அது தர்மம். இதுதான் என் கருத்து.

எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால்தான் இதைச் செயலாற்ற முடியும். நமது நூல்களில் ஒற்றுமை மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

ரிக் வேதத்தில் ஒன்று வருகிறது :

ஸமானோ மந்த்ர: ஸமிதி ஸமானி
ஸமானம் மன: ஹை சித்தமேஷாம்
ஸமானம் மந்த்ரபி மந்த்ரேய வ:
ஸமானேன வா ஹவிஷா ஜுஹோமி.


உங்களுடைய வழிபாடு ஒத்த கருத்துடன் அமையட்டும். உங்களுடைய கூட்டங்கள் எல்லாம் ஒற்றுமையுடன் இயங்கட்டும். உங்களுடைய மனமும், எண்ணமும் ஒற்றுமையுடன் இருக்கட்டும். உங்கள் அனைவருக்கும் பொதுவாக இந்த ஆஹுதியைக் கொண்டு, நான் வழிபாட்டை நடத்துகிறேன்.

இதில் வர்ணம் எதுவும் கிடையாது. ஒட்டு மொத்தமான சமூகத்திற்குமாகச் சேர்த்து இது கூறப்படுகிறது. ஒற்றுமையும், சமத்துவமும் மீண்டும் மீண்டும் வற்புறுத்தப்படுகிறது. இந்த ஒற்றுமையை மனதில் கொண்டு, அதன் அடிப்படையில் ஒவ்வொருவரும், தனது மனசாட்சிக்கு ஏற்ப, பொது நன்மையை உத்தேசித்து செயல்பட்டால், அதுதான் தர்மமாகும் என்பது என் கருத்து.

தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன் 

Monday, October 3, 2011

எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள்

தர்மம் – சோ – 4
எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள் - 40

சென்ற இதழ் தொடர்ச்சி...

மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள் –

தர்ம வியாதன் ஒரு கசாப்புக் கடைக்காரன். அவன் ஒரு முனிவருக்கு தர்மம் என்றால் என்ன என்பது பற்றி உபதேசிக்கிறான்.

அந்த முனிவர் மரத்தடியில் அமர்ந்திருந்தார். மரத்தின் மீது இருந்த ஒரு கொக்கு, அவர் மீது அசிங்கம் செய்து விட்டது. அவர் கோபத்துடன் நிமிர்ந்து கொக்கைப் பார்த்தார். அது சாம்பலாகி விட்டது.

அங்கிருந்து புறப்பட்டு, ஒரு வீட்டுக்குச் சென்று அவர் பிட்சை கேட்டார். அந்த வீட்டுப் பெண்மணி, வெளியே வர நேரமாகி விட்டது. முனிவருக்குக் கோபம் வந்தது. அந்தப் பெண் வெளியே வந்தபோது, ‘என்ன செய்வேன் தெரியுமா?’ என்றார்.

அந்தப் பெண், அந்த முனிவரைப் பார்த்து ‘என்னை என்ன கொக்கு என்று நினைத்தீர்களா?’ என்று கேட்டாள்.

இவருக்கு ஒரே ஆச்சர்யம் – எங்கோ நடந்த நிகழ்ச்சி அவளுக்கு எப்படித் தெரிந்தது என்று. ‘அது எப்படி உனக்குத் தெரியும்?’ என்று கேட்கிறார்.

அந்தப் பெண்மணி ‘எனக்கு எல்லாமே தெரிகிறது. நீங்கள் கொக்கை எரித்து சாம்பலாக்கியது போல், என்னையும் செய்துவிடலாம் என்று நினைக்கிறீர்கள் என்பதும் புரிகிறது’ என்று கூறுகிறாள்.

அவளுக்கு எப்படி அந்த சக்தி வந்தது....?

அவளுடைய பதி பக்திதான் காரணம். கணவனுக்குப் பணிவிடை செய்வதை தனது தர்மமாக ஏற்றுக் கொண்டு, அதை விடாமல் காப்பாற்றி வந்ததால், அவளுக்கு இவ்வளவு பெரிய சிறப்பு வந்தது.

