Wednesday, December 21, 2011

CHO ON SASIKALA & CO 's EXPULSION

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=371154

போயஸ் தோட்டத்தில் ஒரு புயல் வீசியிருக்கிறது. அதன் சூத்திரதாரியாக சுட்டிக்காட்டப்படுபவர், பத்திரிகையாளர் "சோ'. எல்லாம் செய்தும், எதுவும் தெரியாதவர் போல் அமைதியாக இருக்கிறார், மனிதர். அதிகார மையம் இடம் மாறிவிட்டதன் அடையாளமாக, அவரது அலுவலக வாசலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது; தரிசனத்துக்காக, வி.ஐ.பி.,க்கள் வரிசைகட்டி நிற்கின்றனர். ஓயாத போன் அழைப்புகளுக்கு மத்தியில், அவர், "தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:

* ஒரு சனிப் பெயர்ச்சியால் இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?

சனிப் பெயர்ச்சி நல்ல பலன்களைத் தான் கொடுக்கும் என, நீங்கள் தான் பத்திரிகையில் போட்டுள்ளீர்கள். அப்படியென்றால், நீங்கள் முன்கூட்டியே கணித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

* போயஸ் தோட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள இடமாற்றம், என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கருதுகிறீர்கள்?

அரசியல் விமர்சகர் என்ற ரீதியில் நான் பேசுகிறேன். ஒரு, எக்ஸ்ட்ரா கான்ஸ்டிட்யூஷனல் அத்தாரிட்டியாக (சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகார மையம்) யாராவது செயல்பட்டால், அது அரசு நிர்வாகத்துக்கு நல்லதல்ல. அதுவும், அந்த மாதிரி செயல்படுபவர்கள், தாங்களாகவே அந்த நிலையை ஏற்படுத்திக் கொண்டவர்களாக இருந்தால், அது நிர்வாகத்துக்கு இன்னமும் கெடுதல். அந்த மாதிரியான நிலை, நீக்கப்பட்டு இருக்கிறது. இது, ஆளுங்கட்சிக்கும், அரசு நிர்வாகத்துக்கும் ரொம்பவே நல்லது. நேர்மையான, தெளிவான பாதை வகுத்து நிர்வாகம் செல்வதற்கு இது உதவும். யாருடைய குறுக்கீடும் இல்லாமல், கட்சியும், ஆட்சியும் செயல்பட இது வழிவகுக்கும்.

* சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகார மையமாக சசிகலா குடும்பத்தினர் செயல்படுகின்றனர் என்பது, முதல் முறை எழுந்திருக்கும் புகார் அல்ல. 1991ல் இருந்தே இருந்து வரும் புகார் தான். இப்போது, திடீரென அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணம் என்ன?

எந்த நடவடிக்கையுமே திடீரென எடுக்கப்படுவதல்ல. நீண்ட யோசனைக்குப் பிறகு தான், பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நேற்று ஏதோ நடந்து, இன்று நடவடிக்கை என்பதாக நினைக்கக் கூடாது. நான் அப்படி நினைப்பதில்லை. நீண்ட காலமாக தொடர்ந்து நடந்து வருகிற நிகழ்ச்சிகளைக் கவனித்து, அது தொடர்பான தெளிவான முடிவுக்கு வருவதற்கு, கொஞ்சம் நேரம் பிடித்திருக்கலாம். அதில் தவறில்லை. முடிவு எடுக்கிற போது தெளிவு இருக்க வேண்டும். அது இருந்திருக்கிறது. தற்போது நடந்திருக்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே, தொடர் நிகழ்வுகளின் எதிரொலியாகத் தான் இருக்கும் என நான் நினைக்கிறேன்.

* அப்படியென்றால், முந்தைய காலங்களில் அவர்கள் செய்தவை எல்லாம், முதல்வரின் கவனத்துக்கு வரவே இல்லையா?

அது பற்றி எனக்குத் தெரியாது. அவங்களுக்குத் தெரிந்திருக்கலாம்; தெரியாமலும் இருந்திருக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக தெரியவந்திருக்கலாம். ஏற்கனவே சொன்னது போல், நான் இப்போது சொல்லிக் கொண்டிருப்பது எல்லாமே, ஓர் அரசியல் விமர்சகர் என்ற அடிப்படையில் மட்டும் தான்.

* இவ்வாறு சட்டத்துக்கு அப்பாற்பட்ட சக்திகளாக செயல்பட்டவர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமல்லவா?

 நான் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கிறேன் என்றால், எனக்கு திருப்தியான அளவு ஆதாரம் கிட்டுவது, ஒரு வகை. சட்ட ரீதியாக நிரூபிக்க வேண்டிய அளவு ஆதாரம் கிட்டுவது, வேறொரு வகை. சட்ட ரீதியான நடவடிக்கை என்றால், சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட நிரூபணமும் மட்டுமல்லாமல், சாட்சிகளும் தேவைப்படும். மூன்றாவது மனிதரும் திருப்தியடைய வேண்டும். இது அப்படியல்ல. நான் திருப்தியடைந்தாலே போதுமானது. இதையும், அதையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.

* அவர்கள் சட்ட விரோதமாக எதுவும் செய்யவில்லை என எடுத்துக் கொள்ளலாமா?
எனக்குத் தெரியாது.

* போயஸ் தோட்டத்தில் உள்ள சமையல்காரர் முதல் செயலர்கள் வரை, அனைவருமே சசிகலா குடும்பத்தாரின் நியமனம் தான் என்றொரு கருத்து நிலவுகிறது. இந்தச் சூழ்நிலையில், முதல்வர் தொடர்ந்து தயக்கமின்றி இயங்குவதில் ஏதேனும் சிரமங்கள் இருக்குமா?

 இதுபோன்ற விஷயங்கள், நம் யாரையும் விட அவருக்குத் தான் இன்னும் நன்றாகத் தெரியும். அதெல்லாம் தெரியாமலா அவர் ஒரு முடிவெடுத்திருப்பார்?

* சரி, இந்த இடமாற்றத்தில் உங்களுடைய, "ரோல்' (பங்களிப்பு) என்ன?

என்னைப் போட்டு பலர், "ரோல்' பண்ணுகின்றனர். அது தான் என், "ரோல்.' மண்டையை உருட்டுவது என்பரே. உருட்டுவதற்கு என் தலை மிகவும் வாக்கானது. உங்கள் தலையெல்லாம் முடியிருப்பதால் சிக்கிக் கொள்ளும். எனக்கு அந்தப் பிரச்னை எல்லாம் இல்லை; நன்றாக உருளும். அதனால் உருட்டுகின்றனர். என் பங்களிப்பு இருந்திருந்து, அது நல்லதென்றால் பாராட்டுங்கள். கெடுதல் என்றால் திட்டிக் கொள்ளுங்கள்.

* இதன் மூலம், உங்களுடைய பங்களிப்பு இருந்ததை ஒப்புக் கொள்கிறீர்களா?

உருட்டுவதே நீங்கள் தானே. அதனால் தான், நல்லதாக இருந்தால் பாராட்டுங்கள்; கெடுதலாக இருந்தால் திட்டுங்கள் என்றேன்.

* கடந்த வாரத்தில் மட்டும், இரண்டு முறை நீங்கள், முதல்வரைச் சந்தித்ததாகவும், சசிகலா வெளியேற்றப்பட்ட சமயத்திலேயே, நீங்கள் தோட்டத்தில் தான் இருந்ததாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு முறை தான் என்று, உங்களுக்கு எப்படி தெரியும்? 20 முறை கூட இருக்கலாம். அல்லது, ஒரு முறை கூட இல்லாமல் இருந்திருக்கலாம். யாராவது அப்படி சொன்னால், அதற்கு நான் என்ன பண்ண முடியும்? நான் மிகவும் பலவீனமானவன். இப்படிச் சொல்பவர்களுடன் சண்டையா போட முடியும்? சரி என, கேட்டுக்கொள்ள வேண்டியது தான். நான் ஒரு காந்தியவாதி. யார் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வேன். ஏசு சொன்னது போல, இந்தக்
கன்னத்தில் அறைந்தால், அந்தக் கன்னத்தைக் காட்டுவேன்.

* பலவீனமானவர் என்று சொல்கிறீர்கள். போலீஸ் பாதுகாப்பு மற்றுமுள்ள நடவடிக்கைகளை எல்லாம் பார்த்தால், மேலும் மேலும் வலுவாகி வருகிறீர்கள் போலத் தோன்றுகிறது.

நான், என்றும் ஒரே மாதிரி தான் இருக்கிறேன். அன்று முதல் இன்று வரை ஒரே, "வெயிட்' தான்.

* போயஸ் தோட்ட நிர்வாகம் மற்றும் ஜெயலலிதாவின் சொந்த அலுவல்களை, சசிகலா மற்றும் குடும்பத்தினர் தான் பார்த்துக்கொண்டு இருந்தனர். இனி, அவற்றை யார் நிர்வகிப்பர்?

யார் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். எனக்குத் தெரியாது. நீங்கள் விண்ணப்பிக்கிறீர்களா?

* இதன் தொடர்ச்சியாக, அமைச்சரவையிலோ, கட்சியிலோ ஏதேனும் மாற்றம் இருக்குமா?

எனக்குத் தெரியாது. தொண்டர்கள் அனைவரும் ஜெயலலிதா பின்னால் தான் அணிவகுத்து இருக்கின்றனர் என்பதால், இது, கட்சியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று தான் கருதுகிறேன். தொண்டர்கள் விருப்பப்படி தான், எம்.எல்.ஏ.,க்களும் செயல்படுவர்.

* இவர்கள் இருவருக்கும் இடையில், பிரிவும், கருத்து வேறுபாடும் ஏற்படுவது, இது இரண்டாவது முறை. இப்போது ஏற்பட்டுள்ள விரிசல், மீண்டும் சரியாகி, ஜெயலலிதாவும், சசிகலாவும் திரும்பவும் இணைந்து விடுவர் என்ற எண்ணம், கட்சியினர் மத்தியிலேயே கூட காணப்படுகிறதே?

நான் பார்த்தவரையில், ஆளும் கட்சியினருக்கு அந்த மாதிரி எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், அ.தி.மு.க.,வினர் எல்லாரும் மிகவும் கொண்டாடுகின்றனர். தமிழகம் முழுவதும் கொண்டாட்டம் தான். எடுக்கப்பட்ட முடிவில், ஒரு தெளிவு இருப்பதால் தான் கொண்டாடுகின்றனர். என்னைப் பொறுத்தவரை, மாநில நிர்வாகத்துக்காகவும், நேர்மையான ஆட்சியைத் தருவதற்காகவும், கட்சியை ஜனநாயக ரீதியில் ஒழுங்காக செயல்பட வைப்பதற்காகவும், ஒரு துணிச்சலான முடிவை எடுத்திருக்கிற முதல்வரை, மிகவும் பாராட்டுகிறேன். அவர், யோசிக்காமல் எதையும் செய்வதில்லை என்பது, எனக்குத் தெரியும். அவர் ஒரு முடிவு எடுக்கிறபோது, அதில் ஒரு பெரிய தெளிவு இருக்கும் என்பதை, இந்த நிகழ்ச்சி மீண்டும் நிரூபித்திருக்கிறது.

* வேறு சில கட்சிகளிலும் கூட, இதுபோன்ற அதிகார மையங்கள் இருக்கின்றன...

ஒரு கட்சியைப் பற்றி, மக்களுக்கு ஏதாவது குறை இருக்கிறபோது, அல்லது ஓர் ஆட்சியில் சிலர் குறுக்கீடுகள் பற்றி புகார்கள் இருக்கிற போது, தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுத்து, கட்சியின் நம்பகத்தன்மையை உருவாக்கி, ஆட்சியின் நேர்மையை உறுதி செய்து, நடவடிக்கை எடுப்பது கட்சித் தலைவரின் கடமை; ஆட்சி முதல்வரின் கடமை என்பதை, ஜெயலலிதா தனது செயல் மூலம், வெகு நன்றாக நிரூபித்திருக்கிறார். இதே மாதிரியான, இதை விட பெரிய புகார்கள், வேறு சில கட்சிகளிலும் இருக்கின்றன. அவற்றின் தலைவர்களுக்கும், இதே போன்ற நேர்மைத் துணிவு வந்தால், அது அரசியலுக்கு நல்லது.

Thursday, December 8, 2011

குஜராத் முதல்வரைச் சந்தித்தோம் - டிவி வரதராஜன்

குஜராத் முதல்வரைச் சந்தித்தோம் - டிவி வரதராஜன்

Right click the image and select 'Open link in new tab'


Monday, November 21, 2011

எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள்

தர்மம் - 8 - சோ 
ர்மர் எப்பேற்பட்டவர்? ‘நூல் விலக்கிய செய்கைகள் அஞ்சும் நோன்பினோன்’ என்று பாரதியார் கூறுகிறார். அதாவது நூல்களினால் – வேதங்களினால் – விலக்கப்பட்ட செய்கைகள் எவையோ, அவற்றை நினைத்து பயப்படுகிறவர் அவர். அவற்றின் பக்கமே போகக் கூடாது என்று நினைப்பவர். சகுனியோ தனது சூதாட்டத்தை நியாயப்படுத்துகிறான் :

‘...தேர்ந்தவன் வென்றிடுவான் – தொழில்
தேர்ச்சியில்லாதவன் தோற்றிடுவான்
நேர்ந்திடும் வாட்போரில் – குத்து
நெறியறிந்தவன் வெலப் பிறனழிவான்
ஓர்ந்திடும் சாத்திரப் போர் – தனில்
உணர்ந்தவன் வென்றிட உணராதான்
சோர்ந்தழி வெய்திடுவான் – இவை
சூதென்றும் சதியென்றும் சொல்வாரோ?


வல்லவன் வென்றிடுவான் – தொழில்
வன்மையில்லாதவன் தோற்றிடுவான்
நல்லவனல்லாதான் – என
நாணமிலார் சொலும் கதை வேண்டா
வல் அமர் செய்திடவே – இந்த
மன்னர் முன்னே நினையழைத்து விட்டேன்
சொல்லுக வருவதுண்டேல் – மனத்
துணிவு இல்லையேல் அதுவும் சொல்லுக...’


அவனுக்கு சூதாட்டம் ஒரு சயன்ஸ். ‘பழிக்கவற்றை ஒரு சாத்திரம் எனப் பயின்றோன்’. அதாவது அதை ஒரு சாத்திரமாக, சயன்ஸாகப் படித்தவன். அவனுடைய பகடை, மாயப் பகடை அல்ல. அவனுடைய சூதாட்டத் திறன் அது. அவனுக்கு அது தர்மமாகப் போய்விட்டது. மன்னர் அழைத்தால், ஆட வர வேண்டும் – வந்துதான் ஆக வேண்டும் என்பது அவன் நினைத்த தர்மம்.

சகுனி ஒன்றும் சாதாரணமான ஆள் அல்ல. சமாதானமாகப் போய்விட வேண்டும் என்று துரியோதனனுக்கு எவ்வளவோ எடுத்துச் சொன்னவர்களில் அவனும் ஒருவன். துரியோதனன் அந்தப் பேச்சை ஏற்கவில்லை. பிறகு சகுனியும், துரியோதனனுக்காகப் போரிட்டான்.

இங்கே எது சரியானது? சூதாட்டம் நடந்தது சரியா, தவறா? இதை ஆராயப் புகுந்தால், ‘தர்மர் ஏன் அதற்கு இணங்கினார்?’ என்ற கேள்வி வரும். அவருக்கு சூதாட்டத்தில் ஒரு பலவீனம் உண்டு. தன்னால் வென்றுவிட முடியும் என்ற நினைப்பு அவருக்கு உண்டு. அதனால்தான் அவர் இணங்கினார்.

ஆனால் சூதாட்டத்தின் மூலம் பாண்டவர்களை அழித்துவிட வேண்டும் என்பது சகுனியின் திட்டம். அங்கே நேர்மைத் திறன் இல்லாததால், அதர்மம் புகுந்து விடுகிறது. 

இப்படி சிக்கல் நிறைந்திருப்பதால்தான், தர்மத்தின் பாதை மிகவும் சூட்சுமமானது என்று மஹாபாரதத்தில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. ஞானிகள் கூட அதை உணர்ந்து கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள் என்று வலியுறுத்தப்படுகிறது. 

தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன் 
(தொடரும்) 


தர்மம் – 9 – சோ 
எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள் 

6–7–2011 இதழ் தொடர்ச்சி... 

தர்மத்தின் சூட்சுமம், ஞானிகளுக்கே கடினமான விஷயம் என்றால், நாம் எல்லாம் இதை எவ்வளவு ஆராய வேண்டியிருக்கும்? ஒரு சிறிய பிரச்சனையாக இருந்தாலும், அதில் எது தர்மம் என்பதை ஆராய்ந்துதான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். 

பகவத் கீதையில் அர்ஜுனன், கிருஷ்ணரிடம் கேட்கிறான் : 

கார்ப்பண்ய தோஷா பஹதஸ்வபாவ:
ப்ருச்சாமி த்வாம் தர்மஸம்மூட சேதா:
யச்ஸ்ரேயஸான் நிஸ்சிதம் ப்ரூஹி தன்மே
சிஷ்யஸ்தேஹம் சாதி மாம் த்வாம் ப்ரபன்னம்.

பிறர் பரிதாபப்படத்தக்க நிலையை அடைந்து விட்ட நான், தர்மம் எது என்று அறியாமல் மிகவும் குழம்பிப் போய் கிடக்கிறேன். எது நல்லது என்று நிச்சயம் செய்து எனக்குச் சொல். உன்னுடைய சிஷ்யன் நான். உன்னையே சரணடைந்து கேட்கிறேன். 

கேட்பது யார்? அர்ஜுனன், தர்மபுத்திரருடைய தம்பி. தர்மபுத்திரரோ, தர்மத்தை முழுதும் உணர்ந்தவர். தர்மமே அவதாரமாக வந்துள்ளவர். அவருடைய தம்பி யுத்தகளத்தில் நின்று கொண்டு, ‘எது தர்மம் என்று எனக்குப் புரியவில்லை’ என்று குழம்புகிறான். 

அவனுக்கு தர்மத்தை விளக்கிச் சொல்வதற்காக 700 ஸ்லோகங்களுக்கு மேல் சொல்லி, பகவத் கீதையை உபதேசம் செய்த கிருஷ்ண பரமாத்மா, கடைசி கட்டத்தில் அவரிடம் என்ன சொல்கிறார்? 

இதி மே ஞானமாக்யாதம்
குஹ்யாத் குஹ்யதரம் மயா
விம்ருச்யை ஏதத் அசேஷேண
யதேச்சஸி ததா குரு. 

ரகசியங்களில் எல்லாம் மிகப் பெரிய ரகசியமான ஞானத்தை உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன். இதை நன்றாக விமர்சித்து – அதாவது ஆராய்ந்து – அதன் பிறகு நீ என்ன நினைக்கிறாயோ, அதைச் செய். 

அங்கே அந்த சுதந்திரம் அர்ஜுனனுக்குத் தரப்படுகிறது – ‘நீ என்ன நினைக்கிறாயோ, அதைச் செய்’. 

வேறு எந்த மதத்திலும் இதைப் பார்க்க முடியாது. ‘முழுவதும் அனலைஸ் செய்து, அதன் பிறகு எது சரி என்று தோன்றுகிறதோ, அதைச் செய்’. 

– இந்த அணுகுமுறையைக் கடைபிடிக்கத்தான் நாம் எல்லோருமே கடமைப்பட்டிருக்கிறோம். ஒவ்வொரு விஷயத்திலும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாமல், எது சரி என்று முழுமையாக யோசித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். 

தர்மத்தைச் சார்ந்த விதிமுறைகள் மாறுதல் அடைகின்றன என்பதையும் பெரியவர்களே, தர்ம சாஸ்திரங்களில் கூறியிருக்கிறார்கள். ப்ரஹஸ்பதி தன்னுடைய தர்ம சாஸ்திரத்தில் ஒரு விஷயத்தை வலியுறுத்துகிறார். நிறைய தர்ம நூல்கள் இருக்கின்றன. எப்படி மனுஸ்ம்ருதி இருக்கிறதோ, அப்படி ப்ரஹஸ்பதியினுடைய ஸ்ம்ருதியும் இருக்கிறது. 

(தொடரும்) 

தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்


தர்மம் – 10 – சோ 
எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள் 

சென்ற இதழ் தொடர்ச்சி...

நாரத ஸ்ம்ருதி, விஷ்ணு ஸ்ம்ருதி, ப்ரஹஸ்பதி ஸ்ம்ருதி, பராசர ஸ்ம்ருதி... என்று பல இருக்கின்றன.

ப்ரஹஸ்பதி ஸ்மிருதியில் ‘எந்தெந்த விதிமுறைகள் ஒரு கால கட்டத்தில் மக்களால் வெறுக்கத் தக்கவை ஆகிவிடுகின்றனவோ, அவற்றை விட்டுவிட வேண்டும்; காலத்திற்கேற்ப, விதிமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்’ – என்று கூறப்பட்டிருக்கிறது.

அதாவது – தர்ம சாஸ்திரத்திலேயே விதிமுறைகள் மாறத்தக்கவை என்று வருகிறது.

ஆகையால் இந்த விதிமுறைகள் மாறுதலுக்கு உட்பட்டவைதான். தர்மம் என்கிற தத்துவம் ஒன்று – அது நிலையானது; ஆனால் அதற்குட்பட்ட விதிமுறைகள் மாறுதலுக்குரியவை.

ஆக, தர்மம் என்பது சாஸ்வதம். அது ஒருவன் தன் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல், காரியங்களைச் செய்வது என்று கொள்ளலாம். அது சாஸ்வதமானது. 
ஆனால் பெரும் ஜன சமூகத்தில் புழங்கும்போது எது சரியானது, எது தவறானது, எது தர்மம் என்று நிச்சயிக்கிற விதிமுறைகள் மாறுதலுக்குட்பட்டவைதான்.

இன்னொரு அம்சத்தைப் பார்ப்போம்.

மஹாபாரதத்தில் கிருஷ்ணர் எப்படி யுத்தம் நடத்தினார்? எனக்குப் புரிந்த வரையில் கிருஷ்ணர் தர்ம யுத்தமே செய்யவில்லை. அதர்ம யுத்தம்தான் அவர் செய்தார்.

‘அஸ்வத்தாமா ஹத: குஞ்சர’ – அதாவது அஸ்வத்தாமா என்ற யானை இறந்தது என்பதைப் பிரித்துச் சொல்லி, துரோணரை வில், அம்புகளைக் கீழே போடுமாறு செய்தது; கர்ணனை பலவீனப்படுத்தியது; சூரியன் அஸ்தமனமாகிற மாதிரி தோற்றத்தை ஏற்படுத்தி, ஒருவனை மாய்த்தது...’ என்று பல கட்டங்களிலும் தந்திரங்களை அவர் கையாண்டார்.

அதனால்தான் துரியோதனன் அடிபட்டு கீழே விழுந்து கிடக்கும்போது கிருஷ்ணரைப் பார்த்து, ‘உனக்கு வெட்கமாக இல்லையா?’ என்று கேட்கிறான்.

மேலும் ‘உன்னை மக்கள் இகழ மாட்டார்களா? ஒவ்வொருவரையும் இந்தந்த வகையில் நீ வென்றிருக்கிறாய். இது உனக்குக் கூச்சத்தை ஏற்படுத்தவில்லையா?’ என்று கேட்கிறான்.

அப்படி துரியோதனன் கேட்டபோது, தேவ வாத்தியங்கள் முழங்கின. நாற்புறமும் நறுமணம் வீசியது. தேவர்கள் அவன் மீது பூமாரி பொழிந்தார்கள் – என்று வியாஸர் சொல்கிறார். ஏனென்றால் துரியோதனன் பேசியது உண்மை.
கிருஷ்ணரே கூட ‘அவன் கூறுவது உண்மை. முற்றிலும் தர்ம யுத்தத்தை நாம் நடத்தியிருந்தால், நாம் ஜெயித்திருக்க மாட்டோம்’ என்றே சொல்கிறார்.

ஆனால் அவர் ஏன் இப்படியெல்லாம் செய்தார்?

‘லார்ஜர் குட்’.

தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

(தொடரும்) 




தர்மம் – 11 – சோ 
எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள் 

சென்ற இதழ் தொடர்ச்சி...

‘லார்ஜர் குட்’ – பெருமளவில் நன்மை – அனேகம் பேருக்கு நன்மை – என்கிற நியாயம் முக்கியமானது.

நியாயம் நிலைநாட்டப்படுவதற்கு, யுத்தத்தில் பாண்டவர்கள் ஜெயிக்க வேண்டும். அந்தப் பெரிய நன்மைக்காக அங்கே யுக்திகளை கையாள வேண்டியதாகப் போயிற்று. அந்தப் பெரிய நன்மையை நினைத்துப் பார்க்கும்போது, யுத்த தந்திரங்கள் அதர்மம் என்று நிராகரிக்கப்படத் தக்கதல்ல என்று ஆகிவிடுகிறது.

இந்த அளவுக்கு சிந்தனை, இந்த பூமியில் நடைமுறைக்கு ஏற்றவாறு இருந்திருக்கிறது.

யோக்கியர்களை, சமூக விரோதிகளை போலீஸ் துறை எப்படி நடத்த வேண்டுமென்றால், தயை தாட்சண்யமில்லாமல்தான் நடத்த வேண்டும். இப்படி ஓர் உரிமை தரப்படுவதால், சில தவறுகள் நேர்ந்து விடலாம். ஆனால், இப்படி நடந்து கொள்ள போலீஸாருக்கு உரிமை இருந்தால்தான், சமுதாயத்திற்கு நன்மை என்கிற – லார்ஜர் குட் – சாதிக்கப்படும்.

ஆகையால் ‘பெருமளவில் நன்மை’ என்பதை சமூக அளவிலும், ‘மனசாட்சியின்படி யோசித்து நடப்பது’ என்பதை தனிமனித அளவிலும், கொண்டு பார்க்கும்போது, எது சரியாக அமைகிறதோ, அதுதான் தர்மம். 
‘ஸ்வதர்மம்’ என்பது மனசாட்சியின்பாற்பட்டது. லார்ஜர் குட் என்ற ‘பெருமளவில் நன்மை’ என்பது சமுதாயத்தின் பாற்பட்டது. இவை இரண்டுக்கும் இணக்கமாக எது அமைகிறதோ, அது தர்மம். இதுதான் என் கருத்து.

எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால்தான் இதைச் செயலாற்ற முடியும். நமது நூல்களில் ஒற்றுமை மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

ரிக் வேதத்தில் ஒன்று வருகிறது :

ஸமானோ மந்த்ர: ஸமிதி ஸமானி
ஸமானம் மன: ஹை சித்தமேஷாம்
ஸமானம் மந்த்ரபி மந்த்ரேய வ:
ஸமானேன வா ஹவிஷா ஜுஹோமி.


உங்களுடைய வழிபாடு ஒத்த கருத்துடன் அமையட்டும். உங்களுடைய கூட்டங்கள் எல்லாம் ஒற்றுமையுடன் இயங்கட்டும். உங்களுடைய மனமும், எண்ணமும் ஒற்றுமையுடன் இருக்கட்டும். உங்கள் அனைவருக்கும் பொதுவாக இந்த ஆஹுதியைக் கொண்டு, நான் வழிபாட்டை நடத்துகிறேன்.

இதில் வர்ணம் எதுவும் கிடையாது. ஒட்டு மொத்தமான சமூகத்திற்குமாகச் சேர்த்து இது கூறப்படுகிறது. ஒற்றுமையும், சமத்துவமும் மீண்டும் மீண்டும் வற்புறுத்தப்படுகிறது. இந்த ஒற்றுமையை மனதில் கொண்டு, அதன் அடிப்படையில் ஒவ்வொருவரும், தனது மனசாட்சிக்கு ஏற்ப, பொது நன்மையை உத்தேசித்து செயல்பட்டால், அதுதான் தர்மமாகும் என்பது என் கருத்து.

தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன் 

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 6

ஐஸ்டிஸ் கட்சி – ஈ.வெ.ரா. மோதல்! – கே.சி.லட்சுமிநாரயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 6

ஸ்டிஸ் கட்சியினருடன் கடுமையாக மோதுவதற்கு ஈ.வெ.ரா., அண்ணாதுரை தரப்பினர் முற்றிலும் தயாராகி விட்டனர் என்பதைச் சேலம் ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் விவாதிப்பதற்காக, அண்ணாதுரை தயாரித்து அனுப்பிய ஒரு தீர்மானம் தெளிவாக்கியது.


“நம் சமுதாயத்தின் எதிர்கால நலனைக் கோரியும், நம் கட்சியின் தன்மானத்தைக் கோரியும், நமது கட்சியின் பெயரால் இதுவரை நமக்கும் சர்க்காருக்கும் இருந்து வரும் போக்கை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு நாம் தள்ளிக் கொண்டு போகப்பட்டு விட்டோம்” என்ற பீடிகையுடன், அண்ணாதுரையின் தீர்மானம் தொடங்கியது.

அந்தத் தீர்மானத்தின் முழு வடிவம் கீழே தரப்படுகிறது.

“நம் கட்சி தோன்றிய காலம் முதல் இதுவரை நாம் பிரிட்டிஷ் சர்க்காருடன் ஒத்துழைத்து வந்ததும், சர்க்காருடன் ஒத்துழையாமை செய்து சர்க்காருக்குத் தொல்லை கொடுத்து வந்த ஸ்தாபனங்களை எதிர்த்துப் போராடி, சர்க்காருக்கு அனுகூலமான நிலைமையை உண்டாக்க உதவி செய்து வந்ததும், குறிப்பாக சென்ற ஐந்தாண்டுக் காலமாக நடந்து வரும் உலகயுத்தத்தில், நல்ல நெருக்கடியில் நேச நாடுகளின் வெற்றிக்குக் கேடு வரும்படியான நிலையில், நம் நாட்டில் பல ஸ்தாபனங்கள் செய்து வந்த பெரும் கிளர்ச்சியையும் நாச வேலைகளையும் எதிர்த்து அடக்குவதிலும், நேச நாடுகளுக்கு வெற்றி உண்டாக பணம், ஆள், பிரச்சாரம் முதலியவை நிபந்தனையின்றி சர்க்காருக்கு உதவி வந்ததும், சர்க்காராலும் பாமர மக்களாலும் நம் கட்சியை இழிவாகக் கருதப்படத்தக்க நிலை ஏற்படுவதற்குப் பயன்பட்டு விட்டது.

“இந்திய அரசியல் சமூக இயல்பு சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில், சர்க்கார் நம் கட்சியையும், நம் இலட்சியமாகிய திராவிட நாட்டுப் பிரிவினையையும் அலட்சியம் செய்து வருகிறார்கள்.

“இந்திய மக்கள் அரசியல் சமுதாய இயல்பு சம்பந்தமான ஸ்தாபனங்களில் நம் ஸ்தாபனம் குறிப்பிடத்தக்கதாகவும், நீதிநெறி உடையதாகவும் இருந்து, ஒழுங்கு முறைக்குக் கட்டுப்பட்டு சர்க்கார் மெச்சும்படி நடந்து வந்தும், நம் ஸ்தாபனம் சர்க்காரால் மற்ற சாதாரண ஸ்தாபனங்களோடு ஒன்றாகக் கூடச் சேர்த்துப் பேசுவதற்கு இல்லாததாக அலட்சியப் படுத்தப்பட்டது. 
“மாகாண கவர்னராலோ, கவர்னர் ஜெனரலாலோ, இந்திய மந்திரியாலோ, பிரிட்டிஷ் முதல் மந்திரியினாலோ, இந்திய அரசியல் கட்சிகளைப் பற்றிப் பல தடவை பேச்சு ஏற்பட்ட சந்தர்ப்பங்களில், ஒன்று இரண்டு தடவை கூட நம் சமுதாயத்தையோ, நம் ஸ்தாபனத்தையோ, நம் இலட்சியத்தையோ குறிப்பிட, கட்டுப்பாடாய் மறுத்தே வரப்பட்டு இருக்கிறது.

“ஆகவே இப்படிப்பட்ட நிலைமை மாறி, நம் கட்சி நிலை மதிக்கப்படவும், குறிப்பிடவும், மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்தவும், நம் கட்சி இனியும் கட்டுப்பாடும் உரமும் பெற்று உண்மையான தொண்டர்களைக் கொண்டு, நாணயமாகவும், தீவிரமாகவும் தொண்டாற்றி மதிப்புப் பெறவும், நல்ல வசதியும் சௌகரியமும் ஏற்படுவதற்கும் நம் கட்சிக்கு அடியில் கண்ட திட்டம் உடனே அமலுக்குக் கொண்டு வரப்பட வேண்டியது அவசியமும், அவசரமுமான காரியம் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

பதவிகளைக் கைவிடுக! 

