காஷ்மீரும் நேருவும் — ஆர். நடராஜன்
பொய்களுக்குப் பூசப்படும் முலாம் வெகுகாலம் தாக்குப் பிடிப்பதில்லை. காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவின் முதல் பிரதமரான நேரு தவறு செய்தார் என்ற உண்மையை, காங்கிரஸ்காரர்கள் பாடுபட்டு இத்தனை வருடங்கள் மூடி மறைத் திருந்தாலும், மும்பையிலிருந்து வெளிவரும் அவர்களது ‘காங்கிரஸ் தர்ஷன்’ என்ற கட்சிப் பத்திரிகையே இப்போது உண்மையை உடைத்து விட்டது. இதற்காக அந்தப் பத் திரிகையின் ஆசிரியர் நீக்கப்பட்டார்.
இந்திரா காந்தியின் மருமகள் என்று சோனியா சொல்லிக் கொள்வது சரி தான். இவரது மாமியார் இப்படித்தான் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த சலபதி ராவ் என்ற அறிஞரை, ஒரு விழாவின் போது நீக்கினார். பரம்பரையாகக் கட்சித் தலைமை, பரம்பரையாக கட்சிப் பத்திரிகையில் தலையீடு, பரம்பரையாக ஊழியர்களைக் கழற்றி விடுதல் ஆகியவை காங்கிரஸ் கட்சியின் மாண்புகளில் சில.
காங்கிரஸ் பத்திரிகை நேருவைப் பற்றித் தவறான தகவலைக் கொடுத்து விட்டது என்பவர்களுக்கு, வரலாறு தெரியாது. காஷ்மீர் மகாராஜா ஹரிசிங் இந்தியாவுடன் இணையத் தயங்கிய போது, உள்துறை மந்திரியாக இருந்த வல்லபாய் படேல், குருஜி கோல்வால்கரைத் தூதுவராக அனுப்பி மகாராஜாவின் சம்மதத்தைப் பெற்றார். மற்ற மாநிலங்களை இந்திய யூனியனுடன் இணைக்க படேல் பாடுபட்டார். காஷ்மீர் பொறுப்பை நேரு ஏற்றுக் கொண்டார். அதில் படேலையும், அம்பேத்கரையும் ஒதுக்கி விட்ட நேருவுக்கு ஏதோ உள்நோக்கம் இருந்திருக்கிறது. அரசியல் சாஸனம் உறுதி செய்யப்படும் முக்கியமான கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், அவர் வெளிநாட்டுக்குச் சென்றார்.
தான் பிரதமராவதற்காகப்பாகிஸ்தான் உருவாகப் போராடிய ஜின்னாவைப் போலவே, ஷேக் அப்துல்லாவும் தான் காஷ்மீர் பிரதமராவதற்காக (அப்போதைய காஷ்மீர் முதல்வர் பதவியின் பெயர் பிரதமர்), காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து கேட்டார். சட்டத்துறை மந்திரியான அம்பேத்கர், அதற்கு உடன்படவில்லை. ஆனால், நேரு மறைமுகமாக ஆதரவு தந்தார். இதற்கு மவுண்ட்பேட்டன் பிரபுவும் உடந்தை என்பதை, வி.சங்கர் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எழுதிய புத்தகத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
தன்னைச் சந்திக்க வந்த ஷேக் அப்துல்லாவிடம், ‘இந்தியா, காஷ்மீரைப் பாதுகாக்க வேண்டும்; பிற மாநில மக்கள் பெறும் சலுகைகளும், உரிமைகளும் காஷ்மீருக்கு வேண்டும் என்று கேட்கும் நீங்கள், அங்கே பிற மாநிலத்தவருக்கு எந்த உரிமையும் இருக்கக் கூடாது என்கிறீர்கள். இதை நான் ஏற்க முடியாது’ என்று அம்பேத்கர் கறாராகச் சொன்னார்.
அம்பேத்கரின் இந்த நிலைப்பாட்டை ஒதுக்க நினைத்த நேரு, அரசியல் சாஸனத்தில் காஷ்மீரின் உரிமைகள், சலுகைகள் பற்றிய வாசகங்களைத் தன் நண்பரான கோபாலசாமி ஐயங்கார் எழுதட்டும் என்றுசொல்லி விட்டார். ஐயங்கார் காஷ் மீரின் முன்னாள் மந்திரி. அவர் தன் பூர்வாசிரம விசுவாசத்தைக் காட்டினார். ஒரு காலத்தில் ஷேக் அப்துல்லாவுக்கு வக்கீலாக இருந்தவர்நேரு. அவரும் தன் கட்சிக்காரருக்கு விசுவாசத்தைக் காட்டினார். இதனால் பாதுகாப்பு, அயலுறவு, நாணயப் புழக்கம், தகவல்தொடர்பு தவிர, காஷ்மீருக்கு மத்திய அரசுடன் வேறு நிர்வாக நிர்பந்தம் ஏதுமில்லை.
ஒரு தனி நாட்டின் அந்தஸ்த்தைப் பெற்றுள்ள காஷ்மீரில் பிற மாநிலத்தவர்கள் சொத்து வாங்க முடியாது.
நேருவைப் பற்றிக் காங்கிரஸ் விசுவாசிகள் மகிமைமிக்க புராணங்களை எழுதியிருந்தாலும், ஒரு உண்மையைப் பலர் கண்டு கொண்டதில்லை. தன் பதவிக் காலம் நெடுகத் தனக்குப் பிடித்தமானவர்களுக்குக் கொடுத்த மதிப்பை, தார்மீக நியதிகளுக்கும் அரசியல் நெறிமுறைகளுக்கும் நேரு கொடுக்கவில்லை.
நேரு செய்த அரசியல் குழப்பத்தின் விளைவுகாஷ்மீர், அவர் காலத்திய வெளியுறவு, பாதுகாப்புத் துறையின் மெத்தனம் ஆகியவை சீனாவுடனான போர் ஏற்படக் காரணமாக அமைந்தன. தீர்க்கதரிசனமில்லாத பொருளாதாரக் கொள்கையின் விளைவினால் தொழில்துறை மந்தமானது. தலைவர் செய்யும் தவறுகளுக்கு, தேசம் துன்பத்தை அனுபவிக்கும் என்பதற்குச் சரியான உதாரணம் நேரு.
— ஆர். நடராஜன் (Thuglak)