தன்னுடைய தர்மத்தை விடாமல் காப்பாற்றியதால் கிடைத்த மேன்மை இது.

‘தர்மத்தைப் பற்றி எனக்கு உபதேசம் செய்’ என்று அந்தப் பெண்மணியிடம் முனிவர் கேட்கிறார்.

அவளோ, ‘நீங்கள் என்னிடம் கேட்டுப் பயனில்லை. தர்மவியாதனிடம் சென்று கேளுங்கள்’ என்று சொல்கிறாள்.

முனிவரும் தர்மவியாதன் யார், எங்கே இருக்கிறான் என்று விசாரித்துத் தேடிச் சென்று, அவனை அடைகிறார். பார்த்தால், அவன் ஒரு கசாப்புக் கடைக்காரன். அவனிடம் முனிவர், தர்மத்தைப் பற்றிய உபதேசத்தைக் கேட்டுக் கொண்டு, ‘உனக்கு எப்படி இந்த சக்தி வந்தது’ என்று கேட்கிறார்.

அவன் ‘என் தாய் தந்தையருக்கு நான் விடாமல் சிச்ருஷை (பணிவிடை) செய்து வருகிறேன். இந்த தர்மத்தை தொடர்ந்து மனமாரக் காப்பாற்றி வந்ததால், எனக்குக் கிடைத்த உயர்வு இது’ என்று சொல்கிறான்.

பெற்றோருக்கு பணிவிடை செய்வதை தனது கடமையாக ஏற்றிருந்தான் அவன். அது அவனுடைய தர்மமாகியது.

இப்படி தர்மம் என்பதில் பலவித அம்சங்கள் இருக்கின்றன.



தர்மம் – 5 – சோ
எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள் – 41

சென்ற இதழ் தொடர்ச்சி...

கேள்வி : ராமர், ஸீதையை நடத்திய விதம், எந்த தர்மத்தில் அடங்கும்? சரியான அதர்மம் இல்லையா அது?

சோ : ராமர், ஸீதையை நடத்திய விதம் தர்மமா, அதர்மமா? என்ற கேள்வி, அன்றிலிருந்து இன்று வரை விவாதிக்கப்பட்டு வருகிறது. நெருப்பிலே விழச் செய்து, அதன் பிறகும் யாரோ சொன்னதற்காக ஊரை விட்டே விரட்டி, இறுதியில் வால்மீகி முனிவரே வந்து ‘இவள் புனிதமானவள்’ என்று கூறிய பிறகும், ‘சபையினருக்காக ஒருமுறை உன்னுடைய புனிதத் தன்மையை நிரூபித்து விடு’ என்று ராமர் சொல்கிறார். அப்போதுதான் ஸீதை பூமிக்குள்ளே சென்று விடுகிறாள்.

ராமருடைய இல்லற தர்மம் என்று பார்த்தால், அவர் செய்தது அதர்மம்தான், அதில் சந்தேகமே கிடையாது. ஒரு மனைவியை இவ்வளவு கொடூரமாக நடத்தியதை தர்மம் என்று ஏற்க முடியாது – இதை ‘இல்லற தர்மம்’ என்று பார்க்கும்போது.

ஆனால் இதையே ‘ராஜ தர்மம்’ என்று அணுகினால், அது மிகவும் சிறப்பு வாய்ந்த செயலாகத் தெரிகிறது. சீஸரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும். மன்னனைப் பற்றி இப்படி ஒரு சந்தேகம் வந்து விட்டால், அதற்குப் பிறகு அந்த ராஜாங்கத்திற்கு மரியாதை கிடையாது. அந்த ஆட்சியின் அதிகாரம் எடுபடாது.

அதனால் அப்படிப்பட்ட ஒரு சிறிய சந்தேகம் கூட ஆட்சியைப் பற்றி இருக்கக் கூடாது என்பதற்காகத்தான், ஸீதை வெளியே அனுப்பப்பட்டாள். அங்கே ராஜ தர்மம் மேலோங்கி நின்றது.

இப்படி முரண்பாடாகத் தெரிகிற பல விளக்கங்கள் தர்மத்திற்கு உண்டு.

