Monday, November 21, 2011

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 6

ஐஸ்டிஸ் கட்சி – ஈ.வெ.ரா. மோதல்! – கே.சி.லட்சுமிநாரயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 6

ஸ்டிஸ் கட்சியினருடன் கடுமையாக மோதுவதற்கு ஈ.வெ.ரா., அண்ணாதுரை தரப்பினர் முற்றிலும் தயாராகி விட்டனர் என்பதைச் சேலம் ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் விவாதிப்பதற்காக, அண்ணாதுரை தயாரித்து அனுப்பிய ஒரு தீர்மானம் தெளிவாக்கியது.


“நம் சமுதாயத்தின் எதிர்கால நலனைக் கோரியும், நம் கட்சியின் தன்மானத்தைக் கோரியும், நமது கட்சியின் பெயரால் இதுவரை நமக்கும் சர்க்காருக்கும் இருந்து வரும் போக்கை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு நாம் தள்ளிக் கொண்டு போகப்பட்டு விட்டோம்” என்ற பீடிகையுடன், அண்ணாதுரையின் தீர்மானம் தொடங்கியது.

அந்தத் தீர்மானத்தின் முழு வடிவம் கீழே தரப்படுகிறது.

“நம் கட்சி தோன்றிய காலம் முதல் இதுவரை நாம் பிரிட்டிஷ் சர்க்காருடன் ஒத்துழைத்து வந்ததும், சர்க்காருடன் ஒத்துழையாமை செய்து சர்க்காருக்குத் தொல்லை கொடுத்து வந்த ஸ்தாபனங்களை எதிர்த்துப் போராடி, சர்க்காருக்கு அனுகூலமான நிலைமையை உண்டாக்க உதவி செய்து வந்ததும், குறிப்பாக சென்ற ஐந்தாண்டுக் காலமாக நடந்து வரும் உலகயுத்தத்தில், நல்ல நெருக்கடியில் நேச நாடுகளின் வெற்றிக்குக் கேடு வரும்படியான நிலையில், நம் நாட்டில் பல ஸ்தாபனங்கள் செய்து வந்த பெரும் கிளர்ச்சியையும் நாச வேலைகளையும் எதிர்த்து அடக்குவதிலும், நேச நாடுகளுக்கு வெற்றி உண்டாக பணம், ஆள், பிரச்சாரம் முதலியவை நிபந்தனையின்றி சர்க்காருக்கு உதவி வந்ததும், சர்க்காராலும் பாமர மக்களாலும் நம் கட்சியை இழிவாகக் கருதப்படத்தக்க நிலை ஏற்படுவதற்குப் பயன்பட்டு விட்டது.

“இந்திய அரசியல் சமூக இயல்பு சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில், சர்க்கார் நம் கட்சியையும், நம் இலட்சியமாகிய திராவிட நாட்டுப் பிரிவினையையும் அலட்சியம் செய்து வருகிறார்கள்.

“இந்திய மக்கள் அரசியல் சமுதாய இயல்பு சம்பந்தமான ஸ்தாபனங்களில் நம் ஸ்தாபனம் குறிப்பிடத்தக்கதாகவும், நீதிநெறி உடையதாகவும் இருந்து, ஒழுங்கு முறைக்குக் கட்டுப்பட்டு சர்க்கார் மெச்சும்படி நடந்து வந்தும், நம் ஸ்தாபனம் சர்க்காரால் மற்ற சாதாரண ஸ்தாபனங்களோடு ஒன்றாகக் கூடச் சேர்த்துப் பேசுவதற்கு இல்லாததாக அலட்சியப் படுத்தப்பட்டது. 
“மாகாண கவர்னராலோ, கவர்னர் ஜெனரலாலோ, இந்திய மந்திரியாலோ, பிரிட்டிஷ் முதல் மந்திரியினாலோ, இந்திய அரசியல் கட்சிகளைப் பற்றிப் பல தடவை பேச்சு ஏற்பட்ட சந்தர்ப்பங்களில், ஒன்று இரண்டு தடவை கூட நம் சமுதாயத்தையோ, நம் ஸ்தாபனத்தையோ, நம் இலட்சியத்தையோ குறிப்பிட, கட்டுப்பாடாய் மறுத்தே வரப்பட்டு இருக்கிறது.

