இதுதான் ‘துக்ளக்’கின் தர்மம்! (திரும்பிப் பார்க்கிறோம் – 21)
துக்ளக் பத்திரிகையின் தர்மம் என்ன என்பது பற்றி, அதன் ஆசிரியன் என்ற முறையில் நான் எழுதுவதற்கு இது சரியான நேரம்தான் என்று நினைக்கிறேன். ஆகையால் சுருக்கமாகச் சொல்லுகிறேன்.
துக்ளக் பத்திரிகையில் நான் மனம் போன போக்கில் எழுதுகிறேன் என்று சிலர் சொல்வதை, நான் ஒரு பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறேன். மற்றவர்கள் மனம் போகும் போக்கில் எல்லாம் எழுதி, அவரவர் மனமாற்றங்களுக்குத் தக்கவாறு மாறும் தர்மம் அல்ல துக்ளக்கின் பத்திரிகை தர்மம். காற்றடிக்கும் திசையில் எல்லாம் பறக்கும் தூசியாகத் திகழுவது அல்ல துக்ளக்கின் பத்திரிகை தர்மம்.
என் மனம் போன போக்கில் நான் எழுதுகிறேன் என்றால், ஏனோ தானோ என்ற போக்கில் அல்ல. மனம் என்பதற்கு, ‘மைன்ட்’ என்ற அர்த்தமும் உண்டு என்பதை வைத்துக் கொண்டு பார்த்தால், அதில் அறிவுபூர்வமான அணுகுமுறையும் அடக்கமாகிறது. பல பிரச்னைகளைப் பற்றி என் மனம், என் அறிவு என்ன நினைக்கிறதோ அந்த நோக்கில் எழுதுவதைத்தான் ‘மனம்போன போக்கில் எழுதுகிறான்’ என்று மற்றவர்கள் குறிப்பிடுவதாக எடுத்துக் கொண்டு மகிழ்கிறேன்.
...எதிர்த்து வரும் வாதங்களிலும், கேட்டுக் கொள்ள வேண்டியவை இருக்கலாம் என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்.
அது ஒருபுறமிருக்கட்டும். ‘பல விஷயங்களில் துக்ளக்கின் கருத்து என்ன?’ என்று கேட்டுக் கடிதங்கள் அன்றாடம் வந்த வண்ணம் இருக்கின்றன. ‘இதைப் பற்றி ஏன் எழுதவில்லை?.... அதைப் பற்றி என்ன கருத்து?... இதற்கு ஒரு விளக்கம் கொடுக்கக்கூடாதா?’ என்றெல்லாம் பல வாசகர்கள் அவ்வப்பொழுது எழுதிக் கொண்டேயிருக்கிறார்கள். அப்படி எழுதுபவர்கள் எல்லோருக்குமாகச் சேர்த்து, ஒரு சில விஷயங்களை மேலெழுந்த வாரியாகக் கூறுகிறேன். துக்ளக்கின் போக்கையும், துக்ளக்கில் இடம் பெறுபவை, இடம் பெறாதவை பற்றியும் மேலும் முழுமையாகப் புரிந்து கொள்ள இது உதவும் என்று நம்புகிறேன்.
பலருடைய பொதுவாழ்வுப் பிரச்னைகளைக் கிண்டல் செய்து, கண்டித்து, விமர்சித்துள்ள நான், எந்த ஒரு தனி மனிதருடைய தனி வாழ்வையும், எள்ளளவும் கூட விமர்சித்ததே கிடையாது. இது ஒரு கௌரவம்.
குறை கூற எனக்கு வக்கு இருக்கும்போதுதான் குணத்தைக் கூற என் பேனா தானாகவே இயங்க ஆரம்பிக்கிறது. இது ஒரு விளக்கம்.
வீழ்ந்த நிலையில் இருக்கும் ஒருவனைப் பார்த்து, அவன் பதில் சொல்ல முடியாத விஷயத்தைக் கூறி வாய்ச் சவடால் அடிப்பது என் பழக்கமல்ல. இது ஒரு வியாக்கியானம்.
வளரும் தீமைகளைக் கண்டிக்க வாய்ப்பிருந்தால் கண்டிக்கத் தவறி விடுவது, மடத்தனம் என்று நினைக்கிறேன். இது ஒரு வாதம்.
சில தீமைகளைச் சுட்டிக் காண்பிக்க முடியாமல் போனாலும் – அம்மாதிரி தீமைகளை ஆதரிக்காமலாவது இருக்கிறேன். இது ஒரு திருப்தி.
‘துக்ளக்கில் தெரிவிக்கப்பட்ட அச்சங்கள் எத்தனை மெய்த்து விட்டன?’ என்று நினைத்துப் பார்க்கிறேன். இதில் பெருமையில்லை, வருத்தம்தான்.
‘துக்ளக்கில் தெரிவிக்கப்பட்ட விருப்பங்கள் எத்தனை இன்னமும் ஈடேறாமல் இருக்கின்றன?’ என்றும் எண்ணிப் பார்க்கிறேன். இதில் அவமானம் இல்லை. வேதனைதான்.
எது எப்படி இருந்தாலும் லாபத்திற்காகவோ, அச்சத்தினாலோ எதையும் நான் எழுதியதே கிடையாது. இதில் மட்டற்ற மகிழ்ச்சி.
என்னைவிட எல்லா வகையிலும் பல மடங்கு உயர்ந்ததாக துக்ளக் இருக்கிறது. இது ஒரு சாதனை.
துக்ளக்கின் வாசகர்களில் பலர் துக்ளக்கை முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இது ஒரு அதிர்ஷ்டம் மட்டுமல்ல, பலமும் கூட.
என்றென்றும் ஆசிரியனை விட பத்திரிகை உயர்ந்ததாகவும், வாசகர்களின் எண்ணிக்கையை விட அவர்களுடைய அறிவு அதிகமானதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இது ஒரு நல்லெண்ணம்.
என்னைப் பொறுத்தவரை, துக்ளக்கின் தர்மங்களைச் சுருக்கமாகச் சொல்லப் போனால் இப்படித்தான் சொல்ல முடியும்.
நல்ல முயற்சிகள் உடனடியாகப் பலனிக்காமல் போனாலும், நாளாவட்டத்தில் வெற்றி கண்டே தீரும். இப்படிச் சொல்லும்போது நம்பிக்கையை விட, ஆசையே அதிமாக இருக்கிறது.
- சோ
– (15.10.76 துக்ளக் தலையங்கத்திலிருந்து..)
– (15.10.76 துக்ளக் தலையங்கத்திலிருந்து..)