“அ. நம் கட்சியில் இருக்கும் அங்கத்தினர்களும், இனியும் வந்து சேர இருக்கும் அங்கத்தினர்களும் சர்க்காரால் தங்களுக்கு அளிக்கப்பட்ட எந்தவிதமான கவுரவப் பட்டங்களையும், உடனே சர்க்காருக்கு வாபஸ் செய்து விட வேண்டும்; இனி ஏற்றுக் கொள்ளவும் கூடாது.

“ஆ. அதுபோலவே, அவர்கள் யுத்தத்திற்காகவும் மற்றும் சர்க்கார் காரியங்களுக்காகவும் மத்திய சர்க்காரிலோ, மாகாண சர்க்காரிலோ, எந்தவிதமான கமிட்டியில் எப்படிப்பட்ட கவுரவ ஸ்தானம், அங்கத்தினர் பதவி, ஆலோசகர் பதவி அளிக்கப்பட்டிருந்தாலும் அவைகளையெல்லாம் உடனடியாக ராஜினாமா செய்துவிட வேண்டியது.

“இ. தேர்தல் அல்லாமல் ஸ்தல ஸ்தாபனம் அதாவது ஜில்லா போர்டு, முனிசிபல் சபை, பஞ்சாயத்து போர்டு ஆகியவைகளின் தலைவர், உபதலைவர், அங்கத்தினர் ஆகிய பதவிகளில், சர்க்காரால் நியமனம் பெற்ற அல்லது நியமனம் பெற்ற அங்கத்தினர்களால் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்கள் யாவரும், தங்கள் பதவிகளை உடனே ராஜினாமா செய்து விட வேண்டியது.

ஈ. சர்க்காரால் தொகுதி வகுக்கப்பட்ட எந்தவிதமான தேர்தலுக்கும், கட்சி அங்கத்தினர்கள் வேட்பாளர்களாக நிற்கக் கூடாது.“இதை ஏற்று ஒரு வாரத்தில் இதன்படி கட்டுப்பட்டு நடக்காதவர்கள் எவரும், தங்களுக்கு இக்கட்சியில் இருக்க இஷ்டம் இல்லை என்று கருதி, கட்சியை விட்டு நீங்கிக் கொண்டவர்களாகக் கருதப்பட வேண்டியவர்கள் ஆவர். 

“கட்சியின் வேலைத் திட்டத்திலும், போக்கிலும் புது முறுக்குத் தரும் நோக்கத்துடன் நான் மேற்கண்ட தீர்மானத்தைச் சேலம் மாநாட்டுக்கு அனுப்பியிருக்கிறேன்.” 

பிறர் சிரிக்கும் நிலை 

மது தீர்மானத்தின் அடிப்படை நோக்கம் என்ன என்பதையும், அண்ணாதுரை எழுதித் தீர்மானத்துடன் அனுப்பியிருந்தார். 

“சர்க்காருக்கு ஒத்து ஊதும் கூட்டம் என்று சதா காலமும் விஷயம் அறியா மக்கள் ஒருபுறம் தூற்றுவதையும்; அடித்தாலும் அழத் தெரியாதவர்கள், மிக நல்லவர்கள் என்று ஆங்கில சர்க்கார் மற்றொரு புறம் தலையில் குட்டவும்; பட்டம் கிட்டுமா, பதவி கிட்டுமா என்று ஆரூடம் பார்ப்பதும்; துரைமார்களிடம் தூது போவதும் தவிர, ‘இதுகளுக்கு’ வேறு என்ன தெரியும் என்று காங்கிரஸார் பேசியும் வருவதைக் கேட்டுக் கேட்டு, உண்மையிலேயே கட்சியின் குறிக்கோளின்படி நடக்கக் கஷ்ட நஷ்டம் ஏற்கும் உறுதி படைத்த வீரர்கள் ஒரு புறமும்; போர் கூடாது, கிளர்ச்சி ஆகாது, தீவிரம் கூடாது என்று கருதும் சீமான்கள் மற்றொரு புறமும் இருந்து கொண்டு, கட்சியை இப்பக்கம் இவரும், அப்பக்கம் அவரும் இழுக்க, இந்த வேடிக்கையைக் கண்டு பிறர் சிரிக்க இருக்கும் நிலைமையைக் கண்டு, நெஞ்சுவலி கொண்டு ஓர் இளைஞன் வெளியிடும் இருதய மொழியே என் தீர்மானம்” என்று அண்ணாதுரை தமது விளக்கக் குறிப்பில் குறிப்பிட்டிருந்தார். “சர்க்காரின் அசட்டை (அலட்சியம்) சகிக்க முடியாததாகி விட்டதோடு, திராவிட இனத்தின் பண்பு எது என்பதை நாமே மறந்து விடும் நிலைமைக்கு நம்மைக் கொண்டு போய் விடுமோ என்று அஞ்ச வேண்டியபடி இருக்கிறது. இந்த நிலைமை மாறித்தான் தீர வேண்டும். இருபுறம் இழுக்கப்படும் தொல்லையிலே கட்சி சிக்கிச் சிதைவது நிற்க வேண்டும். பட்டமும் பதவியும் பெரிதா, உரிமைத் திடமும் விடுதலையும் பெரிதா என்பதற்கு ஒரு பதில் கிடைத்துத்தான் ஆக வேண்டும்” என்றும் அண்ணாதுரை எழுதியிருந்தார். 

“இந்தத் தீர்மானத்துடன், இதையொட்டியும் வேறு பல தீர்மானங்களையும் அனுப்பியிருக்கிறேன். இவைகளுக்குப் பெரியாரின் பூரண ஆதரவு இருக்கிறது என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே ஆங்காங்கு உள்ள திராவிடத் தோழர்கள் இந்த என் தீர்மானத்தைப் பற்றி கலந்து பேசி, இது மாநாட்டிலே நிறைவேற, நமது கட்சியின் போக்கு மாறி நாம் உய்ய வழி கிடைக்கும் வழி காணுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று அண்ணாதுரை நிறைவாகக் கூறி இருந்தார். 

கட்சியின் பெயர் மாற்றம் 
1944 – ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27– ஆம் தேதியன்று சேலம் நகரில், ஜஸ்டிஸ் கட்சி மாநாடு ஈ.வெ.ரா. தலைமையில் நடந்தது. அந்த மாநாட்டில் அண்ணாதுரையின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்று அறிவிக்கப்பட்டது. 


“இம்மாநாடானது ஜஸ்டிஸ் கட்சி என்றழைக்கப்படும் இக்கட்சிக்குள்ள தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம் என்ற பெயரை ‘திராவிடர் கழகம்’ (திராவிடியன் அசோசியேஷன்) என்று பெயர் மாற்றத் தீர்மானிக்கிறது” என்று அறிவித்த மிக முக்கியமான ஒரு தீர்மானமும் சேலம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. 

இந்தத் தீர்மானத்துக்கு எதிர்ப்பும் இருந்தது. மாநாட்டுப் பிரதிநிதிகளில் சிலர் வெளிநடப்புச் செய்தார்கள். மாநாடு முடிந்த பிறகு, அதில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்பட்ட தீர்மானங்கள் செல்லுபடி ஆகா என்றும், ஏனென்றால் அதில் கட்சியினர் பலர் கலந்து கொள்ளவில்லை என்றும் ஜஸ்டிஸ் கட்சியின் ஒரு பிரிவினர் குற்றஞ்சாட்டினார்கள். அவர்கள் ஜஸ்டிஸ் கட்சியைத் தொடர்ந்து நடத்தினார்கள். 

சேலம் மாநாட்டில் ஓர் அரசியல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. திராவிடக் கட்சிகளின் அடிமைப்புத்தி மிக மிக ஆழமானது என்பதைக் காட்டிய, அந்தத் தீர்மானம் பற்றிய விவரம் அடுத்த இதழில். 

(தொடரும்) 

ஆதார நூல்கள்: 
தென்னாட்டு இங்கர்சால் அண்ணாதுரை
எழுதியவர் - கலைச்செல்வன். 
வெளியிட்டோர்: கலைமன்றம், சென்னை-1 (1953). 

Saturday, November 12, 2011

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 5

அடிமை நிலையை நீட்டிக்கக் கெஞ்சினார்! – கே.சி.லட்சுமி நாராயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 5

ன்றைய சென்னை மாகாணச் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி படுதோல்வி அடைந்த பிறகு, ஈ.வெ.ரா. அந்தக் கட்சியின் நிலையிலிருந்து சிறிது சிறிதாக மாறுபடத் தொடங்கினார். கருத்து வேற்றுமைகள் குறித்து அவர் பகிரங்கமாகவே பேச ஆரம்பித்தார்.

1940– ஆம் வருடம், பிப்ரவரி மாதம் 18 – ஆம் தேதியன்று சென்னையில் டாக்டர் சி.நடேச முதலியார் நினைவுக் கூட்டத்தில், ஈ.வெ.ரா. நிகழ்த்திய உரையில் ஒரு பகுதியைக் கீழே தந்துள்ளேன்.

“கட்சிக்கு (ஜஸ்டிக் கட்சிக்கு) பணம் கிடையாது. ஏனெனில் முன்பு ஒரு காலத்தில் நம்மைச் சார்ந்திருந்த பணக்காரர்கள் எல்லோரும் இன்று நம்முடன் உரையாட யோசனை செய்கிறார்கள். நமது கட்சிக்கு வந்தால் என்ன லாபம் உண்டு என்றும் கேட்கிறார்கள். மற்றும் சிலர் கட்சியை விட்டு ஓடிப்போனதுடன் இல்லாமல், கட்சியைத் தாக்கவும் ஆரம்பித்து விட்டார்கள்.

“இன்றைய தினம் நமது (ஜஸ்டிஸ்) கட்சிக்கு ஏதாவது செல்வாக்கு இருக்குமானால், அது நமது கட்சியில் உள்ள அங்கத்தினர் காரணமாக ஏற்பட்டது அல்ல. அது நமது எதிரிகளுடைய (காங்கிரஸுடைய) குற்றம் குறைகளால் நமக்கு ஏற்பட்டுள்ளது ஆகும்.

“இந்தச் சக்தியின் மீது நாம் பலமான அஸ்திவாரம் போட்டு கட்டிடம் கட்ட வேண்டியது நம் முன்னால் இருக்கும் வேலை. அப்போதுதான் தேசம் முழுமைக்கும் தானே பிரதிநிதித்துவம் வைப்பதாகச் சொல்லும் காங்கிரஸின் வேஷத்தை நம்மால் கலைக்க முடியும்.

“தேர்தலில் நமக்கு ஜெயம் கிடைக்காது என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. 
“பிராமணரல்லாதவர் எல்லோரும் ஒன்றாகக் கூடிய போதிலும், நமது இயக்கத்தின் அடிப்படையான கொள்கையை மாற்றி அமைக்காவிட்டால், நம்மால் வெற்றி பெற முடியாது.

“.... தேர்தல்களில் ஜஸ்டிஸ் கட்சியின் பெயரால் அபேட்சகர்களாக நிற்பதற்கும் யாரும் முன்வருவது இல்லை.

“.... கடந்த 20 வருடங்களாக வாழ்விலும், தாழ்விலும் நாம் (அந்நிய) அரசாங்கத்தை ஆதரித்து வந்ததால், நமது பெருமையும், பெயரும், செல்வாக்கும் இன்று சீர்குலைந்து போயின.

“.... தற்போதுள்ள கவர்னர், காங்கிரஸின் மாயையில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார். பிரிட்டிஷ் அரசாங்கமே அந்த வலையில்தான் விழுந்திருக்கிறது. இம்மாதிரியான படுமோசமான நிலைமை இத்தேசத்தில் ஒருநாளும் ஏற்பட்டது இல்லை.

ஆதரவு கிடையாது

“.... ஐரோப்பியர்கள் மட்டும் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்தால், நமக்குச் சரியான பலம் ஏற்பட்டு விடும். “தமிழ்நாட்டில் உள்ள பாமர மக்கள் திராவிட இயக்கத்தை ஆதரிக்கிறார்கள். ஆனால், மற்ற மாகாணங்களில் இந்த இயக்கத்துக்குக் கொஞ்சம் கூட ஆதரவு கிடையாது. டாக்டர் அம்பேத்கரும், இன்னும் சில நண்பர்களும் இந்த விஷயத்தைப் பற்றி மூச்சுக் கூட விடாதே என்று சொல்லி விட்டார்கள்.

“இந்தப் பொய்யான இந்திய தேசம், தேசியம், தேசிய லட்சியம் என்பதை எல்லாம் ஜனங்கள் விட்டு விட்டு, நமது திராவிட நாட்டின் விடுதலைக்குப் பாடுபடுவார்களேயானால் நமது இலட்சியம் கை கூடும். 
“ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள பல பிரமுகர்களுக்கு இந்த எண்ணம் பிடிக்கவில்லை. இந்த அடிப்படையான இலட்சியத்தை அவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால், நமது இயக்கம் வெற்றி பெறப்போவது இல்லை.”

– இவ்வாறு ஈ.வெ.ரா. பேசினார். ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கை மாற வேண்டும் என்றும், திராவிட நாட்டின் விடுதலை என்ற இலட்சியம், ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள பலருக்கு ஏற்புடையதாக இல்லை என்றும் இந்த உரையில் அவர் பகிரங்கமாகக் குறிப்பிட்டார்.

அதே சமயத்தில், தமிழகத்தில் மட்டுமே திராவிட இயக்கத்திற்கு ஆதரவு இருந்தது என்றும், மற்ற மாகாணங்களில் அந்த இயக்கத்திற்கு இம்மியளவு கூட ஆதரவு கிடையாது என்றும் ஈ.வெ.ரா. குறிப்பிட்டதையும் கவனிக்க வேண்டும்.

உண்மையில், ஈ.வெ.ரா. இந்த உரையை நிகழ்த்திய 1940– ஆம் ஆண்டில், தமிழகத்திலும் திராவிட இயக்கத்திற்கு ஆதரவு இருந்ததில்லை .

திராவிட என்ற சொல்

திராவிட, திராவிட நாடு, திராவிடர்கள் என்ற சொற்கள் ஜஸ்டிஸ் கட்சியினருக்கும், ஈ.வெ.ரா. குழுவினருக்கும் இடையே மோதல்களை உண்டாக்கின. ஆங்கிலேய அரசினர் பிரித்தாளும் கொள்கையின் அடிப்படையில் புகுத்திய ‘திராவிட’ என்ற சொல்லை ஈ.வெ.ரா., அண்ணாதுரை ஆகியோரும், அவர்களைச் சாந்தவர்களும் ஓர் அவசர ஆவேசத்துடன் வரவேற்றார்கள். தெற்கே உள்ளவர்கள் திராவிடர்கள் என்றும், வடக்கே உள்ள இந்தியர்கள் ஆரியர்கள் என்றும், காங்கிரஸ் மகா சபையின் விடுதலை இயக்கம் திராவிடர்கள் மீது ஆரியர்களின் ஆதிக்கத்தைத் திணிப்பதற்காக நடைபெற்றது என்றும், பகுத்தறிவுக்குச் சிறிதும் பொருத்தம் இல்லாத வகையில் அவர்கள் பேசவும் எழுதவும் தலைப்பட்டார்கள்.

‘திராவிட’ என்ற சொல்லை ஜஸ்டிஸ் கட்சியில் பலர் விரும்பவில்லை. 1941– ஆம் ஆண்டில் ‘திராவிட நாடு’ என்ற பெயரில் ஒரு வார இதழை அண்ணாதுரை ஆரம்பித்தார். ‘திராவிட’ என்ற பெயரை வைத்துக் கொண்டு பத்திரிகையை ஆரம்பிக்க வேண்டாம் என்றும், வேறு ஒரு பெயரில் பத்திரிகையை நடத்துவதே நல்லது என்றும் தமிழ் அறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் அண்ணாதுரைக்கு ஆலோசனை கூறினார். 
‘நாம் வாழும் நாடு திராவிட நாடு, நம் இனம் திராவிட இனம் என்ற உணர்ச்சியை அண்ணாதுரை ஊட்டிக் கொண்டு வந்தார். இந்தச் சமயத்தில் நீதிக் கட்சியின் (ஜஸ்டிஸ் கட்சியின்) தலைவர்கள், தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொள்ள வெட்கப்பட்டனர்’ என்று ‘தென்னாட்டு இங்கர்சால் அண்ணாதுரை’ என்ற வாழ்க்கை வரலாற்று நூல் (1953), ஜஸ்டிஸ் கட்சியினருக்குப் பதில் அளிக்கும் வகையில் தெரிவித்தது.

