தேசத் துரோக அமைப்பு – கே.சி.லட்சுமி நாராயணன்
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 1 எம்.ஜி.ஆர். நிறுவிய அ.இ.அ.தி.மு.க.வைத் திராவிடக் கட்சிகளில் ஒன்றாகக் கருதுவது சரியன்று.
ஹிட்லர் ஒரு பாவமும் அறியாத யூதர்களைக் கொலை செய்ததைப் போல, குற்றமற்ற பிராமணர்களைத் துவேஷிப்பது திராவிடக் கட்சிகளின் தலையாய தீய குணாம்சங்களில் ஒன்று. இந்தக் குணாம்சம் எம்.ஜி.ஆரிடம் சிறிது கூடக் கிடையாது.
தனித் திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடுவதாக 1963– ஆம் ஆண்டில் அறிவித்த பிறகும், இன்று வரையில் தமிழ்நாட்டில் பிரிவினை இயக்கங்களுக்கு நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஆதரவு அளித்து வருவது திராவிடக் கட்சிகளின் மற்றொரு தீய குணாம்சம். இந்தக் குணாம்சமும் எம்.ஜி.ஆரிடம் காணப்பட்டது இல்லை.
இவர்களின் பகுத்தறிவுக்குப் பொருந்தாதவை என்று சொல்லப்படும் இஸ்லாம், கிறிஸ்துவம் போன்ற மதங்களின் பண்டிகைகளையும், சம்பிரதாயங்களையும் தயக்கம் இல்லாமல் ஏற்றுக்கொண்டு, ஹிந்து சமயத்தின் சடங்குகள், விழாக்கள் போன்றவற்றை மட்டும் இகழ்வது திராவிடக் கட்சிகளின் இன்னொரு தீய குணாம்சம். இதனையும் எம்.ஜி.ஆர். ஒருபோதும் ஏற்றுக் கொண்டவர் அல்லர்.
எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசான ஜெயலலிதாவும், இந்தத் தீய குணாம்சங்களில் ஒன்றுகூட இல்லாதவர். எனவேதான் அ.இ.அ.தி.மு.க.வை ஒரு திராவிடக் கட்சியாகக் கருதுவது பிழையானது என்று இந்தத் தொடரில் முதலில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
தி.மு.க., கி.வீரமணி தலைமையிலான திராவிடர் கழகம், வைகோவின் ம.தி.மு.க., பெரியார் திராவிடர் கழகம், வே.ஆனைமுத்துவின் திராவிடர் கழகம் முதலிய திராவிடக் கட்சிகள் அனைத்துக்கும் ஐஸ்டிஸ் கட்சியே தாய்க்கட்சி என்று அவை பெருமையுடன் கூறிக் கொள்கின்றன. ஐஸ்டிஸ் கட்சித் தலைவர்களுக்குச் சிலைகளை எடுத்துள்ளனர்; ஒவ்வொரு வருடமும் அவற்றுக்கு மாலைகளை அணிவித்து மரியாதை செய்கின்றனர்.
எனவே ஐஸ்டிஸ் கட்சியின் ‘வரலாற்றை’ முதலில் எடுத்துச் சொல்லுவேன்.
பிரித்தாளும் கொள்கை
ஒரு நாட்டைக் கைப்பற்றிய பிறகு, அந்த நாட்டு மக்களிடையே பிரிவுகளை உண்டாக்கி, பேதங்களை ஏற்படுத்தி, அவர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ளும் படியாகச் செய்து, அவர்களைப் பலவீனப்படுத்திய பிறகு, அவர்களை எளிதாக அடக்கி ஆளுகின்ற ஒரு கொள்கையை காலனி ஆதிக்கக் காலத்தில் ஆங்கிலேயர்கள் பின்பற்றி வந்தார்கள். அது பிரித்தாளும் கொள்கை என்று வருணிக்கப்பட்டது.
இந்தியாவில் அடிமைத்தளையை நீக்குவதற்காக விடுதலைப்போரை, காங்கிரஸ் மகாசபை முனைப்புடன் நடத்திய போது, தங்களது பிரித்தாளும் கொள்கையை ஆங்கிலேயர்கள் இந்தியாவிலும் செயல்படுத்தினார்கள்.
