Saturday, April 7, 2012

DRAVIDA MAYAI - திராவிட மாயை – ஒரு பார்வை

திராவிட இயக்க நூற்றாண்டுத் துவக்க விழாவில் பேசிய கலைஞர் மு.கருணாநிதி, ‘திராவிட’ என்ற சொல்லை தானோ, பேராசிரியர் அன்பழகனோ உருவாக்கவில்லை என்றார். இந்திய நாட்டின் தேசிய கீதம் ‘ஜன கண மன’ என்ற பாடலை எழுதிய ரபீந்த்ரநாத் தாகூர் ‘திராவிட உத்கல வங்கா’ என்று எழுதியிருப்பதை அவர் சுட்டிக் காட்டியபோது, அங்கிருந்த உடன்பிறப்புகள் ஆர்ப்பரித்தார்கள். திராவிட இயக்கங்கள் தோன்றுவதற்கு முன்பே, இந்த மண்ணில் திராவிடம் என்ற சொல் புழக்கத்தில் இருந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆசார்யரான ஸ்ரீவேதாந்த தேசிகர், ‘த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி’ என்ற நூலை எழுதியிருக்கிறார்.

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில், தென்னிந்திய மொழிகளை, ‘திராவிட மொழிகள்’ என்று அழைக்கும் ஆய்வு வெளி வந்தது. ஃபிரான்ஸிஸ் வைட் எல்லீஸ் என்ற கலெக்டர் (1777-1789) செய்த ஆராய்ச்சியின் விளைவு இது. இவரைத் தொடர்ந்து வந்தவர்தான் ராபர்ட் கால்டுவெல். இந்தியர்களைப் பிரித்து, இந்தியாவை ஆள வேண்டும் என்ற ஆங்கிலேயரின் கொள்கைக்கு ஏற்றபடி, இவர் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டார். இவருடைய முயற்சியால் திராவிட இனம் என்ற கருத்து பரவலாக்கப்பட்டது.

‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்று தொடங்கி, சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெருகி, இன்று மேலும் பிளவுபட்டு இருக்கும் திராவிட இயக்கங்களின் தத்துவ ஆசான் கால்டுவெல்தான். இந்த இயக்கங்களின் அடிப்படையான ‘திராவிட இனம்’ என்ற கருத்தாக்கம் கால்டுவெல்லின் கற்பனையில் உருவானதுதான்.... மொழி உணர்வு என்பது ஒற்றுமைக்குப் பயன்பட வேண்டும். அதை வேற்றுமைக்கெனப் பயன்படுத்தியதுதான் கழகத்தவர்களின் சாதனை. திராவிட இயக்க நூற்றாண்டு துவக்க விழாவில் கருணாநிதி, உ.வே.சாமிநாத ஐயரைச் சுட்டிக் காட்டினார். ஆனால், மொழி உணர்வு பற்றி, உ.வே.சா. கூறியதைப் பார்க்கலாம்:

1937-ஆம் வருடம் நடந்த இந்திய இலக்கியக் கழகத்தின் முதல் மாநாட்டில், டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் வரவேற்புரை நிகழ்த்தினார். அந்த உரையில் “இந்த பாரதீய சாகித்ய பரிஷத்தின் நோக்கம் எவ்வளவு உயர்ந்தது! இதன் முயற்சிகளால் குறுகிய நோக்கங்களும், சிறு வேறுபாடுகளும் ஒழிந்து தமிழர்களுள் ஒற்றுமை, திராவிட பாஷா சமூகத்தாருள் ஒற்றுமை, பாரதீய பாஷா சமூகத்தாருள் ஒற்றுமை ஆகிய மூன்றும் ஒன்றன்பின் ஒன்றாக உண்டாகுமென்றே நம்புகிறேன்” என்றார்.

இந்திய மக்களை ஒற்றுமைப் படுத்த வேண்டும், அதற்கு மொழி உணர்வைப் பயன்படுத்த வேண்டும் என்று முனைந்த தமிழ்த் தாத்தாவின் உயர்ந்த நோக்கத்தை, தமிழர் பண்பாடு என்று ஏற்றுக் கொள்ளலாம். தகர டப்பாவில் தாரை நிரப்பிக் கொண்டு, மொழிகளுக்கிடையே பகைமையை மூட்டிய கழகத்தவரின் செயலை ஏற்றுக் கொள்ள முடியுமா? ஆரிய திராவிட இன வேறுபாடு என்ற கோட்பாடு, வரலாற்று ஆய்வாளர்களால் கைவிடப்பட்ட விஷயம். அதை தி.மு.க. மேடைகளில் தொடர்ந்து பேசுவது பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒன்று. சென்ற மாதம் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் நடந்த ‘உயிரியல் தொழில் நுட்பத்தின் எல்லைகள்’ என்ற கருத்தரங்கில், காசி ஹிந்து பல்கலைக் கழகத் துணைவேந்தர் லால்ஜி சிங் பேசினார். ..பள்ளிக் கூடங்களில் சொல்லித் தரப்படுகிற ஆரியப் படையெடுப்பு என்ற கருத்துக்கு அடிப்படையே இல்லை. இன்றைய இந்தியர்கள் அனைவருமே கலப்பினம்தான் என்று மரபணு ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆரியரும் திராவிடரும் ஒரே பண்பாட்டின் பிரதிநிதிகள்” என்றார் அவர். பல்கலைக் கழக கருத்தரங்கில் மட்டும் பேசப்பட்ட கருத்து அல்ல இது. தி.மு.க. ஆட்சியின்போது நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டில், ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த அஸ்கோ பர்போலா சிறப்புரையாற்றினார். “தெற்காசியாவின் பண்பாடும் கலாசாரமும் வட இந்தியர்களாலும், திராவிட மொழி பேசும் தென்னிந்தியர்களாலும் ஒன்றாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன” என்றார் அவர். நாடு பிடிக்கும் ஆசைக்காகவும், மத மாற்ற லாபங்களுக்காகவும் தயாரிக்கப்பட்டதுதான் ஆரிய - திராவிட இன வாதம் என்ற நாடகம். இந்த நாடகம், அரிதாரம் வாங்கக் காசில்லாமல், அவையோர் எவருமில்லாமல் இழுத்து மூடப்பட்டு விட்டது. கலைஞர் மட்டும் பழைய வசனங்களையே பேசிக் கொண்டிருக்கிறார். கழகத்தவர் மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். .


.courtesy:Thuglak