திருவாரூர் தீர்மானம்

மேலே தரப்பட்டுள்ள ஈ.வெ.ரா.வின் சொற்பொழிவு நிகழ்த்தப் பெற்ற ஆண்டு 1940 என்பதை மீண்டும் ஒரு முறை கவனிப்போம்.

இரண்டாம் உலக யுத்தம் 1939– ஆம் வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கியது. யுத்தம் சம்பந்தமாக காங்கிரஸ் மகாசபை விதித்த நிபந்தனைகளை அன்றைய பிரிட்டிஷ் அரசு ஏற்க மறுத்தது. உடனே மாகாணங்களில் இருந்த காங்கிரஸ் மந்திரி சபைகள் அனைத்தும், பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் மகாசபை தீர்மானித்தது. அந்த ஆணையை ஏற்று 1939 அக்டோபர் 28 – ஆம் தேதியன்று சென்னை மாகாணத்தில் ராஜாஜி தலைமையிலான மந்திரி சபை ராஜினாமா செய்தது.

ஒருபுறம் இரண்டாம் உலக யுத்தம் நடந்து கொண்டிருந்தது; மற்றொரு புறம் மாகாணங்களில் காங்கிரஸ் மந்திரி சபைகள் பதவி விலகி விட்டன; இன்னொரு புறம் காங்கிரஸ் மகாசபை இந்தியா முழுவதும் பெரியதொரு போராட்டத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. அந்தச் சூழ்நிலையில்தான், ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கை மாற வேண்டும் என்று ஈ.வெ.ரா. பேச ஆரம்பித்தார்.

4.8.1940 அன்று திருவாரூர் நகரில் ஈ.வெ.ரா. தலைமையில் நடந்த ஜஸ்டிஸ் கட்சியின் பதினைந்தாவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு முக்கியமான தீர்மானம் கீழே தரப்படுகிறது.

“திராவிடர்களுடைய கலை, நாகரிகம், பொருளாதாரம் ஆகியவை முன்னேற்றமடைவதற்கு, பாதுகாப்பதற்கு, திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம், இந்திய மந்திரியின் நேர் பார்வையின் கீழ் ஒரு தனி நாடாகப் பிரிக்கப்பட வேண்டுமென இம்மாநாடு தீர்மானிக்கிறது.” 
(‘நமது குறிக்கோள்’ – ‘விடுதலை’ வெளியீடு; 1948, பக்.34.)

இந்தத் தீர்மானம் தனிநாடு கோரவில்லை. பிரிட்டிஷ் இந்தியா மந்திரியின் நேர்ப் பார்வைக்குக் கீழ்ப்பட்ட ஒரு பகுதியாகச் சென்னை மாகாணம் அமைய வேண்டும் என்றுதான் இந்தத் தீர்மானம் வேண்டியது.

அதாவது, அண்டையில் உள்ள வட இந்தியாவிலிருந்து பிரிந்து, 6000 மைல்களுக்கு அப்பால் உள்ள பிரிட்டனுக்கு அடிமைப்பட்ட நிலையில் ‘தனிநாடு’ வேண்டும் என்றுதான் ஈ.வெ.ரா.வைத் தலைவராகக் கொண்டவர்கள் கேட்டார்கள்!

ஜஸ்டிஸ் கட்சி என்ற பெயரை அடியோடு மாற்ற, ஈ.வெ.ரா. தரப்பினர் நடவடிக்கைகளை எடுத்தார்கள். விவரம் அடுத்த வாரம்.

(தொடரும்)

ஆதார நூல்கள்: 

1. தென்னாட்டு இங்கர்சால் அண்ணாதுரை - எழுதியவர் - கலைச்செல்வன்.
வெளியிட்டோர்: கலைமன்றம், சென்னை-1 (1953). 
2. விடுதலைப் போரில் தமிழகம் - (இரண்டு தொகுதிகள்) எழுதியவர் ம.பொ.சி.
இது நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல் ஆகும். 

Wednesday, November 2, 2011

நினைத்தேன் எழுதுகிறேன்

விலக்கு, தேவையா? – சோ 
நினைத்தேன் எழுதுகிறேன்

‘லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரைக் கொண்டு வந்தால், அது பிரதமர் அலுவலகத்தின் செயல்பாட்டை சீர்குலைத்து விடும்’ என்று ராகுல்காந்தி முதற்கொண்டு பலர் பேசி வருகிறார்கள்.


ராகுல் காந்தி

இந்த வாதத்தை ஏற்க வேண்டும் என்றால் – லோக்பால் விசாரணை வரம்பிற்குள் எந்த மந்திரி வந்தாலும், அவருடைய அலுவலகத்தின் செயல்பாடுகள் முடங்கிவிடும் – என்று கூறி விடலாமே? அது மட்டும் பரவாயில்லையா? இதற்கு என்ன பதில் சொல்வார்கள்? ‘எந்த மந்திரி மீது லோக்பால் விசாரணை வருகிறதோ, அவருக்குப் பதிலாக வேறு ஒரு மந்திரியை நியமித்துக் கொள்வார்கள். அல்லது அவருடைய இலாகா வேறு ஒருவரிடம் போகும். ஆகையால், பாதிப்பு இருக்காது’ என்று சொல்லலாம். ஆனால், ஒரு மந்திரி சபையில் இந்த மாதிரி பல மந்திரிகள் மீது விசாரணை வந்தால், அப்போது ஒவ்வொரு இலாகாவாக, வேறு ஒரு மந்திரியிடம் போகும்போது, நிர்வாகம் ரொம்பச் சீராக இருக்குமா?

அல்லது பல தலைமை அதிகாரிகள், தலைமைச் செயலாளர்கள், துறைகளின் மூத்த செயலாளர்கள் போன்றவர்கள் மீது விசாரணை வந்தால், அப்போது அவரவர்கள் துறை பாதிக்கப்படாதா? மாநிலங்களின் முதலமைச்சர்கள் மீதோ, மற்ற அமைச்சர்கள் மீதோ விசாரணை வந்தால், அவர்களுடைய துறைகள் எல்லாம் சீர் குலைந்து போகாதா? இப்படிப் பார்த்தால், பதவியில் இருக்கிற யார் மீதும் எந்த விசாரணையும் வரக் கூடாது என்று சொல்வது போல் ஆகிவிடும்.

ஏற்கெனவே ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ், பிரதமர் உட்பட யார் மீது வேண்டுமானாலும் வழக்கு வரலாம். அப்படி பிரதமர் மீது இதுவரை எத்தனை வழக்குகள் வந்து, அவருடைய இலாகா, அல்லது மந்திரிசபை, அல்லது அரசு சீர்குலைந்து போயிருக்கிறது? ஒருமுறை கூட அப்படி நடக்கவில்லையே? அப்படியிருக்க, லோக்பால் விசாரணையினால் மட்டும் இந்தக் கேடு வந்துவிடும் என்று எப்படிச் சொல்ல முடியும்?

இதில் வேறு ஒரு வாதமும் கூறப்படுகிறது. ‘அயல்நாடுகள், லோக்பாலைப் பயன்படுத்திக் கொண்டு, பிரதமர் மீது வேண்டுமென்றே விசாரணைகளைக் கிளப்பி விட்டு, நமது நிர்வாகத்தைச் சீர்குலைக்கும்’. அப்படி என்றால், இப்போதே அதைச் செய்ய முடியாதா? ஊழல் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் பல வழக்குகளைக் கொண்டு வந்து இந்திய அரசையே முடக்கிவிட முடியாதா? ஏன் எந்த அயல்நாடும் இதைச் செய்யவில்லை? லோக்பாலின் கீழ் மட்டும்தான் அயல் நாடுகள் இப்படிச் செய்யுமா? ஏன்?


லோக்பாலைப் பொறுத்தவரை, எடுத்த எடுப்பிலேயே எதையும் செய்துவிடப் போவதில்லை. பிரதமர் மீது ஒரு புகார் வந்தால், உடனே விசாரணையை ஆரம்பித்து, வழக்கு நடத்தி முடித்து, பிரதமருக்குத் தண்டனை கொடுத்து விட வேண்டும் என்று யாரும் கோரவில்லை. ஒரு விஷயம், லோக்பாலின் பார்வைக்கு வந்தால், அதில் சாரம் இருக்கிறதா, இல்லையா என்பதைத் தீர்மானித்துக் கொண்டுதான் லோக்பால், மேல் நடவடிக்கை எடுக்க முடியும். எந்தச் சட்டமும் எடுத்த எடுப்பிலேயே நடவடிக்கை என்று கூறிவிடாது. ஆகையால், அப்படி லோக்பால் முன்னிலையில் பிரதமர் மீது புகார் வந்தால் கூட, உடனே அவர் எந்தப் பாதிப்புக்கும் ஆளாகிவிட மாட்டார். 
இதில் பிரதம மந்திரிருக்கு விலக்கு அளிப்பதுதான் விபரீதமாகப் போகும். லஞ்சம் வாங்குகிற மந்திரிகள் எல்லாம் பிரதமரோடு சேர்ந்து, அதை வாங்கிவிட்டால் போதும். அதாவது பிரதமர் தலைமையில் ஊழலை நடத்தி விட்டால்போதும். அது லோக்பாலுக்கு அப்பாற்பட்டதாகி விடும். ஆக, ஒரு மந்திரி சபையில் எந்த மந்திரி மீதுமே விசாரணை வராமல் இருந்து விடும். நிம்மதி. 

நேருவின் பித்துக்குளித்தனம், ஆயுத பூஜை

ஆயுத பூஜை 

நேருவின் பித்துக்குளித்தனம்

Friday, October 28, 2011

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 4

“காமராஜைக் கொல்ல முயற்சி!” – கே.சி.லட்சுமி நாரயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 4

ஜீவானந்தம், அய்யாமுத்து போன்ற சிந்திக்கத் தெரிந்தவர்கள் வெளியேறி விட்ட பிறகு, ஈ.வெ.ரா.வின் சுயமரியாதை இயக்கமும் ஜஸ்டிஸ் கட்சியும், விடுதலைப் போர் வீரர்களுக்கு எதிராக வன்முறை வழிகளை ஆவேசத்துடன் பின்பற்றின.

கூட்டங்களில் கலகம் செய்வது, கற்களை வீசி எறிவது, பாம்புகளை விடுவது, கறுப்புக் கொடிகளைக் காட்டுவது, சுதந்திரப் போராட்ட வீரர்களைத் தடி கொண்டு தாக்குவது, ஆபாசச் சொற்களில் ஏசுவது... போன்ற வன்முறைக் காரியங்களை அவர்கள் செய்தார்கள். ஆங்கிலேய ஆட்சியாளர்களின் பரிபூரணமான தூண்டுதலும், ஆதரவும் அவர்களுக்கு இருந்தன.

“விடுதலைப் போர் வீரர்கள் வன்முறைக்கு ஆளானால் திருப்பித் தாக்கக் கூடாது” என்ற மகாத்மா காந்தியின் கட்டளை அப்படியே பின்பற்றப்பட்டது. இன்றைய தினம் இதை நம்புவது கடினம். ஆனால், இவ்வாறுதான் விடுதலைப் போர் வீரர்கள், அஹிம்சை நெறி பிறழாமல் ஒவ்வொரு சத்தியாக்கிரகத்தின் போதும் நடந்து கொண்டார்கள் என்பது வரலாறு.

ஜஸ்டிஸ் கட்சியினரும், சுயமரியாதை இயக்கத்தினரும் விடுதலைப் போர் வீரர்களை எதிர்த்துப் பல நூறு வன்முறை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினார்கள். இவற்றில் பலவற்றை ம.பொ.சி.யின் ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற ஆய்வு நூல் பட்டியல் இட்டுள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைவதற்காகப் போராடிய பல காங்கிரஸ் தலைவர்கள், தமிழகத்திற்கு அவ்வப்போது இயக்கப் பணிகளை ஒட்டி வந்தார்கள். அவ்வாறு வந்த மகாத்மா காந்தி, நேருஜி, பாபு ராஜேந்திர பிரசாத், அபுல்கலாம் ஆஸாத்.... போன்ற தலைவர்களை ஜஸ்டிஸ் கட்சியினரும், சுயமரியாதை இயக்கத்தினரும் எதிர்த்து வன்முறை ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். தேசியத் தலைவர்கள் அவற்றைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டார்கள்.

பட்டுக்கோட்டை நிகழ்ச்சி 
ந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய காங்கிரஸ் மகாசபையின் பொன்விழா நிகழ்ச்சி 1934– ஆம் ஆண்டில் நடந்தது. அந்த ஆண்டில் கட்சியின் தலைவராக பாபு ராஜேந்திர பிரசாத் விளங்கினார். அவர் விடுதலைப் போரில் பலமுறை சிறை சென்ற தீரர். அவர் காந்தியடிகளை முழுக்க முழுக்கப் பின்பற்றியவர்; அஹிம்சையின் வடிவமாகத் திகழ்ந்தவர்; தமது பெரும் செல்வத்தை அழித்து விடுதலை இயக்கத்தை வளர்த்தவர்.

இந்தியா விடுதலை அடைந்த பிறகு, பாபு ராஜேந்திர பிரசாத் இந்தியக் குடியரசுத் தலைவர் என்ற மிக உயர்ந்த பொறுப்பை வகித்தார். அவர் 1934– ஆம் ஆண்டில் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்தார். அவர் தஞ்சாவூர் மாவட்டத்திற்குச் சென்றிருந்தபோது, அவரது சுற்றுப் பயண ஏற்பாடுகளை சர்தார் வேதரத்தினம் பிள்ளை செய்திருந்தார்.

பாபு ராஜேந்திர பிரசாத் பட்டுக்கோட்டை நகருக்குச் சென்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நாட்களில் பட்டுக்கோட்டை நகரில் சுயமரியாதை இயக்கத்தினரும், ஜஸ்டிஸ் கட்சியினரும் வலிமையாக இருந்தார்கள். பாபு ராஜேந்திர பிரசாத்தும், வேதரத்தினம் பிள்ளையும் கண்ணியமற்ற ஒரு கூட்டத்தில் சிக்கிக் கொண்டார்கள்.

“கூட்டத்தினர் ராஜேந்திர பிரசாத்துக்கு எதிராக ஒரு பெரிய கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், சாந்த சொரூபியான அவருடைய சட்டையைப் பிடித்து இழுத்துக் கிழித்தனர். கறுப்புக் கொடி ஏந்தியவர்கள் அவரைக் குச்சியால் குத்தினர்” என்று ‘சர்தார் வேதரத்தினம் பிள்ளை வாழ்க்கை வரலாற்று நூல்’ வேதனையுடன் தெரிவிக்கிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க வேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரகத்தை ராஜாஜி நடத்தியபோது, அவருக்கு வலதுகரமாக விளங்கியவர் வேதரத்தினம் பிள்ளை என்பதையும், பின்னர் அவருக்கு ‘சர்தார்’ என்ற பட்டம் அளிக்கப்பட்டது என்பதையும் இங்கே குறிப்பிடலாம்.

ஒழிக்க முயற்சி

காமராஜ் ஓர் எளிய குடும்பத்தில் தோன்றியவர். அவர் மிக இளம் வயதில் விடுதலை வேட்கை கொண்டு சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கு கொண்டார். கட்சிப் பணிகளை நன்கு ஒருங்கிணைத்துப் பணிபுரிவதில் மிகவும் வல்லமை வாய்ந்தவர் என்று பலரும் காமராஜைப் பாராட்டிப் பேசலானார்கள். ஜஸ்டிஸ் கட்சியினருக்கு அவர் சிம்ம சொப்பனமாக விளங்கினார். 