“ஆகவே இப்படிப்பட்ட நிலைமை மாறி, நம் கட்சி நிலை மதிக்கப்படவும், குறிப்பிடவும், மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்தவும், நம் கட்சி இனியும் கட்டுப்பாடும் உரமும் பெற்று உண்மையான தொண்டர்களைக் கொண்டு, நாணயமாகவும், தீவிரமாகவும் தொண்டாற்றி மதிப்புப் பெறவும், நல்ல வசதியும் சௌகரியமும் ஏற்படுவதற்கும் நம் கட்சிக்கு அடியில் கண்ட திட்டம் உடனே அமலுக்குக் கொண்டு வரப்பட வேண்டியது அவசியமும், அவசரமுமான காரியம் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

பதவிகளைக் கைவிடுக! 

“அ. நம் கட்சியில் இருக்கும் அங்கத்தினர்களும், இனியும் வந்து சேர இருக்கும் அங்கத்தினர்களும் சர்க்காரால் தங்களுக்கு அளிக்கப்பட்ட எந்தவிதமான கவுரவப் பட்டங்களையும், உடனே சர்க்காருக்கு வாபஸ் செய்து விட வேண்டும்; இனி ஏற்றுக் கொள்ளவும் கூடாது.

“ஆ. அதுபோலவே, அவர்கள் யுத்தத்திற்காகவும் மற்றும் சர்க்கார் காரியங்களுக்காகவும் மத்திய சர்க்காரிலோ, மாகாண சர்க்காரிலோ, எந்தவிதமான கமிட்டியில் எப்படிப்பட்ட கவுரவ ஸ்தானம், அங்கத்தினர் பதவி, ஆலோசகர் பதவி அளிக்கப்பட்டிருந்தாலும் அவைகளையெல்லாம் உடனடியாக ராஜினாமா செய்துவிட வேண்டியது.

“இ. தேர்தல் அல்லாமல் ஸ்தல ஸ்தாபனம் அதாவது ஜில்லா போர்டு, முனிசிபல் சபை, பஞ்சாயத்து போர்டு ஆகியவைகளின் தலைவர், உபதலைவர், அங்கத்தினர் ஆகிய பதவிகளில், சர்க்காரால் நியமனம் பெற்ற அல்லது நியமனம் பெற்ற அங்கத்தினர்களால் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்கள் யாவரும், தங்கள் பதவிகளை உடனே ராஜினாமா செய்து விட வேண்டியது.

ஈ. சர்க்காரால் தொகுதி வகுக்கப்பட்ட எந்தவிதமான தேர்தலுக்கும், கட்சி அங்கத்தினர்கள் வேட்பாளர்களாக நிற்கக் கூடாது.“இதை ஏற்று ஒரு வாரத்தில் இதன்படி கட்டுப்பட்டு நடக்காதவர்கள் எவரும், தங்களுக்கு இக்கட்சியில் இருக்க இஷ்டம் இல்லை என்று கருதி, கட்சியை விட்டு நீங்கிக் கொண்டவர்களாகக் கருதப்பட வேண்டியவர்கள் ஆவர். 

“கட்சியின் வேலைத் திட்டத்திலும், போக்கிலும் புது முறுக்குத் தரும் நோக்கத்துடன் நான் மேற்கண்ட தீர்மானத்தைச் சேலம் மாநாட்டுக்கு அனுப்பியிருக்கிறேன்.” 

பிறர் சிரிக்கும் நிலை 

மது தீர்மானத்தின் அடிப்படை நோக்கம் என்ன என்பதையும், அண்ணாதுரை எழுதித் தீர்மானத்துடன் அனுப்பியிருந்தார். 

