Thursday, November 22, 2012

தி.மு.க.வும் ஐ.நா. சபையும்... - 'துக்ளக்' சத்யா

தி.மு.க.வும் ஐ.நா. சபையும்... - 'துக்ளக்' சத்யா


[டெசோ தீர்மானங்களின் நகலை ஐ.நா. சபையில் கொடுத்து விட்டுத் திரும்பியுள்ள ஸ்டாலினுக்கும் டி.ஆர். பாலுவுக்கும் தி.மு.க. தரப்பில் வழங்கப்படுகிற பிரமாண்டமான வரவேற்புகள், பாராட்டுகளைக் காணும்போது, இலங்கைத் தமிழர் பிரச்சனையே தீர்ந்து விட்டது போன்ற உணர்வு, பலருக்கு ஏற்பட்டிருக்கக் கூடும். சும்மா மனு கொடுத்து விட்டுத் திரும்பியது ஒரு சாதனையா என்று அற்பத்தனமாகக் கேள்வி கேட்காமல், இந்த வெற்றி(!) குறித்து தி.மு.க. தலைவர்கள் எப்படி மகிழ்ந்திருப்பார்கள் என்று யோசித்துப் பார்த்து, அந்த ஆனந்த ஜோதியில் நாமும் இணைந்து கொள்வோமாக.] 

துரைமுருகன்: 
ஸ்டாலினையும் பாலுவையும் ஐ.நா. சபைக்கு அனுப்ப கலைஞர் முடிவு பண்ணப்பவே நான் நினைச்சேன் - இப்படி மனு கொடுத்துட்டு வெற்றியோட திரும்புவாங்கன்னு. அதே மாதிரி ஆயிடுச்சு. இப்பவே இலங்கைத் தமிழர்களின் பாதி பிரச்னை தீர்திருக்கும். அம்மையாருக்கு ஒரே பொறாமையா இருந்திருக்கும்.

அன்பழகன்:
அம்மையாரை விடுங்க. ராஜபக்சேவே இதை எதிர்பார்த்திருக்க மாட்டாரே! கழகம் ஆட்சியிலே இருந்தப்போ அடங்கி ஒடுங்கி இருந்த மாதிரி இப்பவும் இருந்திடுவோம்னு நினைச்சு ஏமார்ந்திருப்பாரு. இனிமே தமிழர்கள் விசயத்திலே வாலாட்ட மாட்டார். ஐ.நா. சபையிலே மனு கொடுக்கிறதுன்றது சாதாரண விஷயமா?

வீரமணி:
எதிர்க் கட்சி ஆன பிறகும் சூடு சொரணையில்லாம இருக்க முடியுமா? இந்த சமயத்தையும் விட்டுட்டா தமிழினத்தை கலைஞர் எப்பதான் காப்பாத்தறது? இந்த அதிரடி நடவடிக்கையைப் பார்த்து மத்திய அரசே கூட பயந்து போயிருக்கும். இதைத்தான் தமிழ் சமுதாயம் கலைஞர் கிட்டே எதிர்பார்க்குது.

ஆற்காடு வீராசாமி:
சரி, ஐ.நா. துணை பொதுச் செயலாளர் என்ன சொன்னார்? ஆரம்பத்திலேர்ந்து சொல்லுங்க.

ஸ்டாலின்:
வணக்கம் சொன்னோம். அவரும் வணக்கம் சொன்னார். பாலு வணக்கம் சொன்னதும், அவருக்கும் வணக்கம் சொன்னார்.

துரைமுருகன்:
அப்பாடா! அவ்வளவு செலவு பண்ணிட்டு ஐ.நா. போனது வீணாகலை.

ஆற்காடு வீராசாமி:
பின்னே, வணக்கம் சொல்லாம இருப்பாரா? கலைஞர் அனுப்பின ஆளுங்கன்னா ஒரு தனி மரியாதை கொடுத்துத்தானே ஆகணும்? ம்.. அப்புறம்?

ஸ்டாலின்:
டேக் யுவர் ஸீட்ன்னாரு.

பாலு:
சரின்னு உட்கார்ந்தோம். இலங்கைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக ஐ.நா. அதிகாரி முன் அமர்ந்த முதல் தமிழர்கள்ற பெருமை எங்களுக்குத்தான் கிடைச்சது.

அன்பழகன்:
அப்புறம்? கையிலே என்ன மனுன்னு கேட்டிருப்பாரே?

ஸ்டாலின்:
ஆமா. அவர் கேட்டதும் நான் கொடுத்தேன். நான் கொடுத்ததும் அவர் வாங்கிக்கிட்டாரு.

துரைமுருகன்:
ஐ.நா. அதிகாரிகள் எப்பவுமே அப்படித்தான். விரைந்து நடவடிக்கை எடுக்கிறவங்க.

கருணாநிதி:
மனுவிலே என் கையெழுத்தைப் பார்த்திட்டு, யார் கையெழுத்துன்னு கேட்டாரா?

பாலு:
நாங்களே சொன்னோம். இதே கையெழுத்திலேதான் பல படங்களுக்கு கலைஞர் வசனம் எழுதியிருக்காருன்னு சொன்னதும் அவர் ரொம்ப சந்தோஷப்பட்டு, தேங்யூன்னாரு.

