Monday, November 21, 2011

எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள்

தர்மம் - 8 - சோ 
ர்மர் எப்பேற்பட்டவர்? ‘நூல் விலக்கிய செய்கைகள் அஞ்சும் நோன்பினோன்’ என்று பாரதியார் கூறுகிறார். அதாவது நூல்களினால் – வேதங்களினால் – விலக்கப்பட்ட செய்கைகள் எவையோ, அவற்றை நினைத்து பயப்படுகிறவர் அவர். அவற்றின் பக்கமே போகக் கூடாது என்று நினைப்பவர். சகுனியோ தனது சூதாட்டத்தை நியாயப்படுத்துகிறான் :

‘...தேர்ந்தவன் வென்றிடுவான் – தொழில்
தேர்ச்சியில்லாதவன் தோற்றிடுவான்
நேர்ந்திடும் வாட்போரில் – குத்து
நெறியறிந்தவன் வெலப் பிறனழிவான்
ஓர்ந்திடும் சாத்திரப் போர் – தனில்
உணர்ந்தவன் வென்றிட உணராதான்
சோர்ந்தழி வெய்திடுவான் – இவை
சூதென்றும் சதியென்றும் சொல்வாரோ?


வல்லவன் வென்றிடுவான் – தொழில்
வன்மையில்லாதவன் தோற்றிடுவான்
நல்லவனல்லாதான் – என
நாணமிலார் சொலும் கதை வேண்டா
வல் அமர் செய்திடவே – இந்த
மன்னர் முன்னே நினையழைத்து விட்டேன்
சொல்லுக வருவதுண்டேல் – மனத்
துணிவு இல்லையேல் அதுவும் சொல்லுக...’


அவனுக்கு சூதாட்டம் ஒரு சயன்ஸ். ‘பழிக்கவற்றை ஒரு சாத்திரம் எனப் பயின்றோன்’. அதாவது அதை ஒரு சாத்திரமாக, சயன்ஸாகப் படித்தவன். அவனுடைய பகடை, மாயப் பகடை அல்ல. அவனுடைய சூதாட்டத் திறன் அது. அவனுக்கு அது தர்மமாகப் போய்விட்டது. மன்னர் அழைத்தால், ஆட வர வேண்டும் – வந்துதான் ஆக வேண்டும் என்பது அவன் நினைத்த தர்மம்.

சகுனி ஒன்றும் சாதாரணமான ஆள் அல்ல. சமாதானமாகப் போய்விட வேண்டும் என்று துரியோதனனுக்கு எவ்வளவோ எடுத்துச் சொன்னவர்களில் அவனும் ஒருவன். துரியோதனன் அந்தப் பேச்சை ஏற்கவில்லை. பிறகு சகுனியும், துரியோதனனுக்காகப் போரிட்டான்.

இங்கே எது சரியானது? சூதாட்டம் நடந்தது சரியா, தவறா? இதை ஆராயப் புகுந்தால், ‘தர்மர் ஏன் அதற்கு இணங்கினார்?’ என்ற கேள்வி வரும். அவருக்கு சூதாட்டத்தில் ஒரு பலவீனம் உண்டு. தன்னால் வென்றுவிட முடியும் என்ற நினைப்பு அவருக்கு உண்டு. அதனால்தான் அவர் இணங்கினார்.

ஆனால் சூதாட்டத்தின் மூலம் பாண்டவர்களை அழித்துவிட வேண்டும் என்பது சகுனியின் திட்டம். அங்கே நேர்மைத் திறன் இல்லாததால், அதர்மம் புகுந்து விடுகிறது. 

இப்படி சிக்கல் நிறைந்திருப்பதால்தான், தர்மத்தின் பாதை மிகவும் சூட்சுமமானது என்று மஹாபாரதத்தில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. ஞானிகள் கூட அதை உணர்ந்து கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள் என்று வலியுறுத்தப்படுகிறது. 

தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன் 
(தொடரும்) 


தர்மம் – 9 – சோ 
எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள் 

6–7–2011 இதழ் தொடர்ச்சி... 

தர்மத்தின் சூட்சுமம், ஞானிகளுக்கே கடினமான விஷயம் என்றால், நாம் எல்லாம் இதை எவ்வளவு ஆராய வேண்டியிருக்கும்? ஒரு சிறிய பிரச்சனையாக இருந்தாலும், அதில் எது தர்மம் என்பதை ஆராய்ந்துதான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். 

பகவத் கீதையில் அர்ஜுனன், கிருஷ்ணரிடம் கேட்கிறான் : 

கார்ப்பண்ய தோஷா பஹதஸ்வபாவ:
ப்ருச்சாமி த்வாம் தர்மஸம்மூட சேதா:
யச்ஸ்ரேயஸான் நிஸ்சிதம் ப்ரூஹி தன்மே
சிஷ்யஸ்தேஹம் சாதி மாம் த்வாம் ப்ரபன்னம்.

பிறர் பரிதாபப்படத்தக்க நிலையை அடைந்து விட்ட நான், தர்மம் எது என்று அறியாமல் மிகவும் குழம்பிப் போய் கிடக்கிறேன். எது நல்லது என்று நிச்சயம் செய்து எனக்குச் சொல். உன்னுடைய சிஷ்யன் நான். உன்னையே சரணடைந்து கேட்கிறேன். 

கேட்பது யார்? அர்ஜுனன், தர்மபுத்திரருடைய தம்பி. தர்மபுத்திரரோ, தர்மத்தை முழுதும் உணர்ந்தவர். தர்மமே அவதாரமாக வந்துள்ளவர். அவருடைய தம்பி யுத்தகளத்தில் நின்று கொண்டு, ‘எது தர்மம் என்று எனக்குப் புரியவில்லை’ என்று குழம்புகிறான். 

அவனுக்கு தர்மத்தை விளக்கிச் சொல்வதற்காக 700 ஸ்லோகங்களுக்கு மேல் சொல்லி, பகவத் கீதையை உபதேசம் செய்த கிருஷ்ண பரமாத்மா, கடைசி கட்டத்தில் அவரிடம் என்ன சொல்கிறார்? 