“சர்க்காருக்கு ஒத்து ஊதும் கூட்டம் என்று சதா காலமும் விஷயம் அறியா மக்கள் ஒருபுறம் தூற்றுவதையும்; அடித்தாலும் அழத் தெரியாதவர்கள், மிக நல்லவர்கள் என்று ஆங்கில சர்க்கார் மற்றொரு புறம் தலையில் குட்டவும்; பட்டம் கிட்டுமா, பதவி கிட்டுமா என்று ஆரூடம் பார்ப்பதும்; துரைமார்களிடம் தூது போவதும் தவிர, ‘இதுகளுக்கு’ வேறு என்ன தெரியும் என்று காங்கிரஸார் பேசியும் வருவதைக் கேட்டுக் கேட்டு, உண்மையிலேயே கட்சியின் குறிக்கோளின்படி நடக்கக் கஷ்ட நஷ்டம் ஏற்கும் உறுதி படைத்த வீரர்கள் ஒரு புறமும்; போர் கூடாது, கிளர்ச்சி ஆகாது, தீவிரம் கூடாது என்று கருதும் சீமான்கள் மற்றொரு புறமும் இருந்து கொண்டு, கட்சியை இப்பக்கம் இவரும், அப்பக்கம் அவரும் இழுக்க, இந்த வேடிக்கையைக் கண்டு பிறர் சிரிக்க இருக்கும் நிலைமையைக் கண்டு, நெஞ்சுவலி கொண்டு ஓர் இளைஞன் வெளியிடும் இருதய மொழியே என் தீர்மானம்” என்று அண்ணாதுரை தமது விளக்கக் குறிப்பில் குறிப்பிட்டிருந்தார். “சர்க்காரின் அசட்டை (அலட்சியம்) சகிக்க முடியாததாகி விட்டதோடு, திராவிட இனத்தின் பண்பு எது என்பதை நாமே மறந்து விடும் நிலைமைக்கு நம்மைக் கொண்டு போய் விடுமோ என்று அஞ்ச வேண்டியபடி இருக்கிறது. இந்த நிலைமை மாறித்தான் தீர வேண்டும். இருபுறம் இழுக்கப்படும் தொல்லையிலே கட்சி சிக்கிச் சிதைவது நிற்க வேண்டும். பட்டமும் பதவியும் பெரிதா, உரிமைத் திடமும் விடுதலையும் பெரிதா என்பதற்கு ஒரு பதில் கிடைத்துத்தான் ஆக வேண்டும்” என்றும் அண்ணாதுரை எழுதியிருந்தார். 

“இந்தத் தீர்மானத்துடன், இதையொட்டியும் வேறு பல தீர்மானங்களையும் அனுப்பியிருக்கிறேன். இவைகளுக்குப் பெரியாரின் பூரண ஆதரவு இருக்கிறது என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே ஆங்காங்கு உள்ள திராவிடத் தோழர்கள் இந்த என் தீர்மானத்தைப் பற்றி கலந்து பேசி, இது மாநாட்டிலே நிறைவேற, நமது கட்சியின் போக்கு மாறி நாம் உய்ய வழி கிடைக்கும் வழி காணுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று அண்ணாதுரை நிறைவாகக் கூறி இருந்தார். 

கட்சியின் பெயர் மாற்றம் 
1944 – ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27– ஆம் தேதியன்று சேலம் நகரில், ஜஸ்டிஸ் கட்சி மாநாடு ஈ.வெ.ரா. தலைமையில் நடந்தது. அந்த மாநாட்டில் அண்ணாதுரையின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்று அறிவிக்கப்பட்டது. 


“இம்மாநாடானது ஜஸ்டிஸ் கட்சி என்றழைக்கப்படும் இக்கட்சிக்குள்ள தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம் என்ற பெயரை ‘திராவிடர் கழகம்’ (திராவிடியன் அசோசியேஷன்) என்று பெயர் மாற்றத் தீர்மானிக்கிறது” என்று அறிவித்த மிக முக்கியமான ஒரு தீர்மானமும் சேலம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. 

இந்தத் தீர்மானத்துக்கு எதிர்ப்பும் இருந்தது. மாநாட்டுப் பிரதிநிதிகளில் சிலர் வெளிநடப்புச் செய்தார்கள். மாநாடு முடிந்த பிறகு, அதில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்பட்ட தீர்மானங்கள் செல்லுபடி ஆகா என்றும், ஏனென்றால் அதில் கட்சியினர் பலர் கலந்து கொள்ளவில்லை என்றும் ஜஸ்டிஸ் கட்சியின் ஒரு பிரிவினர் குற்றஞ்சாட்டினார்கள். அவர்கள் ஜஸ்டிஸ் கட்சியைத் தொடர்ந்து நடத்தினார்கள். 

சேலம் மாநாட்டில் ஓர் அரசியல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. திராவிடக் கட்சிகளின் அடிமைப்புத்தி மிக மிக ஆழமானது என்பதைக் காட்டிய, அந்தத் தீர்மானம் பற்றிய விவரம் அடுத்த இதழில். 

(தொடரும்) 

ஆதார நூல்கள்: 
தென்னாட்டு இங்கர்சால் அண்ணாதுரை
எழுதியவர் - கலைச்செல்வன். 
வெளியிட்டோர்: கலைமன்றம், சென்னை-1 (1953).