இப்போது யுத்தம் நடத்துகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள் – அது தர்மமா, அதர்மமா? ஆயிரக்கணக்கான பேரைக் கொல்கிறோம். சாத்திரத்தில் ‘அஹிம்ஸா பரமோ தர்ம:’ என்று கூறப்பட்டிருக்கிறது.

எல்லா தர்மங்களைக் காட்டிலும், உயர்ந்த தர்மம் அஹிம்ஸை. ஆனால் யுத்தம் என்றாலே ஹிம்ஸைதான். ஹிம்ஸை இல்லாத யுத்தமே கிடையாது. அது தர்மமா, அதர்மமா? நாட்டைக் காப்பாற்ற ஓர் அரசன் மேற்கொள்கிற யுத்தம் ராஜ தர்மம். ஆகையால் அது தர்மமே.

கேள்வி : தர்மம் என்பது இப்படி ஒரு சிக்கலான விஷயமாக இருக்கிறதே! என் தர்மம் ஒன்று, உங்கள் தர்மம் ஒன்று என்ற நிலை பல நேரங்களில் வரும் போல இருக்கிறதே!

சோ : வரலாம். அப்படி வரும்போது, சிக்கல் எழத்தான் செய்யும். ஒரு விளக்கம் இங்கே குறிப்பிடத்தக்கது:

ந தர்மா அதர்மௌ சரதி ஆவம் ஸ்வ இதி
ந தேவ கந்தர்வோ ந பித்ருபி:
இத்யாசக்ஷதேயம் தர்மோ அயம் அதர்ம இதி
யத்யார்யா க்ரியமாணம் ப்ரசம்ஸந்தி ஸதர்மோ
யத்தர்ஹந்தே ஸ அதர்ம:
இது ‘ஆபஸ்தம்ப சூத்திரத்தில்’ வருவது.
ஆபஸ்தம்ப சூத்திரம் சொல்வது –

தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்



தர்மம் – சோ – 6
எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள் - 42

சென்ற இதழ் தொடர்ச்சி...

ஆபஸ்தம்ப சூத்திரம் சொல்வது – ‘நான்தான் தர்மம், இதோ நான்தான் அதர்மம் என்று அவை இரண்டும் தங்களை அடையாளம் காட்டிக் கொண்டு நம் முன்னே வந்து அலைவதில்லை; தேவர்களோ, கந்தர்வர்களோ, பித்ருக்களோ தோன்றி இது தர்மம், இது அதர்மம் என்று கூறுவதில்லை. பெரியவர்கள் எதை ஏற்கிறார்களோ, அது தர்மம். அவர்கள் எதை நிராகரிக்கிறார்களோ, அது அதர்மம்’.

இதில் நமக்கென்ன பிரச்சனை என்றால் – நம்மிடையே பெரியவர்கள் யார் என்பதே நமக்குப் புரிவதில்லை. இன்றைய சமூகத்தில் பெரியவர்களைக் காணோம்.

ஒருவனைக் கொலை செய்வது என்பது கூடாது. அது அதர்மம். அதுவும் ஓர் ஆச்சார்யனை, அதாவது குருவாக இருந்தவரைக் கொலை செய்வது என்பது மிகப் பெரிய பாதகம். இதற்கு தண்டனை உண்டு என்பது மட்டுமல்ல, அந்த பாவத்திற்கு பிராயச்சித்தம் கிடையாது. அதிலிருந்து விமோசனம் கிடையாது. வயோதிகர்களைக் கொல்லக் கூடாது.

இவையெல்லாம் அதர்மமான காரியங்கள். ஆனால் இந்த விதிமுறைக்கு விதிவிலக்கும் இருக்கிறது. அது ‘மனுஸ்ம்ருதி’யில் கூறப்பட்டிருக்கிறது.

குரும்வா பாலவ்ருத்தௌ வா
ப்ராம்ஹணம் வா பஹுச்ருதம்
ஆததாயினமாயாந்தம்
ஹன்யாத் ஏவ அவிசாரயன்

‘குருவாக இருந்தாலும் சரி, இளைஞனாக இருந்தாலும் சரி, வயோதிகனாக இருந்தாலும் சரி, நன்றாக வேதங்களை ஓதிய பிராமணனாக இருந்தாலும் சரி, அவன் கெட்ட நோக்கத்துடன் எதிர்த்து வந்தால், சிறிதும் கவலைப்படாமல் அவனைக் கொன்று விடு’.

