Friday, December 26, 2014

இதுதான் ‘துக்ளக்’கின் தர்மம்! (திரும்பிப் பார்க்கிறோம் – 21)

இதுதான் ‘துக்ளக்’கின் தர்மம்! (திரும்பிப் பார்க்கிறோம் – 21)
துக்ளக் பத்திரிகையின் தர்மம் என்ன என்பது பற்றி, அதன் ஆசிரியன் என்ற முறையில் நான் எழுதுவதற்கு இது சரியான நேரம்தான் என்று நினைக்கிறேன். ஆகையால் சுருக்கமாகச் சொல்லுகிறேன்.
துக்ளக் பத்திரிகையில் நான் மனம் போன போக்கில் எழுதுகிறேன் என்று சிலர் சொல்வதை, நான் ஒரு பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறேன். மற்றவர்கள் மனம் போகும் போக்கில் எல்லாம் எழுதி, அவரவர் மனமாற்றங்களுக்குத் தக்கவாறு மாறும் தர்மம் அல்ல துக்ளக்கின் பத்திரிகை தர்மம். காற்றடிக்கும் திசையில் எல்லாம் பறக்கும் தூசியாகத் திகழுவது அல்ல துக்ளக்கின் பத்திரிகை தர்மம்.
என் மனம் போன போக்கில் நான் எழுதுகிறேன் என்றால், ஏனோ தானோ என்ற போக்கில் அல்ல. மனம் என்பதற்கு, ‘மைன்ட்’ என்ற அர்த்தமும் உண்டு என்பதை வைத்துக் கொண்டு பார்த்தால், அதில் அறிவுபூர்வமான அணுகுமுறையும் அடக்கமாகிறது. பல பிரச்னைகளைப் பற்றி என் மனம், என் அறிவு என்ன நினைக்கிறதோ அந்த நோக்கில் எழுதுவதைத்தான் ‘மனம்போன போக்கில் எழுதுகிறான்’ என்று மற்றவர்கள் குறிப்பிடுவதாக எடுத்துக் கொண்டு மகிழ்கிறேன்.
...எதிர்த்து வரும் வாதங்களிலும், கேட்டுக் கொள்ள வேண்டியவை இருக்கலாம் என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்.
அது ஒருபுறமிருக்கட்டும். ‘பல விஷயங்களில் துக்ளக்கின் கருத்து என்ன?’ என்று கேட்டுக் கடிதங்கள் அன்றாடம் வந்த வண்ணம் இருக்கின்றன. ‘இதைப் பற்றி ஏன் எழுதவில்லை?.... அதைப் பற்றி என்ன கருத்து?... இதற்கு ஒரு விளக்கம் கொடுக்கக்கூடாதா?’ என்றெல்லாம் பல வாசகர்கள் அவ்வப்பொழுது எழுதிக் கொண்டேயிருக்கிறார்கள். அப்படி எழுதுபவர்கள் எல்லோருக்குமாகச் சேர்த்து, ஒரு சில விஷயங்களை மேலெழுந்த வாரியாகக் கூறுகிறேன். துக்ளக்கின் போக்கையும், துக்ளக்கில் இடம் பெறுபவை, இடம் பெறாதவை பற்றியும் மேலும் முழுமையாகப் புரிந்து கொள்ள இது உதவும் என்று நம்புகிறேன்.
பலருடைய பொதுவாழ்வுப் பிரச்னைகளைக் கிண்டல் செய்து, கண்டித்து, விமர்சித்துள்ள நான், எந்த ஒரு தனி மனிதருடைய தனி வாழ்வையும், எள்ளளவும் கூட விமர்சித்ததே கிடையாது. இது ஒரு கௌரவம்.
குறை கூற எனக்கு வக்கு இருக்கும்போதுதான் குணத்தைக் கூற என் பேனா தானாகவே இயங்க ஆரம்பிக்கிறது. இது ஒரு விளக்கம்.
வீழ்ந்த நிலையில் இருக்கும் ஒருவனைப் பார்த்து, அவன் பதில் சொல்ல முடியாத விஷயத்தைக் கூறி வாய்ச் சவடால் அடிப்பது என் பழக்கமல்ல. இது ஒரு வியாக்கியானம்.
வளரும் தீமைகளைக் கண்டிக்க வாய்ப்பிருந்தால் கண்டிக்கத் தவறி விடுவது, மடத்தனம் என்று நினைக்கிறேன். இது ஒரு வாதம்.
சில தீமைகளைச் சுட்டிக் காண்பிக்க முடியாமல் போனாலும் – அம்மாதிரி தீமைகளை ஆதரிக்காமலாவது இருக்கிறேன். இது ஒரு திருப்தி.
‘துக்ளக்கில் தெரிவிக்கப்பட்ட அச்சங்கள் எத்தனை மெய்த்து விட்டன?’ என்று நினைத்துப் பார்க்கிறேன். இதில் பெருமையில்லை, வருத்தம்தான்.
‘துக்ளக்கில் தெரிவிக்கப்பட்ட விருப்பங்கள் எத்தனை இன்னமும் ஈடேறாமல் இருக்கின்றன?’ என்றும் எண்ணிப் பார்க்கிறேன். இதில் அவமானம் இல்லை. வேதனைதான்.
எது எப்படி இருந்தாலும் லாபத்திற்காகவோ, அச்சத்தினாலோ எதையும் நான் எழுதியதே கிடையாது. இதில் மட்டற்ற மகிழ்ச்சி.
என்னைவிட எல்லா வகையிலும் பல மடங்கு உயர்ந்ததாக துக்ளக் இருக்கிறது. இது ஒரு சாதனை.
துக்ளக்கின் வாசகர்களில் பலர் துக்ளக்கை முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இது ஒரு அதிர்ஷ்டம் மட்டுமல்ல, பலமும் கூட.
என்றென்றும் ஆசிரியனை விட பத்திரிகை உயர்ந்ததாகவும், வாசகர்களின் எண்ணிக்கையை விட அவர்களுடைய அறிவு அதிகமானதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இது ஒரு நல்லெண்ணம்.
என்னைப் பொறுத்தவரை, துக்ளக்கின் தர்மங்களைச் சுருக்கமாகச் சொல்லப் போனால் இப்படித்தான் சொல்ல முடியும்.
நல்ல முயற்சிகள் உடனடியாகப் பலனிக்காமல் போனாலும், நாளாவட்டத்தில் வெற்றி கண்டே தீரும். இப்படிச் சொல்லும்போது நம்பிக்கையை விட, ஆசையே அதிமாக இருக்கிறது.
- சோ
– (15.10.76 துக்ளக் தலையங்கத்திலிருந்து..)