இதி மே ஞானமாக்யாதம்
குஹ்யாத் குஹ்யதரம் மயா
விம்ருச்யை ஏதத் அசேஷேண
யதேச்சஸி ததா குரு. 

ரகசியங்களில் எல்லாம் மிகப் பெரிய ரகசியமான ஞானத்தை உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன். இதை நன்றாக விமர்சித்து – அதாவது ஆராய்ந்து – அதன் பிறகு நீ என்ன நினைக்கிறாயோ, அதைச் செய். 

அங்கே அந்த சுதந்திரம் அர்ஜுனனுக்குத் தரப்படுகிறது – ‘நீ என்ன நினைக்கிறாயோ, அதைச் செய்’. 

வேறு எந்த மதத்திலும் இதைப் பார்க்க முடியாது. ‘முழுவதும் அனலைஸ் செய்து, அதன் பிறகு எது சரி என்று தோன்றுகிறதோ, அதைச் செய்’. 

– இந்த அணுகுமுறையைக் கடைபிடிக்கத்தான் நாம் எல்லோருமே கடமைப்பட்டிருக்கிறோம். ஒவ்வொரு விஷயத்திலும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாமல், எது சரி என்று முழுமையாக யோசித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். 

தர்மத்தைச் சார்ந்த விதிமுறைகள் மாறுதல் அடைகின்றன என்பதையும் பெரியவர்களே, தர்ம சாஸ்திரங்களில் கூறியிருக்கிறார்கள். ப்ரஹஸ்பதி தன்னுடைய தர்ம சாஸ்திரத்தில் ஒரு விஷயத்தை வலியுறுத்துகிறார். நிறைய தர்ம நூல்கள் இருக்கின்றன. எப்படி மனுஸ்ம்ருதி இருக்கிறதோ, அப்படி ப்ரஹஸ்பதியினுடைய ஸ்ம்ருதியும் இருக்கிறது. 

(தொடரும்) 

தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்


தர்மம் – 10 – சோ 
எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள் 

சென்ற இதழ் தொடர்ச்சி...

நாரத ஸ்ம்ருதி, விஷ்ணு ஸ்ம்ருதி, ப்ரஹஸ்பதி ஸ்ம்ருதி, பராசர ஸ்ம்ருதி... என்று பல இருக்கின்றன.

ப்ரஹஸ்பதி ஸ்மிருதியில் ‘எந்தெந்த விதிமுறைகள் ஒரு கால கட்டத்தில் மக்களால் வெறுக்கத் தக்கவை ஆகிவிடுகின்றனவோ, அவற்றை விட்டுவிட வேண்டும்; காலத்திற்கேற்ப, விதிமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்’ – என்று கூறப்பட்டிருக்கிறது.

அதாவது – தர்ம சாஸ்திரத்திலேயே விதிமுறைகள் மாறத்தக்கவை என்று வருகிறது.

ஆகையால் இந்த விதிமுறைகள் மாறுதலுக்கு உட்பட்டவைதான். தர்மம் என்கிற தத்துவம் ஒன்று – அது நிலையானது; ஆனால் அதற்குட்பட்ட விதிமுறைகள் மாறுதலுக்குரியவை.

ஆக, தர்மம் என்பது சாஸ்வதம். அது ஒருவன் தன் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல், காரியங்களைச் செய்வது என்று கொள்ளலாம். அது சாஸ்வதமானது. 
ஆனால் பெரும் ஜன சமூகத்தில் புழங்கும்போது எது சரியானது, எது தவறானது, எது தர்மம் என்று நிச்சயிக்கிற விதிமுறைகள் மாறுதலுக்குட்பட்டவைதான்.

இன்னொரு அம்சத்தைப் பார்ப்போம்.

மஹாபாரதத்தில் கிருஷ்ணர் எப்படி யுத்தம் நடத்தினார்? எனக்குப் புரிந்த வரையில் கிருஷ்ணர் தர்ம யுத்தமே செய்யவில்லை. அதர்ம யுத்தம்தான் அவர் செய்தார்.

‘அஸ்வத்தாமா ஹத: குஞ்சர’ – அதாவது அஸ்வத்தாமா என்ற யானை இறந்தது என்பதைப் பிரித்துச் சொல்லி, துரோணரை வில், அம்புகளைக் கீழே போடுமாறு செய்தது; கர்ணனை பலவீனப்படுத்தியது; சூரியன் அஸ்தமனமாகிற மாதிரி தோற்றத்தை ஏற்படுத்தி, ஒருவனை மாய்த்தது...’ என்று பல கட்டங்களிலும் தந்திரங்களை அவர் கையாண்டார்.

அதனால்தான் துரியோதனன் அடிபட்டு கீழே விழுந்து கிடக்கும்போது கிருஷ்ணரைப் பார்த்து, ‘உனக்கு வெட்கமாக இல்லையா?’ என்று கேட்கிறான்.

மேலும் ‘உன்னை மக்கள் இகழ மாட்டார்களா? ஒவ்வொருவரையும் இந்தந்த வகையில் நீ வென்றிருக்கிறாய். இது உனக்குக் கூச்சத்தை ஏற்படுத்தவில்லையா?’ என்று கேட்கிறான்.

அப்படி துரியோதனன் கேட்டபோது, தேவ வாத்தியங்கள் முழங்கின. நாற்புறமும் நறுமணம் வீசியது. தேவர்கள் அவன் மீது பூமாரி பொழிந்தார்கள் – என்று வியாஸர் சொல்கிறார். ஏனென்றால் துரியோதனன் பேசியது உண்மை.
கிருஷ்ணரே கூட ‘அவன் கூறுவது உண்மை. முற்றிலும் தர்ம யுத்தத்தை நாம் நடத்தியிருந்தால், நாம் ஜெயித்திருக்க மாட்டோம்’ என்றே சொல்கிறார்.