– இவ்வாறு மனுஸ்ம்ருதி கூறுகிறது. இவ்வாறாக கொலை செய்யக் கூடாது என்பதற்கு, அங்கே விதிவிலக்கு கிடைக்கிறது. அந்த மாதிரி கொலை, ‘அதர்மம்’ ஆகாது!

இப்படி பல நேரங்களுக்குரிய தர்மம் எது என்று கூறப்பட்டுள்ளதையும், அவற்றிற்கான விதிவிலக்குகளையும், பார்க்கும்போது ஒன்று தெளிவாகிறது. எது ‘லார்ஜர் குட்’ – ஜன சமூகத்திற்கு எது நல்லதோ, நிறைய மனிதர்களுக்கு எது நல்லதோ – அதுதான் இறுதியில் தர்மமாகும்.

என்னுடைய தர்மம் என்று ஒன்றை நான் சொல்லிக் கொண்டு, சமூகத்திற்கே அதனால் இடைஞ்சல் வருகிற மாதிரி நான் நடந்து கொண்டால், அது அதர்மமாகி விடும்.

இப்படி லார்ஜர் குட் – பெருமளவில் நன்மை – என்பதன் அடிப்படையில்தான் ‘விதுர நீதி’யில் ஓர் அறிவுரை கூறப்பட்டிருக்கிறது.

த்யஜேத் குலார்த்தே புருஷம்
க்ராமஸ்யார்த்தே குலம் த்யஜேத்
க்ராமம் ஜனபதாஸ்யார்த்தே
ஆத்மார்த்தே ப்ருத்வீம் த்யஜேத். 



தர்மம் – 7 – சோ
எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள் – 43

சென்ற இதழ் தொடர்ச்சி...

விதுர நீதி சொல்வது –

‘ஒரு குடும்பம் அல்லது குலத்திற்காக ஒரு மனிதனை தியாகம் செய்து விடலாம்; ஒரு கிராமத்திற்காக ஒரு குலத்தை தியாகம் செய்யலாம்; நாட்டிற்காக ஒரு கிராமத்தை தியாகம் செய்யலாம்; தனக்காக உலகத்தையே தியாகம் செய்யலாம்’.

தனக்காக என்றால் தன் ஆத்மாவிற்காக. நீ கடைத்தேற வேண்டும் என்றால், உலகத்தையே தியாகம் செய்து விட நீ தயாராக இருக்க வேண்டும்.

இதோடு இணைந்தவாறே இன்னொரு தத்துவத்தையும் பார்க்க வேண்டும். இப்படி பெருவாரியான நன்மை என்பது ஓர் அம்சம்.

மற்றொரு அம்சம் ‘ஸ்வதர்மம்’. பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மாவினால் மிகவும் வலியுறுத்தப்படுவது இந்த ஸ்வதர்மம். ஸ்வதர்மம் என்றால் உடனே அது ஒரு ஜாதிக்குரிய தர்மம் என்றோ, அது ஒரு குலத்திற்கான தர்மம் என்றோ, அது ஒரு வர்ணத்திற்கான தர்மம் என்றோ எடுத்துக் கொண்டு விடக் கூடாது.

கேள்வி : பின் ஸ்வதர்மம் – தன்னுடைய தர்மம் – என்றால் என்ன? அதற்கு என்ன விளக்கம் கூறப்பட்டிருக்கிறது?

சோ : குல தர்மம், வர்ண தர்மம் இவையெல்லாம் வேறு இடங்களில், வேறு வகையில் கூறப்படுகின்றன. ஆகையால், ஸ்வதர்மம் என்பது இவற்றிலிருந்து மாறுபட்டது. ஒரு மனிதனின் மனசாட்சி, அவனிடம் என்ன கூறுகிறதோ, அதுதான் ஸ்வதர்மம் என்று கூறிவிடலாம்.