இந்தியாவின் வடக்குப் பகுதியில் காங்கிரஸ் மகாசபையின் செல்வாக்கைக் குறைக்க, ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிளவுகளையும், பேதங்களையும் ஆங்கிலேயர்கள் ஏற்படுத்தினார்கள். முஸ்லிம்கள் மிகவும் சொற்ப எண்ணிக்கையில் இருந்த அன்றைய சென்னை மாகாணத்தில் மதப்பூசலை எழுப்பி, விடுதலைப் போரை ஒடுக்குவது சாத்தியமில்லை என்ற நிலை இருந்தது.
எனவே விடுதலைப் போராட்டத்தை நடத்திய காங்கிரஸ் மகாசபையின் செல்வாக்கை ஒடுக்குவதற்காகப் பிராமணர் - பிராமணரல்லாதார் பிரச்சனையை எழுப்ப, சென்னை மாகாணக் கவர்னர் திட்டமிட்டு வேலை செய்தார்.
சூழ்ச்சியின் விளைவு
“வடபுலத்தில் தேசிய காங்கிரஸ் மகாசபைக்கு எதிராக முஸ்லிம் லீக்கைத் தோற்றுவிப்பதிலே வெற்றி கண்டதுபோல, தென்புலத்தில் பிராமணரல்லாதார் கட்சியைத் தோற்றுவிப்பதிலே இந்திய வைசிராயும், சென்னை மாகாணக் கவர்னரும் வெற்றி கண்டனர்” என்று சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் எழுதி உள்ளார்.
1916 - ஆம் ஆண்டில் அந்தக் கட்சி ‘தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம்’ என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்டது. அந்தக் கட்சியைத் திட்டமிட்டு ஏற்படுத்தியவர்கள் ஆங்கிலேய வைசிராயும், சென்னை மாகாணக் கவர்னரும் ஆவார்கள் என்பதைக் கவனத்தில் குறித்துக் கொள்ளுங்கள்.
அவர்கள் இந்தியர்களுக்கு எதிராகத் தேசத் துரோகம் செய்ய யார் வருவார்கள் என்று தேடிப் பார்த்து, ஆசைகள் பல காட்டி, பதவிகள், பட்டங்கள் தருவதாக பேரங்களைப் பேசி, நயவஞ்சக வலை விரித்தார்கள். அந்த வலையில் சிலர் சிக்கினார்கள். சிக்கியவர்களில் எவரும் சாமானியமானவர்களோ அல்லது நடுத்தர மக்களோ அல்லர். எல்லோருமே அன்றிருந்த சமஸ்தானங்களின் மன்னர்கள்; குறுநில அரசர்கள்; ஜமீன்தார்கள்; பெரிய நிலப்பிரபுக்கள்; கொள்ளை லாபம் ஈட்டிக் கொண்டிருந்த வியாபாரிகள். அவர்களே அந்தக் கட்சியின் தலைவர்களாகவும், உறுப்பினர்களாகவும் இருந்தார்கள்.
அந்தக் கட்சியின் சார்பில் ‘ஜஸ்டிஸ்’ என்று ஓர் ஆங்கிலப் பத்திரிகையும், ‘திராவிடன்’ என்று ஒரு தமிழ் இதழும் நடத்தப்பட்டன. நாளடைவில் அந்தக் கட்சி ‘ஜஸ் டிஸ் கட்சி’ என்று அழைக்கப்பட்டது.
அதைத் தோற்றுவித்தவர்கள் சர்.பி.தியாகராயச் செட்டியாரும், டாக்டர் டி.எம்.நாயரும் ஆவார்கள். ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கட்டளைப்படி அவர்கள் கட்சியைத் தொடங்கி நடத்தினார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை சொல்லியாக வேண்டும்.
‘கொள்கைப் பிரகடனம்’
“ஜஸ்டிஸ் கட்சியின் தலைவரான சர்.பி.தியாகராச செட்டியார், அந்தக் கட்சி பிறந்த ஆண்டிலேயே, அதன் கொள்கைப் பிரகடனம் ஒன்றை வெளியிட்டு, ‘அளவுக்கு மிஞ்சிய சுயாட்சிக் கோரிக்கையை ஜஸ்டிஸ் கட்சி ஆதரிக்கவில்லை’ என்பதைத் தெளிவு படுத்தியிருந்தார். மேலும், ஆங்கிலேய ஆட்சியின் செல்வாக்கைக் குறைக்கும் எந்தத் திட்டத்தையும் தாங்கள் விரும்பவில்லை என்பதையும் ஐயத்திற்கிடமின்றி அறிவித்திருந்தார்.
