Thursday, November 22, 2012

தி.மு.க.வும் ஐ.நா. சபையும்... - 'துக்ளக்' சத்யா

தி.மு.க.வும் ஐ.நா. சபையும்... - 'துக்ளக்' சத்யா


[டெசோ தீர்மானங்களின் நகலை ஐ.நா. சபையில் கொடுத்து விட்டுத் திரும்பியுள்ள ஸ்டாலினுக்கும் டி.ஆர். பாலுவுக்கும் தி.மு.க. தரப்பில் வழங்கப்படுகிற பிரமாண்டமான வரவேற்புகள், பாராட்டுகளைக் காணும்போது, இலங்கைத் தமிழர் பிரச்சனையே தீர்ந்து விட்டது போன்ற உணர்வு, பலருக்கு ஏற்பட்டிருக்கக் கூடும். சும்மா மனு கொடுத்து விட்டுத் திரும்பியது ஒரு சாதனையா என்று அற்பத்தனமாகக் கேள்வி கேட்காமல், இந்த வெற்றி(!) குறித்து தி.மு.க. தலைவர்கள் எப்படி மகிழ்ந்திருப்பார்கள் என்று யோசித்துப் பார்த்து, அந்த ஆனந்த ஜோதியில் நாமும் இணைந்து கொள்வோமாக.] 

துரைமுருகன்: 
ஸ்டாலினையும் பாலுவையும் ஐ.நா. சபைக்கு அனுப்ப கலைஞர் முடிவு பண்ணப்பவே நான் நினைச்சேன் - இப்படி மனு கொடுத்துட்டு வெற்றியோட திரும்புவாங்கன்னு. அதே மாதிரி ஆயிடுச்சு. இப்பவே இலங்கைத் தமிழர்களின் பாதி பிரச்னை தீர்திருக்கும். அம்மையாருக்கு ஒரே பொறாமையா இருந்திருக்கும்.

அன்பழகன்:
அம்மையாரை விடுங்க. ராஜபக்சேவே இதை எதிர்பார்த்திருக்க மாட்டாரே! கழகம் ஆட்சியிலே இருந்தப்போ அடங்கி ஒடுங்கி இருந்த மாதிரி இப்பவும் இருந்திடுவோம்னு நினைச்சு ஏமார்ந்திருப்பாரு. இனிமே தமிழர்கள் விசயத்திலே வாலாட்ட மாட்டார். ஐ.நா. சபையிலே மனு கொடுக்கிறதுன்றது சாதாரண விஷயமா?

வீரமணி:
எதிர்க் கட்சி ஆன பிறகும் சூடு சொரணையில்லாம இருக்க முடியுமா? இந்த சமயத்தையும் விட்டுட்டா தமிழினத்தை கலைஞர் எப்பதான் காப்பாத்தறது? இந்த அதிரடி நடவடிக்கையைப் பார்த்து மத்திய அரசே கூட பயந்து போயிருக்கும். இதைத்தான் தமிழ் சமுதாயம் கலைஞர் கிட்டே எதிர்பார்க்குது.

ஆற்காடு வீராசாமி:
சரி, ஐ.நா. துணை பொதுச் செயலாளர் என்ன சொன்னார்? ஆரம்பத்திலேர்ந்து சொல்லுங்க.

ஸ்டாலின்:
வணக்கம் சொன்னோம். அவரும் வணக்கம் சொன்னார். பாலு வணக்கம் சொன்னதும், அவருக்கும் வணக்கம் சொன்னார்.

துரைமுருகன்:
அப்பாடா! அவ்வளவு செலவு பண்ணிட்டு ஐ.நா. போனது வீணாகலை.

ஆற்காடு வீராசாமி:
பின்னே, வணக்கம் சொல்லாம இருப்பாரா? கலைஞர் அனுப்பின ஆளுங்கன்னா ஒரு தனி மரியாதை கொடுத்துத்தானே ஆகணும்? ம்.. அப்புறம்?

ஸ்டாலின்:
டேக் யுவர் ஸீட்ன்னாரு.

பாலு:
சரின்னு உட்கார்ந்தோம். இலங்கைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக ஐ.நா. அதிகாரி முன் அமர்ந்த முதல் தமிழர்கள்ற பெருமை எங்களுக்குத்தான் கிடைச்சது.

அன்பழகன்:
அப்புறம்? கையிலே என்ன மனுன்னு கேட்டிருப்பாரே?

ஸ்டாலின்:
ஆமா. அவர் கேட்டதும் நான் கொடுத்தேன். நான் கொடுத்ததும் அவர் வாங்கிக்கிட்டாரு.

துரைமுருகன்:
ஐ.நா. அதிகாரிகள் எப்பவுமே அப்படித்தான். விரைந்து நடவடிக்கை எடுக்கிறவங்க.

கருணாநிதி:
மனுவிலே என் கையெழுத்தைப் பார்த்திட்டு, யார் கையெழுத்துன்னு கேட்டாரா?

பாலு:
நாங்களே சொன்னோம். இதே கையெழுத்திலேதான் பல படங்களுக்கு கலைஞர் வசனம் எழுதியிருக்காருன்னு சொன்னதும் அவர் ரொம்ப சந்தோஷப்பட்டு, தேங்யூன்னாரு.

கருணாநிதி:
நான் யாருடைய நன்றியையும் எதிர்பார்த்து எதையும் செய்கிறவன் அல்ல. அண்ணா என்னை அப்படி வளர்க்கலை. இருந்தாலும் 'கலைஞருக்கு ஐ.நா. துணைப் பொதுச் செயலாளர் நன்றி'ன்னு முரசொலியிலே இந்தச் செய்தியைப் போட்டுருவோம். மனுவைப் படிச்சுட்டு என்ன கேட்டார்?

ஸ்டாலின்:
எதுக்கு ரெண்டு தடவை டெசோ ஆரம்பிச்சீங்கன்னு கேட்டார். 'இனி டெசோவைத் தொடர்வதால் பயனில்லைன்னு சொல்லி முதல் டெசோவை முடிச்சோம். முடிச்ச பிறகும் பயனில்லைன்னு தெரிஞ்சதும், மறுபடியும் இன்னொரு டெசோவை ஆரம்பிச்சோம். இதனாலேயும் பயனில்லைன்னு புரிஞ்சுக்கற வரைக்கும் இந்த டெசோ தொடரும்'னு அவருக்கு உறுதியளிச்சேன்.

பாலு:
இலங்கைப் பிரச்சனைக்காக கலைஞர் 1956லேர்ந்து குரல் கொடுத்துட்டு வரார்னு நாங்க சொன்னதும் அவருக்கு ஒரே ஆச்சரியம். '56 வருஷமா நிறுத்தாம குரல் கொடுக்கிறது கின்னஸ்லே இடம் பெற வேண்டிய சாதனை. இந்த சாதனை தொடரணும்'னு வாழ்த்தினார். 

கருணாநிதி:
இலங்கைப் பிரச்னைக்காக 1976-லும் 1991-லும் இருமுறை ஆட்சியை இழந்தவன்தான் இந்த கருணாநிதின்னு சொன்னதுக்கு என்ன சொன்னார்?

வீரமணி:
சொல்றதுக்கு என்ன இருக்கிது? இலங்கைப் பிரச்னை தீவிரமடைய ஆரம்பிச்சதே 1980-களிலேதான். அதை முன்னாலேயே உணர்ந்து 1976-லேயே அதுக்காக ஆட்சியை தூக்கி எறிஞ்சிருக்காரேன்னு அதிர்ச்சி அடைஞ்சிருப்பார்.... அப்புறம்? ஐ.நா. மேற்பார்வையிலே பொது வாக்கெடுப்பு நடத்தணும்னு சொன்னீங்களா?

பாலு:
சொன்னோம். உரிய நடவடிக்கை எடுப்போம்னு சொன்னார். தேங்க்யூன்னு நான் சொன்னேன். ஸ்டாலினும் தேங்ஸ் சொன்னார். துணை பொதுச் செயலாளர் 'வெல்கம்'ன்னாரு.

ஆற்காடு வீராசாமி:
ஓ! பொது வாக்கெடுப்பை வரவேற்கிறதாவே சொல்லிட்டாரா? கழகம் இவ்வளவு பெரிய வெற்றியை ஈட்டிய விஷயம் ராஜபக்சேவுக்குத் தெரிஞ்சா அநேகமா தனி ஈழம் கொடுக்கிற முடிவுக்கே வந்துடுவாரு. இலங்கைப் பிரச்னையிலே கழகத்தின் நிலைப்பாடுகளையும், இதுவரை எடுத்த நடவடிக்கைகளையும், அவருக்கு விளக்கிச் சொன்னீங்களா?

பாலு:
ஊஹும். பாவமாயிருந்தது. பாத்தா நல்ல மனுஷனாயிருக்காரு, அவருக்கு எதுக்கு அதெல்லாம்னு விட்டுட்டோம். அவர் மட்டும் நம்ம கோரிக்கைகளை அலட்சியப்படுத்தட்டும், மவனே அப்ப எல்லாத்தையும் பட்டியல் போட்டு அடுத்த தடவை நானே படிச்சுக் காட்டிடறேன்.

ஸ்டாலின்:
ஆனா, முக்கியமா ஒரு விஷயத்தைச் சொல்லணும். எங்களைப் பார்த்ததும், எப்படி அன்பா வரவேற்றாரோ, அதே மாதிரி அன்போடுதான் வழியனுப்பினார். அந்த அளவுக்கு இலங்கைப் பிரச்னையிலே அக்கறை காட்டினார்.

அன்பழகன்:
ஆச்சரியமாயிருக்குதே. இலங்கைப் பிரச்னையிலே நம்மைவிட அதிக அக்கறையோட இருக்காங்க போல இருக்குதே.

துரைமுருகன்:
சிங்கள ராணுவத்தின் போர்க் குற்றம் பத்தி சொன்னீங்களா?