ஆனால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாமல், நமக்கு நாமே பொய் சொல்லிக் கொள்ளாமல், ஒரு விஷயத்தை ஆராயும்போது, இதுதான் சரி என்று நமக்கு எது படுகிறதோ அதுதான் நமது தர்மம். அதுதான் ஸ்வதர்மம். இதை நேர்மையாக நிச்சயித்துக் கொள்ள ஒரு மனிதன் முற்படுகிறபோதுதான், தனி மனிதனுடைய தீர்மானத்திற்கு முக்கியத்துவம் கிடைக்கிறது.

மொரார்ஜி ஒருமுறை என்னிடம் கூறினார்: “எந்த விஷயத்தையுமே முழுமையாக, நன்றாக ஆலோசனை செய்து பார். உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாமல், அந்த ஆராய்ச்சி அமைய வேண்டும். அப்படி ஆராய்ந்த பின் இதுதான் சரி என்று உன் மனதிற்கு எது படுகிறதோ, அதைச் செய். உலகமே எதிர்த்தாலும் அதுபற்றிக் கவலைப்படாதே” என்றார்.

நான் அறிந்த வரையில் இதுதான் ஸ்வதர்மம். நாம் நியாயத்தைத்தான் செய்கிறோம் – இதனால் பெருவாரியான நன்மைதான் விளையும் – நாம் நமது மனசாட்சிக்கு விரோதமாக நடந்து கொள்ளவில்லை – என்று எந்த அணுகுமுறை நமக்கு உணர்வூட்டுகிறதோ, அந்த அணுகுமுறைதான் ஸ்வதர்மம். கெட்ட நோக்கம் இருந்தால், அது தர்மமாகாது. சகுனி சூதாடினான். சூதாடுவது கேவலமான விஷயம். சாஸ்திர விரோதமானது. தர்மபுத்திரர் இதைச் சுட்டிக் காட்டினார்.

தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

(தொடரும்)

எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள்

தர்மம் – 3 – சோ
எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள் – 39

சென்ற இதழ் தொடர்ச்சி...

ராவணனிடம் கும்பகர்ணன், ‘இந்த வம்பு நமக்கு வேண்டாம்; ஸீதையை திருப்பி அனுப்பி விடு; பெண்களினால் எவனும் உருப்பட்டதில்லை; அனுப்பி விடு’ என்கிறான். ஆனால், ராவணன் அதைக் கேட்கவில்லை. ‘சரி. அப்படியானால் உனக்காக நான் யுத்தத்தில் போரிட்டுச் சாகிறேன்’ என்று சொல்லி விட்டு, கும்பகர்ணன் யுத்தம் நடத்துகிறான். தர்மத்தை அவன் பார்த்த பார்வை அப்படி. அது அவன் ஏற்ற தர்மமாகிறது.

கேள்வி : இதென்ன, ஒவ்வொருவருக்கு ஒரு தர்மமா?

சோ : அப்படியல்ல. நேரம், சூழ்நிலை, சம்பந்தப்பட்டவர்களின் நடத்தை... என்று பல விஷயங்கள் இதில் அடங்குகின்றன. தவிர, மஹாபாரதத்திலோ, ராமாயணத்திலோ, கர்ணன், விபீஷணன், கும்பகர்ணன் ஆகியோர் எடுத்த முடிவுகள் தர்மம்தானா, இல்லையா என்பது பற்றி தீர்ப்பு இல்லை. இரண்டு நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்:

மாண்டவ்யர் என்று ஒரு ரிஷி. அவர் நிஷ்டையில் இருந்தபோது, அங்கே ஒரு திருடன் வந்து விட்டான். அவனைத் துரத்திக் கொண்டு அரசனின் சேவகர்கள் வந்தார்கள். ரிஷி, திருடனையும் கவனிக்கவில்லை. அவர்களையும் கவனிக்கவில்லை.

அவர்கள் இவரை ‘திருடன் எங்கே?’ என்று கேட்க, இவர் பதில் அளிக்காமல் இருக்க, திருடனும் அகப்பட்டுவிட, இவர்தான் அவனை மறைத்து வைத்தார் என்று அவர்கள் நினைத்து விடுகிறார்கள். அவர் கழுவில் ஏற்றப்படுகிறார்.

