"நண்பனுக்கும் மேலானவராக..." - ரஜினிகாந்த்
சோ அவர்களை நான் முதன் முதலில் ‘ஆறில் இருந்து அறுபது வரை’ ஷூட்டிங்கில் தான் சந்தித்தேன். அதுவரை அவரைப் பற்றி நான் அறிந்து வைத்திருந்தது, அவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி உட்பட பல முன்னணி நடிகர்களுடைய படங்களில், அவர்களோடு இணைந்து நடித்தவர் என்பது தான். ஆனால் ‘ஆறில் இருந்து அறுபது வரை’ படப்பிடிப்பு சமயத்தில் இயக்குநர் திரு.எஸ்.பி.முத்துராமன் அவர்கள், சோ ஸாரைப் பற்றி பல விஷயங்களைச் சொன்னார். அவற்றுள் ஒன்று என்னை பிரமிக்க வைத்தது.
‘சோ பேசுகிறார்’ என்று மட்டும் ஒரே வரியில் போஸ்டரில் விளம்பரம் செய்யப்பட்டு, மெரீனாவில் அவர் பேசிய பொதுக்கூட்டத்திற்கு, ஒரு லட்சம் பேருக்கு மேல் திரண்டார்கள் - என்பது தான் அந்த தகவல். எந்தக் கட்சியின் பின்புலமும் இல்லாத அவருடைய பேச்சைக் கேட்க இத்தனை பேர் திரண்டார்கள் என்ற அந்த விஷயம், அவர் பால் எனக்கு மதிப்பையும், ஈர்ப்பையும் ஏற்படுத்தியது.
பிறகு வெவ்வேறு படங்களில் சேர்ந்து நடிக்கும் போது நெருங்கிப் பழகி, நிறைய பேசும் வாய்ப்பு வந்தது. அவரது அணுகுமுறை எளிமையானது. அவர் ‘செட்’டில் இருந்தால் அந்த இடமே கலகலப்பாக இருக்கும். ஸீனியர் - ஜூனியர் என்றெல்லாம் பார்க்காமல், கலாட்டா செய்து கொண்டும், ஜோக் அடித்துக் கொண்டும் இருப்பார். எல்லோருக்கும் அவரைப் பிடிக்கும்.
‘குரு-சிஷ்யன்’ படத்தின் போது, மைசூரில் 20-25 நாட்கள் பல காட்சிகளை எடுக்க வேண்டியிருந்தது. நானும், அவரும் சேர்ந்து பங்குபெற வேண்டிய காட்சிகளும் அதில் அடக்கம். அப்போது தான், ‘அவுட்டோர் ஷூட்டிங்கிற்கு எல்லாம் அவர் வருவது கஷ்டம்; ஒப்புக்கொள்ள மாட்டார்’ என்று கேள்விப்பட்டேன். எஸ்.பி.எம். அவர்களும், பஞ்சு அருணாசலம் ஸாரும் என்னிடம், ‘சோ ஸார் 10 நாட்களாவது வந்தால் தான் சரியாக இருக்கும். நாங்கள் அவரிடம் கேட்கிறோம். நீங்களும் அவரிடம் ஒரு வார்த்தை பேசினால் பரவாயில்லை’ என்று சொன்னார்கள். நானும் சோ ஸாரைத் தொடர்பு கொண்டு, ‘ஸார் இந்த மாதிரி நிலைமை இருக்கிறது. நீங்கள் வர வேண்டும்’ என்றதும், அவர், துக்ளக் பணிகளைப் பற்றியும், அதனால் ஏற்படும் சிரமம் பற்றியும் என்னிடம் விளக்கினார். ஆனாலும் 15 நாட்கள் அங்கு வந்து இருந்தார்.
