Monday, October 1, 2012

THUGLAK THALAIYANGAM

முடியட்டும் கூடன்குளம் கூத்து 

அமெரிக்காவில் 65 அணுமின் நிலையங்கள் உள்ளன; இவற்றுக்காக 104 வர்த்தக அனுமதிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அங்கு, அணுமின் நிலையங்களுக்கு பத்து கிலோ மீட்டரை விட அருகில் வசித்து வருகிற மக்களின் எண்ணிக்கை 30 லட்சம்.

சரி; அமெரிக்கா என்றாலே நம் நாட்டவருக்கு ஒரு அலர்ஜி; அதனால் அந்நாட்டுக் கணக்கை விடுவோம். உலகிலேயே அதிக அளவில் அணுமின் உற்பத்தியைப்
 பயன்படுத்துகிற நாடு ஃப்ரான்ஸ்; அந்நாட்டின் மின்சாரத் தேவையில் 77 சதவிகிதத்தை அணுமின் நிலையங்கள்தான் பூர்த்தி செய்கின்றன. பெல்ஜியத்தில் 54 சதவிகிதம் அணுமின் உற்பத்தி. ஸ்வீடனில் 40 சதவிகிதம்; ஸ்விட்சர்லாந்தில் 41 சதவிகிதம். இவையெல்லாம் சுற்றுச்சூழல் முதற்கொண்டு, மனித உரிமை வரை பல அடிப்படை விஷயங்களில் மிகவும் அக்கறை செலுத்துகிற நாடுகள். தென் கொரியாவில் 34 சதவிகிதம் அணுமின் உற்பத்தி. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

சரி. இவை எல்லாமே மேற்கத்திய நாடுகள்; அதனால் நல்ல எண்ணம் கொண்ட நாடுகள் அல்ல என்றே வைத்துக் கொண்டு, நம் நாட்டின் மீது மிகவும் ‘நல்லெண்ணம்’ கொண்ட சீனாவைப் பார்ப்போம். அங்கே 40 அணுமின் நிலையங்கள் செயல்படுகின்றன; 51 அணுமின் நிலையங்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் இப்போது 19 அணுமின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. ராஜஸ்தானில் 6, மஹாராஷ்டிரத்தில் 4, குஜராத்தில் 2, கர்நாடகத்தில் 3, தமிழ்நாட்டில் (கல்பாக்கம்) 2, உத்திரப் பிரதேசம் 2.

இது தவிர, இந்தியாவில் இப்போது கர்நாடகத்தில் ஒன்றும், ராஜஸ்தானில் இரண்டும், குஜராத்தில் இரண்டும், மஹாராஷ்டிரத்தில் நான்கும் நிறுவப்பட இருக்கின்றன; இவற்றுடன் கூடன்குளமும் ஒன்று.

உண்மை நிலைமை இப்படியிருக்க, கூடன்குளத்தில் மட்டும் இவ்வளவு ஆர்ப்பாட்டம், அமர்க்களம் ஏன்? கல்பாக்க அணுமின் நிலையம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இயங்கி வருகிறதே? அதனால் மீனோ, மானோ, மனிதனோ பாதிக்கப்படவில்லையே! பல லட்சம் மக்களைக் கொண்ட சென்னைக்கு அருகில் கல்பாக்கம் இருப்பதால், சென்னைக்கு என்ன கேடு வந்தது? கல்பாக்கத்திலேயே பலர் வசிக்கிறார்களே! குழந்தைகள் கூட அங்கேயே இருந்து பள்ளிக்குச் செல்கின்றனவே?

அங்கு ஏற்படாத ஆபத்து, கூடன்குளத்தில் மட்டும் ஏற்படுமா? இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகவும் திறமையான பாதுகாப்பு ஏற்பாடுகள், கூடன்குளத்தில் செய்யப்பட்டிருக்கின்றன என்று விஞ்ஞானிகள் கூறினார்களே?

இப்படியெல்லாம் இருக்க, அங்கே ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்றால் – அதற்கு ஏதோ ஒரு கெட்ட நோக்கம் கொண்ட பின்னணி இருக்கிறது என்றுதான் அர்த்தம். பற்பல நிபுணர்கள் கூறுவதை விட, ஒரு உதயகுமார் கூறுவதுதான் சத்தியம் என்று சில ஆயிரம் மக்கள் எப்படி ஏற்கிறார்கள்? அங்கே ஆர்ப்பாட்டம் மும்முரமாகிறபோது, மாதா கோவில் மணி ஓயாமல் ஒலிப்பது ஏன்?