“இன்னும் ஒருபடி மேலே போய், ‘இன்று நாடு இருக்கும் நிலையில் வெவ்வேறு ஜாதியினருக்கு - வகுப்பினருக்கு நீதி கிடைக்கவும், அவர்களிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தவும், தேசிய ஒருமைப்பாட்டை உண்டாக்கவும் கூடியவர்கள் ஆங்கிலேயர்தான். அவர்கள் வெளியேறினால், நாட்டில் தேசபக்தியின்றி - ஒற்றுமையின்றி ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு சீரழிய நேரிடும்’
இந்தியாவில் அடிமைத்தளையை நீக்குவதற்காக விடுதலைப் போரை, காங்கிரஸ் மகா சபை முனைப்புடன் நடத்திய போது, தங்களது பிரித்தாளும் கொள்கையை ஆங்கிலேயர்கள் இந்தியாவிலும் செயல்படுத்தினார்கள்
என்றும் கூறித் திரு.செட்டியார் பிராமணரல்லாதாரை எச்சரித்திருந்தார்.
“ஜஸ்டிஸ் கட்சியின் இந்தப் பிரகடனமானது, காங்கிரஸ் மகாசபை தொடங்கவிருந்த ஒத்துழையாமை இயக்கத்திற்கு எதிரானதாகும்” என்று ம.பொ.சி. பதிவு செய்து இருக்கிறார்.
ஜஸ்டிஸ் கட்சியின் உண்மையான முகத்தை, இந்தக் கொள்கைப் பிரகடனம் தெளிவாகவே எடுத்துக் காட்டுகிறது.
“ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கைகளும், வேலைத் திட்டங்களும் பிராமண ஆதிக்கத்திற்கு எதிரானவை என்று பொதுவாகச் சொல்லப்பட்டது என்ற போதிலும், அவை தேச விடுதலைப் போருக்கு எதிரானவையாகவே இருந்தன என்பது சரித்திரபூர்வமான உண்மையாகும்” என்றும் ம.பொ.சி. குறித்திருக்கிறார்.
மூவகைத் துரோகம்
1916 - ஆம் ஆண்டு முதல், இந்தியா விடுதலை பெற்ற 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரையில் ஜஸ்டிஸ் கட்சி இந்திய விடுதலையைக் கூச்சம் இல்லாமல் எதிர்த்தது. அந்தக் கட்சி மூன்று வகைகளில் இந்திய சுதந்திர இயக்கத்தை எதிர்த்து தேசத் துரோகம் செய்தது.
முதலாவதாக, இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிக்கப்படக் கூடாது என்று ஜஸ்டிஸ் கட்சி பிரச்சாரம் செய்தது.
இரண்டாவதாக, இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய விடுதலை இயக்கமாம் காங்கிரஸ் மகா சபையை ஐஸ்டிஸ் கட்சி எதிர்த்து, அதற்குப் பலவிதமான தொல்லைகளை உண்டாக்கியது.
மூன்றாவதாக, இந்தியாவை அடிமைப்படுத்தியிருந்த ஆங்கிலேய ஆட்சியாளர்களுடன் ஜஸ்டிஸ் கட்சி சேர்ந்து கொண்டு, பிரிட்டிஷ் அரசினரின் அடக்குமுறை கொடுமைகள் அனைத்திற்கும் தயக்கம் இல்லாமல், முழு விருப்பத்துடன் ஆதரவு தந்தது.
இதுதான் ஜஸ்டிஸ் கட்சியின் உண்மையான ‘வரலாறு’ என்று முதுபெரும் தேசியத் தலைவர் எம்.பக்தவத்ஸலம் வருத்தத்துடன் பொருத்தமாகவே விவரித்தார். அந்தச் செய்தி அடுத்த இதழில்.
ஆதார நூல்: சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சிவஞானம் எழுதிய ‘விடுதலைப் போரில் தமிழகம்’; இரண்டு தொகுதிகள்.
வெளியிட்டோர்: பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக் குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர்,சென்னை - 600 004.
முதற் பதிப்பு: 1982. விடுதலைப்போரில் தமிழ்நாட்டின் பங்கு பற்றிய ஓர் ஒப்பற்ற ஆவணம் இந்த ஆய்வு நூல்