Saturday, April 7, 2012

DRAVIDA MAYAI - திராவிட மாயை – ஒரு பார்வை

நீதிக் கட்சியின் தோற்றத்திற்குக் காரணம், 1916- ஆம் ஆண்டு நடந்த தேர்தல் என்பதையும், தோல்வி அடைந்தவர்கள் பிராமண எதிர்ப்பைக் கொள்கையாக வகுத்துக் கொண்டார்கள் என்பதையும் முந்தைய இதழில் பார்த்தோம். 

அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இன்னொரு இயக்கமும் துவக்கப்பட்டது. அது தனித் தமிழ் இயக்கம். திராவிட இயக்க வளர்ச்சிக்குத் தனித் தமிழ் இயக்கமும் ஒரு காரணியாக இருந்தது. எனவே, தனித் தமிழ் இயக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம். 

தமிழ், ஸம்ஸ்க்ருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலவராக இருந்தவர் ஸ்வாமி வேதாசலம். இவர் தமிழ் மீது இருந்த ஆர்வத்தால் தன் பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டார். தமிழ் மொழியை ஸம்ஸ்க்ருதச் சார்பில்லாமல் தனித்து இயங்கச் செய்ய வேண்டும் என்பது அவருடைய நோக்கம். மறைமலை அடிகள் உருவாக்கியதுதான் தனித் தமிழ் இயக்கம். 

துவக்கத்தில், தனித் தமிழ் இயக்கம், நீதிக்கட்சிக்காரர்களோடு முரண்பட்டு இருந்தது. தமிழர்களுடைய கடவுள் சிவன்; தமிழர் சமயம் ஹிந்து சமயத்தைவிடத் தொன்மையானது என்று மறைமலை அடிகள் பேசி வந்தார். பிராமணர் அல்லாதாரை மறைமலை அடிகள் கடத்திக் கொண்டு போய் விடுவாரோ என்று நீதிக்கட்சிக்காரர்கள் பயந்து விட்டார்கள். தவிர, நீதிக்கட்சிக்காரர்களுக்கு ‘திராவிட’ என்று சொல்லிக் கொள்ள வேண்டி நிர்பந்தம் இருந்தது. நீதிக்கட்சித் தலைமையும் தமிழ் அல்லாதாரிடம் சிக்கியிருந்தது. மறைமலை அடிகளுக்கும் நீதிக்கட்சிக்கும் இடையே காரசாரமாக அறிக்கைகள் பறந்தன. கருத்து மோதல் ஏற்பட்டு கைகலப்பு, கலவரம் என்று தொடர்ந்தது. நீதிக்கட்சிக்காரர்களிடம் இருந்த புஜபலம் மறைமலை அடிகளிடம் இல்லை. நாளடைவில் அவருடைய குரல் வலுவிழந்தது. தனித் தமிழ் இயக்கத்தை திராவிட இயக்கம் கபளீகரம் செய்தது. 

மறைமலை அடிகளின் முயற்சி எப்படிப்பட்ட விளைவுகளை உண்டாக்கியது என்பதைத் தெரிந்து கொள்ள, அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த இரண்டு சம்பவங்களைப் பார்த்தாலே போதும். பொதுவுடமையாளர் ஜீவா, மறைமலை அடிகளை நம்பி ஆர்வத்துடன் செயல்பட்டார். ஆனால், மறைமலை அடிகளைச் சந்திக்கச் சென்ற ஜீவாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

தமிழ் மீது உள்ள ஆர்வத்தால் ஜீவா, தன்னுடைய பெயரை ‘உயிர் இன்பன்’ என்று மாற்றிக் கொண்டிருந்தார். மறைமலை அடிகளைச் சந்திப்பதற்காக சென்னையின் புறநகர்ப் பகுதியான பல்லாவரத்துக்குச் சென்றார் ஜீவா. வீட்டின் உள்ளே இருந்த அடிகளார், வாசலில் காலடி ஓசை கேட்டதும் ‘யாரது, போஸ்ட் மேனா?’ என்று கேட்டார். ‘போஸ்ட் மேன்’ என்ற வார்த்தை தமிழ் இல்லையே என்று யோசித்தார் ஜீவா. யோசித்தபடியே உள்ளே சென்றார். மறைமலை அடிகளிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். 

என்ன காரணமாக வந்தீர்கள்?’ என்று கேட்டார் அடிகளார். ஜீவாவால் இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. ‘காரணம் என்பது தமிழ்ச் சொல்லா?’ என்று கேட்டு விட்டார். ‘காரணம் என்பது எந்த மொழிச் சொல் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை’ என்றார் அடிகளார். 