இதில் ஏதோ சதி இருக்கிறது. இதை முறியடித்து, அணுமின் உற்பத்தியைத் தொடங்குவதற்கு ஆவன செய்வது, மத்திய-மாநில அரசுகளின் கடமை. இப்போது போலீஸார் அராஜகம் பண்ணியதாகக் கூறியிருப்பது பொய்; போலீஸாருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் விளையாடுகிறார்கள். விடுதலைப் புலிகளைப் போல பெண்களையும், குழந்தைகளையும் முன்னிறுத்தி, போலீஸாருடன் மோதுகிறார்கள். அவர்களை ஒடுக்க வேண்டும். ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், அது ஆர்ப்பாட்டத் தலைமையின் பொறுப்பே தவிர, அரசின் தவறு அல்ல.

‘பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தை’ என்கிறார்கள். தமிழக முதல்வர் இவர்களுடைய ‘அச்சங்களை’யும் ‘கவலைகளை’யும் போக்குவதற்காக, இவர்களிடம் பேச்சு நடத்தியாகி விட்டது; பல முயற்சிகளை எடுத்தாகி விட்டது. இனி அவரும் பொறுமை காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

ஆர்ப்பாட்டக்காரர்கள், அணுமின் நிலையத்தையே பாதிக்கிற வகையில் எதுவும் செய்ய மாட்டார்கள் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. நாட்டு வெடிகுண்டை வீசினால் கூட பேராபத்து விளையலாம். அதைத்தான் ஆர்ப்பாட்டத் தலைமை விரும்புகிறது. அதன் பிறகு பழியை ‘விஷமிகள்’ மீதோ, ‘அணுமின் நிலைய ஆதரவாளர்கள்’ மீதோ போட்டுவிட்டு, இந்த ஆர்ப்பாட்டத் தலைமை, தங்களுடைய அடுத்த வேட்டைக்குப் போய்விடலாம். அம்மாதிரி ஏதாவது நடப்பதற்கு முன், அவர்கள் பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டு, அணுமின் நிலையத்திற்குப் பெரிய அளவில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

ஆர்ப்பாட்டக்காரர்கள், சமுத்திரத்தில் இறங்கி விளையாடுகிறார்கள். ‘சமுத்திர ஸ்நானம்’ புண்ணியத்தைத் தரும். ‘ஸாகரம் ஸர்வ பாப ஹரம்’ – ஸமுத்திரம் சகல பாபங்களையும் நாசம் செய்யும் – என்று கூறப்பட்டிருக்கிறது. அந்த பாப நாசத்தை, அவர்கள் பெற்றுக் கொள்ளட்டும். மற்றவர்கள், மின்சாரத்தைப் பெறுவோம்.

முடியட்டும், ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடன்குளம் கூத்து

THUGLAK KELVI BADHIL

கே: ‘கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களுக்கு, அன்னா ஹஸாரே குழு உறுப்பினர் கெஜ்ரிவால் ஆதரவு அளித்துள்ளது பற்றி...?

ப: தான் நிற்கிற இடத்தில் ஒரு கூட்டம் கூடுகிறது என்பதை டெலிவிஷனில் அடிக்கடி பார்ப்பதில், கெஜ்ரிவாலுக்கு ஆசை வந்து விட்டது. அதனால் எங்கெங்கு கூட்டம் சேருகிறதோ, அங்கெல்லாம் போய் நின்று விடுவார் போலிருக்கிறது. இப்பொழுது கூடன்குளத்தில் ஒரு கூட்டத்தைப் பார்த்தார்; அங்கு போய் நின்று கொண்டு விட்டார். அடுத்து சென்னை, மைலாப்பூரில் அறுபத்து மூவர் விழாவில் கூட்டம் சேருகிறபோது, அதற்கு முன்னால் போய் நின்று கொண்டு, ‘இவ்வளவு பேர் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஊழலை எதிர்க்கிறார்கள். இவர்கள் எல்லாம் என்னுடைய புதிய கட்சிக்கு ஆதரவு தருகிறார்கள்’ என்று சொன்னாலும் சொல்வார்.