கருணாநிதி:
நான் யாருடைய நன்றியையும் எதிர்பார்த்து எதையும் செய்கிறவன் அல்ல. அண்ணா என்னை அப்படி வளர்க்கலை. இருந்தாலும் 'கலைஞருக்கு ஐ.நா. துணைப் பொதுச் செயலாளர் நன்றி'ன்னு முரசொலியிலே இந்தச் செய்தியைப் போட்டுருவோம். மனுவைப் படிச்சுட்டு என்ன கேட்டார்?

ஸ்டாலின்:
எதுக்கு ரெண்டு தடவை டெசோ ஆரம்பிச்சீங்கன்னு கேட்டார். 'இனி டெசோவைத் தொடர்வதால் பயனில்லைன்னு சொல்லி முதல் டெசோவை முடிச்சோம். முடிச்ச பிறகும் பயனில்லைன்னு தெரிஞ்சதும், மறுபடியும் இன்னொரு டெசோவை ஆரம்பிச்சோம். இதனாலேயும் பயனில்லைன்னு புரிஞ்சுக்கற வரைக்கும் இந்த டெசோ தொடரும்'னு அவருக்கு உறுதியளிச்சேன்.

பாலு:
இலங்கைப் பிரச்சனைக்காக கலைஞர் 1956லேர்ந்து குரல் கொடுத்துட்டு வரார்னு நாங்க சொன்னதும் அவருக்கு ஒரே ஆச்சரியம். '56 வருஷமா நிறுத்தாம குரல் கொடுக்கிறது கின்னஸ்லே இடம் பெற வேண்டிய சாதனை. இந்த சாதனை தொடரணும்'னு வாழ்த்தினார். 

கருணாநிதி:
இலங்கைப் பிரச்னைக்காக 1976-லும் 1991-லும் இருமுறை ஆட்சியை இழந்தவன்தான் இந்த கருணாநிதின்னு சொன்னதுக்கு என்ன சொன்னார்?

வீரமணி:
சொல்றதுக்கு என்ன இருக்கிது? இலங்கைப் பிரச்னை தீவிரமடைய ஆரம்பிச்சதே 1980-களிலேதான். அதை முன்னாலேயே உணர்ந்து 1976-லேயே அதுக்காக ஆட்சியை தூக்கி எறிஞ்சிருக்காரேன்னு அதிர்ச்சி அடைஞ்சிருப்பார்.... அப்புறம்? ஐ.நா. மேற்பார்வையிலே பொது வாக்கெடுப்பு நடத்தணும்னு சொன்னீங்களா?

பாலு:
சொன்னோம். உரிய நடவடிக்கை எடுப்போம்னு சொன்னார். தேங்க்யூன்னு நான் சொன்னேன். ஸ்டாலினும் தேங்ஸ் சொன்னார். துணை பொதுச் செயலாளர் 'வெல்கம்'ன்னாரு.

ஆற்காடு வீராசாமி:
ஓ! பொது வாக்கெடுப்பை வரவேற்கிறதாவே சொல்லிட்டாரா? கழகம் இவ்வளவு பெரிய வெற்றியை ஈட்டிய விஷயம் ராஜபக்சேவுக்குத் தெரிஞ்சா அநேகமா தனி ஈழம் கொடுக்கிற முடிவுக்கே வந்துடுவாரு. இலங்கைப் பிரச்னையிலே கழகத்தின் நிலைப்பாடுகளையும், இதுவரை எடுத்த நடவடிக்கைகளையும், அவருக்கு விளக்கிச் சொன்னீங்களா?

பாலு:
ஊஹும். பாவமாயிருந்தது. பாத்தா நல்ல மனுஷனாயிருக்காரு, அவருக்கு எதுக்கு அதெல்லாம்னு விட்டுட்டோம். அவர் மட்டும் நம்ம கோரிக்கைகளை அலட்சியப்படுத்தட்டும், மவனே அப்ப எல்லாத்தையும் பட்டியல் போட்டு அடுத்த தடவை நானே படிச்சுக் காட்டிடறேன்.

ஸ்டாலின்:
ஆனா, முக்கியமா ஒரு விஷயத்தைச் சொல்லணும். எங்களைப் பார்த்ததும், எப்படி அன்பா வரவேற்றாரோ, அதே மாதிரி அன்போடுதான் வழியனுப்பினார். அந்த அளவுக்கு இலங்கைப் பிரச்னையிலே அக்கறை காட்டினார்.

அன்பழகன்:
ஆச்சரியமாயிருக்குதே. இலங்கைப் பிரச்னையிலே நம்மைவிட அதிக அக்கறையோட இருக்காங்க போல இருக்குதே.

துரைமுருகன்:
சிங்கள ராணுவத்தின் போர்க் குற்றம் பத்தி சொன்னீங்களா?

பாலு:
இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றங்களை விசாரிக்க உத்தரவிடும்படி இந்திய அரசு, இன்னும் ஐ.நா. சபையை வலியுறுத்தலை. அதனாலே, தன்னை வலியுறுத்தும்படி ஐ.நா.வே இந்திய அரசை வலியுறுத்தணும்னு கேட்டுக்கிட்டோம்.