காமராஜை தீர்த்துக் கட்ட நடந்த ஒரு கொடிய முயற்சியை, விடுதலைப் போராட்ட வீரரும், தமது குடும்பச் சொத்தை அழித்துத் தேசிய இயக்கத்தை வளர்த்தவரும், சென்னை மாகாண முதலமைச்சராக இருந்தவருமான பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் வாழ்க்கை வரலாற்று நூல் விவரிக்கிறது. அதனைப் படியுங்கள்:–

“ஒரு முறை விருதுப்பட்டி சந்தைக்குச் சென்ற வண்டிகள் இரவில் திரும்பி வருகிறபோது, ஊர் சாலையில் ஒரு மனிதர் மயக்கமுற்றுக் கிடப்பதைக் கண்ட வண்டிக்காரர்கள், ஓடோடி அருகில் சென்று பார்த்தபோது, சாலையில் கிடந்தவர், தலையில் அடிபட்டு வெளியேறிய ரத்தம் உடலெங்கும் பரவிப் பயங்கரமான தோற்றத்துடன் இருப்பதைப் பார்த்துப் பதறிப் போய் விட்டார்கள். மெல்லப் புரட்டிப் பார்த்தபோது, பி.எஸ்.கே. வீட்டிற்கு அடிக்கடி விருதுப்பட்டியிலிருந்து வருகின்ற விடுதலைப் போராட்ட வீரர் காமராஜ் என்பதை அடையாளம் தெரிந்து, திகைத்துப் பின், தூக்கி வண்டியில் கிடத்தினார்கள்.

“முதல் உதவியாக சில பச்சிலைகளைப் பறித்து வந்து அடிபட்ட இடத்தில் வைத்துக் கட்டினார்கள். வண்டியை விரைவாக ஓட்டினார்கள். ‘பளபள’வென விடிகிற நேரத்தில், பி.எஸ்.கே. வீட்டு முன்னர் வண்டியை நிறுத்தி விட்டு, உள்ளே சென்று தகவலைத் தெரிவித்ததும், ஓடி வந்தார் பி.எஸ்.கே.. வண்டியை நேராக மருத்துவமனைக்கு விடும்படி வேண்டினார். மருத்துவமனையில் ஏறத்தாழ நாற்பது நாள்கள் இருந்த காமராஜ், அங்கிருந்து ‘காங்கிரஸ் மாளிகை’க்கு வந்து ஒரு வாரம் தங்கியிருந்து, பின்னர் விருதுப்பட்டிக்குச் சென்றார். விருதுப்பட்டி ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள், விடுதலைப் போராட்டக் காங்கிரஸ் பணிகளை விருதுப்பட்டியில் விறுவிறுப்பாக ஆற்றிக் கொண்டிருக்கும் இளைஞர் காமராஜை ஒழித்துக் கட்டும் நோக்கத்தில், இத்தகைய இழிவான நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார்களென்பதைக் காங்கிரஸ் போராட்ட வீரர்கள் பின்னால் அறிந்து கொண்டனர்.”

– இவ்வாறு ‘பி.எஸ்.குமாரசாமி ராஜா வாழ்க்கை வரலாற்று நூல்” தெரிவிக்கிறது.
(அக்காலத்தில் விருதுநகரை விருதுப்பட்டி என்று அழைப்பது வழக்கம்.)

கொல்ல முயற்சி

1935– ஆம் வருட டெல்லி சட்டசபைத் தேர்தலிலும், 1936–ஆம் வருடச் சென்னை மாகாணச் சட்டசபைத் தேர்தலிலும் விடுதலை இயக்கமான காங்கிரஸ் மகாசபை வேட்பாளர்களை ஆதரித்து சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார்.

“அதனால் கோபம் கொண்ட ஜஸ்டிஸ் கட்சியினர், ம.பொ.சி.யை வீடு புகுந்து தாக்கிக் கொலை செய்ய முயன்றனர்.”
‘கொலை செய்ய முயற்சி’ என்ற துணைத் தலைப்பில், இந்த முயற்சி குறித்து ம.பொ.சி.யே, ‘எனது போராட்டம்’ என்ற அவரது நூலில் எழுதியிருக்கிறார்.

அந்த நூல் அவர் தி.மு.க.வினருடன் உறவு கொண்டிருந்த காலத்தில் எழுதப்பட்டது ஆகும்!

சுயமரியாதை இயக்கம் தொடர்பாக ஈ.வெ.ரா. தன் விருப்பப்படி காரியங்கள் நடத்திக் கொண்டிருந்தார். அதனை விரும்பாத சௌந்தர பாண்டியனும், அவரது சில தோழர்களும் சுயமரியாதைச் சங்கத்தைப் பதிவு செய்தார்கள். ‘ரிஜிஸ்டர்ட் சுயமரியாதை சங்கம்’ என்று அது அழைக்கப்பட்டது.

‘சுயமரியாதை இயக்கம் கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்டது இல்லை’ என்று பி.டி.ராஜன் பகிரங்கமாகக் கூறினார். 1931– ஆம் ஆண்டில் சேலம் நகரில் சுயமரியாதைச் சங்கக் கூட்டத்தை அவர் ஆரம்பித்து வைத்துப் பேசினார். அவரது பேச்சு ஈ.வெ.ரா.வின் ‘குடியரசு’ இதழில் வெளியாயிற்று.

அப்போது அவர், “சுயமரியாதை இயக்கம் நாத்திக இயக்கம் இல்லை” என்று பிரடகனம் செய்தார்.

ஏற்கெனவே, ஜஸ்டிஸ் கட்சியில் மிகவும் கணிசமான ஒரு பிரிவினர், ஈ.வெ.ரா.வின் கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்க மறுத்தார்கள். ஈ.வெ.ரா.வுக்கும், ஜஸ்டிஸ் கட்சிக்கும் இடையே ஒரு முக்கியமான கருத்து வேறுபாடாக அது காணப்பட்டது.

பின்னர், சுயமரியாதை இயக்கத்திலும் இந்தப் பிரச்சனை கடுமையாக எழுந்தது. பி.டி.ராஜன் தீவிரமான ஆத்திகராகவே விளங்கினார். அந்நாட்களில் தமிழகத்தில் ஐயப்பன் வழிபாடு ஓர் இயக்கமாக அமைந்ததற்கு பி.டி.ராஜனின் பங்கே மிகவும் கணிசமானது என்று சொல்லுவார்கள். அவரது புதல்வர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் நெற்றியில் திருநீறு, குங்குமத்துடன்தான் எப்போதும் காணப்படுவார். 

“இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கினாலும், சென்னை மாகாணத்தை மட்டும் பிரிட்டனின் அடிமை நாடாக வைத்திருக்க வேண்டும்” என்று கெஞ்சிய ஒரு தீர்மானத்தைத் திருவாரூரில் கூடி ஈ.வெ.ரா. நிறைவேற்றினார்! விவரம் அடுத்த வாரம்.

(தொடரும்)

ஆதார நூல்கள்: 

1. தியாகத் திருமகனார் பி.எஸ்.கே. (பி.எஸ்.குமாரசாமி ராஜா வாழ்க்கை வரலாறு) எழுதியவர்: ‘எழுத்துச் செம்மல்’ குன்றக் குடி பெரிய பெருமாள். வெளியிட்டோர்: அமரர் பி.எஸ்.குமாரசாமி ராஜா நூற்றாண்டு விழாக் குழு, இராஜபாளையம் (1999).

2. மறைக்காட்டில் ஒரு மாணிக்கம் (சர்தார் வேதரத்தினம் பிள்ளை வாழ்க்கை வரலாறு) வெளியிட்டோர்: கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம் வெளியீட்டுப் பகுதி, வேதாரண்யம் (1986).

3. எனது போராட்டம் (1007 பக்கங்கள்) எழுதியவர்: ம.பொ.சிவஞானம், வெளியிட்டோர்: இன்ப நிலையம், மயிலாப்பூர், சென்னை -4 (1974). 

ஜன்னல் வழியே

கருணாநிதி குடும்பத்தின் மீடியா வியாபாரம்! – துர்வாசர் 
ஜன்னல் வழியே

டக்கி வாசிப்பது என்பது தி.மு.கழகத் தலைவரிடமும் சரி, அதன் இதர தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடமும் சரி, அறவே கிடையாது. பதவியில் இருக்கும்போது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடித் தீர்ப்பது என்பது தி.மு.க.வின் வரலாறு. பதவியையும் செல்வாக்கையும் சொந்த நலன்களுக்காகத் துஷ்பிரயோகம் செய்வது என்பது அவர்களுக்குக் கைவந்த கலை. டாக்டர் கலைஞர் கருணாநிதி மகா தந்திரசாலி. தனது ஆசைகளையும் எண்ணங்களையும் எப்படியாவது நிறைவேற்றிக் கொள்வார்.



முரசொலி மாறனை முதல் முதலாக மத்திய அரசில் நுழைத்ததே, தனக்கு டெல்லியில் நம்பகமான ஒரு ஆள் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். முரசொலி மாறனும் சரி, அவரது வாரிசுகளும் சரி, வியாபாரத்தில் வெகு சூட்டிகையானவர்கள். கையில் அதிகாரம் வேறு இருக்கவே, அதை வைத்து தங்களுடைய பிஸினஸ் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திக் கொண்டார்கள் என்பது உலகமறிந்த செய்தி.

மாறனுக்குப் பிறகு முத்தமிழ் வித்தகர் கருணாநிதி, பேரன் தயாநிதி மாறனை மத்திய அமைச்சகத்தினுள் நுழைத்தார். தொலைத் தொடர்புத் துறையைக் கேட்டுப் பெற்றார்.

தமிழ்நாட்டில் பல ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. ரயில்வே துறையைக் கேட்டுப் பெற்றால் அத்திட்டங்களை நிறைவேற்றலாம். ஆனால், கருணாநிதியும் அவரது குடும்பமும் ரயில்வே காண்ட்ராக்டர்களா என்ன, ரயில்வே துறையைக் கேட்டு வாங்கி ஆதாயம் அடைய? கருணாநிதி, மாறன் குடும்பங்கள் இரண்டுமே மீடியா வியாபாரிகள். மீடியா வியாபாரிகளுக்கு ரயில்வே எதற்கு?

93-ல் சாதாரண வீடியோ கேஸட்டுகளை விற்பனை செய்து வந்த கலாநிதி, தயாநிதிகள் சன் டி.வி.யை ஆரம்பித்தார்கள். 2000-ல் எஸ்.சி.வி.யைத் துவக்கினார்கள். ஹாத்வே போன்ற இதர கேபிள் டி.வி.க்களை தனக்குப் பின்புலமாக உள்ள தாத்தா கருணாநிதியின் அரசியல் செல்வாக்கு, மத்திய அரசிலுள்ள தொடர்பு இவற்றால் எஸ்.சி.வி. ஒழித்துக் கட்டியது. கலாநிதி, தயாநிதிகள், டி.வி. உலகில் பட்டம் பறக்கிற மாதிரி உயரே உயரே பறந்தார்கள்.

2004-ல் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சரான தயாநிதி, டெல்லியில் இருந்து கொண்டே சன் டி.வி.க்கு வேண்டிய சகலத்தையும் செய்து கொண்டிருந்தார். அடுத்தடுத்து கே. டி.வி., சன் நியூஸ், இதர மொழிச் சேனல்கள்.... என்று தென்னிந்தியாவில் தனது கால்களை சன் டி.வி. அகலமாக விரித்து வைத்து விட்டது. 
மத்திய அரசில் தொலைத் தொடர்பு மந்திரியாக இருக்கும் முன்னுரிமையை வைத்து ராஜ் டி.வி.க்கோ, விஜய் டி.வி.க்கோ கிடைக்காத வசதிகளை, சதா சர்வ காலமும் சிரித்துக் கொண்டே இருக்கும் தயாநிதி, தனது சன் குழுமத்துக்குச் செய்து கொடுத்துக் கொண்டே இருந்தார்.

பதவியும், தாத்தா கருணாநிதியின் பின்பலமும் இருக்கிற தைரியத்தில்தானே, தனது வீட்டில் சட்டத்துக்கு விரோதமாக தனி டெலிஃபோன் எக்ஸ்சேஞ்சையை இயக்கி இருக்கிறார் தயாநிதி?

2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கருணாநிதி குடும்பத்திலிருந்து ஏகப்பட்ட ‘நிதி’கள் சினிமா வினியோகத்திலும், சினிமா தயாரிப்பிலும் புற்றீசல் போல் கிளம்பி வந்து ஈடுபட்டார்கள். சன் குழுமம் ஹாத்வேயை ஒழித்துக் கட்டிய மாதிரி, பல சினிமா வினியோகஸ்தர்களையும், தயாரிப்பாளர்களையும் கதறடித்தனர் இந்த ‘நிதி’கள். விளைவு, இந்தக் கருணாநிதி குடும்பத்து ‘நிதி’களை மீறி சினிமாவில் யாரும் தலையெடுக்க முடியவில்லை.

சன் டி.வி. குழுமம், தினகரன், தமிழ் முரசு, குங்குமம் முதலான பத்திரிகைகள், சினிமா வினியோகம் என்று தமிழ்நாட்டு மீடியாவே கலாநிதியின் கைக்குள் வந்துவிட்டது. தமிழன் படிப்பதாக இருந்தால் தினகரனைத்தான் படிக்க வேண்டும்; பார்ப்பதாக இருந்தால் சன் டி.வி.யையோ, சன் பிக்சர்ஸ் வினியோகித்த திரைப்படத்தையோதான் பார்க்க வேண்டும் – என்ற நிலைக்குத் தமிழர்களைத் தள்ளி விட்டனர்.

மீடியா வியாபாரத்தில் தங்களை அடித்துக் கொள்ள ஆள் இல்லை என்கிற அளவுக்கு, இந்த இரண்டு நிதிகளும் வளரக் காரணமே பெரிய நிதியான கருணாநிதிதான். மீடியா வியாபாரம் செய்யக் கூடாது என்றில்லை. ஆனால், பதவி அதிகாரத்தையும், தங்கள் அரசியல் செல்வாக்கையும் துஷ்பிரயோகம் செய்து, மீடியா வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்கிற சுயநலம் கருணாநிதி குடும்பத்துக்குத்தான் உண்டு.

கருணாநிதி ‘ஏழு வயதிலிருந்தே பொது வாழ்வில் இருக்கிறேன், எட்டரை வயதிலிருந்தே பொதுவாழ்வில் இருக்கிறேன்’ என்று பீற்றிக் கொள்கிறார். அவர் பொது வாழ்வில் இருப்பதால், தமிழ்நாட்டு மக்களை உயர்த்தி விட்டாரோ இல்லையோ, சன் குழுமத்தையும், தனது கலைஞர் டி.வி.யையும் உயர்த்தி விட்டார்.

இத்தனை அதிகார துஷ்பிரயோகத்துக்கும் காரணமான கருணாநிதி இப்போது தனது பேரன் தயாநிதிக்குப் பரிந்து கொண்டு ‘இந்தியாவில் மீடியாவின் ஆட்சி நடக்கிறது...’ என்று மீடியாவைச் சாடுவது நல்ல கூத்துதான். 


Friday, October 14, 2011

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 3

சுய மரியாதையற்ற கூட்டம் – கே.சி.லட்சுமி நாரயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 3

1919 – ஆம் ஆண்டில் ஈ.வெ.ரா. காங்கிரஸில் சேர்ந்தார். 1923 – ஆம் ஆண்டு வரையில் காங்கிரஸ் மகாசபையின் கொள்கைகளான கதர்த் திட்டம், மது ஒழிப்பு, ஹரிஜன ஆலயப் பிரவேசம், அனைவருக்கும் சம உரிமைகள் முதலியவற்றை ஆதரித்து ஈ.வெ.ரா. தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார்.


அன்றைய காங்கிரஸ் மகாசபையில் ஈ.வெ.ரா. சேர்ந்த மிகவும் குறுகிய காலத்திலேயே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் என்ற மிக உயர்ந்த பதவி அவருக்கு அளிக்கப் பெற்றது. காங்கிரஸில் ஓர் உயர்ந்த அந்தஸ்தும் அவருக்குக் கிடைத்தது.

ஈ.வெ.ரா.வுக்கு அந்தப் பெருமைகள் கிடைக்குமாறு செய்தவர் ராஜாஜியே! இந்த உண்மையைப் பல வருடங்களுக்குப் பின்னர் ஈ.வெ.ரா.வே பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்.