Friday, September 26, 2014

கேள்வி – பதில்
*********************
கே: ‘ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலுமாக ஒழிப்போம்’ என்று அதிபர் ஒபாமா சபதம் போட்டுள்ளாரே? இது சாத்தியம் என்று எண்ணுகிறீர்களா?
ப: இது சாத்தியமானதுதான் என்று, இந்த விவகாரத்தை நன்கு புரிந்து கொண்ட சில அயல்நாட்டு விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். இப்படிப் பலம் பெற்று திகழ்வதற்கான காரணங்களில் அமெரிக்காவும் ஒன்று. ஸிரியாவில் ஆட்சி மாற்றத்துக்கு எதிராக ‘மக்கள் கலகம்’ தோன்றியபோது, இந்தத் தீவிரவாதிகள் அதில் கலந்து கொள்ள, அப்போது ஸிரியா அதிபரை எதிர்த்த அமெரிக்கா, இவர்களுக்கு உதவிகள் செய்தது. அதனுடைய பலன் அமெரிக்காவை மட்டுமல்ல, பல்வேறு நாடுகளை இன்று அச்சுறுத்துகிறது. தீவிரவாதத்தை ஊக்குவிப்பது இப்படித்தான் போய் முடிகிறது.
 பிந்தரன் வாலேயை இந்திரா காந்தி தூண்டி விட்டார் – அந்தப் பிந்தரன் வாலே ஆதரவாளர்களாலேயே அவர் கொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசு பல வகைகளில் உதவியது – ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டார். தீவிரவாதத்தை யாருக்கு எதிரானது என்று பார்க்காமல், அந்தக் கொடுமை ஒழிக்கப்பட வேண்டியதுதான் என்ற தீர்மானத்துடன் எல்லா நாடுகளும் இயங்க வேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு காண வழி பிறக்கும்.

Tuesday, August 12, 2014

ஆவணி அவிட்டம் என்பது என்ன?