மைசூரில் ‘குரு - சிஷ்யன்’ படப்பிடிப்பு சமயத்தில், அந்த 15 நாட்களும் தினமும் அவரோடு ஒன்றாகப் பயணிப்பது, ஒன்றாகச் சாப்பிடுவது, நிறையப் பேசுவது என்று நேரம் வாய்த்தது. அந்த 15 நாட்களை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. ‘பகவத் கீதை’ உட்பட ஆன்மீகம் தொடர்பான பல விஷயங்களை அச்சமயத்தில் அவரோடு விவாதிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஸம்ஸ்க்ருதத்தில் பகவத்கீதை ஸ்லோகமும், அதற்கு தமிழில் சோ அவர்கள் கூறிய விளக்கமும் ஆடியோ கேஸட்டாக வெளிவந்திருக்கிறது என்று அவர் சொன்னார். எனக்கு அந்த கேஸட் வேண்டும் என்றதும், உடனே வரவழைத்து அளித்தார். அதை திரும்பத் திரும்ப பலமுறை கேட்கிறேன். அவருடன் நெருங்கிப் பழகத் தொடங்கிய பிறகு, அவ்வப்போது ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு ஃபோனிலும், நேரிலும் பேசுவோம். என் வீட்டு நிகழ்ச்சிகளுக்குத் தவறாமல் வந்திருக்கிறார்.
1995-ல் ‘பாட்ஷா’ பட விழாவில் வெடிகுண்டு கலாசாரம் பற்றி நான் பேசி, அது பெரிய சர்ச்சையாகி விட்டது. அரசியலுக்கு நான் வருவேனா, இல்லையா, என்ன செய்யப் போகிறேன் என்றெல்லாம் விவாதங்கள் எழுந்துவிட்டன. அப்போது பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ் அவர்கள், ‘அரசியலுக்கு நான் வர வேண்டும்’ என்று கூறினார்.
அந்த காலகட்டத்தில், ‘முத்து’ பட வேலைகளில் நான் ஈடுபட்டிருந்த போது, திடீரென்று ஒரு நாள் காலை சோ ஸார், அவரே காரை ஓட்டிக் கொண்டு என் வீட்டிற்கு வந்து விட்டார். ‘என்ன ஸார், என்னென்னமோ பேச்சு கிளம்புகிறது. அதுபற்றி உங்களோடு பேச வேண்டும். அதான் வந்துவிட்டேன்’ என்றார். நான் ‘முத்து’ ஷூட்டிங்கிற்கு கிளம்பிக் கொண்டிருப்பதை அறிந்ததும், ஷூட்டிங் நடக்கும் அடையாறு வரை அவரே காரை ஓட்டி வந்து, என்னை அங்கே விட்டுவிட்டு, ‘எத்தனை நேரமானாலும் ஷூட்டிங் முடிந்ததும் வாருங்கள். பேச வேண்டும்’ என்றார். அன்று இரவு அவரைச் சந்தித்த போது, நீண்ட நேரம் பேசினோம்.
‘மக்களிடம் உங்களுக்கு செல்வாக்கு இருக்கிறது. அதே சமயம் அரசியல் கட்சி நடத்துவது சுலபமான விஷயம் அல்ல. நல்லவர்களும் வருவார்கள்; தப்பானவர்களும் வருவார்கள். அது ஒரு பெரிய சுமையாகவும் இருக்கும். யோசித்து ஜாக்கிரதையாக அணுக வேண்டும்’ - என்றெல்லாம் சாதக, பாதகங்கள் பற்றி நிறைய சொன்னார். அன்றும், அதைத் தொடர்ந்தும் அவர் பேசியதை, அப்படியே என் கையைப் பற்றி என்னை அழைத்துச் செல்வதைப் போல, அர்ஜுனனை கிருஷ்ணர் வழி நடத்தியது போல உணர்ந்தேன். எது நல்லது, எது கெட்டது, ஒரு விஷயம் எப்படிப்பட்டது, அதை எப்படி அணுகுவது - இவற்றில் எல்லாம் ஒரு தெளிவை காட்டுவது போல அவர் பேசியது அமைந்திருந்தது. அவர் அந்த சமயத்தில் அப்படி எல்லாம் கூறியிருக்காவிட்டால், நான் என்ன முடிவு எடுத்திருப்பேன், என்ன செய்திருப்பேன் என்று சொல்ல முடியாது.
இப்படி எங்கள் நட்பு தொடர்ந்தது. ஒரு வாரம் தொடர்ந்து பேசாவிட்டால், பட வேலைகளில் மூழ்கி இருந்தால், அவரிடம் இருந்து ஃபோன் வந்துவிடும். ‘என்ன ஸார் மறந்து விட்டீர்களா?’ என்று கலாட்டா செய்வார். எனக்கும் அவரைச் சந்திப்பதில் கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டு விட்டால் ஏதோ குறை தெரியும்.
