skip to main |
skip to sidebar
ராஜாஜி
ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது மதுவிலக்கு அமலில் இருந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பெரிய மனிதர்கள் கூடி மது விருந்து நடத்துவது வழக்கம். அப்போது ஐ.ஜி.யாக இருந்தவர் ரெய்ட் செல்ல தீர்மானித்தார். நேராக ராஜாஜியிடம் போய் ரெய்ட் நடத்தப் போகும் விவரத்தைக் கூறினார்.
""தாராளமாக உங்கள் வேலையைச் செய்யுங்கள்'' என்று ராஜாஜி சம்மதம் தெரிவித்தார். அப்போது அந்த ஐ.ஜி. பெரிய மனிதர்கள் பலர் அங்கே இருப்பதைக் கூறினார்.
""அதனால் என்ன?'' என்று கேட்டார் ராஜாஜி. அந்த விருந்தில் ஓர் உயர்நீதிமன்ற நீதிபதியும் இருப்பதைத் தெரிவித்தார் ஐ.ஜி. சிறிது நேரம் யோசித்த ராஜாஜி, ""அந்த நீதிபதியிடம் போய் "முதலமைச்சர் உங்களை அவசரமாகப் பார்க்க விரும்புகிறார். ஏதோ முக்கிய விஷயம் பேச வேண்டுமாம்' என்று சொல்லுங்கள். அவர் அந்த இடத்தை விட்டுக் கிளம்பி வந்தவுடன், நீங்கள் போலீசாருடன் உள்ளே சென்று ரெய்டு நடத்துங்கள்''என்றார்.
அதே போன்று அந்த நீதிபதி ராஜாஜியைப் பார்க்க அவசரமாக வந்தார். அப்போது ராஜாஜி, ""இந்த தடவை நீங்கள் எச்சரிக்கப்படுகிறீர்கள். இன்னொரு தடவை இப்படி நடந்தால் கைது செய்யப்படுவீர்கள்'' என்று கூறி நீதிபதியை அனுப்பி வைத்தார்.
அந்த நீதிபதி மீது எந்தத் தவறும் கூற முடியாது. ஆனால் இந்த குறைபாடு அவரிடமிருந்தது. நீதித்துறை மீது ராஜாஜிக்கு இருந்த மரியாதை காரணமாக அதை இப்படி சாமர்த்தியமாக சமாளித்தார்.
("துக்ளக் 40-வது ஆண்டு விழாவில் சோ கூறியது')