கேள்வி : இந்த ஆவணி அவிட்டம் என்பது என்ன? பழைய பூணூலை கழற்றி விட்டு, புதிய பூணூலைப் போட்டுக் கொள்ள ஒரு தினம். அதுதானே ஆவணி அவிட்டம் என்பது? அதாவது பூணூலை மாற்றுகிற தினம்தானே அது?
சோ : நீங்கள் சொல்கிற மாதிரிதான் இப்போது ஆகிவிட்டது. ஆனால், ஆவணி அவிட்டம் என்பது அதுவல்ல. ஆவணி அவிட்டம் என்று சொல்லப்படுகிற சடங்கின் உண்மையான பெயர் உபாகர்மா. உபாகர்மா என்றால் ஆரம்பம் என்று அர்த்தம். ச்ராவண மாதத்தில் பிரம்மதேவனுக்கு வேதம் கிட்டியது; அதாவது உபதேசம் ஆகியது. அந்த தினம், ஆவணி மாதம், அவிட்ட நக்ஷத்திரம். அதனால்தான் இதற்கு ‘ஆவணி அவிட்டம்’ என்ற பெயரும் வந்தது. அப்போது பிரம்மனுக்கு வேதம் கிட்டியதால், அவனுக்கு அது ஆரம்பம் ஆகியது. அந்த ஆரம்பத்தை இங்கே மனிதர்கள் கொண்டாடுகிறார்கள். இது வருடா வருடம் செய்யப்படுகிறபோது, வேதத்திற்குச் செய்யப்படுகிற மரியாதையாக இது கருதப்படுகிறது.
வேதத்திற்கு ஆண்டு விழா என்றும் இதைச் சொல்லலாம். ப்ரம்ம தேவனுக்கு உபதேசமாகிய தினம்; அதிலிருந்து வழி வழியாக மனிதர்களுக்குக் கிடைத்தது. அதனால் ஒவ்வொரு வருடமும் அந்த தினத்தைக் கொண்டாடுகிறோம். அது ஆண்டு விழா.
கேள்வி : ஆரம்பம் என்று சொன்னீர்கள். அது என்றோ ஆரம்பமாகி விட்டது. திரும்பவும் ஒவ்வொரு வருடமும் அதைப் புதிதாக ஆரம்பிப்பானேன்? அது எதற்கு? இது பகுத்தறிவுக்கு ஏற்ற விஷயமாக இல்லையே?
சோ : இது பகுத்தறிவுக்கு ஏற்ற விஷயம் இல்லை என்கிறீர்கள்; சரி, இருக்கட்டும். தேசிய ஒருமைப்பாட்டுக்காக – உறுதிமொழி, பிரமாணம் என்று வருடா வருடம் எல்லோரும் எடுத்துக் கொள்கிறார்கள். ‘போன வருடம்தான் இந்த உறுதிமொழி, பிரமாணம் எல்லாம் எடுத்தாகி விட்டதே! அதே தேசம்தான் இருக்கிறது; அதே பிரமாணம்தான் இது. அதை எதற்கு இன்னொரு முறை செய்ய வேண்டும்? தேசம் போய் விட்டதா? அல்லது பிரமாணம்தான் தீர்ந்து விட்டதா? அந்த பிரமாணத்திற்கு ஒரு வருடம்தான் ஆயுளா? ஏன் இதை திரும்பவும் வருடா வருடம் செய்ய வேண்டும்? ஏன்? அந்தப் பிரமாணம் ஆறு மாதத்திலேயே தீர்ந்து போகாதா? அல்லது மூன்று மாதத்தில் தீர்ந்து போகாதா? அல்லது தினம் தினம் அந்த பிரமாணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாதா? ஏன், இப்படி வருடத்திற்கு ஒருமுறை?’ என்றும் கேட்கலாம். ஆனால், அப்படி யாரும் கேட்பதில்லை. அது எப்படி பகுத்தறிவுக்கு உகந்ததாக இருக்கிறதோ, அதே மாதிரிதான் இதுவும்.
தேசம் என்கிற சிந்தனை, ஒருமைப்பாடு என்கிற சிந்தனை ஆகியவற்றை நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்கிறோம். அதற்காக இதைச் செய்கிறோம். அதே மாதிரிதான் இந்த உபாகர்மாவும். இந்த சிந்தனை, வேதம் எவ்வளவு உயர்வானது என்பது பற்றியது. ப்ரம்ம தேவனுக்குக் கிடைத்த தினம் பற்றியது. அங்கிருந்து நமக்கு அது கிடைத்தது என்ற விஷயம் பற்றியது. அந்த மாதம், அந்தத் தேதியில் – அதாவது ஆவணி மாதம் அவிட்ட நக்ஷத்திரத்தில் நாம் இதையெல்லாம் நினைத்துக் கொள்கிறோம். சொல்லப் போனால், இது தேசிய ஒருமைப்பாட்டு பிரமாணத்தை விட, பகுத்தறிவுக்கு உகந்த விஷயம்.
ஏனென்றால், தேசம் என்பது, என்றோ உண்டாகி விட்டது. ஒருமைப்பாடு என்பதும் என்றோ உண்டாகி விட்டது. ஆனால், தேசம் பிறந்த நேரத்திலோ, ஒருமைப்பாடு உண்டான சமயத்திலோ, இந்த பிரமாணத்தை நாம் எடுத்துக் கொள்வதில்லை. இந்த உபகர்மாவை எடுத்துக் கொண்டால் பிரம்மனுக்கு அது எப்போது உபதேசமாகியதோ, எப்பொழுது பிரம்மனுக்கு வேதம் கிட்டியதோ, அந்த மாதம், அந்த தினம் எது என்று பார்த்து, அந்த தினத்தில் நாம் இங்கே அந்தச் சடங்கைச் செய்கிறோம். அன்று நமக்கு வேதம் பயில்வது மீண்டும் ஆரம்பம்.இது பிராமணர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்ட விஷயம் என்று நினைத்து விடக்கூடாது. உபநயனம் என்பது முதல் மூன்று வர்ணத்தாருக்கும் உண்டு. அதாவது பிராமண, க்ஷத்ரிய, வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர்களுக்கு உபநயனம் உண்டு. அவர்கள் மூவருமே வருடா வருடம் இந்த ‘ஆவணி அவிட்டம்’ என்கிற உபாகர்மாவைச் செய்ய வேண்டும். இதை வெறும் பூணூலை மாற்றிக் கொள்கிற விஷயமாகக் கருதி விடாமல், வேதம் நமக்குக் கிட்டியதை கொண்டாடுகிற தினம் என்று நாம் கருத வேண்டும்.
– தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