ஆனால் அவர் ஏன் இப்படியெல்லாம் செய்தார்?

‘லார்ஜர் குட்’.

தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

(தொடரும்) 




தர்மம் – 11 – சோ 
எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள் 

சென்ற இதழ் தொடர்ச்சி...

‘லார்ஜர் குட்’ – பெருமளவில் நன்மை – அனேகம் பேருக்கு நன்மை – என்கிற நியாயம் முக்கியமானது.

நியாயம் நிலைநாட்டப்படுவதற்கு, யுத்தத்தில் பாண்டவர்கள் ஜெயிக்க வேண்டும். அந்தப் பெரிய நன்மைக்காக அங்கே யுக்திகளை கையாள வேண்டியதாகப் போயிற்று. அந்தப் பெரிய நன்மையை நினைத்துப் பார்க்கும்போது, யுத்த தந்திரங்கள் அதர்மம் என்று நிராகரிக்கப்படத் தக்கதல்ல என்று ஆகிவிடுகிறது.

இந்த அளவுக்கு சிந்தனை, இந்த பூமியில் நடைமுறைக்கு ஏற்றவாறு இருந்திருக்கிறது.

யோக்கியர்களை, சமூக விரோதிகளை போலீஸ் துறை எப்படி நடத்த வேண்டுமென்றால், தயை தாட்சண்யமில்லாமல்தான் நடத்த வேண்டும். இப்படி ஓர் உரிமை தரப்படுவதால், சில தவறுகள் நேர்ந்து விடலாம். ஆனால், இப்படி நடந்து கொள்ள போலீஸாருக்கு உரிமை இருந்தால்தான், சமுதாயத்திற்கு நன்மை என்கிற – லார்ஜர் குட் – சாதிக்கப்படும்.

ஆகையால் ‘பெருமளவில் நன்மை’ என்பதை சமூக அளவிலும், ‘மனசாட்சியின்படி யோசித்து நடப்பது’ என்பதை தனிமனித அளவிலும், கொண்டு பார்க்கும்போது, எது சரியாக அமைகிறதோ, அதுதான் தர்மம். 
‘ஸ்வதர்மம்’ என்பது மனசாட்சியின்பாற்பட்டது. லார்ஜர் குட் என்ற ‘பெருமளவில் நன்மை’ என்பது சமுதாயத்தின் பாற்பட்டது. இவை இரண்டுக்கும் இணக்கமாக எது அமைகிறதோ, அது தர்மம். இதுதான் என் கருத்து.

எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால்தான் இதைச் செயலாற்ற முடியும். நமது நூல்களில் ஒற்றுமை மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

ரிக் வேதத்தில் ஒன்று வருகிறது :

ஸமானோ மந்த்ர: ஸமிதி ஸமானி
ஸமானம் மன: ஹை சித்தமேஷாம்
ஸமானம் மந்த்ரபி மந்த்ரேய வ:
ஸமானேன வா ஹவிஷா ஜுஹோமி.


உங்களுடைய வழிபாடு ஒத்த கருத்துடன் அமையட்டும். உங்களுடைய கூட்டங்கள் எல்லாம் ஒற்றுமையுடன் இயங்கட்டும். உங்களுடைய மனமும், எண்ணமும் ஒற்றுமையுடன் இருக்கட்டும். உங்கள் அனைவருக்கும் பொதுவாக இந்த ஆஹுதியைக் கொண்டு, நான் வழிபாட்டை நடத்துகிறேன்.

இதில் வர்ணம் எதுவும் கிடையாது. ஒட்டு மொத்தமான சமூகத்திற்குமாகச் சேர்த்து இது கூறப்படுகிறது. ஒற்றுமையும், சமத்துவமும் மீண்டும் மீண்டும் வற்புறுத்தப்படுகிறது. இந்த ஒற்றுமையை மனதில் கொண்டு, அதன் அடிப்படையில் ஒவ்வொருவரும், தனது மனசாட்சிக்கு ஏற்ப, பொது நன்மையை உத்தேசித்து செயல்பட்டால், அதுதான் தர்மமாகும் என்பது என் கருத்து.

தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன் 

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 6

ஐஸ்டிஸ் கட்சி – ஈ.வெ.ரா. மோதல்! – கே.சி.லட்சுமிநாரயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 6

ஸ்டிஸ் கட்சியினருடன் கடுமையாக மோதுவதற்கு ஈ.வெ.ரா., அண்ணாதுரை தரப்பினர் முற்றிலும் தயாராகி விட்டனர் என்பதைச் சேலம் ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் விவாதிப்பதற்காக, அண்ணாதுரை தயாரித்து அனுப்பிய ஒரு தீர்மானம் தெளிவாக்கியது.


“நம் சமுதாயத்தின் எதிர்கால நலனைக் கோரியும், நம் கட்சியின் தன்மானத்தைக் கோரியும், நமது கட்சியின் பெயரால் இதுவரை நமக்கும் சர்க்காருக்கும் இருந்து வரும் போக்கை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு நாம் தள்ளிக் கொண்டு போகப்பட்டு விட்டோம்” என்ற பீடிகையுடன், அண்ணாதுரையின் தீர்மானம் தொடங்கியது.

அந்தத் தீர்மானத்தின் முழு வடிவம் கீழே தரப்படுகிறது.