துரைமுருகன்:
ஐ.நா. துணைப் பொதுச்செயலாளர் என்ன சொன்னார்?

பாலு:
தலையாட்டினார்.

ஆற்காடு வீராசாமி:
ஐ.நா. அதிகாரிகள் நம்மை மாதிரி இல்லை. எதையும் புரிஞ்சுகிட்டுத்தான் தலையாட்டுவாங்க.

ஸ்டாலின்:
லண்டன் பன்னாட்டுத் தமிழ் மாநாட்டுலேயும் இலங்கைத் தமிழர் நிலையை விளக்கிப் பேசினேன். நான் பேசி முடிச்சதும் அவுங்களுக்கெல்லாம் ஒரே சந்தோஷம்.

துரைமுருகன்:
பேசி முடிச்சதுக்கா?

ஸ்டாலின்:
ஊஹூம். எங்களுக்குத் தெரிஞ்ச விஷயமெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கேன்னு சொல்லி சந்தோஷப்பட்டாங்க. 'இலங்கையில் படுகொலைகள் நடந்தப்போ கழக ஆட்சியிலே இருந்தாலும், ஒவ்வொரு நாளும் எத்தனை படுகொலைகள் நடக்குதுங்கற கணக்கு கலைஞருக்கு வந்துட்டுத்தான் இருந்தது; அதை நினைச்சு மத்திய அரசுக்குத் தெரியாம கலைஞர் ரகசியமா கண்ணீர் விட்டுக் கதறிட்டுத்தான் இருந்தார்'னு விளக்கமா சொன்ன பிறகுதான் இலங்கைத்தமிழர் நலனுக்காக கழகம் இவ்வளவு நடவடிக்கை எடுத்திருக்குதுங்கற விஷயமே அவங்களுக்குப் புரிஞ்சுது.

பாலு:
எங்களைச் சந்தித்த இலங்கை தமிழர்கள் பலர், தி.மு.க. எம்.பி.க்களின் ராஜினாமா கடிதங்களை கலைஞர் வாங்கி, யாருக்கும் கொடுக்காம தானே பத்திரமா வெச்சுகிட்டதுக்காக நன்றி சொன்னாங்க. அவ்வளவு கஷ்டத்திலேயும் அந்த காமெடிதான் ஆறுதலா இருந்ததுன்னாங்க.

வீரமணி:
இலங்கை முகாம்களில் தமிழர்களின் அவல நிலைமையைப் பத்தி சொன்னீங்களா? 

ஸ்டாலின்:
சொன்னேனே. ஏரோப்ளேன்லே வரும் போது நான் பாலுகிட்டே சொன்னேன். ஆமான்னு பாலுவும் என் கிட்ட சொன்னாரு.

கருணாநிதி:
ரெண்டு பேரும் சேர்ந்து வேறே யார் கிட்டேயாவது சொன்னீங்களா?

ஸ்டாலின்:
அதான் உங்க கிட்டே சொல்றோமே.

கருணாநிதி:
சரி, விடுங்க. மனித உரிமை ஆணையத் தலைவர் கிட்டே ஏதாவது சொன்னீங்களா?

பாலு:
சொல்லாம இருப்போமா? அதுக்குத்தானே போனோம்? அவங்களுக்கும் வணக்கம் சொல்லி கை குலுக்கினோம். பதிலுக்கு அவங்களும் கை குலுக்கிப் புன்னகைச்சாங்க.

அன்பழகன்:
அதாவது இலங்கைத் தமிழர் நிலையை அவங்க கவனத்துக்கும் கொண்டு போயிட்டீங்கன்னு சொல்லுங்க. கடைசியா என்ன நடந்தது?

பாலு:
கடைசியா 'அப்ப நாங்க புறப்படறோம்'னு எழுந்து நின்னு சொன்னோம். அவங்களும் எழுந்து நின்னு 'சரி'ன்னாங்க.

கருணாநிதி:
வேறே ஒண்ணும் கேக்கலையா?

ஸ்டாலின்:
உங்களுக்கு என்னதான் வேணும்னு கேட்டாங்க. இந்த மனுவை வாங்கிக்கணும்னு கோரிக்கை வைச்சோம். உடனே மனுவை வாங்கிக்கிட்டு அந்தக் கோரிக்கையை நிறைவேத்திட்டாங்க.

அன்பழகன்:
எனக்கென்னவோ இந்த நடவடிக்கைகளாலே இலங்கைப் பிரச்னை தீருமான்னு சந்தேகமாத்தான் இருக்குது.

கருணாநிதி:
தீரலைன்னாலும் நல்லதுதான். ஸ்டாலினும் பாலுவும் ஐ.நா. சபையில் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்னு இன்னொரு மனு எழுதி, அடுத்த தடவை அழகிரியையும் கனிமொழியையும் ஐ.நா. சபைக்கு அனுப்பலாம். குடும்பப் பிரச்னையாவது கொஞ்சம் தீரும்.