பாலு:
இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றங்களை விசாரிக்க உத்தரவிடும்படி இந்திய அரசு, இன்னும் ஐ.நா. சபையை வலியுறுத்தலை. அதனாலே, தன்னை வலியுறுத்தும்படி ஐ.நா.வே இந்திய அரசை வலியுறுத்தணும்னு கேட்டுக்கிட்டோம்.

துரைமுருகன்:
ஐ.நா. துணைப் பொதுச்செயலாளர் என்ன சொன்னார்?

பாலு:
தலையாட்டினார்.

ஆற்காடு வீராசாமி:
ஐ.நா. அதிகாரிகள் நம்மை மாதிரி இல்லை. எதையும் புரிஞ்சுகிட்டுத்தான் தலையாட்டுவாங்க.

ஸ்டாலின்:
லண்டன் பன்னாட்டுத் தமிழ் மாநாட்டுலேயும் இலங்கைத் தமிழர் நிலையை விளக்கிப் பேசினேன். நான் பேசி முடிச்சதும் அவுங்களுக்கெல்லாம் ஒரே சந்தோஷம்.

துரைமுருகன்:
பேசி முடிச்சதுக்கா?

ஸ்டாலின்:
ஊஹூம். எங்களுக்குத் தெரிஞ்ச விஷயமெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கேன்னு சொல்லி சந்தோஷப்பட்டாங்க. 'இலங்கையில் படுகொலைகள் நடந்தப்போ கழக ஆட்சியிலே இருந்தாலும், ஒவ்வொரு நாளும் எத்தனை படுகொலைகள் நடக்குதுங்கற கணக்கு கலைஞருக்கு வந்துட்டுத்தான் இருந்தது; அதை நினைச்சு மத்திய அரசுக்குத் தெரியாம கலைஞர் ரகசியமா கண்ணீர் விட்டுக் கதறிட்டுத்தான் இருந்தார்'னு விளக்கமா சொன்ன பிறகுதான் இலங்கைத்தமிழர் நலனுக்காக கழகம் இவ்வளவு நடவடிக்கை எடுத்திருக்குதுங்கற விஷயமே அவங்களுக்குப் புரிஞ்சுது.

பாலு:
எங்களைச் சந்தித்த இலங்கை தமிழர்கள் பலர், தி.மு.க. எம்.பி.க்களின் ராஜினாமா கடிதங்களை கலைஞர் வாங்கி, யாருக்கும் கொடுக்காம தானே பத்திரமா வெச்சுகிட்டதுக்காக நன்றி சொன்னாங்க. அவ்வளவு கஷ்டத்திலேயும் அந்த காமெடிதான் ஆறுதலா இருந்ததுன்னாங்க.

வீரமணி:
இலங்கை முகாம்களில் தமிழர்களின் அவல நிலைமையைப் பத்தி சொன்னீங்களா? 

ஸ்டாலின்:
சொன்னேனே. ஏரோப்ளேன்லே வரும் போது நான் பாலுகிட்டே சொன்னேன். ஆமான்னு பாலுவும் என் கிட்ட சொன்னாரு.

கருணாநிதி:
ரெண்டு பேரும் சேர்ந்து வேறே யார் கிட்டேயாவது சொன்னீங்களா?

ஸ்டாலின்:
அதான் உங்க கிட்டே சொல்றோமே.

கருணாநிதி:
சரி, விடுங்க. மனித உரிமை ஆணையத் தலைவர் கிட்டே ஏதாவது சொன்னீங்களா?

பாலு:
சொல்லாம இருப்போமா? அதுக்குத்தானே போனோம்? அவங்களுக்கும் வணக்கம் சொல்லி கை குலுக்கினோம். பதிலுக்கு அவங்களும் கை குலுக்கிப் புன்னகைச்சாங்க.

அன்பழகன்:
அதாவது இலங்கைத் தமிழர் நிலையை அவங்க கவனத்துக்கும் கொண்டு போயிட்டீங்கன்னு சொல்லுங்க. கடைசியா என்ன நடந்தது?

பாலு:
கடைசியா 'அப்ப நாங்க புறப்படறோம்'னு எழுந்து நின்னு சொன்னோம். அவங்களும் எழுந்து நின்னு 'சரி'ன்னாங்க.

கருணாநிதி:
வேறே ஒண்ணும் கேக்கலையா?

ஸ்டாலின்:
உங்களுக்கு என்னதான் வேணும்னு கேட்டாங்க. இந்த மனுவை வாங்கிக்கணும்னு கோரிக்கை வைச்சோம். உடனே மனுவை வாங்கிக்கிட்டு அந்தக் கோரிக்கையை நிறைவேத்திட்டாங்க.

அன்பழகன்:
எனக்கென்னவோ இந்த நடவடிக்கைகளாலே இலங்கைப் பிரச்னை தீருமான்னு சந்தேகமாத்தான் இருக்குது.

கருணாநிதி:
தீரலைன்னாலும் நல்லதுதான். ஸ்டாலினும் பாலுவும் ஐ.நா. சபையில் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்னு இன்னொரு மனு எழுதி, அடுத்த தடவை அழகிரியையும் கனிமொழியையும் ஐ.நா. சபைக்கு அனுப்பலாம். குடும்பப் பிரச்னையாவது கொஞ்சம் தீரும்.

Monday, October 1, 2012

THUGLAK THALAIYANGAM

முடியட்டும் கூடன்குளம் கூத்து 

அமெரிக்காவில் 65 அணுமின் நிலையங்கள் உள்ளன; இவற்றுக்காக 104 வர்த்தக அனுமதிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அங்கு, அணுமின் நிலையங்களுக்கு பத்து கிலோ மீட்டரை விட அருகில் வசித்து வருகிற மக்களின் எண்ணிக்கை 30 லட்சம்.

சரி; அமெரிக்கா என்றாலே நம் நாட்டவருக்கு ஒரு அலர்ஜி; அதனால் அந்நாட்டுக் கணக்கை விடுவோம். உலகிலேயே அதிக அளவில் அணுமின் உற்பத்தியைப்
 பயன்படுத்துகிற நாடு ஃப்ரான்ஸ்; அந்நாட்டின் மின்சாரத் தேவையில் 77 சதவிகிதத்தை அணுமின் நிலையங்கள்தான் பூர்த்தி செய்கின்றன. பெல்ஜியத்தில் 54 சதவிகிதம் அணுமின் உற்பத்தி. ஸ்வீடனில் 40 சதவிகிதம்; ஸ்விட்சர்லாந்தில் 41 சதவிகிதம். இவையெல்லாம் சுற்றுச்சூழல் முதற்கொண்டு, மனித உரிமை வரை பல அடிப்படை விஷயங்களில் மிகவும் அக்கறை செலுத்துகிற நாடுகள். தென் கொரியாவில் 34 சதவிகிதம் அணுமின் உற்பத்தி. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

சரி. இவை எல்லாமே மேற்கத்திய நாடுகள்; அதனால் நல்ல எண்ணம் கொண்ட நாடுகள் அல்ல என்றே வைத்துக் கொண்டு, நம் நாட்டின் மீது மிகவும் ‘நல்லெண்ணம்’ கொண்ட சீனாவைப் பார்ப்போம். அங்கே 40 அணுமின் நிலையங்கள் செயல்படுகின்றன; 51 அணுமின் நிலையங்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் இப்போது 19 அணுமின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. ராஜஸ்தானில் 6, மஹாராஷ்டிரத்தில் 4, குஜராத்தில் 2, கர்நாடகத்தில் 3, தமிழ்நாட்டில் (கல்பாக்கம்) 2, உத்திரப் பிரதேசம் 2.

இது தவிர, இந்தியாவில் இப்போது கர்நாடகத்தில் ஒன்றும், ராஜஸ்தானில் இரண்டும், குஜராத்தில் இரண்டும், மஹாராஷ்டிரத்தில் நான்கும் நிறுவப்பட இருக்கின்றன; இவற்றுடன் கூடன்குளமும் ஒன்று.

உண்மை நிலைமை இப்படியிருக்க, கூடன்குளத்தில் மட்டும் இவ்வளவு ஆர்ப்பாட்டம், அமர்க்களம் ஏன்? கல்பாக்க அணுமின் நிலையம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இயங்கி வருகிறதே? அதனால் மீனோ, மானோ, மனிதனோ பாதிக்கப்படவில்லையே! பல லட்சம் மக்களைக் கொண்ட சென்னைக்கு அருகில் கல்பாக்கம் இருப்பதால், சென்னைக்கு என்ன கேடு வந்தது? கல்பாக்கத்திலேயே பலர் வசிக்கிறார்களே! குழந்தைகள் கூட அங்கேயே இருந்து பள்ளிக்குச் செல்கின்றனவே?

அங்கு ஏற்படாத ஆபத்து, கூடன்குளத்தில் மட்டும் ஏற்படுமா? இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகவும் திறமையான பாதுகாப்பு ஏற்பாடுகள், கூடன்குளத்தில் செய்யப்பட்டிருக்கின்றன என்று விஞ்ஞானிகள் கூறினார்களே?

இப்படியெல்லாம் இருக்க, அங்கே ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்றால் – அதற்கு ஏதோ ஒரு கெட்ட நோக்கம் கொண்ட பின்னணி இருக்கிறது என்றுதான் அர்த்தம். பற்பல நிபுணர்கள் கூறுவதை விட, ஒரு உதயகுமார் கூறுவதுதான் சத்தியம் என்று சில ஆயிரம் மக்கள் எப்படி ஏற்கிறார்கள்? அங்கே ஆர்ப்பாட்டம் மும்முரமாகிறபோது, மாதா கோவில் மணி ஓயாமல் ஒலிப்பது ஏன்?