“நம் கட்சி தோன்றிய காலம் முதல் இதுவரை நாம் பிரிட்டிஷ் சர்க்காருடன் ஒத்துழைத்து வந்ததும், சர்க்காருடன் ஒத்துழையாமை செய்து சர்க்காருக்குத் தொல்லை கொடுத்து வந்த ஸ்தாபனங்களை எதிர்த்துப் போராடி, சர்க்காருக்கு அனுகூலமான நிலைமையை உண்டாக்க உதவி செய்து வந்ததும், குறிப்பாக சென்ற ஐந்தாண்டுக் காலமாக நடந்து வரும் உலகயுத்தத்தில், நல்ல நெருக்கடியில் நேச நாடுகளின் வெற்றிக்குக் கேடு வரும்படியான நிலையில், நம் நாட்டில் பல ஸ்தாபனங்கள் செய்து வந்த பெரும் கிளர்ச்சியையும் நாச வேலைகளையும் எதிர்த்து அடக்குவதிலும், நேச நாடுகளுக்கு வெற்றி உண்டாக பணம், ஆள், பிரச்சாரம் முதலியவை நிபந்தனையின்றி சர்க்காருக்கு உதவி வந்ததும், சர்க்காராலும் பாமர மக்களாலும் நம் கட்சியை இழிவாகக் கருதப்படத்தக்க நிலை ஏற்படுவதற்குப் பயன்பட்டு விட்டது.

“இந்திய அரசியல் சமூக இயல்பு சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில், சர்க்கார் நம் கட்சியையும், நம் இலட்சியமாகிய திராவிட நாட்டுப் பிரிவினையையும் அலட்சியம் செய்து வருகிறார்கள்.

“இந்திய மக்கள் அரசியல் சமுதாய இயல்பு சம்பந்தமான ஸ்தாபனங்களில் நம் ஸ்தாபனம் குறிப்பிடத்தக்கதாகவும், நீதிநெறி உடையதாகவும் இருந்து, ஒழுங்கு முறைக்குக் கட்டுப்பட்டு சர்க்கார் மெச்சும்படி நடந்து வந்தும், நம் ஸ்தாபனம் சர்க்காரால் மற்ற சாதாரண ஸ்தாபனங்களோடு ஒன்றாகக் கூடச் சேர்த்துப் பேசுவதற்கு இல்லாததாக அலட்சியப் படுத்தப்பட்டது. 
“மாகாண கவர்னராலோ, கவர்னர் ஜெனரலாலோ, இந்திய மந்திரியாலோ, பிரிட்டிஷ் முதல் மந்திரியினாலோ, இந்திய அரசியல் கட்சிகளைப் பற்றிப் பல தடவை பேச்சு ஏற்பட்ட சந்தர்ப்பங்களில், ஒன்று இரண்டு தடவை கூட நம் சமுதாயத்தையோ, நம் ஸ்தாபனத்தையோ, நம் இலட்சியத்தையோ குறிப்பிட, கட்டுப்பாடாய் மறுத்தே வரப்பட்டு இருக்கிறது.

“ஆகவே இப்படிப்பட்ட நிலைமை மாறி, நம் கட்சி நிலை மதிக்கப்படவும், குறிப்பிடவும், மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்தவும், நம் கட்சி இனியும் கட்டுப்பாடும் உரமும் பெற்று உண்மையான தொண்டர்களைக் கொண்டு, நாணயமாகவும், தீவிரமாகவும் தொண்டாற்றி மதிப்புப் பெறவும், நல்ல வசதியும் சௌகரியமும் ஏற்படுவதற்கும் நம் கட்சிக்கு அடியில் கண்ட திட்டம் உடனே அமலுக்குக் கொண்டு வரப்பட வேண்டியது அவசியமும், அவசரமுமான காரியம் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

பதவிகளைக் கைவிடுக! 

“அ. நம் கட்சியில் இருக்கும் அங்கத்தினர்களும், இனியும் வந்து சேர இருக்கும் அங்கத்தினர்களும் சர்க்காரால் தங்களுக்கு அளிக்கப்பட்ட எந்தவிதமான கவுரவப் பட்டங்களையும், உடனே சர்க்காருக்கு வாபஸ் செய்து விட வேண்டும்; இனி ஏற்றுக் கொள்ளவும் கூடாது.

“ஆ. அதுபோலவே, அவர்கள் யுத்தத்திற்காகவும் மற்றும் சர்க்கார் காரியங்களுக்காகவும் மத்திய சர்க்காரிலோ, மாகாண சர்க்காரிலோ, எந்தவிதமான கமிட்டியில் எப்படிப்பட்ட கவுரவ ஸ்தானம், அங்கத்தினர் பதவி, ஆலோசகர் பதவி அளிக்கப்பட்டிருந்தாலும் அவைகளையெல்லாம் உடனடியாக ராஜினாமா செய்துவிட வேண்டியது.

“இ. தேர்தல் அல்லாமல் ஸ்தல ஸ்தாபனம் அதாவது ஜில்லா போர்டு, முனிசிபல் சபை, பஞ்சாயத்து போர்டு ஆகியவைகளின் தலைவர், உபதலைவர், அங்கத்தினர் ஆகிய பதவிகளில், சர்க்காரால் நியமனம் பெற்ற அல்லது நியமனம் பெற்ற அங்கத்தினர்களால் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்கள் யாவரும், தங்கள் பதவிகளை உடனே ராஜினாமா செய்து விட வேண்டியது.

ஈ. சர்க்காரால் தொகுதி வகுக்கப்பட்ட எந்தவிதமான தேர்தலுக்கும், கட்சி அங்கத்தினர்கள் வேட்பாளர்களாக நிற்கக் கூடாது.“இதை ஏற்று ஒரு வாரத்தில் இதன்படி கட்டுப்பட்டு நடக்காதவர்கள் எவரும், தங்களுக்கு இக்கட்சியில் இருக்க இஷ்டம் இல்லை என்று கருதி, கட்சியை விட்டு நீங்கிக் கொண்டவர்களாகக் கருதப்பட வேண்டியவர்கள் ஆவர். 

“கட்சியின் வேலைத் திட்டத்திலும், போக்கிலும் புது முறுக்குத் தரும் நோக்கத்துடன் நான் மேற்கண்ட தீர்மானத்தைச் சேலம் மாநாட்டுக்கு அனுப்பியிருக்கிறேன்.” 

பிறர் சிரிக்கும் நிலை 

மது தீர்மானத்தின் அடிப்படை நோக்கம் என்ன என்பதையும், அண்ணாதுரை எழுதித் தீர்மானத்துடன் அனுப்பியிருந்தார். 