ஒருமுறை அவரிடம், ‘எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற பல ஜாம்பவான்களுடன் பழகி இருக்கிறீர்கள். என்னை உங்களுக்கு ஏன் பிடித்திருக்கிறது?’ என்று கேட்டேன். அவர் உடனே, ‘ஆன்மீகம் தான்’ என்றார். ‘உங்களுடைய ஆன்மீகத் தேடல் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. உங்களுடைய செயல்பாடுகளுக்கும், இந்த சப்ஜெட்டுக்கும் சம்பந்தமே இல்லை’ என்று சொன்னார். எனது இமயமலைப் பயணங்களைப் பற்றி நிறைய கேட்பார். ‘உங்களோடு ஒரு முறை வரவேண்டும் என்று நினைக்கிறேன்’ என்று 2, 3 முறை சொல்லி இருக்கிறார். ஆனால், வராமலே போய் விட்டார்.
துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் சமீப காலமாகத் தொடர்ந்து கலந்து கொண்டிருக்கிறேன். துக்ளக் வாசகர்களுக்கும், அவருக்கும் இருக்கும் பரஸ்பர நம்பிக்கை, வாசகர்கள் கருத்துக்கு அவர் அளிக்கும் மதிப்பு, ஆண்டுவிழா கூட்டங்களில் பல பிரச்னைகள் பற்றிய அவரது தெளிவான கண்ணோட்டம் - இவை எல்லாம் என்னை வியக்க வைத்திருக்கிறது.
என் மனைவியிடமும், குழந்தைகளிடமும் பேசாத விஷயங்களைக் கூட, அவரோடு நான் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அந்த வகையில் ஒரு நண்பருக்கும் மேலாக அவர் இருந்திருக்கிறார். என் குடும்ப விவகாரம், என் நிதி நிலை உட்பட பல விஷயங்கள். என் மனதில் இருக்கும் ஆதங்கங்களை அவரிடம் மனம்விட்டுப் பேசியிருக்கிறேன். அந்த மாதிரி இன்னொருவரிடம் இனி பேசும் வாய்ப்பை நான் இப்போது இழந்திருக்கிறேன்.
சமீப காலமாக அவர் நோய்வாய்ப்பட்டது முதல் அவ்வப்போது போய் உடல்நிலை விசாரிப்பேன். உடம்பு முடியாத அந்தச் சூழ்நிலையிலும் அவர் படுகிற அவஸ்தையைக் கூட நகைச்சுவை கலந்து தான் பேசுவார். சிங்கம் மாதிரி இருந்தவர், இப்படி உருக்குலைந்து விட்டாரே என்று மிகவும் வருத்தப்பட்டேன். அவர் அன்பு வைத்திருந்த முதலமைச்சர் மரணித்ததும், அடுத்த நாள் இவரது மறைவும் நிகழ்ந்து விட்டது. அவரது உடல்நிலை படிப்படியாக பாதிக்கப்பட்டு வந்து கொண்டிருந்ததால், அவரது மறைவு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. ஆனால், பெரும் இழப்பை உணரச் செய்திருக்கிறது. என் வாழ்க்கையில் அவருக்கு இருந்த இடத்தை இன்னொருவர் நிரப்ப முடியும் என்று நான் கருதவில்லை. அவர் யாருக்கும் கெடுதல் செய்ததில்லை. நிறைய பேருக்கு உதவி தான் செய்திருக்கிறார். நேர்மையாக வாழ்ந்திருக்கிறார். அதனால், அவர் ஆத்மா சாந்தி அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.
அவர் இருக்கும் போது ‘துக்ளக்’ எப்படி இருந்ததோ, அதே போல தொடர்ந்து ‘துக்ளக்’ நீண்ட காலம் வெளிவர அவரது ஆத்மா நிச்சயம் வழிகாட்டும். அவரது குடும்பத்தாருக்கும்,‘துக்ளக்’ ஊழியர்களுக்கும், ‘துக்ளக்’ வாசகர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.