சோ - நீங்காத நினைவுகள் — குருமூர்த்தி
சோஅவர்களை நான் முதலில் சந்தித்தது 1975-ஆம் ஆண்டு. அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டு, நான் தலைமறைவாக இருந்த சமயம். துக்ளக், தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் மட்டுமே சர்வாதிகாரத்துக்குத் தலைவணங்காமல் போராடி வந்த நேரம். அப்போது என்னுடைய புனைப்பெயர் ‘நசிகேதஸ்’. அதுவும் சோ வைத்த பெயர் தான். அன்றிலிருந்து துவங்கிய அந்த உறவு,உணர்வு பூர்வமாக ஒருவரை ஒருவர் நேசித்தும், மதித்தும் மேலும் மேலும் வளர்ந்து, 1980 - களில் நாங்கள் இருவரும் பல விஷயங்களில் இரட்டையர்கள் போல் ஆனோம் என்றால் அது மிகையாகாது.
1980-களிலிருந்து துவங்கி,நானோ அவரோ, எந்த முக்கியமான விஷயமாக இருந்தாலும் ஒருவரையொருவர் கலந்தாலோசிக் காமல் செய்ததே கிடையாது. 1985-ல் துவங்கி ரிலையன்ஸ் கம்பெனியின் அடாவடி வியாபாரத்தையும், லஞ்ச- லாவண்யங்களையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை வெளிக் கொண்டு வரத்திட்டமிட்டது. அப்போது, அது வரை அதன் அதிபர் ராம்நாத் கோயங்காவுக்குப் பல விஷயங்களிலும் ஆலோசகனாக இருந்த நான், பத்திரிகையாளனாகவும் மாற வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது.
காரணம் - சட்டம், கணக்கு, நிதி, மற்றும் பொருளாதாரம் எல்லாவற்றையும் இணைத்து எழுதுவதற்கு, குறிப்பாக அவையெல்லாம் சுவாரஸ்யம் இல்லாத விஷயம் என்பதாலும், எந்த பத்திரிகையாளரும் வெளியிடத் தயார் இல்லாத நிலை என்பதாலும், கோயங்கா அவர்கள் ‘நீதான் எழுத வேண்டும்’ என்று கட்டளையிட்டார். நான் சோவிடம் நிலைமையை விளக்கி என்ன செய்வது என்று கேட்டேன். அப்போது, அவர், ‘குடத்தில் குத்து விளக்கான நீங்கள் பல வகையிலும் பிரபலமாவதற்கு கடவுள் ஒரு வாய்ப்பை உருவாக்கியுள்ளார். தயங்காதீர்கள்’ என்று கூறினார். எவ்வளவு தீர்க்க தரிசனமான வார்த்தைகள்? அப்படியே நடந்தது. அது பற்றி பின்பு நான் அவரிடம் கேட்டேன்.
சோ, என் நிதி நிலவரம் உங்களுக்குத் தெரியும். நான் வருமானம் ஈட்டியாக வேண்டும். எங்கள் குடும்பம் பெரியது. எவ்வளவு நெருக்கமாக நாங்கள் இருந்தாலும், நிதி விவகாரத்தில் கோயங்கா அவர்களைச் சார்ந்து நான் இருக்க விரும்பவில்லை. நான் எழுத ஆரம்பித்தால் என் வருமானம் மிகவும் குறையும். குடும்பத்தில் மற்றவர்கள் மேல்பாரம் அதிகமாகும். என்ன செய்வது?" என்று கேட்டேன். அவர், உங்களுடைய வாழ்க்கை எளிமையானது. வருமானம் குறைந்தால் கூட உங்களால் சமாளிக்க முடியும்" என்றார். அவர் அப்படிஊக்குவிக்கவில்லையென்றால், நான் பத்திரிகையாளனாகி பிரபலமாகியிருப்பேனாஎன்பது சந்தேகமே. அப்படி நான் ஆகவில்லையென்றால், என் வாழ்க்கையில் பொதுநலனுக்கு ஒன்றுமே செய்திருக்க முடியாது.