“சர்க்காருக்கு ஒத்து ஊதும் கூட்டம் என்று சதா காலமும் விஷயம் அறியா மக்கள் ஒருபுறம் தூற்றுவதையும்; அடித்தாலும் அழத் தெரியாதவர்கள், மிக நல்லவர்கள் என்று ஆங்கில சர்க்கார் மற்றொரு புறம் தலையில் குட்டவும்; பட்டம் கிட்டுமா, பதவி கிட்டுமா என்று ஆரூடம் பார்ப்பதும்; துரைமார்களிடம் தூது போவதும் தவிர, ‘இதுகளுக்கு’ வேறு என்ன தெரியும் என்று காங்கிரஸார் பேசியும் வருவதைக் கேட்டுக் கேட்டு, உண்மையிலேயே கட்சியின் குறிக்கோளின்படி நடக்கக் கஷ்ட நஷ்டம் ஏற்கும் உறுதி படைத்த வீரர்கள் ஒரு புறமும்; போர் கூடாது, கிளர்ச்சி ஆகாது, தீவிரம் கூடாது என்று கருதும் சீமான்கள் மற்றொரு புறமும் இருந்து கொண்டு, கட்சியை இப்பக்கம் இவரும், அப்பக்கம் அவரும் இழுக்க, இந்த வேடிக்கையைக் கண்டு பிறர் சிரிக்க இருக்கும் நிலைமையைக் கண்டு, நெஞ்சுவலி கொண்டு ஓர் இளைஞன் வெளியிடும் இருதய மொழியே என் தீர்மானம்” என்று அண்ணாதுரை தமது விளக்கக் குறிப்பில் குறிப்பிட்டிருந்தார். “சர்க்காரின் அசட்டை (அலட்சியம்) சகிக்க முடியாததாகி விட்டதோடு, திராவிட இனத்தின் பண்பு எது என்பதை நாமே மறந்து விடும் நிலைமைக்கு நம்மைக் கொண்டு போய் விடுமோ என்று அஞ்ச வேண்டியபடி இருக்கிறது. இந்த நிலைமை மாறித்தான் தீர வேண்டும். இருபுறம் இழுக்கப்படும் தொல்லையிலே கட்சி சிக்கிச் சிதைவது நிற்க வேண்டும். பட்டமும் பதவியும் பெரிதா, உரிமைத் திடமும் விடுதலையும் பெரிதா என்பதற்கு ஒரு பதில் கிடைத்துத்தான் ஆக வேண்டும்” என்றும் அண்ணாதுரை எழுதியிருந்தார். 

“இந்தத் தீர்மானத்துடன், இதையொட்டியும் வேறு பல தீர்மானங்களையும் அனுப்பியிருக்கிறேன். இவைகளுக்குப் பெரியாரின் பூரண ஆதரவு இருக்கிறது என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே ஆங்காங்கு உள்ள திராவிடத் தோழர்கள் இந்த என் தீர்மானத்தைப் பற்றி கலந்து பேசி, இது மாநாட்டிலே நிறைவேற, நமது கட்சியின் போக்கு மாறி நாம் உய்ய வழி கிடைக்கும் வழி காணுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று அண்ணாதுரை நிறைவாகக் கூறி இருந்தார். 

கட்சியின் பெயர் மாற்றம் 
1944 – ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27– ஆம் தேதியன்று சேலம் நகரில், ஜஸ்டிஸ் கட்சி மாநாடு ஈ.வெ.ரா. தலைமையில் நடந்தது. அந்த மாநாட்டில் அண்ணாதுரையின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்று அறிவிக்கப்பட்டது. 


“இம்மாநாடானது ஜஸ்டிஸ் கட்சி என்றழைக்கப்படும் இக்கட்சிக்குள்ள தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம் என்ற பெயரை ‘திராவிடர் கழகம்’ (திராவிடியன் அசோசியேஷன்) என்று பெயர் மாற்றத் தீர்மானிக்கிறது” என்று அறிவித்த மிக முக்கியமான ஒரு தீர்மானமும் சேலம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. 

இந்தத் தீர்மானத்துக்கு எதிர்ப்பும் இருந்தது. மாநாட்டுப் பிரதிநிதிகளில் சிலர் வெளிநடப்புச் செய்தார்கள். மாநாடு முடிந்த பிறகு, அதில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்பட்ட தீர்மானங்கள் செல்லுபடி ஆகா என்றும், ஏனென்றால் அதில் கட்சியினர் பலர் கலந்து கொள்ளவில்லை என்றும் ஜஸ்டிஸ் கட்சியின் ஒரு பிரிவினர் குற்றஞ்சாட்டினார்கள். அவர்கள் ஜஸ்டிஸ் கட்சியைத் தொடர்ந்து நடத்தினார்கள். 

சேலம் மாநாட்டில் ஓர் அரசியல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. திராவிடக் கட்சிகளின் அடிமைப்புத்தி மிக மிக ஆழமானது என்பதைக் காட்டிய, அந்தத் தீர்மானம் பற்றிய விவரம் அடுத்த இதழில். 

(தொடரும்) 

ஆதார நூல்கள்: 
தென்னாட்டு இங்கர்சால் அண்ணாதுரை
எழுதியவர் - கலைச்செல்வன். 
வெளியிட்டோர்: கலைமன்றம், சென்னை-1 (1953). 

Saturday, November 12, 2011

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 5

அடிமை நிலையை நீட்டிக்கக் கெஞ்சினார்! – கே.சி.லட்சுமி நாராயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 5

ன்றைய சென்னை மாகாணச் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி படுதோல்வி அடைந்த பிறகு, ஈ.வெ.ரா. அந்தக் கட்சியின் நிலையிலிருந்து சிறிது சிறிதாக மாறுபடத் தொடங்கினார். கருத்து வேற்றுமைகள் குறித்து அவர் பகிரங்கமாகவே பேச ஆரம்பித்தார்.

