Wednesday, December 21, 2011

CHO ON SASIKALA & CO 's EXPULSION

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=371154

போயஸ் தோட்டத்தில் ஒரு புயல் வீசியிருக்கிறது. அதன் சூத்திரதாரியாக சுட்டிக்காட்டப்படுபவர், பத்திரிகையாளர் "சோ'. எல்லாம் செய்தும், எதுவும் தெரியாதவர் போல் அமைதியாக இருக்கிறார், மனிதர். அதிகார மையம் இடம் மாறிவிட்டதன் அடையாளமாக, அவரது அலுவலக வாசலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது; தரிசனத்துக்காக, வி.ஐ.பி.,க்கள் வரிசைகட்டி நிற்கின்றனர். ஓயாத போன் அழைப்புகளுக்கு மத்தியில், அவர், "தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:

* ஒரு சனிப் பெயர்ச்சியால் இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?

சனிப் பெயர்ச்சி நல்ல பலன்களைத் தான் கொடுக்கும் என, நீங்கள் தான் பத்திரிகையில் போட்டுள்ளீர்கள். அப்படியென்றால், நீங்கள் முன்கூட்டியே கணித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

* போயஸ் தோட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள இடமாற்றம், என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கருதுகிறீர்கள்?

அரசியல் விமர்சகர் என்ற ரீதியில் நான் பேசுகிறேன். ஒரு, எக்ஸ்ட்ரா கான்ஸ்டிட்யூஷனல் அத்தாரிட்டியாக (சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகார மையம்) யாராவது செயல்பட்டால், அது அரசு நிர்வாகத்துக்கு நல்லதல்ல. அதுவும், அந்த மாதிரி செயல்படுபவர்கள், தாங்களாகவே அந்த நிலையை ஏற்படுத்திக் கொண்டவர்களாக இருந்தால், அது நிர்வாகத்துக்கு இன்னமும் கெடுதல். அந்த மாதிரியான நிலை, நீக்கப்பட்டு இருக்கிறது. இது, ஆளுங்கட்சிக்கும், அரசு நிர்வாகத்துக்கும் ரொம்பவே நல்லது. நேர்மையான, தெளிவான பாதை வகுத்து நிர்வாகம் செல்வதற்கு இது உதவும். யாருடைய குறுக்கீடும் இல்லாமல், கட்சியும், ஆட்சியும் செயல்பட இது வழிவகுக்கும்.

* சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகார மையமாக சசிகலா குடும்பத்தினர் செயல்படுகின்றனர் என்பது, முதல் முறை எழுந்திருக்கும் புகார் அல்ல. 1991ல் இருந்தே இருந்து வரும் புகார் தான். இப்போது, திடீரென அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணம் என்ன?

எந்த நடவடிக்கையுமே திடீரென எடுக்கப்படுவதல்ல. நீண்ட யோசனைக்குப் பிறகு தான், பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நேற்று ஏதோ நடந்து, இன்று நடவடிக்கை என்பதாக நினைக்கக் கூடாது. நான் அப்படி நினைப்பதில்லை. நீண்ட காலமாக தொடர்ந்து நடந்து வருகிற நிகழ்ச்சிகளைக் கவனித்து, அது தொடர்பான தெளிவான முடிவுக்கு வருவதற்கு, கொஞ்சம் நேரம் பிடித்திருக்கலாம். அதில் தவறில்லை. முடிவு எடுக்கிற போது தெளிவு இருக்க வேண்டும். அது இருந்திருக்கிறது. தற்போது நடந்திருக்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே, தொடர் நிகழ்வுகளின் எதிரொலியாகத் தான் இருக்கும் என நான் நினைக்கிறேன்.

* அப்படியென்றால், முந்தைய காலங்களில் அவர்கள் செய்தவை எல்லாம், முதல்வரின் கவனத்துக்கு வரவே இல்லையா?

அது பற்றி எனக்குத் தெரியாது. அவங்களுக்குத் தெரிந்திருக்கலாம்; தெரியாமலும் இருந்திருக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக தெரியவந்திருக்கலாம். ஏற்கனவே சொன்னது போல், நான் இப்போது சொல்லிக் கொண்டிருப்பது எல்லாமே, ஓர் அரசியல் விமர்சகர் என்ற அடிப்படையில் மட்டும் தான்.