தர்மதேவனிடம், மாண்டவ்யர் ‘தவறே செய்யாத எனக்கு ஏன் இந்த தண்டனை?’ என்று கேட்கிறார்.

தர்மதேவன், ‘நீ சிறுவனாக இருந்தபோது, ஊசியினால் பூச்சிகளைக் குத்தினாய். அதனால் இப்போது உனக்கு இந்த தண்டனை கிடைத்திருக்கிறது’ என்று கூறுகிறான்.

‘சிறிய வயதில் நான் அறியாமல் செய்த தவறு அது. பூச்சிகளை இம்மாதிரி செய்யக் கூடாது என்று தெரிந்து வைத்து, நான் அதைச் செய்யவில்லை. அப்படி தெரியாமல் செய்த தவறுக்கு இவ்வளவு பெரிய தண்டனையை நீ அளித்திருக்கிறாய். அதனால் நீ மனிதனாகப் பிறக்கக் கடவது’ என்று மாண்டவ்யர், தர்மதேவனுக்கு சாபமிடுகிறார்.

தர்மதேவன், மனிதனாக – விதுரராகப் பிறந்தார். இப்படி மனிதனாகப் பிறக்க வேண்டிய நிலை தர்மத்துக்கே ஏன் ஏற்பட்டது? அளவுக்கு மீறிய தண்டனையை தர்மதேவன் கொடுத்தான் என்பதுதான், அவன் செய்த குற்றம். அவன் புரிந்த அதர்மம் அது.

ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் எவ்வளவு விஷயம் அடங்கியிருக்கிறது என்று பாருங்கள். அதர்மத்திற்குத் தண்டனை விதிப்பது என்பது தர்மதேவனுக்கு உரிய தர்மம்தான். அவனுடைய கடமைதான் அது. ஆனால், அளவுக்கு மீறிய தண்டனையைக் கொடுத்தான் என்பதால், அவன் செயல் அதர்மமாகி விட்டது. அதற்குரிய தண்டனையை அவன் அனுபவித்தான். தர்மதேவனுக்கே கூட அதர்மப் பாதையில் செல்லும்போது தண்டனை உண்டு.

தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள்

தர்மம் – 2 – சோ
எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள் – 38

சென்ற இதழ் தொடர்ச்சி...

மஹாபாரதத்தில் கர்ணனை எடுத்துக் கொள்வோம். துரியோதனன் செய்த தவறுக்கெல்லாம் அவன் துணை போனான். ‘இதைச் செய் என்று துரியோதனன் கூற வேண்டிய அவசியமில்லை. இதைச் செய்தால் துரியோதனனுக்குப் பிடிக்கும் என்று நான் நினைத்தால் போதும். அதைச் செய்து விடுவேன்’ என்ற அளவுக்கு கர்ணன் போகிறான்.

அவனிடம் குந்தி வந்து எவ்வளவோ கெஞ்சிக் கேட்டுப் பார்க்கிறாள். கிருஷ்ண பரமாத்மாவே மன்றாடுகிறார். ஆனால் அவர்களுடைய வேண்டுகோள்களை மறுத்து, துரியோதனன் பக்கமே கர்ணன் நிற்கிறான்.

இத்தனைக்கும், யுத்தத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதையெல்லாம் கர்ணன் விரிவாகவே எடுத்துச் சொல்கிறான். துரியோதனன் தரப்பில் உள்ள ஒவ்வொருவரும் எப்படி அடிபட்டு வீழப் போகிறார்கள் என்பதையெல்லாம் ஒரு ‘ட்ரெய்லர்’ காட்டுகிற மாதிரி அவன் காட்டுகிறான். ‘

‘இதெல்லாம் எனக்குத் தெரிகிறது; ஆனால், நான் துரியோதனன் பக்கம்தான் போரிடுவேன்’ என்று அவன் கூறிவிடுகிறான். அது அவனுடைய தர்மம். அவன் துரியோதனனுக்குப் பட்ட நன்றிக் கடன். அதைத் தீர்ப்பதை அவன் மிகப் பெரிய தர்மமாக நினைத்தான்.

கேள்வி : ராமாயணத்தில், விபீஷணன் நடத்தைக்கு இது பொருந்தாதே?