“என்னை ராஜாஜி அவர்கள்தான் முதலில் கோயம்புத்தூர் ஜில்லா காங்கிரஸ் செக்ரட்டரி ஆக்கினார். பிறகு, அவர்தான் என்னைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஆக்கினார். என்னிடம் முழு நம்பிக்கை வைத்து, என்னையே அவர், ‘நமது தலைவர் நாயக்கர்’ என்று அழைத்ததோடு, பார்ப்பனரில் வெகு பேரை என்னைத் தலைவர் என்று அழைக்கும்படி செய்தார்” என்று ஈ.வெ.ரா. ‘விடுதலை’ நாளிதழின் தலையங்கத்தில் (26.12.1972) எழுதியிருந்தார். அந்தத் தலையங்கம், ராஜாஜி அவர்கள் மறைந்த போது ஈ.வெ.ரா. எழுதியது ஆகும்.

இவ்வாறு ஈ.வெ.ரா.வே ஒப்புக் கொண்டுள்ளபடி, அவருக்கு மரியாதையையும், உயர்நிலையையும் அளித்த விடுதலை இயக்கமான காங்கிரஸ் மகாசபை பற்றிய அவரது நிலை, துரதிருஷ்டவசமாக 1924– ஆம் வருட ஆரம்பத்திலிருந்து மாற ஆரம்பித்து விட்டது. ஜஸ்டிஸ் கட்சியினரின் வலையில் அவர் விழுந்து விட்டார்.

ஈ.வெ.ரா. கூறிய சமூகச் சீர்திருத்தங்களைக் காங்கிரஸ் அலட்சியப்படுத்தியதால், அவர் வெளியேறினார் என்று சொல்ல முடியாது. உண்மையில் விடுதலை இயக்கக் கால காங்கிரஸ், சமூகச் சீர்திருத்தங்களில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தது. 
தீண்டாமை ஒழிப்பு, இளம் விதவைகள் மறுமணம், கலப்புத் திருமணம், மது ஒழிப்பு, ஹரிஜன ஆலயப் பிரவேசம், தேவதாசி முறை ஒழிப்பு, ஆலயங்களில் ஆடு, கோழி முதலியவற்றைப் பலியிடும் கொடுமைக்கு எதிர்ப்பு என்று பல சமுதாயச் சீர்திருத்தங்களை அன்றைய காங்கிரஸ் மகாசபை இந்தியா முழுவதும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தது. எனவே, ஈ.வெ.ரா. காங்கிரஸில் இருந்து கொண்டே சீர்திருத்தப் பிரச்சாரம் செய்திருக்கலாம்.

அன்றைய காங்கிரஸ் மகாசபையில் கடவுள் நம்பிக்கையற்ற சிலரும் உறுப்பினர்களாக இருந்தார்கள். நேருஜி ஒரு நாத்திகர் என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆகவே, கடவுள் மறுப்புக் கொள்கையைப் பின்பற்றிக் கொண்டே காங்கிரஸில் தொடர்ந்து ஈ.வெ.ரா. பணி புரிந்திருக்கலாம். எனினும், பகுத்தறிவுக்குப் பொருந்தக்கூடிய எந்தவிதமான காரணமும் இல்லாமல், காங்கிரஸிலிருந்து ஈ.வெ.ரா. வெளியேறி விட்டார்!

ஈரோடு சுயமரியாதை மாநாடு

ஈ.வெ.ரா. காங்கிரஸிலிருந்து வெளியேறியதும், ஜஸ்டிஸ் கட்சியுடன் சேர்ந்து கொண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தீவிரமாக எதிர்த்தார்.

‘சுயமரியாதை இயக்கம்’ என்ற ஓர் அமைப்பையும் அவர் ஆரம்பித்தார். கடவுள் மறுப்புக் கொள்கைக்கு ஆதரவாக அந்த இயக்கத்தை அவர் நடத்தினார். ‘சுயமரியாதை உள்ள எவனும் எதற்காக மற்றவர்களுக்குத் தலைவணங்க வேண்டும்’ என்று அவர் கேட்டார்.

சுயமரியாதை என்ற சொற்கள் ஓரளவு கவர்ச்சிகரமாக இருந்தன. ஈ.வெ.ரா.வை ஆசிரியராகக் கொண்டிருந்த ‘குடியரசு’ என்ற பத்திரிகை, சுயமரியாதைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்தது.

நாடு முழுவதும் உப்புச் சத்தியாகிரக இயக்கம் மிகவும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், 1931– ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஈரோடு நகரில் சுயமரியாதை மாநாடு என்ற பெயரில் ஒரு மாநாட்டை ஈ.வெ.ரா. நடத்தினார். 



அந்த மாநாட்டிலும், பின்னர் நடந்த தேசிய சுயமரியாதை மாநாட்டிலும் முக்கியமான பங்கு வகித்த கோவை அ.அய்யாமுத்து, தமது வாழ்க்கை வரலாற்று நூலில் இந்த இரண்டு மாநாடுகள் சம்பந்தமாகவும், பல விவரங்களைத் தெரிவித்திருக்கிறார்.

அய்யாமுத்து சுதந்திரப் போராட்டத்தில் தமது மனைவியுடன் கலந்து கொண்டு சிறை சென்றவர். “கதர் இயக்கத்தில் அய்யாமுத்துவுக்கு இணையாகப் பணி செய்தவர்கள் யாருமே இல்லை. அவரது பணி ஒப்பற்ற ஒன்று” என்று மகாத்மா காந்தி அவரைப் பற்றி எழுதியிருக்கிறார்.

இனி, ஈரோடு சுயமரியாதை மாநாடு பற்றி விவரிப்பேன்.

ஈரோடு சுயமரியாதை மாநாட்டில், ‘சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் உப்புச் சத்தியாகிரக இயக்கத்தில் தீவிரமாகக் கலந்து கொள்ள வேண்டும்’ என்று வற்புறுத்திய ஒரு தீர்மானத்தை, ப.ஜீவானந்தம் என்ற இளைஞர் கொண்டு வந்தார்.

அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து அவர் மிகுந்த ஆவேசத்துடன் பேசினார். “சுதந்திரம் இல்லாத அடிமை நாட்டில் மக்கள் சுயமரியாதையுடன் வாழ முடியாது. எனவே, இந்தியாவுக்கு முதலில் சுதந்திரம் வந்தாக வேண்டும். ஆங்கிலேயரின் ஆதிக்க ஆட்சி அகற்றப்பட வேண்டும்” என்று ஜீவானந்தம் குறிப்பிட்டபோது, மாநாட்டில் பலத்த கைதட்டல் எழுந்தது.

ஜீவானந்தத்தின் தீர்மானத்தைக் கண்டு ஈ.வெ.ரா. கதிகலங்கிக் போய் விட்டார். அவரை எதிர்ப்பதற்குக் கோவை அய்யாமுத்துவை ஈ.வெ.ரா. பயன்படுத்திக் கொண்டார். ஈ.வெ.ரா செய்த சூழ்ச்சியின் விளைவாக ஜீவானந்தத்தின் தீர்மானம் தோல்வி கண்டது.

“தீண்டப்படாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டிருந்த சகோதரர்களுக்குப் பொதுக் குளங்களிலும், கிணறுகளிலும் நீர் எடுக்க உரிமை இல்லை. அந்த உரிமைக்காக நாம் முதலில் போராடுவோம்; பிறகு உப்புச் சத்தியாகிரக இயக்கத்தில் கலந்து கொள்வோம்” என்று அறிவித்த அய்யாமுத்துவின் சமரசத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுயமரியாதைச் சத்தியாகிரக கமிட்டி ஒன்றை நியமித்து, அந்தக் கமிட்டியார் சில கோவில்களையும் குளங்களையும் தேர்ந்தெடுத்து, அங்கெல்லாம் ஹரிஜன மக்கள் பிரவேசிப்பதற்காகப் போராட்டம் நடத்துவது என்றும், முடிவை முப்பது நாட்கள் காலவரையறைக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானத்தை அய்யாமுத்து எழுதிக் கொடுத்தார். ஈரோடு மாநாட்டில் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த அளவில் ஈரோடு மாநாடு முடிந்தது. 



தேசிய சுயமரியாதை மாநாடு


ஈரோடு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி ஈ.வெ.ரா. செயல்படவில்லை. எனவே, ப.ஜீவானந்தமும், கோவை அய்யாமுத்துவும் சேர்ந்து கோவை மாநகரில் ‘தேசிய சுயமரியாதை மாநாடு’ என்ற பெயரில் ஒரு மாநாட்டை நடத்தினார்கள். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக ஈ.வெ.ரா.வின் சுயமரியாதை இயக்கம் செயல்பட்டதை, அந்த மாநாட்டில் பேசிய எல்லோரும் எதிர்த்தார்கள்.

உப்புச் சத்தியாகிரகத்தில் சுய மரியாதை இயக்கத்தினர் பங்கு பெற வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தையும், ஆலயங்களிலும் பொதுக் குளங்களிலும், பொதுக் கிணறுகளிலும் ஹரிஜன மக்களுக்கு அனுமதி தர வேண்டும் என்பதற்காகப் போராட்டம் நடத்துவது என்று, ஈரோடு சுயமரியாதை மாநாட்டில் தீர்மானித்து விட்டு, பொறுப்பற்ற முறையில் மேல்நாட்டுக்குக் கப்பலேறிச் சென்றுவிட்ட ஈ.வெ.ரா.வின் கொள்கையைக் கண்டிப்பதாக மற்றொரு தீர்மானத்தையும், கோவை தேசிய சுயமரியாதை மாநாடு ஒருமனதாக நிறைவேற்றியது.

அந்த மாநாட்டில், தீர்மானங்களின் மீது பேசியபோதுதான், ஈ.வெ.ரா.வுக்கு மக்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்ற விருப்பம் உண்மையில் கிடையாது என்றும், இந்தியா சுதந்திரம் அடையக் கூடாது என்பதுதான் அவரது விருப்பம் என்றும் ஜீவானந்தம் முழக்கமிட்டார்.

கோவை தேசிய சுயமரியாதை மாநாடு முடிந்த பிறகு, அய்யாமுத்துவும், ஜீவானந்தமும் சுயமரியாதை இயக்கத்திலிருந்து விலகி, காங்கிரஸ் மகாசபை நடத்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்கள்.

ஜீவானந்தம் மிகச் சிறந்த பேச்சாளர்களுள் ஒருவர்; கொள்கைப் பற்று மிகுந்தவர். விடுதலை இயக்கத்தில் தீவிரமாகப் பங்கு கொண்ட அவர், பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆனார். அவர் இறுதிக் காலம் வரையில் தனி வாழ்வில் எளிமை பேணியவராக – தியாக சீலராக வாழ்ந்தார்.

கோவை தேசிய சுயமரியாதை மாநாட்டின் எச்சரிக்கையை அலட்சியப் படுத்திய சுயமரியாதை இயக்கமும், ஜஸ்டிஸ் கட்சியும் வன்முறை வழிகளைப் பின்பற்றின. விடுதலை இயக்கத்தில் தீவிரமாகப் பணிபுரிந்த இளைஞர் காமராஜைப் படுகொலை செய்ய முயற்சிகள் நடந்தன. அடுத்த இதழில் விவரங்கள்!


ஆதார நூல்: எனது நினைவுகள் (சுயசரித்திரம்) 962 பக்கங்கள்.
எழுதியவர் கோவை அ.அய்யாமுத்து,
வெளியிட்டோர் – வானதி பதிப்பகம், தி.நகர், சென்னை –17. (1973).
 



Thursday, October 13, 2011

MANAMOHANA DHUSHTA KAVACHAM - மனமோகன துஷ்ட கவசம்


துக்ளக் தாண்டவராய ஸ்வாமிகள் அருளியுள்ள " மனமோகன துஷ்ட கவசம்"

அன்பு நண்பர்களே:
துக்ளக் 19 10 2011 இதழில் வெளியான
மனமோகன துஷ்ட கவசம். (கந்த
சஷ்டி கவசம் படித்தால் பயம் போகும்,
செல்வம் தழைக்கும். இந்த கவசத்தை
படிப்பதால், கோர்ட்டுக்கு போகும்போதும்,
புகார்களுக்கு பதில் சொல்லும்போதும், ஜெயிலுக்கு
போகும்போதும், ஜாமீனில் வரும்போதும், எதிர்
கட்சியினரை பார்க்கும்போதும் , ஊழல் வாதிகள்
சகல சௌபாக்கியம் பெறுவார்கள்.)

காப்பு:
ஊழல் செய்வோருக்கு வல்வனைபோம்: துன்பம்போம்:
பர்சில் பதிப்போருக்கு செல்வம் நிலைத்து
கதித்து ஓங்கும்; பதவியும் கைகூடும்: டெல்லி
அரும் மனமோகன கவசந்தனை.

குறள்:

க்வாட்ரோக்கி இடர்தீர விந்தை புரிந்த
வித்தகன் அடி, நெஞ்சே குறி.

நூல்:

துஷட்ர்களை காக்கும் பிரதமர் கனவான்
பாதக்ர்க்கு உதவும் பஞ்சாப் சிங்கம்
பாதம் இரண்டும் சோனியாவைப் பணிய,
கீதம் பாடி, அன்னை பாட்டுக்கு
தாளம் போட்டு, அறநெறி மேலோன்
வேடமணிந்து, ஊழலை காக்க உவந்து வந்து
வர வர டர்பனார் வருக வருக !!
வருக வருக வேடக்காரர் வருக வருக !

சங்கடம் தீர்க்க சடுதியில் வருக!
சரிசரி சரிசரி சரிசரி சரிசரிசரி
நீதியின் குடிகெடுத்த ஐயா வருக!

எம்மை ஆளும் சிங்கனார் கையில்
பலபல பொய்யும், பாசாங்கும்
பரந்த விழிகள் பலதை மறைக்க
விரைந்தென்னை காக்க மேலோன் வருக!

நன்னெறி வேடத் தலையில் டர்பனும்
இருசெவி கீழே தாடியும் மீசையும்
நிமிராத மார்பில் கோட்டும் பட்டனும்
திருவடிதனில் பூட்ஸும் பளிச்சிட

படபட படபட படபட படபட
தட தட தட தட தட
என்ற பாராளுமன்றப் பேச்சுகளேற்று
நாட்டை ஆளும் நாடகக்காரா!

அடியேன் ஊழலை, டர்பன் காக்க
கண்ணாடி ரெண்டும், கருப்பு பணம் காக்க
பேசும் பொய்தனை, பிராண்ட் நேம் காக்க.
தகவல் சட்டம் தாக்காமல் தாடியும் காக்க
ஸ்விஸ் பேங்க் கணக்கை, மீசை காக்க
பொருள் அனைத்தையும் பொருளாதார மேதை காக்க
பினாமி சொத்தை, பிரதமர் காக்க

காக்க காக்க கண்மூடி சாமி காக்க
நோக்க நோக்க நோபைல் நோக்க
தாக்க தாக்க தாடிக்காரர் தாக்க
பார்க்கப் பார்க்க பாவம் பொடிபட

பில்லி சூனியம் சுப்ரமணிய ஸ்வாமியும்
அல்லல் படுத்தும் அடங்கா கோர்ட்டும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை சோதனையும்
கொள்ளி வாய் பேய்களும் சி.பி.ஐ.யும்

அமைச்சர்களை தொடரும் ஊழல் புகார்களும்
அடியேனைக் கண்டால் அலறி நடுங்கிட

தகவல் சட்டக்காரச் சண்டாளர்களும்
என் பெயர் சொல்லவும் இடி விழுந்து ஓட

வல்லபூத வாலாழ்டிகப் பேய்கள் -
விசேஷ கோர்ட்டும் , சுப்ரீம் கோர்ட்டும்
அடியேனைக் கண்டால் அலைந்து குலைந்திட

மாற்றார் வஞ்சகர் பத்திரிக்கையாளர்களும்
டெலிவிஷன் சேனல்களும் பா.ஜா.க.ஆட்களும்
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

ஏமத்தில் சாமத்தில் எதிரே வந்து
என்னை துரத்தும் விசாரணை காட்டேரி
வாய்விட்டு அலறி மதிகெட்டு ஓடப்
படினியில் முட்டி, உன் பாசாங்கு பேச்சால்
கோர்ட்டுடன் சேர்ந்து கதறிக் கத்தி
கட்டி உருட்டு கால்கை முறிய
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
குத்து குத்து, உன் பொய்யால் குத்து!

எல்லா வழக்கும் என்றனைக் கண்டால்
நில்லாதோட நீ எனக்கு அருள்வாய்.