இதில் ஏதோ சதி இருக்கிறது. இதை முறியடித்து, அணுமின் உற்பத்தியைத் தொடங்குவதற்கு ஆவன செய்வது, மத்திய-மாநில அரசுகளின் கடமை. இப்போது போலீஸார் அராஜகம் பண்ணியதாகக் கூறியிருப்பது பொய்; போலீஸாருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் விளையாடுகிறார்கள். விடுதலைப் புலிகளைப் போல பெண்களையும், குழந்தைகளையும் முன்னிறுத்தி, போலீஸாருடன் மோதுகிறார்கள். அவர்களை ஒடுக்க வேண்டும். ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், அது ஆர்ப்பாட்டத் தலைமையின் பொறுப்பே தவிர, அரசின் தவறு அல்ல.

‘பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தை’ என்கிறார்கள். தமிழக முதல்வர் இவர்களுடைய ‘அச்சங்களை’யும் ‘கவலைகளை’யும் போக்குவதற்காக, இவர்களிடம் பேச்சு நடத்தியாகி விட்டது; பல முயற்சிகளை எடுத்தாகி விட்டது. இனி அவரும் பொறுமை காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

ஆர்ப்பாட்டக்காரர்கள், அணுமின் நிலையத்தையே பாதிக்கிற வகையில் எதுவும் செய்ய மாட்டார்கள் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. நாட்டு வெடிகுண்டை வீசினால் கூட பேராபத்து விளையலாம். அதைத்தான் ஆர்ப்பாட்டத் தலைமை விரும்புகிறது. அதன் பிறகு பழியை ‘விஷமிகள்’ மீதோ, ‘அணுமின் நிலைய ஆதரவாளர்கள்’ மீதோ போட்டுவிட்டு, இந்த ஆர்ப்பாட்டத் தலைமை, தங்களுடைய அடுத்த வேட்டைக்குப் போய்விடலாம். அம்மாதிரி ஏதாவது நடப்பதற்கு முன், அவர்கள் பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டு, அணுமின் நிலையத்திற்குப் பெரிய அளவில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

ஆர்ப்பாட்டக்காரர்கள், சமுத்திரத்தில் இறங்கி விளையாடுகிறார்கள். ‘சமுத்திர ஸ்நானம்’ புண்ணியத்தைத் தரும். ‘ஸாகரம் ஸர்வ பாப ஹரம்’ – ஸமுத்திரம் சகல பாபங்களையும் நாசம் செய்யும் – என்று கூறப்பட்டிருக்கிறது. அந்த பாப நாசத்தை, அவர்கள் பெற்றுக் கொள்ளட்டும். மற்றவர்கள், மின்சாரத்தைப் பெறுவோம்.

முடியட்டும், ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடன்குளம் கூத்து

THUGLAK KELVI BADHIL

கே: ‘கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களுக்கு, அன்னா ஹஸாரே குழு உறுப்பினர் கெஜ்ரிவால் ஆதரவு அளித்துள்ளது பற்றி...?

ப: தான் நிற்கிற இடத்தில் ஒரு கூட்டம் கூடுகிறது என்பதை டெலிவிஷனில் அடிக்கடி பார்ப்பதில், கெஜ்ரிவாலுக்கு ஆசை வந்து விட்டது. அதனால் எங்கெங்கு கூட்டம் சேருகிறதோ, அங்கெல்லாம் போய் நின்று விடுவார் போலிருக்கிறது. இப்பொழுது கூடன்குளத்தில் ஒரு கூட்டத்தைப் பார்த்தார்; அங்கு போய் நின்று கொண்டு விட்டார். அடுத்து சென்னை, மைலாப்பூரில் அறுபத்து மூவர் விழாவில் கூட்டம் சேருகிறபோது, அதற்கு முன்னால் போய் நின்று கொண்டு, ‘இவ்வளவு பேர் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஊழலை எதிர்க்கிறார்கள். இவர்கள் எல்லாம் என்னுடைய புதிய கட்சிக்கு ஆதரவு தருகிறார்கள்’ என்று சொன்னாலும் சொல்வார்.

Wednesday, August 29, 2012

RESERVATION IN PROMOTION - CHO

இந்த வார துக்ளக்கில் வெளியான சோ எழுதிய இட ஒதுக்கீடு குறித்த கட்டுரை:

"அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதிலும், எஸ் ஸி, எஸ் எஸ் டி., பிரிவினருக்க்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற உள்ளார்களாமே? " என்று தஞ்சாவூரில் இருந்து மூக்கையா ஒரு கேள்வி அனுப்பியுள்ளார். வேறு சில வாசகர்களும் இது பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது போன்ற விசயம், 2001 இல் பாராளுமன்றத்தில் பேசப்பட்டு, இரு சபைகளிலும் நிறைவேறி, அரசியல் சட்டத் திருத்தம் வந்தது. இரு சபைகளையும் சேர்ந்தவர்கள் ம்சோதாவை எதிர்க்கவில்லை; எதிர்த்து வாக்களித்த ஒரே உறுப்பினர் நான் தான்.

இப்போதும் என் அபிப்ராயத்தில் மாற்றமில்லை. அன்று நடந்ததை, இப்போது நினைவுகூர்ந்து பொருத்தமாக இருக்கும் என்ற எண்ணத்தில் 19-12-2001 துக்ளக் இதழில் பிரசுரமானதை வாசகர்களுக்கு நினைவுபடுத்துகிறேன். 

அரசு ஊழியத்தில் இருப்பவர்கள் ப்ரமோஷன்கள் மற்றும் சீனியாரிட்டி பெறுவதில் இட ஒதுக்கீடு கூடாது என்று சுப்ரீம் கோர்ட் ஒரு வழக்கில் தீர்ப்பளித்தது. இந்த மாதிரியான இட ஒதுக்கீடு, அரசியல் சட்டத்திற்கு முரணானது என்றும் அந்த தீர்ப்பு கூறியது; இதற்குப் பிறகும் இந்த இட ஒதுக்கீடு முறையை தொடர்வது என்றால், அரசியல் சட்டட்த்தை திருத்தியாக வேன்டும் என்ற நிலை தோன்றியது. அனைத்துக் கட்சிகளும் இப்படி அரசியல் சட்டம் திருத்தப்படுவதை ஆதரிக்கிற நிலை இருப்பதால், மத்திய அரசு இதற்கான அரசியல் சட்டத் திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. லோக் சபாவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த அரசியல் சட்டத் திருத்த மசோதா, அதன் பிறகு ராஜ்யசபைக்கு வந்தது.

சென்ற ஐந்தாம் தேதி ராஜ்ய சபையில் இது விவாதிக்கப்பட்டது. அனைத்து கட்சியினரும் மசோதாவை வரவேற்றுப் பேசினார்கள். எனக்கு சந்தர்ப்பம் கிட்டியது. நான் மசோதாவை எதிர்த்து பேசினேன். அந்தப் பேச்சின் சாரம்சம் இதோ:

" இது ஒரு விவேகமில்லாத நடவடிக்கை. தழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள முயல்வதற்கு இது உத‌வாது. அதிகார வர்க்கத்தின் நல்ல மனநிலைக்கும் இது உதவாது. பணிகளில் நியமனம் பெறுவதற்கு இட ஒதுக்கீடு இருப்பது புரிந்து கொள்ளக் கூடியதே. துரதிஷ்ட வசமாக சில நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டவர்கள் , நியமனங்களில் முன்னுரிமை பெறுவது அவர்களுக்குத் தரப்படுகிற சலுகை அல்ல. அவர்கள் பெறுகிற உரிமை. ஆனால் நியமனத்திற்கு பிறகு சீனியாரிட்டியை அடைவதிலும், ப்ரமோஷன்களைப் பெறுவதிலும் மற்றவர்கலுடன் போட்டியிடவே அவர்களை ஊக்குவிக்க வேண்டும். சீனியாரிட்டி என்பது பணியின் மூலமாக பெறவேண்டியதே தவிர, தரப்படுவது அல்ல. 

உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினரின் நிலையை உயர்த்த வேண்டும் என்று அரசு நினைத்தால்- அப்போது அதற்கான முயற்சியை ஆரம்பப் பள்ளியிலிருந்து தொடங்க வேண்டும். மிகச் சிறந்த கல்வி அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடி மக்கள்- ஆகியோரிடையே ஏழ்மை மலிந்து கிடப்பதால், அவர்கள் சிறிய வயதிளேயே வேலைக்கு போய் விடுகிறார்கள் அல்லது படிப்பை பாதியில் நிறுத்தி விடுகிறார்கள் அல்லது இருப்பதற்குள் மட்டமான பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். ஆகையால் மற்றவர்களோடு போட்டியிட அவர்கலுக்கு வழி செய்கிற வகையில், ஆரம்பப் பள்ளியிலிருந்து மிகச் சிறந்த கல்வியை அவர்கள் பெறுவதற்கான வழிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும். இப்படிச் செய்தால் அவர்களுக்குத் தன்னம்பிக்கையும் சுய மரியாதையும் வளரும்; நல்ல நிலையை எட்டிய முழுமையான திருப்தியும் அவர்களுக்கு ஏற்படும்.