Saturday, May 25, 2013

இரண்டாம் டெசோ

சமீபத்தில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் படம் இரண்டாம் டெசோ.கலைஞர் கிரியேசன் சார்பில் மு.கருணாநிதி கதை வசனம் எழுதி இயக்கி அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ள இந்த படம் வசூலில் தோல்வி கண்டாலும் தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு திரைக்காவியம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

படத்தின் கதை இதுதான்;-
சென்னையில் வாழும் ஹீரோ கருணாநிதி,திமுக என்ற வர்த்தக நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திவருகிறார்.டெல்லியில் வசிக்கும் அவருடைய நண்பர்களான சோனியாவும்,மன்மோஹனும் காங்கிரஸ் என்ற வர்த்தக நிறுவனத்தை நடத்திவருகிறார்கள்.கருணாநிதியும்,அவருடைய டெல்லி நண்பர்களும் இணைந்து ஐக்கிய முற்போக்கு கம்பெனி என்ற வர்த்தக நிறுவனத்தை துவக்கி அதையும் வெற்றிகரமாக நடத்தி பெரும் லாபம் குவிக்கிறார்கள்.

இப்படி இவர்களின் வியாபாரம் ஜரூராக போய்க்கொண்டிருக்கும் வேலையில் பக்கத்து தீவுநாடான இலங்கையில் ஒரு யுத்தம் மூள்கிறது.ராஜபக்சே என்பவரது கொலைப்படைகளும்,பிரபாகரன் என்பவரது கொலைப்படைகளும் இந்த யுத்தத்தில் ஈடுபடுகின்றன.ராஜபக்சே கருணாநிதியின் டெல்லி பார்ட்னர் சோனியாவின் நண்பராவார்.சோனியாவின் கணவர் ராஜீவ் என்பவரை பிரபாகரன் கொன்றுவிடுவதால் அவர் ராஜபக்சேயின் உதவியுடன் பிரபாகரனை ஒழிக்க முயல்கிறார்.

கடுமையான யுத்தத்தின் முடிவில் பிரபாகரனும்,அவரது கொலைப்படைகளும் ராஜபக்சேயின் படைகளால் நிர்மூலமாக்கப்பட்டு அழித்தொழிக்கப்படுகின்றன.அப்போது ஏராளமான அப்பாவி மக்களும் கொல்லப்படுகிறார்கள்.இச்சம்பவத்தினால் தமிழ்நாட்டில் கருணாநிதியின் வர்த்தக நிறுவனம் மேல் மக்களுக்கு அதிருப்தியும்,கோபமும் ஏற்படுகிறது.இதை பயன்படுத்தி அவரது போட்டி நிறுவனமான அம்மா &சும்மா என்ற மற்றொரு கம்பெனிக்கு மக்களின் ஆதரவு பெருகுகிறது.

இதனால் கலக்கமடையும் கதாநாயகன் கருணாநிதி மக்களின் ஆதரவை திரும்பபெறவும்,இழந்த நற்பெயரை மீட்கவும் "இரண்டாம் டெசோ"என்ற அமைப்பை உருவாக்குகிறார். தனது டெல்லி நண்பர்களோடு புதிய "வர்த்தக பேரங்களை"நடத்தி,அதன் மூலமாக எவ்வாறு தனது நிறுவனத்தை அவர் மீண்டும் வெற்றி பாதைக்கு திருப்புகிறார் என்பதை சுவாரஸ்யமாய் காட்டுகிறது இந்த இரண்டாம் டெசோ திரைப்படம்.