1940– ஆம் வருடம், பிப்ரவரி மாதம் 18 – ஆம் தேதியன்று சென்னையில் டாக்டர் சி.நடேச முதலியார் நினைவுக் கூட்டத்தில், ஈ.வெ.ரா. நிகழ்த்திய உரையில் ஒரு பகுதியைக் கீழே தந்துள்ளேன்.

“கட்சிக்கு (ஜஸ்டிக் கட்சிக்கு) பணம் கிடையாது. ஏனெனில் முன்பு ஒரு காலத்தில் நம்மைச் சார்ந்திருந்த பணக்காரர்கள் எல்லோரும் இன்று நம்முடன் உரையாட யோசனை செய்கிறார்கள். நமது கட்சிக்கு வந்தால் என்ன லாபம் உண்டு என்றும் கேட்கிறார்கள். மற்றும் சிலர் கட்சியை விட்டு ஓடிப்போனதுடன் இல்லாமல், கட்சியைத் தாக்கவும் ஆரம்பித்து விட்டார்கள்.

“இன்றைய தினம் நமது (ஜஸ்டிஸ்) கட்சிக்கு ஏதாவது செல்வாக்கு இருக்குமானால், அது நமது கட்சியில் உள்ள அங்கத்தினர் காரணமாக ஏற்பட்டது அல்ல. அது நமது எதிரிகளுடைய (காங்கிரஸுடைய) குற்றம் குறைகளால் நமக்கு ஏற்பட்டுள்ளது ஆகும்.

“இந்தச் சக்தியின் மீது நாம் பலமான அஸ்திவாரம் போட்டு கட்டிடம் கட்ட வேண்டியது நம் முன்னால் இருக்கும் வேலை. அப்போதுதான் தேசம் முழுமைக்கும் தானே பிரதிநிதித்துவம் வைப்பதாகச் சொல்லும் காங்கிரஸின் வேஷத்தை நம்மால் கலைக்க முடியும்.

“தேர்தலில் நமக்கு ஜெயம் கிடைக்காது என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. 
“பிராமணரல்லாதவர் எல்லோரும் ஒன்றாகக் கூடிய போதிலும், நமது இயக்கத்தின் அடிப்படையான கொள்கையை மாற்றி அமைக்காவிட்டால், நம்மால் வெற்றி பெற முடியாது.

“.... தேர்தல்களில் ஜஸ்டிஸ் கட்சியின் பெயரால் அபேட்சகர்களாக நிற்பதற்கும் யாரும் முன்வருவது இல்லை.

“.... கடந்த 20 வருடங்களாக வாழ்விலும், தாழ்விலும் நாம் (அந்நிய) அரசாங்கத்தை ஆதரித்து வந்ததால், நமது பெருமையும், பெயரும், செல்வாக்கும் இன்று சீர்குலைந்து போயின.

“.... தற்போதுள்ள கவர்னர், காங்கிரஸின் மாயையில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார். பிரிட்டிஷ் அரசாங்கமே அந்த வலையில்தான் விழுந்திருக்கிறது. இம்மாதிரியான படுமோசமான நிலைமை இத்தேசத்தில் ஒருநாளும் ஏற்பட்டது இல்லை.

ஆதரவு கிடையாது

“.... ஐரோப்பியர்கள் மட்டும் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்தால், நமக்குச் சரியான பலம் ஏற்பட்டு விடும். “தமிழ்நாட்டில் உள்ள பாமர மக்கள் திராவிட இயக்கத்தை ஆதரிக்கிறார்கள். ஆனால், மற்ற மாகாணங்களில் இந்த இயக்கத்துக்குக் கொஞ்சம் கூட ஆதரவு கிடையாது. டாக்டர் அம்பேத்கரும், இன்னும் சில நண்பர்களும் இந்த விஷயத்தைப் பற்றி மூச்சுக் கூட விடாதே என்று சொல்லி விட்டார்கள்.

“இந்தப் பொய்யான இந்திய தேசம், தேசியம், தேசிய லட்சியம் என்பதை எல்லாம் ஜனங்கள் விட்டு விட்டு, நமது திராவிட நாட்டின் விடுதலைக்குப் பாடுபடுவார்களேயானால் நமது இலட்சியம் கை கூடும். 
“ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள பல பிரமுகர்களுக்கு இந்த எண்ணம் பிடிக்கவில்லை. இந்த அடிப்படையான இலட்சியத்தை அவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால், நமது இயக்கம் வெற்றி பெறப்போவது இல்லை.”

– இவ்வாறு ஈ.வெ.ரா. பேசினார். ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கை மாற வேண்டும் என்றும், திராவிட நாட்டின் விடுதலை என்ற இலட்சியம், ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள பலருக்கு ஏற்புடையதாக இல்லை என்றும் இந்த உரையில் அவர் பகிரங்கமாகக் குறிப்பிட்டார்.

அதே சமயத்தில், தமிழகத்தில் மட்டுமே திராவிட இயக்கத்திற்கு ஆதரவு இருந்தது என்றும், மற்ற மாகாணங்களில் அந்த இயக்கத்திற்கு இம்மியளவு கூட ஆதரவு கிடையாது என்றும் ஈ.வெ.ரா. குறிப்பிட்டதையும் கவனிக்க வேண்டும்.

உண்மையில், ஈ.வெ.ரா. இந்த உரையை நிகழ்த்திய 1940– ஆம் ஆண்டில், தமிழகத்திலும் திராவிட இயக்கத்திற்கு ஆதரவு இருந்ததில்லை .