மாறாக பிரமோஷன்களிலும் இட ஒதுக்கீடு என்பது போன்ற வழிமுறைகளினால் பயன் பெறுபவர்களிடையே அக்கறை இன்மையும, மிகச் சுலபமாக திருப்தி அடைந்து விடுகிற மன்ப்போக்கையும் வளர்த்து விடும். உண்மையில் பார்க்கப் போனால், அவர்கள் தகுதியைப் பெருவதற்கும், திறமையை வளர்த்துக் கொள்வதற்கும் இந்த மாதிரி வழிமுறைகள் தடங்கலாகவே இருக்கும் 

அது மட்டுமல்லாமல், அரசு ஊழியத்தில் உள்ளவர்களின் நம்பிக்கையையும் இது நாசம் செய்யும். கடுமையாக உழைக்கிற நேர்மையான ஊழியர், ஒரு குறிப்பிட்ட வகுப்பில் பிறக்கவில்லை என்ற காரணத்திற்காக ஓரம் கட்டப்படுகிற போது, அவருடைய தன்னம்பிக்கை எந்த அளவில் இருக்கும் ? அம்மாதிரியான ஊழியர்கள் தங்கள் பிறப்பினால் ஏற்படுகிற சுமையை, பணியிலிருந்து ஓய்வு பெறும் வரையில் தாங்கிக் கொள்ள வேண்டியதுதானா? இது முழுமையான அநீதி

நீதித் துறைக்கு காட்டப்பட வேண்டிய மரியாதை பற்றி நாம் பேசுகிறோம். அயோத்தி விவகாரம் என்றால், நீதித் துறையின் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும். ஆனால் இட ஒதுக்கீடு விவகாரம் என்றால், நீதித் துறையின் தீர்ப்பு குப்பையில் தூக்கி எறியப்பட வேண்டும். இதில் இருக்கிற நியாயத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அரசு பணிகளில் உள்ளவர்களின் நம்பிக்கையைக் குலைப்பதும், கடுமையாக உழைக்கக் கூடிய இளைஞர்கள் அரசு பணிக்குச் செல்ல விரும்பாத நிலையைத் தோற்றுவிப்பதுமான இந்த விவேகமற்ற நடவடிக்கை, யாருடைய பயனுக்காகக் கொண்டு வரப்படுகிறதோ, அவர்களுடைய அக்கறையின்மையைத்தான் வளர்க்கும். ஆகையால் இந்த மசோதாவை எதிர்க்கிறேன்".

நான் ஒருவன் இப்படி இதை எதிர்க்க, மற்ற எல்லோரும் ஆதரிக்க விவாதம் முடிவு பெற்று, ஓட்டு எடுப்பு நடந்தது. மசோதாவுக்கு ஆதரவு- 165; எதிர்ப்பு- 1. அந்த ஒன்று நான் தான். மசோதா நிறைவேறியது.

பின்னர் வெளியே வந்த பிறகு, பல்வேறு கட்சிகளை சேர்ந்த சில எம் பி க்கள் எனக்குப் பாராட்டுத் தெரிவித்தனர். "நாங்கள் எல்லாம் இம்மாதிரி பேச முடியாது... எங்கள் சார்பில் நீ பேசியதாக எடுத்துக் கொண்டு உனக்கு நன்றி சொல்கிறோம்" என்றெல்லாம் அவர்கள் கூறினார்கள்.

என்னைப் பொறுத்த வரையில் என்னுடைய எண்ணத்தை நான் சொன்னேன். ஜனநாயகத்தில் எண்ணிக்கைக்கு இருக்கிற வலிமை எண்ணத்திற்கு கிடையாது என்பதால் அது படு தோல்வியுற்றது. சுபம்

Saturday, June 23, 2012

ORU AASPATHIRIYIL ORU APPAVI - ஒரு ஆஸ்பத்திரியில் ஒரு அப்பாவி

Right click the image and open it in a new window for full image.





Saturday, April 7, 2012

DRAVIDA MAYAI - திராவிட மாயை – ஒரு பார்வை

திராவிடர்கள் மீது கடவுள் சிந்தனை திணிக்கப்பட்டதா? – சுப்பு 

திராவிட மாயை – ஒரு பார்வை -


பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்’ என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் டி.எம். நாயர் அழைப்பு விடுத்ததாகவும், அதையே தான் மீண்டும் கூறுவதாகவும் கருணாநிதி உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதினார்.

திராவிட இயக்க வரலாற்றை அறிவதற்கு முன்பு, அதில் டி.எம். நாயரின் பங்களிப்பைத் தெரிந்து கொள்வோம்.

இந்திய சட்டமன்றத்திற்கான தேர்தல் 1916-ல் நடந்தபோது, டி.எம். நாயர் வேட்பாளராகப் போட்டியிட்டார். மகாத்மா காந்தியின் நண்பர் என்று அறியப்பட்ட வி.எஸ். சீனிவாச சாஸ்திரியாரால் தோற்கடிக்கப்பட்டார். இதே தேர்தலில் நில உரிமையாளர்களுக்கான தொகுதியில் போட்டியிட்ட பி. இராமராயலிங்கரும், பிற தொகுதிகளில் போட்டியிட்ட பிட்டி. தியாகராய செட்டியாரும், கே.வி. ரெட்டி நாயுடுவும் தோற்கடிக்கப்பட்டனர்.

வெகுஜன ஆதரவு இல்லாத காரணத்தால், தேர்தலில் தோல்வி அடைந்த இவர்கள் கூடி, தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்தார்கள். பிராமணர்கள்தான் தங்களைத் தடுத்து விட்டார்கள் என்பது அவர்களுடைய கண்டுபிடிப்பு. எனவே, பிராமண எதிர்ப்பு என்ற கொள்கையை வகுத்துக் கொண்டார்கள். இப்படி அமைந்ததுதான் ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’. இந்த அமைப்புதான் ‘ஐஸ்டிஸ்’ என்ற நாளிதழையும் நடத்தியது. நாளடைவில், தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை பொதுமக்கள் ஐஸ்டிஸ் கட்சி என்றும், நீதிக் கட்சி என்றும் அழைத்தனர்.

தேசிய எழுச்சிக்குத் தடை போட முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஆங்கில ஆட்சியாளர்கள், நீதிக் கட்சியின் வளர்ச்சிக்கு உதவினார்கள்.

டி.எம்.நாயர், அக்.7, 1917-ல் நிகழ்த்திய சொற்பொழிவு திராவிட இயக்கத்தவரால் சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. சென்னை நகரத்தின் ஸ்பர்டாங்க் சாலைப் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். அந்தச் சொற்பொழிவை ‘வரலாற்றுச் சிறப்புமிக்க வீரஞ் செறிந்த, எழுச்சிமிக்க, உணர்ச்சி ஊட்டக் கூடிய சொற்பொழிவு’ என்று தமது ‘திராவிட இயக்க வரலாறு’ என்னும் புத்தகத்தில் வர்ணனை செய்கிறார் இரா.நெடுஞ்செழியன். இந்த உரை திராவிட இயக்கத்தவரின் கொள்கை விளக்க அறிக்கையாகக் கருதப்படுகிறது. ஆகவே, அதை விவரமாகப் பார்க்கலாம். 

DRAVIDA MAYAI - திராவிட மாயை – ஒரு பார்வை

திராவிட இயக்க நூற்றாண்டுத் துவக்க விழாவில் பேசிய கலைஞர் மு.கருணாநிதி, ‘திராவிட’ என்ற சொல்லை தானோ, பேராசிரியர் அன்பழகனோ உருவாக்கவில்லை என்றார். இந்திய நாட்டின் தேசிய கீதம் ‘ஜன கண மன’ என்ற பாடலை எழுதிய ரபீந்த்ரநாத் தாகூர் ‘திராவிட உத்கல வங்கா’ என்று எழுதியிருப்பதை அவர் சுட்டிக் காட்டியபோது, அங்கிருந்த உடன்பிறப்புகள் ஆர்ப்பரித்தார்கள். திராவிட இயக்கங்கள் தோன்றுவதற்கு முன்பே, இந்த மண்ணில் திராவிடம் என்ற சொல் புழக்கத்தில் இருந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆசார்யரான ஸ்ரீவேதாந்த தேசிகர், ‘த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி’ என்ற நூலை எழுதியிருக்கிறார்.

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில், தென்னிந்திய மொழிகளை, ‘திராவிட மொழிகள்’ என்று அழைக்கும் ஆய்வு வெளி வந்தது. ஃபிரான்ஸிஸ் வைட் எல்லீஸ் என்ற கலெக்டர் (1777-1789) செய்த ஆராய்ச்சியின் விளைவு இது. இவரைத் தொடர்ந்து வந்தவர்தான் ராபர்ட் கால்டுவெல். இந்தியர்களைப் பிரித்து, இந்தியாவை ஆள வேண்டும் என்ற ஆங்கிலேயரின் கொள்கைக்கு ஏற்றபடி, இவர் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டார். இவருடைய முயற்சியால் திராவிட இனம் என்ற கருத்து பரவலாக்கப்பட்டது.

‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்று தொடங்கி, சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெருகி, இன்று மேலும் பிளவுபட்டு இருக்கும் திராவிட இயக்கங்களின் தத்துவ ஆசான் கால்டுவெல்தான். இந்த இயக்கங்களின் அடிப்படையான ‘திராவிட இனம்’ என்ற கருத்தாக்கம் கால்டுவெல்லின் கற்பனையில் உருவானதுதான்.... மொழி உணர்வு என்பது ஒற்றுமைக்குப் பயன்பட வேண்டும். அதை வேற்றுமைக்கெனப் பயன்படுத்தியதுதான் கழகத்தவர்களின் சாதனை. திராவிட இயக்க நூற்றாண்டு துவக்க விழாவில் கருணாநிதி, உ.வே.சாமிநாத ஐயரைச் சுட்டிக் காட்டினார். ஆனால், மொழி உணர்வு பற்றி, உ.வே.சா. கூறியதைப் பார்க்கலாம்:

1937-ஆம் வருடம் நடந்த இந்திய இலக்கியக் கழகத்தின் முதல் மாநாட்டில், டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் வரவேற்புரை நிகழ்த்தினார். அந்த உரையில் “இந்த பாரதீய சாகித்ய பரிஷத்தின் நோக்கம் எவ்வளவு உயர்ந்தது! இதன் முயற்சிகளால் குறுகிய நோக்கங்களும், சிறு வேறுபாடுகளும் ஒழிந்து தமிழர்களுள் ஒற்றுமை, திராவிட பாஷா சமூகத்தாருள் ஒற்றுமை, பாரதீய பாஷா சமூகத்தாருள் ஒற்றுமை ஆகிய மூன்றும் ஒன்றன்பின் ஒன்றாக உண்டாகுமென்றே நம்புகிறேன்” என்றார்.