படத்தின் ஆரம்பமே போர்கள காட்சிதான்.இலங்கையில் உள்ள முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் இந்த காட்சிகள் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளன.ராஜபக்சேவும்,அவரது தம்பி கோத்தபையாவும் ஏராளமான ஆயுதங்களுடன் பிரபாகரனின் கொலைப்படைகளை தாக்க,பிரபாகரனின் படைகள் வீராவேசத்தோடு பாய்ந்து சென்று அப்பாவி தமிழர்களின் முதுகுகளுக்கு பின்னால் ஒளிந்துகொள்ளும் காட்சி பிரமிப்பூட்டுகிறது.இறுதியில்,கொடியவன் கோத்தபைய்யா அப்பாவி தமிழர்களை சுட்டு கொன்றதும் முதுகின் பின்னாலிருந்து வெளிவரும் பிரபாகரன் படையினர் "நாங்கள் சரணடைகிறோம்.எங்களை கொன்றுவிடாதீர்கள்"என்று போர்குணத்தோடு கண்களில் நீர் மல்க கெஞ்சும் காட்சி கல் மனதையும் கலங்க வைக்கிறது.அவர்களின் கெஞ்சல்களை பொருட்படுத்தாமல் கொலைவெறியன் கோத்தபையா ,சின்னஞ்சிறுவர்கள் என்றும் பாராமல் பிரபாகரனின் கொலைப்படைகளை ஈவிரக்கமின்றி சுட்டுகொல்லும் காட்சியில் நம் கண்கள் குளமாகின்றன.பிரபாகரனின் சடலத்தை காட்டும் காட்சியில் அவர் முன்பொருமுறை பேசிய "நானும்,ராஜபக்சேவும் சகோதரர்கள்.எங்கள் பிரச்னையில் தலையிட எந்த நாயுக்கும் உரிமையில்லை"என்ற வார்த்தைகள் பின்னணியில் ஒலிப்பது "டைரக்டர் டச்"!!!

தனது நண்பன் பிரபாகரன் இறந்த தகவல் கிடைத்தாலும் வர்த்தக நலன் கருதி அதை நம்ப மறுக்கும் காட்சியில் கருணாநிதியின் நடிப்பு சற்று நாடகத்தனமாக அமைந்திருக்கிறது.இரங்கல் கவிதை வாசித்தால் டெல்லி வியாபாரம் பாதிக்கும் என்ற காரணத்தால் நான்கு சுவர்களுக்குள் அவர் அழுது புலம்பும் காட்சியும் நாடகத்தனமே.ஹீரோவுக்குரிய எந்த சாகசமும் செய்யாமல் குடும்பநலன் கருதி அடக்கி வாசிக்கிறார் கருணாநிதி.

ஹீரோ டம்மியாக போனாலும் காமெடி காட்சிகள் படத்திற்கு தோள் கொடுக்கின்றன.காமெடியன்களாக ஹீரோவுடன் வலம்வரும் வீரமணியும்,திருமாவளவனும் தேர்ந்த நகைச்சுவை நடிகர்களாக தங்கள் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.வீரமணி அந்த கால நகைச்சுவை நடிகர் ஈ.வே.ராமசாமி பாணியில் தொட்டதற்க்கெல்லாம் "பார்ப்பன சதி"என்று கூறி குபீர் சிரிப்பை வரவைக்கிறார்.தூங்கிகொண்டிருக்கும் வீரமணியை திருமா எழுப்ப,"என்ன....?அதுக்குள்ள விடிஞ்சுருச்சா ?எல்லாம் பார்ப்பன சதி"என்று சொல்லும் காட்சியிலாகட்டும்,பஸ்ஸில் பயணித்து கொண்டிருக்கும்போது திடீரென்று வண்டி நிற்க ,வீரமணி எழுந்து "என்ன...பஸ் ப்ரேக் டவுனா..?எல்லாம் பார்ப்பன சதி"என்று வசனம் பேசும் காட்சியிலாகட்டும் ,சும்மா சொல்லக்கூடாது....வீரமணி அடிக்கும் லூட்டியில் தியேட்டரில் விசில் சத்தம் காதை கிழிக்கிறது."தந்தை பெரியார் மட்டும் பிறந்திருக்கா விட்டால் ஆபிரகாம் லிங்கனே ஆடு,மாடுதான் மேய்த்து கொண்டிருந்திருப்பார்" என்று அவர் அடிக்கும் "விட்"டில் சிரித்து,சிரித்து வயிறு புண்ணாகிவிடுகிறது.

ஒருபுறம் வீரமணி எவர்க்ரீன் காமெடியில் பட்டையை கிளப்ப,மற்றொருபுறம் திருமா க்ளாஸிக் காமெடியில் கலக்குகிறார்.தமிழ்நாட்டின் மூலை முடுக்கிலெல்லாம் பயணித்து ராஜபக்சேவை "கொலைகாரன்"என்று வசைபாடும் போதும் ,திமுக வர்த்தக குழுவோடு கொழும்பில் ராஜபக்சேவை சந்திக்கும்போது வாயெல்லாம் பல்லாக அவரோடு சிரித்து உரையாடும்போதும் தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார் திருமா.