* இவ்வாறு சட்டத்துக்கு அப்பாற்பட்ட சக்திகளாக செயல்பட்டவர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமல்லவா?

 நான் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கிறேன் என்றால், எனக்கு திருப்தியான அளவு ஆதாரம் கிட்டுவது, ஒரு வகை. சட்ட ரீதியாக நிரூபிக்க வேண்டிய அளவு ஆதாரம் கிட்டுவது, வேறொரு வகை. சட்ட ரீதியான நடவடிக்கை என்றால், சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட நிரூபணமும் மட்டுமல்லாமல், சாட்சிகளும் தேவைப்படும். மூன்றாவது மனிதரும் திருப்தியடைய வேண்டும். இது அப்படியல்ல. நான் திருப்தியடைந்தாலே போதுமானது. இதையும், அதையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.

* அவர்கள் சட்ட விரோதமாக எதுவும் செய்யவில்லை என எடுத்துக் கொள்ளலாமா?
எனக்குத் தெரியாது.

* போயஸ் தோட்டத்தில் உள்ள சமையல்காரர் முதல் செயலர்கள் வரை, அனைவருமே சசிகலா குடும்பத்தாரின் நியமனம் தான் என்றொரு கருத்து நிலவுகிறது. இந்தச் சூழ்நிலையில், முதல்வர் தொடர்ந்து தயக்கமின்றி இயங்குவதில் ஏதேனும் சிரமங்கள் இருக்குமா?

 இதுபோன்ற விஷயங்கள், நம் யாரையும் விட அவருக்குத் தான் இன்னும் நன்றாகத் தெரியும். அதெல்லாம் தெரியாமலா அவர் ஒரு முடிவெடுத்திருப்பார்?

* சரி, இந்த இடமாற்றத்தில் உங்களுடைய, "ரோல்' (பங்களிப்பு) என்ன?

என்னைப் போட்டு பலர், "ரோல்' பண்ணுகின்றனர். அது தான் என், "ரோல்.' மண்டையை உருட்டுவது என்பரே. உருட்டுவதற்கு என் தலை மிகவும் வாக்கானது. உங்கள் தலையெல்லாம் முடியிருப்பதால் சிக்கிக் கொள்ளும். எனக்கு அந்தப் பிரச்னை எல்லாம் இல்லை; நன்றாக உருளும். அதனால் உருட்டுகின்றனர். என் பங்களிப்பு இருந்திருந்து, அது நல்லதென்றால் பாராட்டுங்கள். கெடுதல் என்றால் திட்டிக் கொள்ளுங்கள்.

* இதன் மூலம், உங்களுடைய பங்களிப்பு இருந்ததை ஒப்புக் கொள்கிறீர்களா?

உருட்டுவதே நீங்கள் தானே. அதனால் தான், நல்லதாக இருந்தால் பாராட்டுங்கள்; கெடுதலாக இருந்தால் திட்டுங்கள் என்றேன்.

* கடந்த வாரத்தில் மட்டும், இரண்டு முறை நீங்கள், முதல்வரைச் சந்தித்ததாகவும், சசிகலா வெளியேற்றப்பட்ட சமயத்திலேயே, நீங்கள் தோட்டத்தில் தான் இருந்ததாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு முறை தான் என்று, உங்களுக்கு எப்படி தெரியும்? 20 முறை கூட இருக்கலாம். அல்லது, ஒரு முறை கூட இல்லாமல் இருந்திருக்கலாம். யாராவது அப்படி சொன்னால், அதற்கு நான் என்ன பண்ண முடியும்? நான் மிகவும் பலவீனமானவன். இப்படிச் சொல்பவர்களுடன் சண்டையா போட முடியும்? சரி என, கேட்டுக்கொள்ள வேண்டியது தான். நான் ஒரு காந்தியவாதி. யார் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வேன். ஏசு சொன்னது போல, இந்தக்
கன்னத்தில் அறைந்தால், அந்தக் கன்னத்தைக் காட்டுவேன்.

* பலவீனமானவர் என்று சொல்கிறீர்கள். போலீஸ் பாதுகாப்பு மற்றுமுள்ள நடவடிக்கைகளை எல்லாம் பார்த்தால், மேலும் மேலும் வலுவாகி வருகிறீர்கள் போலத் தோன்றுகிறது.