இந்திய மக்களை ஒற்றுமைப் படுத்த வேண்டும், அதற்கு மொழி உணர்வைப் பயன்படுத்த வேண்டும் என்று முனைந்த தமிழ்த் தாத்தாவின் உயர்ந்த நோக்கத்தை, தமிழர் பண்பாடு என்று ஏற்றுக் கொள்ளலாம். தகர டப்பாவில் தாரை நிரப்பிக் கொண்டு, மொழிகளுக்கிடையே பகைமையை மூட்டிய கழகத்தவரின் செயலை ஏற்றுக் கொள்ள முடியுமா? ஆரிய திராவிட இன வேறுபாடு என்ற கோட்பாடு, வரலாற்று ஆய்வாளர்களால் கைவிடப்பட்ட விஷயம். அதை தி.மு.க. மேடைகளில் தொடர்ந்து பேசுவது பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒன்று. சென்ற மாதம் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் நடந்த ‘உயிரியல் தொழில் நுட்பத்தின் எல்லைகள்’ என்ற கருத்தரங்கில், காசி ஹிந்து பல்கலைக் கழகத் துணைவேந்தர் லால்ஜி சிங் பேசினார். ..



பள்ளிக் கூடங்களில் சொல்லித் தரப்படுகிற ஆரியப் படையெடுப்பு என்ற கருத்துக்கு அடிப்படையே இல்லை. இன்றைய இந்தியர்கள் அனைவருமே கலப்பினம்தான் என்று மரபணு ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆரியரும் திராவிடரும் ஒரே பண்பாட்டின் பிரதிநிதிகள்” என்றார் அவர். பல்கலைக் கழக கருத்தரங்கில் மட்டும் பேசப்பட்ட கருத்து அல்ல இது. தி.மு.க. ஆட்சியின்போது நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டில், ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த அஸ்கோ பர்போலா சிறப்புரையாற்றினார். “தெற்காசியாவின் பண்பாடும் கலாசாரமும் வட இந்தியர்களாலும், திராவிட மொழி பேசும் தென்னிந்தியர்களாலும் ஒன்றாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன” என்றார் அவர். நாடு பிடிக்கும் ஆசைக்காகவும், மத மாற்ற லாபங்களுக்காகவும் தயாரிக்கப்பட்டதுதான் ஆரிய - திராவிட இன வாதம் என்ற நாடகம். இந்த நாடகம், அரிதாரம் வாங்கக் காசில்லாமல், அவையோர் எவருமில்லாமல் இழுத்து மூடப்பட்டு விட்டது. கலைஞர் மட்டும் பழைய வசனங்களையே பேசிக் கொண்டிருக்கிறார். கழகத்தவர் மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். .


.courtesy:Thuglak

DRAVIDA MAYAI - திராவிட மாயை – ஒரு பார்வை

திராவிடர்கள் மீது கடவுள் சிந்தனை திணிக்கப்பட்டதா? – சுப்பு 

திராவிட மாயை – ஒரு பார்வை -


பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்’ என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் டி.எம். நாயர் அழைப்பு விடுத்ததாகவும், அதையே தான் மீண்டும் கூறுவதாகவும் கருணாநிதி உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதினார்.

திராவிட இயக்க வரலாற்றை அறிவதற்கு முன்பு, அதில் டி.எம். நாயரின் பங்களிப்பைத் தெரிந்து கொள்வோம்.

இந்திய சட்டமன்றத்திற்கான தேர்தல் 1916-ல் நடந்தபோது, டி.எம். நாயர் வேட்பாளராகப் போட்டியிட்டார். மகாத்மா காந்தியின் நண்பர் என்று அறியப்பட்ட வி.எஸ். சீனிவாச சாஸ்திரியாரால் தோற்கடிக்கப்பட்டார். இதே தேர்தலில் நில உரிமையாளர்களுக்கான தொகுதியில் போட்டியிட்ட பி. இராமராயலிங்கரும், பிற தொகுதிகளில் போட்டியிட்ட பிட்டி. தியாகராய செட்டியாரும், கே.வி. ரெட்டி நாயுடுவும் தோற்கடிக்கப்பட்டனர்.

வெகுஜன ஆதரவு இல்லாத காரணத்தால், தேர்தலில் தோல்வி அடைந்த இவர்கள் கூடி, தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்தார்கள். பிராமணர்கள்தான் தங்களைத் தடுத்து விட்டார்கள் என்பது அவர்களுடைய கண்டுபிடிப்பு. எனவே, பிராமண எதிர்ப்பு என்ற கொள்கையை வகுத்துக் கொண்டார்கள். இப்படி அமைந்ததுதான் ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’. இந்த அமைப்புதான் ‘ஐஸ்டிஸ்’ என்ற நாளிதழையும் நடத்தியது. நாளடைவில், தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை பொதுமக்கள் ஐஸ்டிஸ் கட்சி என்றும், நீதிக் கட்சி என்றும் அழைத்தனர்.

தேசிய எழுச்சிக்குத் தடை போட முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஆங்கில ஆட்சியாளர்கள், நீதிக் கட்சியின் வளர்ச்சிக்கு உதவினார்கள்.

டி.எம்.நாயர், அக்.7, 1917-ல் நிகழ்த்திய சொற்பொழிவு திராவிட இயக்கத்தவரால் சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. சென்னை நகரத்தின் ஸ்பர்டாங்க் சாலைப் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். அந்தச் சொற்பொழிவை ‘வரலாற்றுச் சிறப்புமிக்க வீரஞ் செறிந்த, எழுச்சிமிக்க, உணர்ச்சி ஊட்டக் கூடிய சொற்பொழிவு’ என்று தமது ‘திராவிட இயக்க வரலாறு’ என்னும் புத்தகத்தில் வர்ணனை செய்கிறார் இரா.நெடுஞ்செழியன். இந்த உரை திராவிட இயக்கத்தவரின் கொள்கை விளக்க அறிக்கையாகக் கருதப்படுகிறது. ஆகவே, அதை விவரமாகப் பார்க்கலாம். 

DRAVIDA MAYAI - திராவிட மாயை – ஒரு பார்வை

நீதிக் கட்சியின் தோற்றத்திற்குக் காரணம், 1916- ஆம் ஆண்டு நடந்த தேர்தல் என்பதையும், தோல்வி அடைந்தவர்கள் பிராமண எதிர்ப்பைக் கொள்கையாக வகுத்துக் கொண்டார்கள் என்பதையும் முந்தைய இதழில் பார்த்தோம். 

அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இன்னொரு இயக்கமும் துவக்கப்பட்டது. அது தனித் தமிழ் இயக்கம். திராவிட இயக்க வளர்ச்சிக்குத் தனித் தமிழ் இயக்கமும் ஒரு காரணியாக இருந்தது. எனவே, தனித் தமிழ் இயக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம். 

தமிழ், ஸம்ஸ்க்ருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலவராக இருந்தவர் ஸ்வாமி வேதாசலம். இவர் தமிழ் மீது இருந்த ஆர்வத்தால் தன் பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டார். தமிழ் மொழியை ஸம்ஸ்க்ருதச் சார்பில்லாமல் தனித்து இயங்கச் செய்ய வேண்டும் என்பது அவருடைய நோக்கம். மறைமலை அடிகள் உருவாக்கியதுதான் தனித் தமிழ் இயக்கம். 

துவக்கத்தில், தனித் தமிழ் இயக்கம், நீதிக்கட்சிக்காரர்களோடு முரண்பட்டு இருந்தது. தமிழர்களுடைய கடவுள் சிவன்; தமிழர் சமயம் ஹிந்து சமயத்தைவிடத் தொன்மையானது என்று மறைமலை அடிகள் பேசி வந்தார். பிராமணர் அல்லாதாரை மறைமலை அடிகள் கடத்திக் கொண்டு போய் விடுவாரோ என்று நீதிக்கட்சிக்காரர்கள் பயந்து விட்டார்கள். தவிர, நீதிக்கட்சிக்காரர்களுக்கு ‘திராவிட’ என்று சொல்லிக் கொள்ள வேண்டி நிர்பந்தம் இருந்தது. நீதிக்கட்சித் தலைமையும் தமிழ் அல்லாதாரிடம் சிக்கியிருந்தது. மறைமலை அடிகளுக்கும் நீதிக்கட்சிக்கும் இடையே காரசாரமாக அறிக்கைகள் பறந்தன. கருத்து மோதல் ஏற்பட்டு கைகலப்பு, கலவரம் என்று தொடர்ந்தது. நீதிக்கட்சிக்காரர்களிடம் இருந்த புஜபலம் மறைமலை அடிகளிடம் இல்லை. நாளடைவில் அவருடைய குரல் வலுவிழந்தது. தனித் தமிழ் இயக்கத்தை திராவிட இயக்கம் கபளீகரம் செய்தது. 

மறைமலை அடிகளின் முயற்சி எப்படிப்பட்ட விளைவுகளை உண்டாக்கியது என்பதைத் தெரிந்து கொள்ள, அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த இரண்டு சம்பவங்களைப் பார்த்தாலே போதும். பொதுவுடமையாளர் ஜீவா, மறைமலை அடிகளை நம்பி ஆர்வத்துடன் செயல்பட்டார். ஆனால், மறைமலை அடிகளைச் சந்திக்கச் சென்ற ஜீவாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

தமிழ் மீது உள்ள ஆர்வத்தால் ஜீவா, தன்னுடைய பெயரை ‘உயிர் இன்பன்’ என்று மாற்றிக் கொண்டிருந்தார். மறைமலை அடிகளைச் சந்திப்பதற்காக சென்னையின் புறநகர்ப் பகுதியான பல்லாவரத்துக்குச் சென்றார் ஜீவா. வீட்டின் உள்ளே இருந்த அடிகளார், வாசலில் காலடி ஓசை கேட்டதும் ‘யாரது, போஸ்ட் மேனா?’ என்று கேட்டார். ‘போஸ்ட் மேன்’ என்ற வார்த்தை தமிழ் இல்லையே என்று யோசித்தார் ஜீவா. யோசித்தபடியே உள்ளே சென்றார். மறைமலை அடிகளிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். 