எல்லா நாட்டு பேங்குகளும் எனக்கே ஆக
மனையும் மைன்களும், அனைத்தும் எனக்கே ஆக,
உன்னை துதிக்க, உன் திருநாமம்
மனமோகனே! மாசில்லா சிங்கே!
நாட்டின் பிரதமரே! பாவம் காக்கும் பவனே!

பாடினேன், ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் பிரதமர் கருணை
வாழ்க வாழ்க, வேடக்காரர் வாழ்க!
வாழ்க வாழ்க, ஊழல் கேடயம் வாழ்க
வாழ்க வாழ்க , சோனியா அடிமை வாழ்க,
வாழ்க வாழ்க, நாற்காலி பித்தர் வாழ்க!

எத்தனை ஊழல்கள் அடியேன் செய்யினும்
அத்தனையிலும் உடனிருந்து காப்பது உன் கடன்!
கூட்டணி தர்மம் கண்டவன் நீ! அடியேன்
என்மீது மனமகிழ்ந்து அருள் செய்!

மனமோகன துஷ்டக் கவசந்தனை விரும்பிய
துக்ளக் தாண்டவராயன் அருளியதைக்
காலியில், மாலையில், கோர்ட்டில், ஜெயிலில் ,
கருத்துடன், நாளும் நேசமுடன்,
நினைவதை உன்முகமாக்கி
மனமோகன துஷ்ட கவ்சம்தனை
சிந்தை கலையாது தியாநிப்பவரை
மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்:

பொல்லா சுப்பி ரமணிசாமியும்
குடைச்சல் சிலந்தி சி.பி.ஐ.யும்
சொக்கு சிரங்கு குன்மம் கோர்ட்டும்
ஏறிய விழங்கள் எளிதில் இறங்கும் !

சிதம்பர ரகசியம் அறிந்தாய் போற்றி!
ப்ரனாபின் ரோஷம் தனித்தாய் போற்றி!
உட்பகை கொன்று, ஊழலை மறைத்து.
நீதியின் காதில் பூவைச் சுற்றியவனே போற்றி!

நாட்டுக்கு நஷ்டா போற்றி!
நேர்மைக்கு கஷ்டா போற்றி!
ஊழலோருக்குக் இஷ்டா போற்றி!
சட்டத்திற்கு துஷ்டா போற்றி!

திறமிகு மழுப்பல் திலகமே போற்றி!
ஊழல் காத்து வாழ்வை போற்றி!
பங்கே பெற்று விளங்குவாய் போற்றி!
போற்றி போற்றி ஊழல்பதியே போற்றி!
போற்றி போற்றி, மனமோகனார் போற்றி !!

எச்சரிக்கை

எச்சரிக்கை 


Thursday, October 6, 2011

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 2

தலித்துகளைப் புறக்கணித்த ஐஸ்டிஸ் கட்சி
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 2

தமிழகத்தின் ஒரு சிறந்த தேசியத் தலைவரான எம். பக்தவத்ஸலம், இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். விடுதலைக்குப் பிறகு பல ஆண்டுகள் தமிழ்நாட்டில் அமைச்சராகவும், பின்னர் முதலமைச்சராகவும் அவர் பணிபுரிந்தார். வாழ்க்கையில் எளிமை, ஆட்சியில் தூய்மை, நிர்வாகத்தில் நுண்ணறிவு ஆகியவற்றுக்கு இலக்கணம் வகுத்தவராக அவர் வாழ்ந்தார்.

எம்.பக்தவத்ஸலம்

ஜஸ்டிஸ் கட்சி ஒரு தேசத் துரோக அமைப்பே என்று அவர் அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார்.

“சமுதாயத்தின் பல்வேறு துறைகளில் பிராமண ஆதிக்கம் இருந்ததாகவும், அதை எதிர்ப்பதே தனது குறிக்கோள் என்றும் ஜஸ்டிஸ் கட்சி கூறிக் கொண்டது. பிராமணரல்லாதாரில் பலர் நன்கு படிக்காததால்தான், சமுதாயத்தில் முன்னணி நிலைக்கு வர முடியவில்லை என்ற உண்மையை மறந்த நிலையில் தொடங்கிய அந்த பிராமண எதிர்ப்பு, இந்தியாவுக்குச் சுதந்திரமே வேண்டாம் என்று கூறும் அளவுக்குப் பிற்போக்குத் தன்மையில் அழுந்தி விட்டது” என்று ஒரு பேட்டியில் பக்தவத்ஸலம் கூறினார்.

“ஜஸ்டிஸ் கட்சியின் பிறப்புக்கு எது காரணமாக இருந்த போதிலும், அது சுதந்திர இயக்கத்தையே எதிர்த்து, வெள்ளையருடன் குலவிக் கொண்டு அவர்கள் அளித்த பதவிகளிலே ஒட்டிக் கொண்ட, பச்சைத் தேசத் துரோக அமைப்பாக ஆகிவிட்டது” என்று அவர் தெரிவித்தார்.

“மக்கள் ஆதரவு இல்லாத – சுதந்திரமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்த ஜஸ்டிஸ் கட்சியின் வரலாறு, வெகு சீக்கிரத்தில் முடிவடைந்ததைப் பற்றி ஆச்சரியப்படுவதற்கில்லை. பழைய ஜஸ்டிஸ் கட்சியே பிறகு திராவிடர் கழகமாக மாறி, இன்று திராவிட முன்னேற்றக் கழகமாகக் காட்சி தருகிறது” என்றும் பக்தவத்ஸலம் குறிப்பிட்டார்.

அடக்குமுறைக் கொடுமை

ரௌலட் சட்ட எதிர்ப்பு (1919), ஜாலியன் வாலாபாக் படுகொலை எதிர்ப்புக் கிளர்ச்சி (1919), ஒத்துழையாமை இயக்கம் (1920), பிரிட்டிஷ் அரசு பரம்பரையின் கன்னாட் கோமகன் இந்திய வருகை பகிஷ்கரிப்புப் போராட்டம் (1921), வேல்ஸ் இளவரசர் வருகை பகிஷ்கரிப்புக் கிளர்ச்சி (1921), நாகபுரி கொடிப்போர் (1923), வைக்கம் சத்தியாக்கிரகம் (1924), நீலன் சிலையை அகற்றக்கோரி நடந்த வீரப்போராட்டம் (1927), சைமன் கமிஷன் எதிர்ப்புக் கிளர்ச்சி (1928), ஈடு இணையற்ற உப்புச் சத்தியாக்கிரகம் (1930), பிரிட்டனின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் வெள்ளி விழாக் கொண்டாட்ட பகிஷ்கரிப்பு (1934), தனி நபர் சத்தியாக்கிரகம் (1940), ஆகஸ்ட் இயக்கம் (1942) ஆகிய விடுதலைப் போரின் கிளர்ச்சிகளையும், சத்தியாக் கிரகங்களையும் ஜஸ்டிஸ் கட்சியினர் எதிர்த்து ரகளை செய்தார்கள். அவற்றுக்குப் பல வகைகளிலும் இடையூறுகளை விளைவித்தார்கள்.

அந்தக் கிளர்ச்சிகள், சத்தியாக்கிரகங்கள் பல ஜஸ்டிஸ் கட்சியின் ஆட்சியின்போது நடந்தன. ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியாளர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குப் பல அடக்குமுறைக் கொடுமைகளைச் செய்தார்கள்; தலைவர்களையும், தொண்டர்களையும் சிறைகளிலே அடைத்தார்கள்; சிறைகளில் கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டார்கள்.

அந்நாட்களில் கள், சாராயக் கடைகள் நாடு முழுவதும் இயங்கின. அவற்றில் பெரும்பாலானவற்றை ஜஸ்டிஸ் கட்சியினரும், அவர்களது ஆதரவைப் பெற்ற குண்டர்களும் நடத்தினார்கள். காங்கிரஸின் நிர்மாணத் திட்டங்களிலே ஒன்று மதுவிலக்கு. மகாத்மா காந்தி விரும்பிய வண்ணம் தேசம் முழுவதும் கள், சாராயக் கடைகள் முன்பாக அன்றைய காங்கிரஸார் மதுவிலக்குப் பிரச்சார மறியல் செய்தார்கள். பெண்களும் அந்தப் பணியில் கலந்து கொண்டார்கள்.

கள், சாராயக் கடைகள் முன்பாக மறியல் செய்த ஆண்களையும் பெண்களையும், ஜஸ்டிஸ் கட்சியின் ஆதரவு பெற்ற குண்டர்கள் கடுமையாகத் தாக்கினார்கள்; பெண்களை மானபங்கம் செய்ய முயன்றார்கள். காவல் துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, இந்த அட்டூழியங்கள் அரங்கேறின.

கம்யூனல் ஜி.ஓ.

காந்தியடிகள், ராஜன்பாபு, நேருஜி முதலிய விடுதலை இயக்கத் தலைவர்கள் சென்னை மாகாணத்திற்கு வந்தபோது, அவர்களை எதிர்த்து வன்முறை ஆர்ப்பாட்டங்களை ஜஸ்டிஸ் கட்சி நடத்தியது என்ற செய்தியைப் பல சான்றுகளுடன் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் விவரித்திருக்கிறார். சுருக்கமாகச் சொல்லுவதானால், அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக என்னென்ன கொடுமைகளைச் செய்ய வேண்டுமென்று விரும்பினார்களோ, அந்தந்தக் கொடுமைகளையெல்லாம் ஜஸ்டிஸ் கட்சியும், அதன் ஆட்சியும் செய்தன என்பது வரலாறு.

ம.பொ.சி.

அன்றைய சென்னை மாகாணத்தில் 1920-ஆம் ஆண்டு முதல் 1934- ஆம் ஆண்டு வரை ஜஸ்டிஸ் கட்சியானது நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பரிபூர்ணமான ஒத்துழைப்பும் அதற்குக் கிடைத்தது. அத்தகைய சாதகமான சூழ்நிலையையும், வாய்ப்பையும் பெற்றிருந்த ஜஸ் டிஸ் கட்சியின் ஆட்சி, மக்களின் நலனுக்காகச் சாதனைகளைச் செய்ததா? என்னென்ன சாதனைகளைச் செய்தது?

பிராமணரல்லாதாரின் நலன்களைப் பாதுகாப்பதே தனது தலையாய பணி என்றும், அதற்காக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற கொள்கையைச் செயல்படுத்தப் போவதாகவும் ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பத்தில் மிகுந்த ஆடம்பரத்துடன் அறிவித்திருந்தது. எனினும், அக்கொள்கையைச் செயல்படுத்த அவசியமான ‘கம்யூனல் ஜி.ஓ.’வை ஜஸ்டிஸ் கட்சியின் ஆட்சி பிறப்பிக்கவில்லை.

காங்கிரஸார் அடங்கிய சுயராஜ்யக் கட்சியின் ஆதரவைப் பெற்று இயங்கிய டாக்டர் பி.சுப்பராயன் தலைமையிலான சுயேச்சை அமைச்சரவைதான், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்குச் சட்டப்படியான உத்தரவாதத்தை ஏற்படுத்தியது. ஆம், கம்யூனல் ஜி.ஓ. பிறந்தது டாக்டர் சுப்பராயன் ஆட்சியில்தான். சேதுரத்தினம் ஐயர் என்ற பிராமணரையும் அமைச்சராகக் கொண்டிருந்த அமைச்சரவைதான் இதைச் சாதித்தது என்று ம.பொ.சிவஞானம் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டி எழுதியிருக்கிறார்.

1937-ஆம் ஆண்டில் ராஜாஜி தலைமையில் அமைந்த காங்கிரஸ் ஆட்சி, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையைத் தொடர்ந்து அமல் செய்தது என்றும், அதற்குக் காங்கிரஸ் அரசு எத்தகைய எதிர்ப்பும் காட்டவில்லையென்றும் ம.பொ.சி. நினைவூட்டி இருக்கிறார்.

ஆக, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை பற்றி வாய் கிழியப் பேசியது ஜஸ்டிஸ் கட்சி. அதைச் செயல்படுத்தியது காங்கிரஸார் ஆதரவு பெற்ற அரசே என்பதைக் கவனத்தில் கொள்க.

தலித் புறக்கணிப்பு

ஏறக்குறைய பதினாறு ஆண்டு காலம் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, அதன் அமைச்சரவைகளில் ஒன்றில் கூட, இன்றைய தினம் தலித் என்று அழைக்கப்படும் ஹரிஜன சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை.

1935-ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் நடந்த முதலாவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு, தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றிருந்த பின்னரும், அது வற்புறுத்திய வாக்குறுதியை அளிக்க கவர்னர் தயங்கியதால், இடைக்காலத்தில் ஒரு பினாமி மந்திரி சபை கே.வி.ரெட்டி நாயுடு என்பவர் தலைமையில் அமைக்கப்பட்டது. அது மூன்று மாதங்கள் மட்டுமே ஆட்சி பொறுப்பில் இருந்தது. அந்த மந்திரி சபையில்தான் முதன் முதலில் ஒரு தலித், மாகாண கவர்னரின் தயவால் அமைச்சராக இடம் பெற்றார்.

பின்னர் முறைப்படி ராஜாஜியின் தலைமையில் அமைந்த காங்கிரஸ் மந்திரி சபையில் வி.ஐ. முனிசாமி பிள்ளை என்ற ஹரிஜன சகோதரர் மந்திரியாக இடம் பெற்றார். அந்த நியமனம் மிகப் பெரிய சமுதாயப் புரட்சியாகக் கருதப்பட்டது என்றும் ம.பொ.சி. விவரங்களுடன் தெரிவித்திருக்கிறார்.

ஜஸ்டிஸ் கட்சி மந்திரி சபைகளில் முஸ்லிம்களுக்கும் பிரதி நிதித்துவம் அளிக்கப்படவில்லை. ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் மந்திரி சபையில்தான் யாகூப்ஹாசன் என்ற முஸ்லிம் இடம் பெற்றார். அந்த நியமனம், அப்போது நிகழ்ந்த அதிசயங்களில் ஒன்றாகும் என்று ம.பொ.சி. வியந்து குறிப்பிட்டிருக்கிறார்.

தலித் மக்கள் புறக்கணிப்பு, முஸ்லிம்கள் புறக்கணிப்பு ஆகியவற்றையே ஜஸ்டிஸ் கட்சி அரசுகளின் ‘சாதனைகளாக’க் குறிப்பிடலாம்.

இன்னொன்றைச் சொல்லியாக வேண்டும். தேச பக்திக் கனலை மூட்டிப் பல ஆயிரம் மக்களை விடுதலைப் போரில் கலக்க வைத்து, வீரமிகு தியாகங்களைப் புரிய வைத்தவை மகாகவி பாரதியாரின் ஒப்பற்ற பாடல்கள். அந்தப் பாடல்களுக்கு, ஆங்கிலேய எஜமானர்களின் ஆணைப்படி தடை விதித்து, நீங்காத பழியைத் தேடிக் கொண்டது ஜஸ்டிஸ் கட்சியின் ஆட்சி.

வாழ்வு முடிந்தது

அன்றைய காங்கிரஸ் மகாசபை, முதன் முறையாக 1936-ஆம் ஆண்டில் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றது. ஜஸ்டிஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அநேகமாக அத்துடன் அதன் வாழ்வு முடிவடைந்தது என்று சொல்லலாம். அக்கட்சியில் இருந்தவர்களில் பலரே அதைக் குறை கூற ஆரம்பித்தார்கள்; பலர் வெளியேறிக் காங்கிரஸில் சேர மனுப் போடத் தொடங்கினார்கள்.

ஈ.வெ.ரா., தமது பொதுவாழ்வில் ஒரு திருப்பு முனையைச் சந்திக்க முயன்று கொண்டிருந்தார்.

“ஈ.வெ.ரா விரும்பியது சமுதாயச் சீர்திருத்தம் அன்று; இந்தியா சுதந்திரம் பெறக் கூடாது என்பதே அவரது விருப்பம்” என்று இளைஞராக இருந்தபோதே துணிவுடன் அம்பலப்படுத்தியவர் தோழர் ப.ஜீவானந்தம். அந்த ‘வரலாறு’ அடுத்த இதழில்.

ஆதார நூல்: எம்.பக்தவத்ஸலம் – எனது நினைவுகள் (சுயசரிதம்)
வெளியிட்டோர் – ஜனநாயக சேவா சங்கம், 11, வீரப்பெருமாள் முதலித் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5, 1972. ம.பொ. சிவஞானம் – விடுதலை போரில் தமிழகம் – இரண்டு தொகுதிகள்.