பத்திரிகையாளனாகி லஞ்ச ஊழலை வெளிப்படுத்திய தனால் எனக்கு கைமேல் பலன் கிடைத்தது. 1987 மார்ச் 13-ஆம் தேதி நள்ளிரவில் நான் கைது செய்யப்பட்டேன். சாட்டப்பட்ட குற்றம்? தேசத் துரோகம்! ஜனவரி 1987-லேயே காஞ்சி மஹா ஸ்வாமி அவர்கள், என்னிடம், ‘நான் உன் மேல் தேசத் துரோகக் குற்றம் சாட்டினால் என்ன செய்வாய்?’ என்று கேட்டு என்னை தயார் செய்திருந்தார். இது பற்றி துக்ளக் பத்திரிகையில் நான் விவரமாக ‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம்’ தொடரில் முதல் கட்டுரையில் எழுதியிருக்கின்றேன். அந்தத் தொடருக்கு அப்படி பெயர் சூட்டி என்னை எழுத வைத்தது சோ தானே!
நான் கைது செய்யப்பட்ட பிறகு மாலை செய்தி பத்திரிகைகளில், ‘சி.ஐ.ஏ. உளவாளி’ கைது என்று அரசு தரப்பில் கூறப்பட்ட செய்தி வெளிவந்தது. இப்படி குடும்பத்துக்கு அவமானம் வந்து விட்டதே என்று துடிதுடித்தது கூட்டுக் குடும்பமான என் குடும்பம். என் அம்மா சாப்பிடுவதை நிறுத்திவிட்டார். உற்றார் உறவினர்கள், நண்பர்கள் யாரும் அருகே வரவில்லை. ஊரே ஒதுக்கியது. சோ அவர்களும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், என்னுடைய நண்பருமான ஐராவதம் மகாதேவன் இருவர் மட்டுமே வந்து, 20 பேர் நிறைந்த எங்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்கள். 10 நாட்களில் அரசாங்கத்தின் சாட்சியம் பொய் என்கிற குட்டு வெளிப்பட்டு என்னை நீதிமன்றம் விடுதலை செய்த போது, முதலில் வந்து என்னை பாராட்டியது சோ அவர்கள்தான்.
நான் தினசரி கூட சோவை சந்திப்பேன். நானும் ராம்நாத் கோயங்காவும் மாதம் இரண்டு முறையாவது சோவைச் சந்திப்போம். கோயங்காவுக்கு சோவை மிகவும் பிடித்து விட்டது. அவரை செல்லமாக ’'Intellectual Goonda' (அறிவுஜீவி கூண்டா) என்று அழைப்பார் கோயங்கா.
1989 முடிவில் அதுவரை ஆனந்த விகடன் சம்பந்தப்பட்டவர்கள் நடத்தி வந்த துக்ளக் பத்திரிகையை, சோ அவர்களே ஏற்று நடத்தும்படி செய்த கோயங்கா,என்னையும் துக்ளக் பத்திரிகையில் பங்குதாரராக ஆக் கினார். கோயங்கா மறைந்த பிறகு சோவிடம் நான், துக்ளக்கின் வருமானத்தில் பங்கு பெறுவது சரியல்ல என்று அடித்துக் கூறி, பங்கிலிருந்து விலகினேன். காரணம், நான் துக்ளக்கிற்கு எதுவுமே செய்ய வில்லையே - எழுதுவது கூட இல்லையே!
பின்புதான் சோ, ‘ஆங்கிலத்தில் எழுதும் நீங்கள், ஏன் தமிழில்எழுதக் கூடாது?’ என்று கேட்டு, திரும்பத் திரும்ப என்னை ஊக்குவித்து, ‘நமது பொருளாதாரம்’ என்கிற தலைப்பில் பல கட்டுரைகளை எழுதினேன். அப்படித்தான் என்னை துக்ளக் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தினார் ‘சோ’. ஆனால், பல வேலைகளின் காரணமாக என்னால் துக்ளக்கில் தொடர்ந்து எழுத முடியவில்லை. ஆனாலும், சோ என்னை விடவில்லை. பொருளாதாரம், அரசியல், கலாசாரம், சமயம் - எல்லாவற்றைப் பற்றியும் நீங்கள் எழுத வேண்டும் என்று ஊக்குவித்து, தொடர்ந்து பல ஆண்டுகள் என்னை துக்ளக் பத்திரிகையில் எழுத வைத்தார். அதனால் துக்ளக் வாசகர்கள் பலர் மனதில் எனக்கு இடம் கிடைத்தது.