என்ன காரணமாக வந்தீர்கள்?’ என்று கேட்டார் அடிகளார். ஜீவாவால் இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. ‘காரணம் என்பது தமிழ்ச் சொல்லா?’ என்று கேட்டு விட்டார். ‘காரணம் என்பது எந்த மொழிச் சொல் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை’ என்றார் அடிகளார். 

மறைமலை அடிகளின் வீட்டை விட்டு வெளியே வந்த ஜீவா, ‘உயிர் இன்பன்’ என்ற பெயரை உதறி விட்டார். அடுத்து, தமிழில் உள்ள ஸம்ஸ்க்ருதச் சொற்கள் பற்றி, பண்டித மணி கதிரேசன் செட்டியாருக்கும் மறைமலை அடிகளுக்கும் வந்த கருத்து மோதலைப் பார்ப்போம். 

கரந்தை என்ற ஊரில் நடந்த நிகழ்ச்சிக்கு மறைமலையடிகள் தலைமை வகித்தார். அடிகள் பேசும்போது,‘சங்க நூல்கள் எல்லாம் தனித் தமிழ் நூல்கள்; அவை ஸம்ஸ்க்ருதக் கலப்பு இல்லாதவை’ என்று கூறினார். பண்டிதமணி இதற்குப் பதிலுரையாக, ‘கலித்தொகையில் ‘தேறுநீர் சடக்கரந்து திரிபுரம் தீமடுத்து’ என்று முதல் பாடலிலேயே சடை, திரிபுரம் ஆகிய ஸம்ஸ்க்ருதச் சொற்கள் வந்திருக்கின்றனவே’ என்றார். அடிகளார் அடங்குவதாக இல்லை. தேவார, திருவாசகங்கள் தனித் தமிழில் ஆக்கப்பட்டதென்று கூறினார். 

உடனே, பண்டிதமணி எடுத்துக்காட்டாக திருநாவுக்கரசர் எழுதிய தேவாரத்தில் முதல் பதிகத்தில் ‘சலம் பூவோடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்’ என்று இருப்பதைச் சுட்டிக்காட்டினார். சலம்; தூபம் இரண்டும் ஸம்ஸ்க்ருதச் சொற்கள் என்பதையும் இவ்வாறு பல இடங்களில் ஸ்ம்ஸ்க்ருதச் சொற்கள் கையாளப் பெற்றிருக்கின்றன என்பதையும் பண்டிதமணி கூறினார். அடிகளாருக்குக் கோபம் வந்து விட்டது; கோபமாக மேஜையைக் குத்தினார். ‘எனக்கும் ஒரு மேஜை போட்டிருந்தால், இதைவிட வலுவாகக் குத்தி ஓசையை எழுப்பியிருப்பேன்’ என்றார் பண்டிதமணி. 

நூறாண்டுகளுக்கு முன்பு மறைமலை அடிகள் தொடங்கி வைத்ததின் தாக்கம் இன்றும் இருக்கிறது. நீதிக்கட்சியில் தொடங்கிய ஸம்ஸ்க்ருதம் கலவாத பெயர் வைத்துக் கொள்ளும் பழக்கம், மறுமலர்ச்சி தி.மு.க. வரை தொடர்கிறது. பெயர் மாற்ற நடவடிக்கையால் ராஜகோபாலன், சுரதாவாக மாறினார்; நாராயணசுவாமி நெடுஞ்செழியன் ஆக மாறினார். சத்யநாராயணன் ஆற்றலரசாக மாறினார். சின்னராஜு சிற்றரசாக மாறினார். இவ்வளவு தீவிரமாகச் செயல்பட்டவர்கள், சில விஷயங்களை மட்டும் கண்டுகொள்ளவில்லை. சாதிக் பாட்சா விஷயத்தில் சத்தமே இல்லை. நாகூர் ஹனிஃபா விஷயத்தில் நடவடிக்கையே இல்லை. 

இதில் இன்னொரு கொடுமையும் உண்டு. பெயர் வைக்கும்போது ஆங்கிலப் பெயர்கள், ஃப்ரெஞ்சுப் பெயர்கள், அராபியப் பெயர்கள், ரஷ்யப் பெயர்களாக இருந்தால் கூடுதல் மரியாதை உண்டு. பிராட்லா என்ற பெயரை ரசித்தார்கள். ரூசோ என்ற பெயரை விரும்பினார்கள். ட்ராட்ஸ்கி என்ற பெயரை சொந்தமாக்கிக் கொண்டார்கள். ஸ்டாலின் என்ற பெயர் கொண்டவரைத் தூக்கிச் சுமக்கிறார்கள். இப்படியாக திராவிட மாயையில், தனித் தமிழ் மாயை இரண்டறக் கலந்து விட்டது. 

subbupara@yahoo.co.in 

courtesy:Thuglak, current issue.."தனித் தமிழ் மாயை – சுப்பு 
திராவிட மாயை – ஒரு பார்வை - 4"

Wednesday, January 11, 2012

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 11

72 – க்கும், 26 – க்கும் திருமணம்! – கே.சி.லட்சுமிநாரயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 11

‘தி
ருவண்ணாமலையில் ராஜாஜியைத் தாம் சந்தித்துப் பேசியது தமது சொந்த விஷயம்’ என்று அண்ணாதுரைக்கும், ஜி.டி.நாயுடுவுக்கும் கோவை மாநாட்டில் கோபத்துடன் பதில் அளித்த ஈ.வெ.ரா., பிறகு அதே மாநாட்டில் உரை நிகழ்த்துகையில் தாமாகவே இந்த விஷயத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்.

“எனக்குப் பின் கட்சிக்கும், என் சொந்தத்திற்கும் அடுத்த வாரிசு ஏற்படுத்த வேண்டும். இதை விரைவில் செய்யப் போகிறேன்” – என்று ஈ.வெ.ரா. கோவை மாநாட்டில் தமது உரையில் தெரிவித்தார். 1.6.1949 தேதிய ‘விடுதலை’ இதழில் அந்தப் பேச்சு வெளியானது.

அந்தப் பேச்சுக்கு வலு தரும் விதமாக, ‘விளக்கம்’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை ஈ.வெ.ரா. 19.6.1949 தேதி ‘விடுதலை’யில் கையொப்பமிட்டு எழுதினார்.

“இயக்க விஷயத்தில் எனக்கு, இதுவரை அலைந்ததுபோல் அலைய உடல்நலம் இடம் கொடுக்கவில்லை. என்னைப் போல் பொறுப்பு எடுத்துக் கொள்ளத்தக்க ஆள் யார் இருக்கிறார்கள் என்பதில், எனக்கு நம்பிக்கை உள்ளவர்கள் கிடைக்கவில்லை. ஆதலால், எனக்கு வாரிசாக ஒருவரை ஏற்படுத்தி, அவர் மூலம் ஏற்பாடு செய்து விட்டுப் போக வேண்டும் என்று அதிக கவலை கொண்டு இருக்கிறேன். இது பற்றி சி.ஆர்.(ராஜாஜி) அவர்களிடம் பேசினேன்” என்று அந்த அறிக்கையில் ஈ.வெ.ரா. கூறினார். அடுத்து ஈ.வெ.ரா. மற்றோர் அறிக்கையை வெளியிட்டார்.

“எனக்கும், எனது பொருளுக்கும் சட்டப்படிக்கான வாரிசாக ஒருவரை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமும், அவசரமும் ஆகும். ஆகையால், நான் ஐந்தாறு வருடங்களாகப் பழகி, நம்பிக்கை கொண்டதும், என் நலத்திலும், இயக்க நலத்திலும் உண்மையான பற்றும், கவலையும் கொண்டு நடந்து கொண்டிருக்கிறதுமான மணியம்மையை எப்படியாவது வாரிசுரிமையாக ஆக்கிக் கொண்டு, அந்த வாரிசு உரிமையையும், தனிப்பட்ட தன்மையையும் சேர்த்து, மற்றும் 4, 5 பேர்களைச் சேர்த்து இயக்க நடப்பிற்கும், பொருள் பாதுகாப்பிற்குமாக ஒரு டிரஸ்ட் பத்திரம் எழுதி வைக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். பத்திரம் எழுதப்படவிருக்கிறது. அது சட்டப்படி செல்லுபடி ஆவதற்காக என்று, நமது இஷ்டத்திற்கு விரோதமாகச் சில சொற்கள் பயன்படுத்த நேரிட்டால், அதனால் கொள்கையே போய்விட்டது என்றோ, போய்விடும் என்றோ பயப்படுவது உறுதியற்ற தன்மை ஆகும்” என்று அந்த அறிக்கையில் ஈ.வெ.ரா. எழுதி இருந்தார்.

‘அந்த அறிக்கையில், ‘சட்டப்படி செல்லுபடி ஆவதற்காக’ என்று எழுதப்பட்டிருந்த வாசகத்தின் ரகசியத்தை அனைவரும் புரிந்து கொண்டார்கள். மணியம்மையைப் பெரியார் மணக்கப் போகிறார் என்பதுதான் அந்த வாசகத்தின் உண்மைப் பொருள் ஆகும்’ என்று, பல வருடங்களுக்குப் பிறகு, கருணாநிதி தமது ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் எழுதி இருந்தார். 
28.6.1949 தேதிய ‘விடுதலை’யில் மற்றொரு விளக்க அறிக்கையை ஈ.வெ.ரா. எழுதி வெளியிட்டிருந்தார்.