சோ : உண்மைதான். கர்ணனைப் போல விபீஷணன் நடந்து கொள்ளவில்லை. ராவணனிடத்தில் எவ்வளவோ எடுத்துச் சொன்னான்.

ஆனால் இவனுடைய அறிவுரைகளைக் கேட்ட ராவணன், இவனை அவமதித்தான்.

‘அப்படியானால் நான் போகிறேன்’ என்று சொல்லி, விபீஷணன் கட்சி மாறி விட்டான். இந்த நாட்டில் முதன் முதலாகக் கட்சி மாறியவன் விபீஷணனாகத்தான் இருக்க வேண்டும். அவன் இவ்வாறு செய்ததில் கொஞ்சம் சுயநலமும் கலந்துதான் இருந்தது.

அவன் ராவணனை விட்டு ராமரிடம் சென்றபோது தூரத்தில் இருந்து அவனைப் பார்த்த ஸுக்ரீவன் போன்றவர்கள், ‘அவனைக் கொன்றுவிட வேண்டும்’ என்று கூறுகிறார்கள்.

‘எதிராளியிடமிருந்து வருவதால், அவனிடமிருந்து ஆபத்துதான் வரும்’ என்று எண்ணி அவர்கள் இப்படிச் சொன்னார்கள்.

ஆனால் ராமரோ, அவனைப் பார்த்த உடனேயே, ‘இவனால் ஆபத்து கிடையாது; அவனைப் பார்த்தாலே தெரிகிறது. அவன் ராஜ்யத்தின் மீது நேசம் வைத்துள்ளவன்; அதனால்தான் நம்மிடம் வருகிறான்; ஆபத்து இல்லை’ என்று சொல்லி விடுகிறார்.

ஆனால், ராவணன் சபையில் எவ்வளவோ நல்லதை எடுத்துச் சொல்லியும் அது எடுபடாமல் போனதாலும், அங்கே தான் அவமதிக்கப்பட்டதாலும்தான் – விபீஷணன் வெளியேறி ராமரை சரணடைந்தான். அது அவன் கண்ட தர்மம்.

அதே ராமாயணத்தில் கும்பகர்ணன் என்ன செய்தான்? அவனும் ராவணனுக்கு எவ்வளவோ அறிவுரை சொன்னான்.

எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள்

தர்மம் – 1 – சோ
எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள் – 37

குறிப்பு : வாசகர்களுக்கு, ஒரு வார்த்தை. இந்தப் பகுதியில், டெலிவிஷன் தொடரில் வந்ததை, வார்த்தை பிசகாமல், அப்படியே நாங்கள் பிரசுரிக்கவில்லை. முன்பு எழுதியது, சில மேடைகளில் பேசியது போன்றவையும் இந்தக் கட்டுரைகளில் சேர்க்கப்படுகின்றன; இது தவிர, டெலிவிஷனிலும், முன்பு எழுதியதிலும் விட்டுப் போன விஷயங்களும் இந்தத் தொடரில் சேர்க்கப்படுகின்றன.

– சோ

(இந்தப் பகுதியில் வெளியாகிற கேள்விகளை, ‘கேள்வி கேட்பவர்’ என்று குறிப்பிட்டே பிரசுரித்து வருகிறோம். ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பான ‘எங்கே பிராமணன்?’ தொடரில், இந்தக் கேள்விகளை எல்லாம் கேட்டு வந்த நண்பருக்கு வருத்தம். ‘நான் என்ன அனாமதேயமா?’ என்று அவர் கோபப்படுகிறார். ஆகையால், அவர் பெயர் மற்றும் படம், இந்த இதழில் பிரசுரமாகிறது; இது அவருக்காக...

இனி வருகிற வாரங்களில் அவருடைய பெயரும், படமும் பிரசுரம் ஆகாது; இது வாசகர்களுக்காக.)

நாராயண ஸ்வாமி

கேள்வி கேட்பவர் (நாணி எனப்படும் நாராயண ஸ்வாமி): ஹிந்து மதத்தில் கூறுகிற தர்மம் என்பது என்ன? சட்டமா? நியாயமா? ஏதாவது நெறிமுறையா? என்ன அது?