ராஜபக்சேயிடம் விடைபெற்று கிளம்பும் நேரத்தில் "இப்ப போறேன்.ஆனா..திரும்பி....( சற்று இடைவெளிவிட்டு)..வரமாட்டேன்னு சொல்லவந்தேன்"என்று ஜகா வாங்கும்போது திருமாவின் முகபாவனையை பார்த்து சிரிக்காதவர்களே இருக்கமுடியாது.

கருணாநிதியின் டில்லி பார்ட்னர்களாக வரும் சோனியாவும்,மன்மோகனும் தங்களின் மர்ம நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார்கள்.கருணாநிதி இருவருக்கும் சளைக்காமல் கடிதம் எழுதுவதும்,ஒவ்வொரு முறையும் "நானும் கவலைப்படுகிறேன்"என்று பதில் கடிதத்தை மன்மோகன் எழுதுவதும் படம் நெடுக இடம்பெறுவது பெரும் அலுப்பை ஏற்படுத்துகிறது.

பின்னணி இசையில் கருணாநிதியின் ஆஸ்தான இசையமைப்பாளர் நாகூர் ஹனீபாவின் "சோனியாவிடம் கையேந்துங்கள்.அவர் இல்லையென்று சொல்லுவதில்லை"என்ற பாடல் ரசிக்கவைக்கிறது.

இறுதி காட்சியில் கருணாநிதி ஐக்கிய முற்போக்கு கம்பெனியில் இருந்து விலகுவதாக அறிவிப்பது சற்று நாடகத்தனமாக அமைந்துவிட்டது.எனினும்,இரண்டாம் டெசோ படத்தின் முதல் பாகமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் அடுத்த பாகத்தில் உண்மை நிலவரம் தெரியவரும்.

மொத்தத்தில் கருணாநிதியின் சமீபத்திய தோல்வி படவரிசையில் "இரண்டாம் டெசோ" -வும் ஒரு படுதோல்வி "மொக்க" படமாக அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது!!!.

Thursday, March 28, 2013

துக்ளக் கேள்வி பதில்கள்

துக்ளக் கேள்வி பதில்கள் 

கே : இலங்கைப் பிரச்னையில், இப்போது மாணவர்களும் இணைந்து கொள்வது பற்றி?

ப : இதனால் இலங்கைத் தமிழர்களுக்கு நல்லது எதுவும் நடந்து விடாது. ஆனால் இங்குள்ள மாணவர்களின் எதிர்காலத்திற்கு இது தீமை செய்யும். இந்த மாதிரி போராட்டங்கள் சாதிக்கப் போவது இவ்வளவுதான்.



கே : டெஸோ அமைப்பு வலிமை பெற வாய்ப்புண்டா?


ப : தி.மு.க.வைத் தவிர வேறு எந்தக் கட்சியும் இதில் அக்கறை காட்டவில்லை. தேர்தல் ஓட்டுக்காகவே கூட மற்ற பல கட்சிகளின் கூட்டணியை நாட வேண்டிய நிலையில் உள்ள தி.மு.க., இந்த தனி டெஸோவிற்கு என்ன வலிமையைச் சேர்க்கப் போகிறது? முதல் டெஸோ மறைந்தது போல, இரண்டாம் டெஸோவும் நாளடைவில் மறைந்து போகும்.



கே : இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் ஃபொன்சேகா தனிக் கட்சி துவங்கியுள்ளாரே! ஜெயிப்பாரா?

ப : ஜெயிக்க மாட்டார். ஏதாவது ஒரு சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ள கட்சியைக் கொஞ்சம் சங்கடத்தில் ஆழ்த்துவாரோ, என்னவோ! அதற்கு மேல் அவருக்குப் பலம் கிட்டும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.



கே : இலங்கைப் போர்க் குற்றங்கள் மீது சர்வதேச விசாரணை கோருவது தொடர்பாக, இந்தியா ஏன் இத்தனை தயக்கம் காட்டுகிறது?

ப : இலங்கை விரோதி நாடு அல்ல; அந்த நாட்டுடன் இந்தியாவிற்கு தொழில் ரீதியாக, வர்த்தக ரீதியாக உறவுகள் இருக்கின்றன; அங்குள்ள தமிழர்கள் சிங்களர்களுடன் சம உரிமை பெறுவதற்கு வழி இந்திய – இலங்கை விரோதம் அல்ல; இன்று இலங்கைக்கு நாம் செய்வதை, நாளை காஷ்மீர் தொடர்பாக நமக்குச் செய்ய பாகிஸ்தான் முனையும்.... என்பது போன்ற பல காரணங்களினால்தான், இந்தியா இவ்விஷயத்தை ஜாக்கிரதை உணர்வுடன் அணுகுகிறது.