“என்னிடம் அன்பும், எனது நலத்தில் கவலையும் உள்ளவர்களுக்கும் சற்றுப் புரட்சியாகவும், திடுக்கிடக் கூடியதாகவும், இயக்கமே அழிந்து விடுமோ என்று பயப்படக் கூடியதாகவும், எனக்கு ஒரு கெட்ட பெயரும், இழிவும் ஏற்படக் கூடிய பெரிய தவறாகவும் கூடக் காணப்படுவதாகத் தெரிகிறது” என்று அந்த அறிக்கையில் ஈ.வெ.ரா. குறிப்பிட்டிருந்தார்.

“என்னைப் பற்றியும், இயக்கத்தைப் பற்றியும், இயக்க நடப்பைப் பற்றியும், எனக்குப் பின்னும் ஓர் அளவுக்காவது இயக்கம் நடைபெற வேண்டும் என்பது பற்றியும் மிகக் கவலையுடனும், பற்றுடனும் சிந்தித்து நடக்க வேண்டியவனாகிறேன்” என்றும் அதில் எழுதி இருந்தார்.

மணியம்மையுடன் ஈ.வெ.ரா.வுக்கு நடக்கவிருந்த திருமணம் குறித்துக் கழகத் தோழர்களின் கவலையையும், வருத்தத்தையும் அகற்றும் ஒரு முயற்சியாக இந்த அறிக்கையை ஈ.வெ.ரா. வெளியிட்டார் என்று கருதலாம்.

அண்ணாதுரை கண்டனம்


1949-ஆம் ஆண்டு மே 14-ஆம் தேதியன்று திருவண்ணாமலையில் ராஜாஜியுடன் சந்திப்பு; 28.5.1949 அன்று கோவை மாநாட்டில் கேள்விகள்; பின்னர் ஈ.வெ.ரா.வின் அறிவிப்பு; 19.6.1949 ‘விடுதலை’யில் விளக்க அறிக்கை; பிறகு அந்த விளக்கத்திற்குப் பலம் தேட 28.6.1949 அன்று மற்றோர் விளக்க அறிக்கை – என்றெல்லாம் நிகழ்ந்து முடிந்ததும், திராவிடர் கழகத்தில் உள்ளபடியே ஒரு சுனாமி படு பயங்கரமாகத் தோன்றியது.

அப்போது ஈ.வெ.ரா.வுக்கு வயது 72; மணியம்மைக்கு வயது 26. 72 வயதுக் கிழவர், 26 வயது இளம் பெண்ணைத் திருமணம் என்ற பெயரில் சிதைத்து நாசமாக்கலாமா என்ற கேள்வி, கழக உறுப்பினர்களிடையே எழுந்தது.
அண்ணாதுரை 3.7.1949 தேதிய ‘திராவிட நாடு’ இதழில், ஈ.வெ.ரா.வின் இந்த அடாத நடவடிக்கை குறித்து நீண்டதொரு கட்டுரையை எழுதினார். ‘வெட்கப்படுகிறோம்! வேதனைப்படுகிறோம்! இல்லை; விரட்டப்படுகிறோம்’ – என்பது கட்டுரையின் தலைப்பு.

ஈ.வெ.ரா – மணியம்மை விவாகத்தைப் ‘பொருந்தாத் திருமணம்’ என்று அண்ணாதுரை விவரித்தார்.

“காமப்பித்து கொண்டு அலையும் ஆண்கள் வயோதிகப் பருவத்திலே, வாலிபப் பெண்ணை சொத்து சுகம் கிடைக்கும் என்று ஆசை காட்டியோ, வேறு எந்தக் காரணம் காட்டியோ திருமணத்துக்குச் சம்மதிக்கச் செய்தால், மான ரோஷத்தில் அக்கறை உள்ள வாலிபர்கள் அந்தத் திருமணம் நடைபெற இடம் தரலாமா என்று ஆயிரமாயிரம் மேடைகளில் முழக்கம் இட்டவர் ஈ.வெ.ரா.” என்று சுட்டிக் காட்டிய அண்ணாதுரை, “இப்படிப்பட்ட அறிவுரையைப் புகட்டியவர், தமது 72-ஆம் வயதில் 26 வயதுள்ள பெண்ணைப் பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார் என்றால், கண்ணீரைக் காணிக்கையாகத் தருவது தவிர, வேறென்ன நிலைமை இருக்கும்!” என்று கேட்டார்.

சீர்திருத்த இயக்கம் என்று சொல்லிக் கொண்டு, 72-க்கும் 26-க்கும் திருமணம் நடத்துகிறார்களே என்று கேலி பேசுவதைக் கேட்டு, நெஞ்சு வெடிப்பதாகவும் அண்ணாதுரை குறிப்பிட்டார்.

“முத்தம் இடவந்த குழந்தையின் மூக்கைக் கடித்து எறியும் தாயை நாங்கள் கண்டதில்லை. தந்தையே! நாங்கள் செய்த தவறுதான் என்ன? இந்தத் தகாத காரியத்தைத் தாங்கள் செய்து எங்கள் தன்மானத்தை அறுத்து எறிவது ஏன்? என்ன குற்றம் இழைத்தோம்? ஏன், என்றும் அழியாத அவமானத்தைத் தேடித் தருகிறீர்?” என்று அடுக் கடுக்கான கேள்விகளை ஈ.வெ.ரா.வை நோக்கி அண்ணாதுரை எழுப்பினார்.

“எத்தனை ஆயிரம் காரணம் காட்டினாலும், சமர்த்தான விளக்கம் உரைத்தாலும், 72-26 – இதை மறுக்க முடியாதே! இது பொருந்தாத் திருமணம் என்பதை மறைக்க முடியாதே” என்று அண்ணாதுரை சுட்டிக் காட்டினார்.

ஈ.வெ.ரா.வுக்குப் பணிவிடை செய்வதற்கும், இயக்கப் பணி புரிவதற்கும் திராவிடர் கழகத்தில் பெண்கள் ஏற்கெனவே இருந்தார்கள். ஈ.வெ.ரா.வின் சகோதரர் மகள்கள் – கிருஷ்ணசாமி நாயக்கரின் மகள் மிராண்டா சில மாநாடுகளில் கலந்து கொண்டு வேலை செய்தார். இவ்வாறு குடும்பப் பெண்களும், பிறரும் தயாராக இருந்த நிலையில் அவர்கள் யாருமே தேவைப்படவில்லை, மணியம்மை வர நேரிட்டது. அவர் கழகத்திற்குள் வந்ததும், ‘புயல் நுழைகிறது என்று கருதியவன் நான்; புல்லன் என்று தூற்றப்பட்டேன், அதனால்...’ என்று – அண்ணாதுரை, மணியம்மை பிரவேசித்தபோதே தாம் எதிர்த்ததை எடுத்துக் காட்டினார். 
மணியம்மை, ஈ.வெ.ரா.வின் வளர்ப்புப் பெண் என்று அறிமுகப் படுத்தப்பட்டார். அந்த வளர்ப்புப் பெண் இன்று ஈ.வெ.ரா.வின் மனைவி ஆகிறார் என்று கிண்டலுடனும், அண்ணாதுரை கூறினார்!

ஈ.வெ.ரா – மணியம்மை திருமண ஏற்பாடு திராவிடர் கழகத்தில் நிர்வாகப் பொறுப்பிலோ, அல்லது மாவட்ட அளவிலான பொறுப்புகளிலோ இருந்தவர்களில் எவருக்கும் தெரியாமல் ரகசியமாக நடைபெற்றது.

“முன்னாள் அமைச்சர் முத்தையா முதலியார் மற்றும் ஈ.வெ.ரா.வுக்குப் பணிவிடை செய்தவர்களில் முக்கியமான ஒருவராகிய சி.டி.டி.அரசு, ஈ.வெ.ரா.வுடன் நெருக்கமாக இருந்த என்.வி.நடராசன், ஈ.வெ.ரா. அண்ணன் மகனாகிய ஈ.வெ.கி.சம்பத், ‘விடுதலை’ ஆசிரியர் குருசாமி, பொருளாளர் கோவிந்தசாமி ஆகியவர்களில் எவருடனும் தமது திருமணம் குறித்து ஈ.வெ.ரா. பேசவில்லை; ஜாடைமாடையாகக் கூடப் பேசியதில்லை” என்று அண்ணாதுரை தமது கட்டுரையில் அம்பலப் படுத்தினார்.

இவர்களும், இவர்களைப் போன்ற பிறரும், ‘மோட்டாருக்குப் பெட்ரோல் வாங்கித் தருவது, ஆஃபீஸுக்குப் பேப்பர் வாங்குவது, நிதிக்குப் பணம் பெற்றுத் தருவது போன்ற அலுவல்களுக்கு மட்டுமே தேவைப்பட்டார்கள்’ என்றும், ‘இன்ன ஊரில், இன்ன இடத்தில் மாநாடு கூட்டு; அதற்கான ஏற்பாடு செய் என்று கூறிட மட்டுமே அவர்கள் தேவைப் பட்டார்கள்’ என்றும் கழக உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டதை, அண்ணாதுரை வலிமையாக சுட்டிக் காட்டினார்!

ஆதார நூல்கள் : 

1. பேரறிஞர் அண்ணா எழுதிய உள்ளம் வருந்திய நிகழ்ச்சிகள் - ‘திராவிட நாடு’ இதழ் கட்டுரைகளின் தொகுப்பு நூல். வெளியிட்டோர்: மீனா கோபால் பதிப்பகம், கதவு எண் 26, ஜோசப் காலனி, ஆதம்பாக்கம், சென்னை-88 (2000)

2. நெஞ்சுக்கு நீதி - கருணாநிதி - தினமணி கதிர் வெளியீடு, சென்னை-2. 

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 10

ராஜாஜியுடன் ஈ.வே.ரா. பேசிய ரகசியம்! – கே.சி.லட்சுமிநாராயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 10

ராம.அரங்கண்ணல் கழகங்களில் ஒரு மூத்த உறுப்பினர். கருணாநிதி ஒரு பேச்சாளராக மட்டும் இருந்த காலத்திலேயே, அரங்கண்ணல் ஈ.வெ.ரா.வின் ‘குடியரசு’ அலுவலகத்தில் வேலை செய்தார். பிறகு ‘விடுதலை’ நாளிதழில் சேர்ந்து பணியாற்றினார்.

