Tuesday, May 16, 2017

தர்மத்தின் சாரம்

பிராமணன் வேறு, தமிழன் வேறா?



Saturday, February 25, 2017

சோ - பெயர்க்காரணம்

எங்க அம்மா ராஜலட்சுமி. எல்லோரும் "ராஜம்மா' என்றுதான் கூப்பிடுவோம். அவரை மாதிரி ஒரு பொறுமைசாலியைப் பார்க்க முடியாது. அந்த அளவுக்குப் பொறுமை.
தாய்வழிப் பாட்டியும் ஆச்சாரமா அத்தனை வேலையையும் தானே இழுத்துப் போட்டுக்கொண்டு சர்வசாதாரணமாகச் செய்வார். அவர் அதிர்ந்து பேசி நான் பார்த்தது இல்லை. அந்தக் காலப் பெண்களில் பலர் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கென்றே அவதாரம் எடுத்த மாதிரி இருந்தார்கள். அப்படித்தான் எங்க அம்மாவும் இருந்தார். எதையும் சட்டென்று கிரகித்து கொள்கிற கற்பூர புத்தி. சாமியார்களையோ, ஜோதிடர்களையோ நம்ப மாட்டார். சந்நியாசிகளில் அவர்கள் நம்பி மதித்தது மகா பெரியவாளை மட்டும்தான்.
நான் எப்பேர்ப்பட்ட தப்புப் பண்ணினாலும் "ஏன்டா... இப்படி முட்டாளா இருக்கே'' என்பதைத் தாண்டி எதையும் பேச மாட்டார். அதுதான் அவர்களுடைய அதிகபட்ச கண்டிப்பு.
அவர் எனக்கு வைத்த பெயர்தான் "சோ''. அதற்குப் பின்னாடி ஒரு காரணம் இருக்கிறது. ராஜராஜ சோழனுக்கு ஒருசமயம் பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அதிலிருந்து தப்பித்து கோயிலுக்கு அவர் ஓடினார். ஓடினபோது முன்னால் இருந்த விநாயகர் சோழனிடம், "நீ பின் வழியா உள்ளே ஓடிப்போயிடு. நான் பிரம்மஹத்தி வந்தா பிடிச்சு வச்சிக்கிறேன்'' என்று சொல்லி விட்டார். அது சோழனைப் பிடித்த பிரம்மஹத்தி.
அதை நினைவில் வைத்து எங்க அம்மா என்னை "சோழன் பிரம்மஹத்தி' என்று கூப்பிடுவார்கள். அப்படிக் கூப்பிடுற அளவுக்கு அப்போது சேட்டை, வம்பு, தொந்தரவு எல்லாம் பண்ணியிருக்கிறேன் போலிருக்கிறது...
"சோழன் பிரம்மஹத்தி' என்று முதலில் கூப்பிட்டுக்கொண்டு இருந்தவர்கள் அதைச் சுருக்கி "சோழன்' என்று கூப்பிட்டார்கள்.
பிறகு "சோழா.. சோழா..'' என்று கூப்பிட்டுப் பிறகு அது இன்னும் சுருங்கி "சோ'' என்றாகிவிட்டது!
அப்புறம் மற்றவர்களும் அப்படியே கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். அப்படி எனக்கு வந்த பெயர் "சோ''. அப்ப, எங்க அம்மா வைத்த அந்தச் சுருக்கமான பெயர்தான் நான் பிரபலம் ஆவதற்கு மிகவும் உதவியது என்று சொல்ல வேண்டும்!
இப்படிப் பலருக்கு நான் "சோ' ஆகிவிட்டாலும் எங்க தாத்தா அருணாசல அய்யர் மட்டும் என்னை, "டேய்.. ராமஸ்வாமி'' என்றுதான் கூப்பிடுவார். என்னுடைய தம்பி அம்பியையும் "ராஜகோபால்' என்று முழுப்பெயர் சொல்லித்தான் கூப்பிடுவார். அது அவருடைய வழக்கம்.