சோ : நீங்கள் குறிப்பிட்ட எல்லாமே தர்மம் என்ற சொல்லில் அடங்கும். அது மட்டுமல்ல. சாஸ்திரம் சொல்கிறபடி நடப்பது; நீதி; நேர்மையான செயல்; சத்தியம்... என்று பல விஷயங்கள் தர்மம் என்ற சொல்லில் அடங்கும். மற்ற மதங்களில் இப்படி ஒரு சொல் இல்லை. ‘ட்ருத்’ – ‘மொராலிட்டி’ – ‘எதிக்ஸ்’ – ‘லா’ – ‘ஜஸ்டிஸ்’ – ‘குட் காண்டக்ட்’ – ‘ஹானஸ்டி’ – ‘கம்பாஷன்’ – ‘சாரிட்டி’... என்று பல சொற்கள், மற்ற மதங்களிலும், மற்ற நாகரீகங்களிலும் கையாளப்படுகின்றன. அவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய சொல் ‘தர்மம்’.

‘தர்மம்’ என்கிற வார்த்தை ஸம்ஸ்கிருதத்தில் ‘த்ரு’ என்ற வேரிலிருந்து வருகிறது. ஆதரிப்பதற்கும், காப்பாற்றுவதற்கும், தாங்குவதற்கும், வளர்ப்பதற்கும் கூறப்படுவது ‘த்ரு’. இந்த வேரிலிருந்துதான் தர்மம் என்கிற சொல் வருகிறது. அதாவது எது ஒன்று ஆதரிக்கப்பட வேண்டுமோ, எது ஒன்று காப்பாற்றப்பட வேண்டுமோ, எது ஒன்று வளர்க்கப்பட வேண்டுமோ – அதுதான் தர்மம்.

அதன் வீச்சு அசாத்தியமானது. அதுமட்டுமல்ல – ‘தர்மம்’ சூட்சுமமானது. அதாவது, பல சிக்கலான நேரங்களில் ‘இதுதான் தர்மம்’ என்று எடுத்த எடுப்பிலேயே ஆராயாமல் கூறிவிட முடியாது. தோற்றத்திற்கு தர்மம் போல் தெரிவது, உண்மையில் அதர்மமாக இருக்கலாம்; பார்வைக்கு அதர்மமாகத் தெரிவது, உண்மையிலேயே தர்மமாக இருக்கலாம். இதனால்தான், தர்மம் சூட்சுமமானது என்று சொல்லப்படுகிறது.

‘யுத்த தர்மம்’ என்று கூறுகிறோம். சாதாரண சமயங்களில், ஒருவனை தாக்குவதும், கொல்வதும் கூடாது. அது அதர்மம். ஆனால் யுத்தத்தில், அது தர்மம். போரில் வீரத்தைக் காட்டி பிறரை வீழ்த்துவது க்ஷத்ரிய தர்மம்.

இப்படியெல்லாம் பல கோணங்கள், அம்சங்கள் இருப்பதால்தான் தர்மம் எது என்பதை ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

சரி, ‘எதுதான் தர்மம்?’ என்று கேட்டால், அதற்கும் தர்ம சாஸ்திரங்களிலேயே விளக்கம் இருக்கிறது. விருப்பு, வெறுப்பு அற்றவனாக, தவறான நடத்தை இல்லாதவனாக, எல்லோரையும் நேசிப்பவனாக உள்ள கற்றறிந்தவன், தன்னுடைய மனசாட்சிக்கு உகந்தவாறு எதை ஏற்கிறானோ, அது தர்மம்; அவன் எதை நிராகரிக்கிறானோ அது அதர்மம்.

கேள்வி : இந்த விளக்கம், முழுமையான தெளிவை ஏற்படுத்தி விடுகிறதா? எல்லா நேரங்களுக்கும் இது பொருந்தி விடுமா?

சோ : இந்த விளக்கம் கூட போதாதுதான். பல சமயங்களில் எது தர்மம் என்பதில் முரண்பாடுகள் ஏற்படத்தான் செய்யும்.

Thursday, July 30, 2009

Monday, July 27, 2009

Friday, July 24, 2009

Thursday, June 25, 2009