அது மட்டுமல்லாமல், தமிழ் பத்திரிகை உலகுக்கும் என்னை அறிமுகப்படுத்தினவர் சோ. அவர் என்னிடம் கட்டுரையை எழுதிப் பெற, வாரா வாரம் ஃபோன் செய்வார். கடைசி நேரத்தில் தான் நான் கொடுப்பேன். அது பெரியதாக வேறு இருக்கும். அதைப் பிரசுரிப் பதும் கடினம். இருந்தும் எல்லா சிரமங்களையும் ஒதுக்கிவிட்டு, விடா முயற்சி செய்து என்னை தமிழில் எழுத வைத்தவர் சோ.
பின்பு மறுபடியும் சோ, ‘நீங்கள் துக்ளக்கில் பங்குதாரராக ஆக வேண்டும். காரணம் எனக்குப் பிறகு துக்ளக் நடக்க வேண்டும் என்றால், இது அவசியம்’ என்று கூறினார். நான், ‘சோ உங்களுக்குப் பிறகு துக்ளக் பத்திரிகையை யார் நடத்த முடியும்?’ என்று கேட்டேன். ‘அதற்கான டீம் இருக்கிறது. தலைமைதான் தேவை. நீங்கள் அதற்குத் தயாராக வேண்டும்’ என்று கூறினார். நானும் நீங்களும் பாதி பாதி என்று கட்டாயப்படுத்தி மீண்டும் துக்ளக்கை நடத்தும் கம்பெனியில் 50 சதவிகிதம் பங்குதாரராகவும், டைரக்டராகவும் சேர்த்தார். அப்படித்தான் எனக்கும் அவருக்கும் இருந்த ஆத்மார்த்தமான அந்த உறவை துக்ளக்கிற்கும் எனக்கும் பந்தமாக மாற்றினார். ஆனாலும் என்னால் துக்ளக்கிற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என்று கூறும் போதெல்லாம், ‘உங்களுடைய பயணங்களைக் குறைத்துக் கொண்டால் துக்ளக்கிற்கு நேரம் ஒதுக்க முடியும்’ என்று கூறுவார்.
அவர் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அவரைச் சந்தித்த போதெல்லாம், துக்ளக் எப்படி நடக்கும் என்கிற விஷயத்தை தவிர்த்து தான் நான் பேசுவேன். கடந்த இரண்டரை ஆண்டுகளில் பலமுறை எமனை வென்ற சோ,கடைசியில் நம்மை விட்டுச்சென்று விட்டார்.காஞ்சி மஹா ஸ்வாமி மறைந்த போதும் என் தாயார் காலமான போதும் எப்படி எனக்கு ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டதோ, அதே இடைவெளியை சோ மறைந்த பிறகு நான் அனுபவப்படுகிறேன்.அது மறையக்கூடிய இடைவெளி அல்ல.
சோ அவர்களைப் பற்றிய நினைவுகள், நீங்கா நினைவுகள். அந்த நினைவுகளை அகலாமல் பார்த்துக் கொள்வது நம்மை சரியான வழியில் கொண்டு செல்லும். சோவின் நினைவுகளும்,சிந்தனைகளும்,அவருடன் நெருங்கிப் பழகிய போது ஏற்பட்ட அனுபவமும் எனக்கு இந்த புதிய சவாலான துக்ளக் ஆசிரியர் என்கிற பொறுப்பை நிர்வகிக்க பெரும் துணையாக இருக்கும் என்று நம்புகிறேன்.
(தொடரும்)
S. குருமூர்த்தி