நான், என்றும் ஒரே மாதிரி தான் இருக்கிறேன். அன்று முதல் இன்று வரை ஒரே, "வெயிட்' தான்.

* போயஸ் தோட்ட நிர்வாகம் மற்றும் ஜெயலலிதாவின் சொந்த அலுவல்களை, சசிகலா மற்றும் குடும்பத்தினர் தான் பார்த்துக்கொண்டு இருந்தனர். இனி, அவற்றை யார் நிர்வகிப்பர்?

யார் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். எனக்குத் தெரியாது. நீங்கள் விண்ணப்பிக்கிறீர்களா?

* இதன் தொடர்ச்சியாக, அமைச்சரவையிலோ, கட்சியிலோ ஏதேனும் மாற்றம் இருக்குமா?

எனக்குத் தெரியாது. தொண்டர்கள் அனைவரும் ஜெயலலிதா பின்னால் தான் அணிவகுத்து இருக்கின்றனர் என்பதால், இது, கட்சியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று தான் கருதுகிறேன். தொண்டர்கள் விருப்பப்படி தான், எம்.எல்.ஏ.,க்களும் செயல்படுவர்.

* இவர்கள் இருவருக்கும் இடையில், பிரிவும், கருத்து வேறுபாடும் ஏற்படுவது, இது இரண்டாவது முறை. இப்போது ஏற்பட்டுள்ள விரிசல், மீண்டும் சரியாகி, ஜெயலலிதாவும், சசிகலாவும் திரும்பவும் இணைந்து விடுவர் என்ற எண்ணம், கட்சியினர் மத்தியிலேயே கூட காணப்படுகிறதே?

நான் பார்த்தவரையில், ஆளும் கட்சியினருக்கு அந்த மாதிரி எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், அ.தி.மு.க.,வினர் எல்லாரும் மிகவும் கொண்டாடுகின்றனர். தமிழகம் முழுவதும் கொண்டாட்டம் தான். எடுக்கப்பட்ட முடிவில், ஒரு தெளிவு இருப்பதால் தான் கொண்டாடுகின்றனர். என்னைப் பொறுத்தவரை, மாநில நிர்வாகத்துக்காகவும், நேர்மையான ஆட்சியைத் தருவதற்காகவும், கட்சியை ஜனநாயக ரீதியில் ஒழுங்காக செயல்பட வைப்பதற்காகவும், ஒரு துணிச்சலான முடிவை எடுத்திருக்கிற முதல்வரை, மிகவும் பாராட்டுகிறேன். அவர், யோசிக்காமல் எதையும் செய்வதில்லை என்பது, எனக்குத் தெரியும். அவர் ஒரு முடிவு எடுக்கிறபோது, அதில் ஒரு பெரிய தெளிவு இருக்கும் என்பதை, இந்த நிகழ்ச்சி மீண்டும் நிரூபித்திருக்கிறது.

* வேறு சில கட்சிகளிலும் கூட, இதுபோன்ற அதிகார மையங்கள் இருக்கின்றன...

ஒரு கட்சியைப் பற்றி, மக்களுக்கு ஏதாவது குறை இருக்கிறபோது, அல்லது ஓர் ஆட்சியில் சிலர் குறுக்கீடுகள் பற்றி புகார்கள் இருக்கிற போது, தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுத்து, கட்சியின் நம்பகத்தன்மையை உருவாக்கி, ஆட்சியின் நேர்மையை உறுதி செய்து, நடவடிக்கை எடுப்பது கட்சித் தலைவரின் கடமை; ஆட்சி முதல்வரின் கடமை என்பதை, ஜெயலலிதா தனது செயல் மூலம், வெகு நன்றாக நிரூபித்திருக்கிறார். இதே மாதிரியான, இதை விட பெரிய புகார்கள், வேறு சில கட்சிகளிலும் இருக்கின்றன. அவற்றின் தலைவர்களுக்கும், இதே போன்ற நேர்மைத் துணிவு வந்தால், அது அரசியலுக்கு நல்லது.

Thursday, December 8, 2011

குஜராத் முதல்வரைச் சந்தித்தோம் - டிவி வரதராஜன்

குஜராத் முதல்வரைச் சந்தித்தோம் - டிவி வரதராஜன்

Right click the image and select 'Open link in new tab'