என்னுடைய தம்பிக்கு "அம்பி' என்று எங்க அப்பா பட்டப்பெயர் வைத்த மாதிரி என்னுடைய சகோதரி விஜயாவுக்கு "விக்டர்'' என்று பெயர் வைத்து விட்டார். "அட்வகேட்'', "பொயட்'', "கோர்ட் ஃபீஸ்'' - இப்படியெல்லாம் எங்க உறவுக்காரர்களுக்கு அவர்களுக்கு ஏற்ற மாதிரி அவர் பட்டப் பெயர்கள் வைத்திருந்தார்.
எனக்குச் "சோ' என்று பெயர் சூட்டிய எங்க அம்மா கடைசிவரை நான் சினிமாவில் நடிப்பதை ஏற்றுக்கொள்ளவே இல்லை. அதனால் நான் நடித்த சினிமாக்கள் எதையும் பார்க்க மாட்டார்.
நான் நாடகங்களில் நடிப்பதை முதலில் விரும்பாவிட்டாலும் பிறகு என்னுடைய நாடகங்களுக்கு வந்து பார்த்திருக்கிறார்.
எனக்கு முதல் சினிமா வாய்ப்பு வந்த சமயம். அப்போது மிகவும் பிரபலமாக இருந்த இயக்குநர் பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி கதாநாயகனாக நடித்த
"பார் மகளே பார்' படத்தில் நடிக்க என்னை அழைத்திருந்தார்கள்.
அப்பாவிடம் சொன்னேன். அவர் படு ஜோவியல். "நல்லா போய்ப் பண்றா... ஜமாய்டா'' என்று கை காட்டி விட்டார். மற்ற உறவினர்களும் வரவேற்றார்கள்.
ஆனால் அம்மா "நடிக்கக் கூடாது'' என்று மறுத்துவிட்டார்!
"இவ சம்மதிக்கல்லைன்னா விடுடா.. அவளுக்கு வயிற்றெரிச்சல். அதனால சொல்றா..'' என்று அப்பா எனக்கு சமாதானம் சொன்னாலும் சினிமாவில் நான் நடிப்பதை அம்மா விரும்பவே இல்லை!
••••••••••••••••••••••••
பிரபல நடிகர் வி.கே.ஆர் (வி.கே.ராமசாமி) பயங்கர ரேஸ் பிரியர். ஒருமுறை ரேஸில் அவருடைய குதிரை ஜெயித்துவிட்டது. அதற்காக "கப்' வாங்கப் போயிருக்கிறார். "கப்'பை வழங்கியவர் ஜெமினி எஸ்.எஸ். வாசன்.
கப்பைக் கொடுத்துவிட்டு, "நீதானே ராமசாமி. நாளைக்கு வந்து என்னை ஸ்டுடியோவில பாரு'' என்று சொல்லியிருக்கிறார்.
வி.கே.ஆர். மறுநாள் சென்றபோது வாசன் சொல்லியிருக்கிறார், "இந்தக் குதிரையை வித்திடு. இனி ரேஸ் பக்கம் போகாதே. நான் ரேஸில் நிறையப் பணம் சம்பாதிச்சு படம் எடுத்திருக்கேன். அதுக்குப் பிறகு ரேஸுக்குப் போறதில்லை. அது எங்கோ உன்னை இழுத்து விட்டுடும். இதை இன்னைக்கோட நிறுத்திடு''.
அதைக் கேட்டதும் அன்றுடன் ரேஸுக்குப் போவதையே நிறுத்திவிட்டார் வி.கே.ஆர். அதை அவரே என்னிடம் சொல்லியிருக்கிறார்.
தன்னிடம் உள்ள தவறான பழக்கத்தை ஒருவர்
உரிமையுடன் கண்டித்துச் சொல்கிறபோது அதை ஏற்று நடக்கிற பெருந்தன்மை வி.கே.ஆரிடம் இருந்தது. அவரைப்போல் நல்ல எதிர்காலம் கொண்ட ஒரு நடிகர் பாழாகி விடக் கூடாது என்ற நல்ல எண்ணம் எஸ்.எஸ்.வாசனுக்கு இருந்தது.
எவ்வளவு அற்புதமான மனிதர்கள்!
"அனுபவத் தொடரில்' சோ.ராமசாமி

http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2017/feb/19/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-2651890.html