Wednesday, August 29, 2012

RESERVATION IN PROMOTION - CHO

இந்த வார துக்ளக்கில் வெளியான சோ எழுதிய இட ஒதுக்கீடு குறித்த கட்டுரை:

"அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதிலும், எஸ் ஸி, எஸ் எஸ் டி., பிரிவினருக்க்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற உள்ளார்களாமே? " என்று தஞ்சாவூரில் இருந்து மூக்கையா ஒரு கேள்வி அனுப்பியுள்ளார். வேறு சில வாசகர்களும் இது பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது போன்ற விசயம், 2001 இல் பாராளுமன்றத்தில் பேசப்பட்டு, இரு சபைகளிலும் நிறைவேறி, அரசியல் சட்டத் திருத்தம் வந்தது. இரு சபைகளையும் சேர்ந்தவர்கள் ம்சோதாவை எதிர்க்கவில்லை; எதிர்த்து வாக்களித்த ஒரே உறுப்பினர் நான் தான்.

இப்போதும் என் அபிப்ராயத்தில் மாற்றமில்லை. அன்று நடந்ததை, இப்போது நினைவுகூர்ந்து பொருத்தமாக இருக்கும் என்ற எண்ணத்தில் 19-12-2001 துக்ளக் இதழில் பிரசுரமானதை வாசகர்களுக்கு நினைவுபடுத்துகிறேன். 

அரசு ஊழியத்தில் இருப்பவர்கள் ப்ரமோஷன்கள் மற்றும் சீனியாரிட்டி பெறுவதில் இட ஒதுக்கீடு கூடாது என்று சுப்ரீம் கோர்ட் ஒரு வழக்கில் தீர்ப்பளித்தது. இந்த மாதிரியான இட ஒதுக்கீடு, அரசியல் சட்டத்திற்கு முரணானது என்றும் அந்த தீர்ப்பு கூறியது; இதற்குப் பிறகும் இந்த இட ஒதுக்கீடு முறையை தொடர்வது என்றால், அரசியல் சட்டட்த்தை திருத்தியாக வேன்டும் என்ற நிலை தோன்றியது. அனைத்துக் கட்சிகளும் இப்படி அரசியல் சட்டம் திருத்தப்படுவதை ஆதரிக்கிற நிலை இருப்பதால், மத்திய அரசு இதற்கான அரசியல் சட்டத் திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. லோக் சபாவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த அரசியல் சட்டத் திருத்த மசோதா, அதன் பிறகு ராஜ்யசபைக்கு வந்தது.

சென்ற ஐந்தாம் தேதி ராஜ்ய சபையில் இது விவாதிக்கப்பட்டது. அனைத்து கட்சியினரும் மசோதாவை வரவேற்றுப் பேசினார்கள். எனக்கு சந்தர்ப்பம் கிட்டியது. நான் மசோதாவை எதிர்த்து பேசினேன். அந்தப் பேச்சின் சாரம்சம் இதோ:

" இது ஒரு விவேகமில்லாத நடவடிக்கை. தழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள முயல்வதற்கு இது உத‌வாது. அதிகார வர்க்கத்தின் நல்ல மனநிலைக்கும் இது உதவாது. பணிகளில் நியமனம் பெறுவதற்கு இட ஒதுக்கீடு இருப்பது புரிந்து கொள்ளக் கூடியதே. துரதிஷ்ட வசமாக சில நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டவர்கள் , நியமனங்களில் முன்னுரிமை பெறுவது அவர்களுக்குத் தரப்படுகிற சலுகை அல்ல. அவர்கள் பெறுகிற உரிமை. ஆனால் நியமனத்திற்கு பிறகு சீனியாரிட்டியை அடைவதிலும், ப்ரமோஷன்களைப் பெறுவதிலும் மற்றவர்கலுடன் போட்டியிடவே அவர்களை ஊக்குவிக்க வேண்டும். சீனியாரிட்டி என்பது பணியின் மூலமாக பெறவேண்டியதே தவிர, தரப்படுவது அல்ல. 

உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினரின் நிலையை உயர்த்த வேண்டும் என்று அரசு நினைத்தால்- அப்போது அதற்கான முயற்சியை ஆரம்பப் பள்ளியிலிருந்து தொடங்க வேண்டும். மிகச் சிறந்த கல்வி அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடி மக்கள்- ஆகியோரிடையே ஏழ்மை மலிந்து கிடப்பதால், அவர்கள் சிறிய வயதிளேயே வேலைக்கு போய் விடுகிறார்கள் அல்லது படிப்பை பாதியில் நிறுத்தி விடுகிறார்கள் அல்லது இருப்பதற்குள் மட்டமான பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். ஆகையால் மற்றவர்களோடு போட்டியிட அவர்கலுக்கு வழி செய்கிற வகையில், ஆரம்பப் பள்ளியிலிருந்து மிகச் சிறந்த கல்வியை அவர்கள் பெறுவதற்கான வழிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும். இப்படிச் செய்தால் அவர்களுக்குத் தன்னம்பிக்கையும் சுய மரியாதையும் வளரும்; நல்ல நிலையை எட்டிய முழுமையான திருப்தியும் அவர்களுக்கு ஏற்படும்.

மாறாக பிரமோஷன்களிலும் இட ஒதுக்கீடு என்பது போன்ற வழிமுறைகளினால் பயன் பெறுபவர்களிடையே அக்கறை இன்மையும, மிகச் சுலபமாக திருப்தி அடைந்து விடுகிற மன்ப்போக்கையும் வளர்த்து விடும். உண்மையில் பார்க்கப் போனால், அவர்கள் தகுதியைப் பெருவதற்கும், திறமையை வளர்த்துக் கொள்வதற்கும் இந்த மாதிரி வழிமுறைகள் தடங்கலாகவே இருக்கும் 

அது மட்டுமல்லாமல், அரசு ஊழியத்தில் உள்ளவர்களின் நம்பிக்கையையும் இது நாசம் செய்யும். கடுமையாக உழைக்கிற நேர்மையான ஊழியர், ஒரு குறிப்பிட்ட வகுப்பில் பிறக்கவில்லை என்ற காரணத்திற்காக ஓரம் கட்டப்படுகிற போது, அவருடைய தன்னம்பிக்கை எந்த அளவில் இருக்கும் ? அம்மாதிரியான ஊழியர்கள் தங்கள் பிறப்பினால் ஏற்படுகிற சுமையை, பணியிலிருந்து ஓய்வு பெறும் வரையில் தாங்கிக் கொள்ள வேண்டியதுதானா? இது முழுமையான அநீதி

நீதித் துறைக்கு காட்டப்பட வேண்டிய மரியாதை பற்றி நாம் பேசுகிறோம். அயோத்தி விவகாரம் என்றால், நீதித் துறையின் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும். ஆனால் இட ஒதுக்கீடு விவகாரம் என்றால், நீதித் துறையின் தீர்ப்பு குப்பையில் தூக்கி எறியப்பட வேண்டும். இதில் இருக்கிற நியாயத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அரசு பணிகளில் உள்ளவர்களின் நம்பிக்கையைக் குலைப்பதும், கடுமையாக உழைக்கக் கூடிய இளைஞர்கள் அரசு பணிக்குச் செல்ல விரும்பாத நிலையைத் தோற்றுவிப்பதுமான இந்த விவேகமற்ற நடவடிக்கை, யாருடைய பயனுக்காகக் கொண்டு வரப்படுகிறதோ, அவர்களுடைய அக்கறையின்மையைத்தான் வளர்க்கும். ஆகையால் இந்த மசோதாவை எதிர்க்கிறேன்".

நான் ஒருவன் இப்படி இதை எதிர்க்க, மற்ற எல்லோரும் ஆதரிக்க விவாதம் முடிவு பெற்று, ஓட்டு எடுப்பு நடந்தது. மசோதாவுக்கு ஆதரவு- 165; எதிர்ப்பு- 1. அந்த ஒன்று நான் தான். மசோதா நிறைவேறியது.

பின்னர் வெளியே வந்த பிறகு, பல்வேறு கட்சிகளை சேர்ந்த சில எம் பி க்கள் எனக்குப் பாராட்டுத் தெரிவித்தனர். "நாங்கள் எல்லாம் இம்மாதிரி பேச முடியாது... எங்கள் சார்பில் நீ பேசியதாக எடுத்துக் கொண்டு உனக்கு நன்றி சொல்கிறோம்" என்றெல்லாம் அவர்கள் கூறினார்கள்.

என்னைப் பொறுத்த வரையில் என்னுடைய எண்ணத்தை நான் சொன்னேன். ஜனநாயகத்தில் எண்ணிக்கைக்கு இருக்கிற வலிமை எண்ணத்திற்கு கிடையாது என்பதால் அது படு தோல்வியுற்றது. சுபம்