Saturday, April 7, 2012

DRAVIDA MAYAI - திராவிட மாயை – ஒரு பார்வை

திராவிடர்கள் மீது கடவுள் சிந்தனை திணிக்கப்பட்டதா? – சுப்பு 

திராவிட மாயை – ஒரு பார்வை -


பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்’ என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் டி.எம். நாயர் அழைப்பு விடுத்ததாகவும், அதையே தான் மீண்டும் கூறுவதாகவும் கருணாநிதி உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதினார்.

திராவிட இயக்க வரலாற்றை அறிவதற்கு முன்பு, அதில் டி.எம். நாயரின் பங்களிப்பைத் தெரிந்து கொள்வோம்.

இந்திய சட்டமன்றத்திற்கான தேர்தல் 1916-ல் நடந்தபோது, டி.எம். நாயர் வேட்பாளராகப் போட்டியிட்டார். மகாத்மா காந்தியின் நண்பர் என்று அறியப்பட்ட வி.எஸ். சீனிவாச சாஸ்திரியாரால் தோற்கடிக்கப்பட்டார். இதே தேர்தலில் நில உரிமையாளர்களுக்கான தொகுதியில் போட்டியிட்ட பி. இராமராயலிங்கரும், பிற தொகுதிகளில் போட்டியிட்ட பிட்டி. தியாகராய செட்டியாரும், கே.வி. ரெட்டி நாயுடுவும் தோற்கடிக்கப்பட்டனர்.

வெகுஜன ஆதரவு இல்லாத காரணத்தால், தேர்தலில் தோல்வி அடைந்த இவர்கள் கூடி, தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்தார்கள். பிராமணர்கள்தான் தங்களைத் தடுத்து விட்டார்கள் என்பது அவர்களுடைய கண்டுபிடிப்பு. எனவே, பிராமண எதிர்ப்பு என்ற கொள்கையை வகுத்துக் கொண்டார்கள். இப்படி அமைந்ததுதான் ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’. இந்த அமைப்புதான் ‘ஐஸ்டிஸ்’ என்ற நாளிதழையும் நடத்தியது. நாளடைவில், தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை பொதுமக்கள் ஐஸ்டிஸ் கட்சி என்றும், நீதிக் கட்சி என்றும் அழைத்தனர்.

தேசிய எழுச்சிக்குத் தடை போட முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஆங்கில ஆட்சியாளர்கள், நீதிக் கட்சியின் வளர்ச்சிக்கு உதவினார்கள்.

டி.எம்.நாயர், அக்.7, 1917-ல் நிகழ்த்திய சொற்பொழிவு திராவிட இயக்கத்தவரால் சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. சென்னை நகரத்தின் ஸ்பர்டாங்க் சாலைப் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். அந்தச் சொற்பொழிவை ‘வரலாற்றுச் சிறப்புமிக்க வீரஞ் செறிந்த, எழுச்சிமிக்க, உணர்ச்சி ஊட்டக் கூடிய சொற்பொழிவு’ என்று தமது ‘திராவிட இயக்க வரலாறு’ என்னும் புத்தகத்தில் வர்ணனை செய்கிறார் இரா.நெடுஞ்செழியன். இந்த உரை திராவிட இயக்கத்தவரின் கொள்கை விளக்க அறிக்கையாகக் கருதப்படுகிறது. ஆகவே, அதை விவரமாகப் பார்க்கலாம்.