கே : ‘தலைவர் கலைஞர் நடத்தும் போராட்டங்களை அரசியல் தந்திரம் என்று கூறுவது வருந்தத்தக்கது’ – என்கிறாரே கனிமொழி எம்.பி.?


ப : நியாயம்தானே! கலைஞரின் நடவடிக்கைகளை ‘அரசியல்’ என்று கூறலாமே தவிர, ‘தந்திரம்’ என்று எப்படிக் கூறுவது? தந்திரம் என்றால், அதைச் செய்பவர்களுக்கு அது உதவ வேண்டுமே? அவருடைய அரசியல் நடவடிக்கைகள் அவருக்கோ, அவருடைய கட்சிக்கோ உதவுகிற மாதிரியா இருக்கின்றன? அதைத்தான் கனிமொழி சுட்டிக்காட்டியிருக்கிறார்.



கே : இலங்கைத் தமிழர் பிரச்னையில், மத்திய அரசின் நிலையைத் தாங்கள் ஆதரிக்கிறீர்களா?

ப : அநேகமாக.



கே : சுப்ரமண்யம் ஸ்வாமி இலங்கையில் அதிபர் ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசியது சரியா, தவறா?

ப : ஒரு நட்பு நாட்டின் அதிபரை, இங்குள்ள ஒரு அரசியல்வாதி சந்திப்பதால் ஒரு தவறுமில்லை.



கே : ‘இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால், அதன் விளைவாக பெரிதும் பாதிக்கப்படப் போவது இலங்கைத் தமிழர்கள்தான். அவர்களுக்கு நாம் தொடர்ந்து வழங்கி வரும் உதவிகளை வழங்க முடியாத நிலையும் ஏற்படும்’ – என்கிறாரே ஞானதேசிகன்! இது மிரட்டல்தானே?

ப : இதில் என்ன மிரட்டல் இருக்கிறது? ஞானதேசிகன் ஒரு நடைமுறை உண்மையைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். இலங்கைத் தமிழர்களுக்கு நன்மை செய்வதாக நினைத்துக் கொண்டு, அவர்களுக்கு நாம் பிரச்னைகளை உருவாக்கி விடக் கூடாது என்கிற பொருளில் அவர் பேசியிருப்பதில் தவறு காண்பது சரியல்ல. 

கே : காவிரிப் பிரச்னையிலும், இலங்கைப் பிரச்னையிலும் கலைஞர் குழப்பியது போல், வேறு எந்த அரசியல் தலைவரும் குழப்பியது உண்டா! இப்படிக் குழப்புவதற்கு காரணம் என்ன...?

ப : குழப்புவது என்பது மற்ற பலருக்கு ஒரு தவறு; வேறு வழியில்லாமல் நிகழ்ந்து விடுவது. கலைஞருக்கு அது ஒரு கலை; அவர் பாடுபட்டுக் கற்று வந்தது அது. இடைவிடாத பயிற்சியின் மூலம் அந்தக் கலையில் அவர் வெகுதூரம் முன்னேறி விட்டார்.



கே : மார்ச் 12-ஆம் தேதியன்று டெஸோ போராட்டத்தில் பங்கேற்ற திருச்சி தி.மு.க.வினர் கைகளில் இருந்த பேனர்களில், பிரபாகரன் மகனின் பெயர் ‘பாலகிருஷ்ணன்’ என்று படு அபத்தமாக அச்சிடப்பட்டிருந்தது பற்றி? (தினமலர் 13.3.13 புகைப்படத்துடன் செய்தி)

ப : போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் எதற்காகப் போராடுகிறோம் என்பதை அறிந்திருக்க வேண்டும் என்ற அவசியம், நமது நாட்டு அரசியல் போராட்டங்களில் கிடையாது.



கே : ‘டெஸோ சார்பில் ஈழத் தமிழர் நலன்களுக்காக நடத்தப்பட்ட பொதுவேலை நிறுத்தம், பிரமாதமான வெற்றி அடைந்துள்ளது’ – என்று கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளது பற்றி?


ப : படுதோல்வியையே, வெற்றி என்று கருதுகிற பக்குவத்தை அவர் அடைந்திருப்பது பாராட்டத்தக்கது. இதே மாதிரி மகிழ்ச்சியை பாராளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க. பெறட்டும். அது தமிழகத்திற்கும், நாட்டிற்கும் நல்லது. 