திராவிட என்ற சொல்

திராவிட, திராவிட நாடு, திராவிடர்கள் என்ற சொற்கள் ஜஸ்டிஸ் கட்சியினருக்கும், ஈ.வெ.ரா. குழுவினருக்கும் இடையே மோதல்களை உண்டாக்கின. ஆங்கிலேய அரசினர் பிரித்தாளும் கொள்கையின் அடிப்படையில் புகுத்திய ‘திராவிட’ என்ற சொல்லை ஈ.வெ.ரா., அண்ணாதுரை ஆகியோரும், அவர்களைச் சாந்தவர்களும் ஓர் அவசர ஆவேசத்துடன் வரவேற்றார்கள். தெற்கே உள்ளவர்கள் திராவிடர்கள் என்றும், வடக்கே உள்ள இந்தியர்கள் ஆரியர்கள் என்றும், காங்கிரஸ் மகா சபையின் விடுதலை இயக்கம் திராவிடர்கள் மீது ஆரியர்களின் ஆதிக்கத்தைத் திணிப்பதற்காக நடைபெற்றது என்றும், பகுத்தறிவுக்குச் சிறிதும் பொருத்தம் இல்லாத வகையில் அவர்கள் பேசவும் எழுதவும் தலைப்பட்டார்கள்.

‘திராவிட’ என்ற சொல்லை ஜஸ்டிஸ் கட்சியில் பலர் விரும்பவில்லை. 1941– ஆம் ஆண்டில் ‘திராவிட நாடு’ என்ற பெயரில் ஒரு வார இதழை அண்ணாதுரை ஆரம்பித்தார். ‘திராவிட’ என்ற பெயரை வைத்துக் கொண்டு பத்திரிகையை ஆரம்பிக்க வேண்டாம் என்றும், வேறு ஒரு பெயரில் பத்திரிகையை நடத்துவதே நல்லது என்றும் தமிழ் அறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் அண்ணாதுரைக்கு ஆலோசனை கூறினார். 
‘நாம் வாழும் நாடு திராவிட நாடு, நம் இனம் திராவிட இனம் என்ற உணர்ச்சியை அண்ணாதுரை ஊட்டிக் கொண்டு வந்தார். இந்தச் சமயத்தில் நீதிக் கட்சியின் (ஜஸ்டிஸ் கட்சியின்) தலைவர்கள், தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொள்ள வெட்கப்பட்டனர்’ என்று ‘தென்னாட்டு இங்கர்சால் அண்ணாதுரை’ என்ற வாழ்க்கை வரலாற்று நூல் (1953), ஜஸ்டிஸ் கட்சியினருக்குப் பதில் அளிக்கும் வகையில் தெரிவித்தது.

திருவாரூர் தீர்மானம்

மேலே தரப்பட்டுள்ள ஈ.வெ.ரா.வின் சொற்பொழிவு நிகழ்த்தப் பெற்ற ஆண்டு 1940 என்பதை மீண்டும் ஒரு முறை கவனிப்போம்.

இரண்டாம் உலக யுத்தம் 1939– ஆம் வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கியது. யுத்தம் சம்பந்தமாக காங்கிரஸ் மகாசபை விதித்த நிபந்தனைகளை அன்றைய பிரிட்டிஷ் அரசு ஏற்க மறுத்தது. உடனே மாகாணங்களில் இருந்த காங்கிரஸ் மந்திரி சபைகள் அனைத்தும், பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் மகாசபை தீர்மானித்தது. அந்த ஆணையை ஏற்று 1939 அக்டோபர் 28 – ஆம் தேதியன்று சென்னை மாகாணத்தில் ராஜாஜி தலைமையிலான மந்திரி சபை ராஜினாமா செய்தது.

ஒருபுறம் இரண்டாம் உலக யுத்தம் நடந்து கொண்டிருந்தது; மற்றொரு புறம் மாகாணங்களில் காங்கிரஸ் மந்திரி சபைகள் பதவி விலகி விட்டன; இன்னொரு புறம் காங்கிரஸ் மகாசபை இந்தியா முழுவதும் பெரியதொரு போராட்டத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. அந்தச் சூழ்நிலையில்தான், ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கை மாற வேண்டும் என்று ஈ.வெ.ரா. பேச ஆரம்பித்தார்.

4.8.1940 அன்று திருவாரூர் நகரில் ஈ.வெ.ரா. தலைமையில் நடந்த ஜஸ்டிஸ் கட்சியின் பதினைந்தாவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு முக்கியமான தீர்மானம் கீழே தரப்படுகிறது.

“திராவிடர்களுடைய கலை, நாகரிகம், பொருளாதாரம் ஆகியவை முன்னேற்றமடைவதற்கு, பாதுகாப்பதற்கு, திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம், இந்திய மந்திரியின் நேர் பார்வையின் கீழ் ஒரு தனி நாடாகப் பிரிக்கப்பட வேண்டுமென இம்மாநாடு தீர்மானிக்கிறது.” 
(‘நமது குறிக்கோள்’ – ‘விடுதலை’ வெளியீடு; 1948, பக்.34.)

இந்தத் தீர்மானம் தனிநாடு கோரவில்லை. பிரிட்டிஷ் இந்தியா மந்திரியின் நேர்ப் பார்வைக்குக் கீழ்ப்பட்ட ஒரு பகுதியாகச் சென்னை மாகாணம் அமைய வேண்டும் என்றுதான் இந்தத் தீர்மானம் வேண்டியது.

அதாவது, அண்டையில் உள்ள வட இந்தியாவிலிருந்து பிரிந்து, 6000 மைல்களுக்கு அப்பால் உள்ள பிரிட்டனுக்கு அடிமைப்பட்ட நிலையில் ‘தனிநாடு’ வேண்டும் என்றுதான் ஈ.வெ.ரா.வைத் தலைவராகக் கொண்டவர்கள் கேட்டார்கள்!

ஜஸ்டிஸ் கட்சி என்ற பெயரை அடியோடு மாற்ற, ஈ.வெ.ரா. தரப்பினர் நடவடிக்கைகளை எடுத்தார்கள். விவரம் அடுத்த வாரம்.

(தொடரும்)

ஆதார நூல்கள்: 

1. தென்னாட்டு இங்கர்சால் அண்ணாதுரை - எழுதியவர் - கலைச்செல்வன்.
வெளியிட்டோர்: கலைமன்றம், சென்னை-1 (1953). 
2. விடுதலைப் போரில் தமிழகம் - (இரண்டு தொகுதிகள்) எழுதியவர் ம.பொ.சி.
இது நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல் ஆகும். 