– கே.சி.லட்சுமி நாரயணன்

Monday, October 3, 2011

எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள்

தர்மம் – சோ – 4
எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள் - 40

சென்ற இதழ் தொடர்ச்சி...

மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள் –

தர்ம வியாதன் ஒரு கசாப்புக் கடைக்காரன். அவன் ஒரு முனிவருக்கு தர்மம் என்றால் என்ன என்பது பற்றி உபதேசிக்கிறான்.

அந்த முனிவர் மரத்தடியில் அமர்ந்திருந்தார். மரத்தின் மீது இருந்த ஒரு கொக்கு, அவர் மீது அசிங்கம் செய்து விட்டது. அவர் கோபத்துடன் நிமிர்ந்து கொக்கைப் பார்த்தார். அது சாம்பலாகி விட்டது.

அங்கிருந்து புறப்பட்டு, ஒரு வீட்டுக்குச் சென்று அவர் பிட்சை கேட்டார். அந்த வீட்டுப் பெண்மணி, வெளியே வர நேரமாகி விட்டது. முனிவருக்குக் கோபம் வந்தது. அந்தப் பெண் வெளியே வந்தபோது, ‘என்ன செய்வேன் தெரியுமா?’ என்றார்.

அந்தப் பெண், அந்த முனிவரைப் பார்த்து ‘என்னை என்ன கொக்கு என்று நினைத்தீர்களா?’ என்று கேட்டாள்.

இவருக்கு ஒரே ஆச்சர்யம் – எங்கோ நடந்த நிகழ்ச்சி அவளுக்கு எப்படித் தெரிந்தது என்று. ‘அது எப்படி உனக்குத் தெரியும்?’ என்று கேட்கிறார்.

அந்தப் பெண்மணி ‘எனக்கு எல்லாமே தெரிகிறது. நீங்கள் கொக்கை எரித்து சாம்பலாக்கியது போல், என்னையும் செய்துவிடலாம் என்று நினைக்கிறீர்கள் என்பதும் புரிகிறது’ என்று கூறுகிறாள்.

அவளுக்கு எப்படி அந்த சக்தி வந்தது....?

அவளுடைய பதி பக்திதான் காரணம். கணவனுக்குப் பணிவிடை செய்வதை தனது தர்மமாக ஏற்றுக் கொண்டு, அதை விடாமல் காப்பாற்றி வந்ததால், அவளுக்கு இவ்வளவு பெரிய சிறப்பு வந்தது.

தன்னுடைய தர்மத்தை விடாமல் காப்பாற்றியதால் கிடைத்த மேன்மை இது.

‘தர்மத்தைப் பற்றி எனக்கு உபதேசம் செய்’ என்று அந்தப் பெண்மணியிடம் முனிவர் கேட்கிறார்.

அவளோ, ‘நீங்கள் என்னிடம் கேட்டுப் பயனில்லை. தர்மவியாதனிடம் சென்று கேளுங்கள்’ என்று சொல்கிறாள்.

முனிவரும் தர்மவியாதன் யார், எங்கே இருக்கிறான் என்று விசாரித்துத் தேடிச் சென்று, அவனை அடைகிறார். பார்த்தால், அவன் ஒரு கசாப்புக் கடைக்காரன். அவனிடம் முனிவர், தர்மத்தைப் பற்றிய உபதேசத்தைக் கேட்டுக் கொண்டு, ‘உனக்கு எப்படி இந்த சக்தி வந்தது’ என்று கேட்கிறார்.

அவன் ‘என் தாய் தந்தையருக்கு நான் விடாமல் சிச்ருஷை (பணிவிடை) செய்து வருகிறேன். இந்த தர்மத்தை தொடர்ந்து மனமாரக் காப்பாற்றி வந்ததால், எனக்குக் கிடைத்த உயர்வு இது’ என்று சொல்கிறான்.

பெற்றோருக்கு பணிவிடை செய்வதை தனது கடமையாக ஏற்றிருந்தான் அவன். அது அவனுடைய தர்மமாகியது.

இப்படி தர்மம் என்பதில் பலவித அம்சங்கள் இருக்கின்றன.



தர்மம் – 5 – சோ
எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள் – 41

சென்ற இதழ் தொடர்ச்சி...

கேள்வி : ராமர், ஸீதையை நடத்திய விதம், எந்த தர்மத்தில் அடங்கும்? சரியான அதர்மம் இல்லையா அது?

சோ : ராமர், ஸீதையை நடத்திய விதம் தர்மமா, அதர்மமா? என்ற கேள்வி, அன்றிலிருந்து இன்று வரை விவாதிக்கப்பட்டு வருகிறது. நெருப்பிலே விழச் செய்து, அதன் பிறகும் யாரோ சொன்னதற்காக ஊரை விட்டே விரட்டி, இறுதியில் வால்மீகி முனிவரே வந்து ‘இவள் புனிதமானவள்’ என்று கூறிய பிறகும், ‘சபையினருக்காக ஒருமுறை உன்னுடைய புனிதத் தன்மையை நிரூபித்து விடு’ என்று ராமர் சொல்கிறார். அப்போதுதான் ஸீதை பூமிக்குள்ளே சென்று விடுகிறாள்.

ராமருடைய இல்லற தர்மம் என்று பார்த்தால், அவர் செய்தது அதர்மம்தான், அதில் சந்தேகமே கிடையாது. ஒரு மனைவியை இவ்வளவு கொடூரமாக நடத்தியதை தர்மம் என்று ஏற்க முடியாது – இதை ‘இல்லற தர்மம்’ என்று பார்க்கும்போது.

ஆனால் இதையே ‘ராஜ தர்மம்’ என்று அணுகினால், அது மிகவும் சிறப்பு வாய்ந்த செயலாகத் தெரிகிறது. சீஸரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும். மன்னனைப் பற்றி இப்படி ஒரு சந்தேகம் வந்து விட்டால், அதற்குப் பிறகு அந்த ராஜாங்கத்திற்கு மரியாதை கிடையாது. அந்த ஆட்சியின் அதிகாரம் எடுபடாது.

அதனால் அப்படிப்பட்ட ஒரு சிறிய சந்தேகம் கூட ஆட்சியைப் பற்றி இருக்கக் கூடாது என்பதற்காகத்தான், ஸீதை வெளியே அனுப்பப்பட்டாள். அங்கே ராஜ தர்மம் மேலோங்கி நின்றது.

இப்படி முரண்பாடாகத் தெரிகிற பல விளக்கங்கள் தர்மத்திற்கு உண்டு.

இப்போது யுத்தம் நடத்துகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள் – அது தர்மமா, அதர்மமா? ஆயிரக்கணக்கான பேரைக் கொல்கிறோம். சாத்திரத்தில் ‘அஹிம்ஸா பரமோ தர்ம:’ என்று கூறப்பட்டிருக்கிறது.

எல்லா தர்மங்களைக் காட்டிலும், உயர்ந்த தர்மம் அஹிம்ஸை. ஆனால் யுத்தம் என்றாலே ஹிம்ஸைதான். ஹிம்ஸை இல்லாத யுத்தமே கிடையாது. அது தர்மமா, அதர்மமா? நாட்டைக் காப்பாற்ற ஓர் அரசன் மேற்கொள்கிற யுத்தம் ராஜ தர்மம். ஆகையால் அது தர்மமே.

கேள்வி : தர்மம் என்பது இப்படி ஒரு சிக்கலான விஷயமாக இருக்கிறதே! என் தர்மம் ஒன்று, உங்கள் தர்மம் ஒன்று என்ற நிலை பல நேரங்களில் வரும் போல இருக்கிறதே!

சோ : வரலாம். அப்படி வரும்போது, சிக்கல் எழத்தான் செய்யும். ஒரு விளக்கம் இங்கே குறிப்பிடத்தக்கது:

ந தர்மா அதர்மௌ சரதி ஆவம் ஸ்வ இதி
ந தேவ கந்தர்வோ ந பித்ருபி:
இத்யாசக்ஷதேயம் தர்மோ அயம் அதர்ம இதி
யத்யார்யா க்ரியமாணம் ப்ரசம்ஸந்தி ஸதர்மோ
யத்தர்ஹந்தே ஸ அதர்ம:
இது ‘ஆபஸ்தம்ப சூத்திரத்தில்’ வருவது.
ஆபஸ்தம்ப சூத்திரம் சொல்வது –

தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்



தர்மம் – சோ – 6
எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள் - 42

சென்ற இதழ் தொடர்ச்சி...

ஆபஸ்தம்ப சூத்திரம் சொல்வது – ‘நான்தான் தர்மம், இதோ நான்தான் அதர்மம் என்று அவை இரண்டும் தங்களை அடையாளம் காட்டிக் கொண்டு நம் முன்னே வந்து அலைவதில்லை; தேவர்களோ, கந்தர்வர்களோ, பித்ருக்களோ தோன்றி இது தர்மம், இது அதர்மம் என்று கூறுவதில்லை. பெரியவர்கள் எதை ஏற்கிறார்களோ, அது தர்மம். அவர்கள் எதை நிராகரிக்கிறார்களோ, அது அதர்மம்’.

இதில் நமக்கென்ன பிரச்சனை என்றால் – நம்மிடையே பெரியவர்கள் யார் என்பதே நமக்குப் புரிவதில்லை. இன்றைய சமூகத்தில் பெரியவர்களைக் காணோம்.

ஒருவனைக் கொலை செய்வது என்பது கூடாது. அது அதர்மம். அதுவும் ஓர் ஆச்சார்யனை, அதாவது குருவாக இருந்தவரைக் கொலை செய்வது என்பது மிகப் பெரிய பாதகம். இதற்கு தண்டனை உண்டு என்பது மட்டுமல்ல, அந்த பாவத்திற்கு பிராயச்சித்தம் கிடையாது. அதிலிருந்து விமோசனம் கிடையாது. வயோதிகர்களைக் கொல்லக் கூடாது.

இவையெல்லாம் அதர்மமான காரியங்கள். ஆனால் இந்த விதிமுறைக்கு விதிவிலக்கும் இருக்கிறது. அது ‘மனுஸ்ம்ருதி’யில் கூறப்பட்டிருக்கிறது.

குரும்வா பாலவ்ருத்தௌ வா
ப்ராம்ஹணம் வா பஹுச்ருதம்
ஆததாயினமாயாந்தம்
ஹன்யாத் ஏவ அவிசாரயன்

‘குருவாக இருந்தாலும் சரி, இளைஞனாக இருந்தாலும் சரி, வயோதிகனாக இருந்தாலும் சரி, நன்றாக வேதங்களை ஓதிய பிராமணனாக இருந்தாலும் சரி, அவன் கெட்ட நோக்கத்துடன் எதிர்த்து வந்தால், சிறிதும் கவலைப்படாமல் அவனைக் கொன்று விடு’.

– இவ்வாறு மனுஸ்ம்ருதி கூறுகிறது. இவ்வாறாக கொலை செய்யக் கூடாது என்பதற்கு, அங்கே விதிவிலக்கு கிடைக்கிறது. அந்த மாதிரி கொலை, ‘அதர்மம்’ ஆகாது!

இப்படி பல நேரங்களுக்குரிய தர்மம் எது என்று கூறப்பட்டுள்ளதையும், அவற்றிற்கான விதிவிலக்குகளையும், பார்க்கும்போது ஒன்று தெளிவாகிறது. எது ‘லார்ஜர் குட்’ – ஜன சமூகத்திற்கு எது நல்லதோ, நிறைய மனிதர்களுக்கு எது நல்லதோ – அதுதான் இறுதியில் தர்மமாகும்.

என்னுடைய தர்மம் என்று ஒன்றை நான் சொல்லிக் கொண்டு, சமூகத்திற்கே அதனால் இடைஞ்சல் வருகிற மாதிரி நான் நடந்து கொண்டால், அது அதர்மமாகி விடும்.

இப்படி லார்ஜர் குட் – பெருமளவில் நன்மை – என்பதன் அடிப்படையில்தான் ‘விதுர நீதி’யில் ஓர் அறிவுரை கூறப்பட்டிருக்கிறது.

த்யஜேத் குலார்த்தே புருஷம்
க்ராமஸ்யார்த்தே குலம் த்யஜேத்
க்ராமம் ஜனபதாஸ்யார்த்தே
ஆத்மார்த்தே ப்ருத்வீம் த்யஜேத். 



தர்மம் – 7 – சோ
எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள் – 43

சென்ற இதழ் தொடர்ச்சி...

விதுர நீதி சொல்வது –

‘ஒரு குடும்பம் அல்லது குலத்திற்காக ஒரு மனிதனை தியாகம் செய்து விடலாம்; ஒரு கிராமத்திற்காக ஒரு குலத்தை தியாகம் செய்யலாம்; நாட்டிற்காக ஒரு கிராமத்தை தியாகம் செய்யலாம்; தனக்காக உலகத்தையே தியாகம் செய்யலாம்’.

தனக்காக என்றால் தன் ஆத்மாவிற்காக. நீ கடைத்தேற வேண்டும் என்றால், உலகத்தையே தியாகம் செய்து விட நீ தயாராக இருக்க வேண்டும்.

இதோடு இணைந்தவாறே இன்னொரு தத்துவத்தையும் பார்க்க வேண்டும். இப்படி பெருவாரியான நன்மை என்பது ஓர் அம்சம்.

மற்றொரு அம்சம் ‘ஸ்வதர்மம்’. பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மாவினால் மிகவும் வலியுறுத்தப்படுவது இந்த ஸ்வதர்மம். ஸ்வதர்மம் என்றால் உடனே அது ஒரு ஜாதிக்குரிய தர்மம் என்றோ, அது ஒரு குலத்திற்கான தர்மம் என்றோ, அது ஒரு வர்ணத்திற்கான தர்மம் என்றோ எடுத்துக் கொண்டு விடக் கூடாது.

கேள்வி : பின் ஸ்வதர்மம் – தன்னுடைய தர்மம் – என்றால் என்ன? அதற்கு என்ன விளக்கம் கூறப்பட்டிருக்கிறது?

சோ : குல தர்மம், வர்ண தர்மம் இவையெல்லாம் வேறு இடங்களில், வேறு வகையில் கூறப்படுகின்றன. ஆகையால், ஸ்வதர்மம் என்பது இவற்றிலிருந்து மாறுபட்டது. ஒரு மனிதனின் மனசாட்சி, அவனிடம் என்ன கூறுகிறதோ, அதுதான் ஸ்வதர்மம் என்று கூறிவிடலாம்.

ஆனால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாமல், நமக்கு நாமே பொய் சொல்லிக் கொள்ளாமல், ஒரு விஷயத்தை ஆராயும்போது, இதுதான் சரி என்று நமக்கு எது படுகிறதோ அதுதான் நமது தர்மம். அதுதான் ஸ்வதர்மம். இதை நேர்மையாக நிச்சயித்துக் கொள்ள ஒரு மனிதன் முற்படுகிறபோதுதான், தனி மனிதனுடைய தீர்மானத்திற்கு முக்கியத்துவம் கிடைக்கிறது.

மொரார்ஜி ஒருமுறை என்னிடம் கூறினார்: “எந்த விஷயத்தையுமே முழுமையாக, நன்றாக ஆலோசனை செய்து பார். உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாமல், அந்த ஆராய்ச்சி அமைய வேண்டும். அப்படி ஆராய்ந்த பின் இதுதான் சரி என்று உன் மனதிற்கு எது படுகிறதோ, அதைச் செய். உலகமே எதிர்த்தாலும் அதுபற்றிக் கவலைப்படாதே” என்றார்.

நான் அறிந்த வரையில் இதுதான் ஸ்வதர்மம். நாம் நியாயத்தைத்தான் செய்கிறோம் – இதனால் பெருவாரியான நன்மைதான் விளையும் – நாம் நமது மனசாட்சிக்கு விரோதமாக நடந்து கொள்ளவில்லை – என்று எந்த அணுகுமுறை நமக்கு உணர்வூட்டுகிறதோ, அந்த அணுகுமுறைதான் ஸ்வதர்மம். கெட்ட நோக்கம் இருந்தால், அது தர்மமாகாது. சகுனி சூதாடினான். சூதாடுவது கேவலமான விஷயம். சாஸ்திர விரோதமானது. தர்மபுத்திரர் இதைச் சுட்டிக் காட்டினார்.

தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

(தொடரும்)