Sunday, February 17, 2013

ராஜாஜி


ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது மதுவிலக்கு அமலில் இருந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பெரிய மனிதர்கள் கூடி மது விருந்து நடத்துவது வழக்கம். அப்போது ஐ.ஜி.யாக இருந்தவர் ரெய்ட் செல்ல தீர்மானித்தார். நேராக ராஜாஜியிடம் போய் ரெய்ட் நடத்தப் போகும் விவரத்தைக் கூறினார்.

""தாராளமாக உங்கள் வேலையைச் செய்யுங்கள்'' என்று ராஜாஜி சம்மதம் தெரிவித்தார். அப்போது அந்த ஐ.ஜி. பெரிய மனிதர்கள் பலர் அங்கே இருப்பதைக் கூறினார்.

""அதனால் என்ன?'' என்று கேட்டார் ராஜாஜி. அந்த விருந்தில் ஓர் உயர்நீதிமன்ற நீதிபதியும் இருப்பதைத் தெரிவித்தார் ஐ.ஜி. சிறிது நேரம் யோசித்த ராஜாஜி, ""அந்த நீதிபதியிடம் போய் "முதலமைச்சர் உங்களை அவசரமாகப் பார்க்க விரும்புகிறார். ஏதோ முக்கிய விஷயம் பேச வேண்டுமாம்' என்று சொல்லுங்கள். அவர் அந்த இடத்தை விட்டுக் கிளம்பி வந்தவுடன், நீங்கள் போலீசாருடன் உள்ளே சென்று ரெய்டு நடத்துங்கள்''என்றார்.

அதே போன்று அந்த நீதிபதி ராஜாஜியைப் பார்க்க அவசரமாக வந்தார். அப்போது ராஜாஜி, ""இந்த தடவை நீங்கள் எச்சரிக்கப்படுகிறீர்கள். இன்னொரு தடவை இப்படி நடந்தால் கைது செய்யப்படுவீர்கள்'' என்று கூறி நீதிபதியை அனுப்பி வைத்தார்.

அந்த நீதிபதி மீது எந்தத் தவறும் கூற முடியாது. ஆனால் இந்த குறைபாடு அவரிடமிருந்தது. நீதித்துறை மீது ராஜாஜிக்கு இருந்த மரியாதை காரணமாக அதை இப்படி சாமர்த்தியமாக சமாளித்தார்.

("துக்ளக் 40-வது ஆண்டு விழாவில் சோ கூறியது')
ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது மதுவிலக்கு அமலில் இருந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பெரிய மனிதர்கள் கூடி மது விருந்து நடத்துவது வழக்கம். அப்போது ஐ.ஜி.யாக இருந்தவர் ரெய்ட் செல்ல தீர்மானித்தார். நேராக ராஜாஜியிடம் போய் ரெய்ட் நடத்தப் போகும் விவரத்தைக் கூறினார்.

""தாராளமாக உங்கள் வேலையைச் செய்யுங்கள்'' என்று ராஜாஜி சம்மதம் தெரிவித்தார். அப்போது அந்த ஐ.ஜி. பெரிய மனிதர்கள் பலர் அங்கே இருப்பதைக் கூறினார்.

""அதனால் என்ன?'' என்று கேட்டார் ராஜாஜி. அந்த விருந்தில் ஓர் உயர்நீதிமன்ற நீதிபதியும் இருப்பதைத் தெரிவித்தார் ஐ.ஜி. சிறிது நேரம் யோசித்த ராஜாஜி, ""அந்த நீதிபதியிடம் போய் "முதலமைச்சர் உங்களை அவசரமாகப் பார்க்க விரும்புகிறார். ஏதோ முக்கிய விஷயம் பேச வேண்டுமாம்' என்று சொல்லுங்கள். அவர் அந்த இடத்தை விட்டுக் கிளம்பி வந்தவுடன், நீங்கள் போலீசாருடன் உள்ளே சென்று ரெய்டு நடத்துங்கள்''என்றார்.

அதே போன்று அந்த நீதிபதி ராஜாஜியைப் பார்க்க அவசரமாக வந்தார். அப்போது ராஜாஜி, ""இந்த தடவை நீங்கள் எச்சரிக்கப்படுகிறீர்கள். இன்னொரு தடவை இப்படி நடந்தால் கைது செய்யப்படுவீர்கள்'' என்று கூறி நீதிபதியை அனுப்பி வைத்தார்.

அந்த நீதிபதி மீது எந்தத் தவறும் கூற முடியாது. ஆனால் இந்த குறைபாடு அவரிடமிருந்தது. நீதித்துறை மீது ராஜாஜிக்கு இருந்த மரியாதை காரணமாக அதை இப்படி சாமர்த்தியமாக சமாளித்தார்.

("துக்ளக் 40-வது ஆண்டு விழாவில் சோ கூறியது')