மறைமலை அடிகளின் வீட்டை விட்டு வெளியே வந்த ஜீவா, ‘உயிர் இன்பன்’ என்ற பெயரை உதறி விட்டார். அடுத்து, தமிழில் உள்ள ஸம்ஸ்க்ருதச் சொற்கள் பற்றி, பண்டித மணி கதிரேசன் செட்டியாருக்கும் மறைமலை அடிகளுக்கும் வந்த கருத்து மோதலைப் பார்ப்போம். 

கரந்தை என்ற ஊரில் நடந்த நிகழ்ச்சிக்கு மறைமலையடிகள் தலைமை வகித்தார். அடிகள் பேசும்போது,‘சங்க நூல்கள் எல்லாம் தனித் தமிழ் நூல்கள்; அவை ஸம்ஸ்க்ருதக் கலப்பு இல்லாதவை’ என்று கூறினார். பண்டிதமணி இதற்குப் பதிலுரையாக, ‘கலித்தொகையில் ‘தேறுநீர் சடக்கரந்து திரிபுரம் தீமடுத்து’ என்று முதல் பாடலிலேயே சடை, திரிபுரம் ஆகிய ஸம்ஸ்க்ருதச் சொற்கள் வந்திருக்கின்றனவே’ என்றார். அடிகளார் அடங்குவதாக இல்லை. தேவார, திருவாசகங்கள் தனித் தமிழில் ஆக்கப்பட்டதென்று கூறினார். 

உடனே, பண்டிதமணி எடுத்துக்காட்டாக திருநாவுக்கரசர் எழுதிய தேவாரத்தில் முதல் பதிகத்தில் ‘சலம் பூவோடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்’ என்று இருப்பதைச் சுட்டிக்காட்டினார். சலம்; தூபம் இரண்டும் ஸம்ஸ்க்ருதச் சொற்கள் என்பதையும் இவ்வாறு பல இடங்களில் ஸ்ம்ஸ்க்ருதச் சொற்கள் கையாளப் பெற்றிருக்கின்றன என்பதையும் பண்டிதமணி கூறினார். அடிகளாருக்குக் கோபம் வந்து விட்டது; கோபமாக மேஜையைக் குத்தினார். ‘எனக்கும் ஒரு மேஜை போட்டிருந்தால், இதைவிட வலுவாகக் குத்தி ஓசையை எழுப்பியிருப்பேன்’ என்றார் பண்டிதமணி. 

நூறாண்டுகளுக்கு முன்பு மறைமலை அடிகள் தொடங்கி வைத்ததின் தாக்கம் இன்றும் இருக்கிறது. நீதிக்கட்சியில் தொடங்கிய ஸம்ஸ்க்ருதம் கலவாத பெயர் வைத்துக் கொள்ளும் பழக்கம், மறுமலர்ச்சி தி.மு.க. வரை தொடர்கிறது. பெயர் மாற்ற நடவடிக்கையால் ராஜகோபாலன், சுரதாவாக மாறினார்; நாராயணசுவாமி நெடுஞ்செழியன் ஆக மாறினார். சத்யநாராயணன் ஆற்றலரசாக மாறினார். சின்னராஜு சிற்றரசாக மாறினார். இவ்வளவு தீவிரமாகச் செயல்பட்டவர்கள், சில விஷயங்களை மட்டும் கண்டுகொள்ளவில்லை. சாதிக் பாட்சா விஷயத்தில் சத்தமே இல்லை. நாகூர் ஹனிஃபா விஷயத்தில் நடவடிக்கையே இல்லை. 

இதில் இன்னொரு கொடுமையும் உண்டு. பெயர் வைக்கும்போது ஆங்கிலப் பெயர்கள், ஃப்ரெஞ்சுப் பெயர்கள், அராபியப் பெயர்கள், ரஷ்யப் பெயர்களாக இருந்தால் கூடுதல் மரியாதை உண்டு. பிராட்லா என்ற பெயரை ரசித்தார்கள். ரூசோ என்ற பெயரை விரும்பினார்கள். ட்ராட்ஸ்கி என்ற பெயரை சொந்தமாக்கிக் கொண்டார்கள். ஸ்டாலின் என்ற பெயர் கொண்டவரைத் தூக்கிச் சுமக்கிறார்கள். இப்படியாக திராவிட மாயையில், தனித் தமிழ் மாயை இரண்டறக் கலந்து விட்டது. 

subbupara@yahoo.co.in 

courtesy:Thuglak, current issue.."தனித் தமிழ் மாயை – சுப்பு 
திராவிட மாயை – ஒரு பார்வை - 4"