Wednesday, November 2, 2011

நினைத்தேன் எழுதுகிறேன்

விலக்கு, தேவையா? – சோ 
நினைத்தேன் எழுதுகிறேன்

‘லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரைக் கொண்டு வந்தால், அது பிரதமர் அலுவலகத்தின் செயல்பாட்டை சீர்குலைத்து விடும்’ என்று ராகுல்காந்தி முதற்கொண்டு பலர் பேசி வருகிறார்கள்.


ராகுல் காந்தி

இந்த வாதத்தை ஏற்க வேண்டும் என்றால் – லோக்பால் விசாரணை வரம்பிற்குள் எந்த மந்திரி வந்தாலும், அவருடைய அலுவலகத்தின் செயல்பாடுகள் முடங்கிவிடும் – என்று கூறி விடலாமே? அது மட்டும் பரவாயில்லையா? இதற்கு என்ன பதில் சொல்வார்கள்? ‘எந்த மந்திரி மீது லோக்பால் விசாரணை வருகிறதோ, அவருக்குப் பதிலாக வேறு ஒரு மந்திரியை நியமித்துக் கொள்வார்கள். அல்லது அவருடைய இலாகா வேறு ஒருவரிடம் போகும். ஆகையால், பாதிப்பு இருக்காது’ என்று சொல்லலாம். ஆனால், ஒரு மந்திரி சபையில் இந்த மாதிரி பல மந்திரிகள் மீது விசாரணை வந்தால், அப்போது ஒவ்வொரு இலாகாவாக, வேறு ஒரு மந்திரியிடம் போகும்போது, நிர்வாகம் ரொம்பச் சீராக இருக்குமா?

அல்லது பல தலைமை அதிகாரிகள், தலைமைச் செயலாளர்கள், துறைகளின் மூத்த செயலாளர்கள் போன்றவர்கள் மீது விசாரணை வந்தால், அப்போது அவரவர்கள் துறை பாதிக்கப்படாதா? மாநிலங்களின் முதலமைச்சர்கள் மீதோ, மற்ற அமைச்சர்கள் மீதோ விசாரணை வந்தால், அவர்களுடைய துறைகள் எல்லாம் சீர் குலைந்து போகாதா? இப்படிப் பார்த்தால், பதவியில் இருக்கிற யார் மீதும் எந்த விசாரணையும் வரக் கூடாது என்று சொல்வது போல் ஆகிவிடும்.

ஏற்கெனவே ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ், பிரதமர் உட்பட யார் மீது வேண்டுமானாலும் வழக்கு வரலாம். அப்படி பிரதமர் மீது இதுவரை எத்தனை வழக்குகள் வந்து, அவருடைய இலாகா, அல்லது மந்திரிசபை, அல்லது அரசு சீர்குலைந்து போயிருக்கிறது? ஒருமுறை கூட அப்படி நடக்கவில்லையே? அப்படியிருக்க, லோக்பால் விசாரணையினால் மட்டும் இந்தக் கேடு வந்துவிடும் என்று எப்படிச் சொல்ல முடியும்?

இதில் வேறு ஒரு வாதமும் கூறப்படுகிறது. ‘அயல்நாடுகள், லோக்பாலைப் பயன்படுத்திக் கொண்டு, பிரதமர் மீது வேண்டுமென்றே விசாரணைகளைக் கிளப்பி விட்டு, நமது நிர்வாகத்தைச் சீர்குலைக்கும்’. அப்படி என்றால், இப்போதே அதைச் செய்ய முடியாதா? ஊழல் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் பல வழக்குகளைக் கொண்டு வந்து இந்திய அரசையே முடக்கிவிட முடியாதா? ஏன் எந்த அயல்நாடும் இதைச் செய்யவில்லை? லோக்பாலின் கீழ் மட்டும்தான் அயல் நாடுகள் இப்படிச் செய்யுமா? ஏன்?


லோக்பாலைப் பொறுத்தவரை, எடுத்த எடுப்பிலேயே எதையும் செய்துவிடப் போவதில்லை. பிரதமர் மீது ஒரு புகார் வந்தால், உடனே விசாரணையை ஆரம்பித்து, வழக்கு நடத்தி முடித்து, பிரதமருக்குத் தண்டனை கொடுத்து விட வேண்டும் என்று யாரும் கோரவில்லை. ஒரு விஷயம், லோக்பாலின் பார்வைக்கு வந்தால், அதில் சாரம் இருக்கிறதா, இல்லையா என்பதைத் தீர்மானித்துக் கொண்டுதான் லோக்பால், மேல் நடவடிக்கை எடுக்க முடியும். எந்தச் சட்டமும் எடுத்த எடுப்பிலேயே நடவடிக்கை என்று கூறிவிடாது. ஆகையால், அப்படி லோக்பால் முன்னிலையில் பிரதமர் மீது புகார் வந்தால் கூட, உடனே அவர் எந்தப் பாதிப்புக்கும் ஆளாகிவிட மாட்டார். 
இதில் பிரதம மந்திரிருக்கு விலக்கு அளிப்பதுதான் விபரீதமாகப் போகும். லஞ்சம் வாங்குகிற மந்திரிகள் எல்லாம் பிரதமரோடு சேர்ந்து, அதை வாங்கிவிட்டால் போதும். அதாவது பிரதமர் தலைமையில் ஊழலை நடத்தி விட்டால்போதும். அது லோக்பாலுக்கு அப்பாற்பட்டதாகி விடும். ஆக, ஒரு மந்திரி சபையில் எந்த மந்திரி மீதுமே விசாரணை வராமல் இருந்து விடும். நிம்மதி. 

நேருவின் பித்துக்குளித்தனம், ஆயுத பூஜை

ஆயுத பூஜை 

நேருவின் பித்துக்குளித்தனம்