ஆரம்ப காலத்தில் அரங்கண்ணலுக்கு, அண்ணாதுரை மீது பற்றுக் கிடையாது. தமது நிலை சிறிது சிறிதாக மாறியதை, அவரே பின்னர் ‘திராவிடன்’ இதழில் எழுதிய ஒரு கட்டுரையில் ஒப்புக் கொண்டார். (26.9.1956)

அரங்கண்ணல் ‘குடியரசு’ அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, குடந்தை நகரில் திராவிடர் கழக உறுப்பினர்களின் கருப்புச் சட்டை மாநாடு நடந்தது. அதில் ஈ.வெ.ரா., அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். மாநாட்டுக்குப் போய்விட்டு ஈ.வெ.ரா. திரும்பினார். மாநாடு எவ்வாறு நடந்தது என்று அரங்கண்ணல் ஆர்வத்துடன் விசாரித்தார்.

“பெரியார் சொன்ன முதல் வார்த்தையே, ‘நல்லா திட்டிப்போட்டேனுங்க! குள்ள நரிப்பசங்க...ன்னு சொல்லிப் போட்டேன். பின்னே என்னாங்க, ஏன் கருப்புச் சட்டை போடாமே, இந்த அண்ணாதுரை, சின்னதம்பியெல்லாம் மேடைக்கு வரணும்?’ என்பதுதான்” என்று அரங்கண்ணல் எழுதியிருக்கிறார்.

அந்நாட்களில் திராவிடர் கழக உறுப்பினர்கள் எல்லோரும் கருப்புச் சட்டை அணிய வேண்டும் என்று ஈ.வெ.ரா. ஆணையிட்டிருந்தார். தம்மால் கருப்புச் சட்டை அணிய இயலாது என்று அண்ணாதுரை அந்த ஆணை வெளியானதுமே மறுத்து விட்டார். அவரைப் பின்பற்றி நெடுஞ்செழியன் முதலியவர்களும் கருப்புச் சட்டை போட மறுத்தார்கள்.

குடந்தை மாநாட்டில் அண்ணாதுரை கருப்புச் சட்டை போடாமல் மேடைக்கு வந்தார். ஈ.வெ.ரா.வுக்கு மிகுந்த கோபம் உண்டாயிற்று. மேடையிலேயே அண்ணாதுரையையும், மற்றவர்களையும் கடுமையாக ஏசிப் பேசிவிட்டார். தாம் அவ்வாறு செய்ததையே அரங்கண்ணலிடம் ஈ.வெ.ரா. தெரிவித்தார். 
அண்ணாதுரையின் பெயரை ‘அண்ணாதுரை, சின்னத்தம்பி’ என்று கூறி ஈ.வெ.ரா. கிண்டல் செய்ததைக் கவனிக்க வேண்டும்!

ஈ.வெ.ரா.வின் ‘குடியரசு’ அலுவலகத்தில் ஈ.வெ.ரா.வுடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு அமைந்ததால், அவரைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள முடிந்தது என்று அரங்கண்ணல் குறிப்பிட்டு இருக்கிறார்.

அப்போது சென்னையில் மே தின விழா நடந்தது. அதில் அண்ணாதுரை கலந்து கொண்டு பேசினார். அவரது அந்த உரையை என்.வி.நடராசன் அப்படியே எழுதி எடுத்துக் கொண்டு வந்தார். அதை, ஈ.வெ.ரா.வுக்குத் தெரியாமல் ‘விடுதலை’ நாளிதழில், ஒரு பிரமாதமான தலைப்பிட்டு அரங்கண்ணல் பிரசுரித்து விட்டார். அண்ணாதுரையின் உருவம் அடங்கிய ‘பிளாக்’கை ‘போர்வாள்’ அலுவலகத்திலிருந்து இரவலாக வாங்கி, கட்டுரையுடன் சேர்த்து வெளியிட்டு விட்டார்கள்.

மறுநாள் அலுவலகத்திற்கு ஈ.வெ.ரா. வந்ததும், அண்ணாதுரையின் சொற்பொழிவு பிரசுரமான இதழைப் பார்த்துப் பெருங்கோபம் கொண்டார். “பெருமாள் சோத்தைத் தின்றுவிட்டு, பெருமாளுக்குத் துரோகம் செய்கின்றான்க!” என்று அரங்கண்ணலையும், விடுதலை அலுவலகத்தில் பணிபுரிந்த பூ.கணேசன் என்பவரையும் குறிப்பிட்டு ஈ.வெ.ரா. கொதிப்புடன் கூறினார்.

ஈ.வெ.ரா.வின் அறிக்கை


ந்தச் சொல் உள்ளபடியே, என் மனத்திலும், நண்பர் கணேசு மனத்திலும் ஆழப் பதிந்தது! நாங்கள் ஒன்றும் சோற்றுக்கு வீங்கிப் போய் ‘விடுதலை’க்குப் போகவில்லை! விவரம் அறிந்தவர்களுக்குத் தெரியும், எங்களுடைய இல்லத்திலே தினசரி எத்தனை பேருக்குச் சோறு கிடைக்கிறது என்று. ஐயா(ஈ.வெ.ரா.) சொன்ன அந்த வாசகம், பெரியாருடைய மனத்தில், ‘தான்’ இருக்கிறதே ஒழிய ‘கழகம்’ இல்லை என்கிற உண்மையை உணர்த்திற்று” என்று அரங்கண்ணல் குறிப்பிட்டிருக்கிறார்.

“அண்ணாதுரை, பாரதிதாசன் ஆகியோர் மீது ஈ.வெ.ரா.வுக்கு ஓர் எரிச்சல் ஏற்பட்டு மிகப் பெரிதாக வளர்ந்து கொண்டிருந்தது” என்றும், “ஈ.வெ.ரா. கழகத்தைப் பொதுச் சொத்தாகக் கருதாமல், அதையும் ஒரு ஜமீன் போல எண்ணினார் என்பது மட்டும் என் போன்றோர்க்குத் தெளிவாகத் தெரிந்தது” என்றும் அரங்கண்ணல், தமது கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார். 
திராவிடர் கழகத்தில் இராம. அரங்கண்ணல் போன்றோர் மெல்ல மெல்ல ஈ.வெ.ரா.விடமிருந்து விலகி, அண்ணாதுரையை நெருங்கி வந்து கொண்டிருந்தார்கள்.

ஈ.வெ.கி.சம்பத், ‘விடுதலை’ அலுவலக நிர்வாகியாக இருந்தபோது ஒரு நிகழ்ச்சி நடந்தது. அப்போது மாவூர் சர்மா என்பவரின் தோட்டத்தில் பயிற்சி முகாம் நடத்திக் கொண்டிருந்த ஈ.வெ.ரா., ‘விடுதலை’யில் பிரசுரிப்பதற்காக ஒரு செய்தியைச் சம்பத்திற்கு அனுப்பினார்.

திராவிடர் கழகத்தில் இருந்த அழகிரி 28.3.1949 அன்று மரணம் அடைந்தார். அவர் மறைந்த சில நாட்களுக்குப் பிறகு தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் மாணவர்கள் மாநாடு ஒன்று நடந்தது. அதில் க.அன்பழகன், ஜனார்த்தனம், கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். ‘அழகிரியின் கடைசிக் காலத்தில் திராவிடர் கழகமும், ஈ.வெ.ரா.வும் அவரைச் சரிவரக் கவனிக்காமல் விட்டு விட்டார்கள்’ என்று அன்பழகனும், கருணாநிதியும் பேசினார்கள் என்ற தகவல் மாவூரில் இருந்த ஈ.வெ.ரா.வை எட்டியது.

“அன்பழகனையும் கருணாநிதியையும், திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் இனிமேல் கூட்டங்களுக்கு அழைக்கக் கூடாது” என்று ஓர் அறிக்கையைத் தயாரித்து, அதை ஒரு செய்தியாக வெளியிடுமாறு சம்பத்திற்கு ஈ.வெ.ரா. அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியை வெளியிட்டால் அன்பழகன், கருணாநிதி ஆகியோரின் பொதுவாழ்வு பாதிக்கப்படும் என்று கருதிய சம்பத், அது குறித்து ‘விடுதலை’ ஆசிரியர் குருசாமியுடன் பேசினார். பிறகு அண்ணாதுரைக்கு டெலிஃபோன் செய்து, செய்தியைப் போடுவது பற்றிக் கேட்டார்.

அண்ணாதுரையின் ஆலோசனைப்படி அந்தச் செய்தி வெளியிடப்படவில்லை. அந்தச் செய்தியை எப்படி வெளியிடுவது என்று, குருசாமி சென்று ஈ.வெ.ரா.வைக் கேட்டு வருவது நல்லது என்ற அண்ணாதுரையின் யோசனைப்படி, குருசாமியை சம்பத் அனுப்பி வைத்தார்.

குருசாமியைப் பார்த்ததும் ஈ.வெ.ரா. கேட்ட முதல் கேள்வி, “என்ன, அந்தச் செய்தியைப் போட்டு விட்டீர்களா?” என்பதுதான். குருசாமி, “செய்தியை எப்படிப் போடுவது என்று கேட்டுப் போகத்தான் வந்தேன்” என்று கூறினார். “செய்தியைப் போடுங்கள் என்றால், போட்டுவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, எப்படிப் போடுவது என்று கேட்கக் கூடாது”என்று ஈ.வெ.ரா. சொல்லி அனுப்பினார்.

இந்த விவகாரம் பற்றிக் கருணாநிதி அவரது ‘நெஞ்சுக்கு நீதி’ தொடரிலும் குறிப்பிட்டிருக்கிறார். 
“பெரியாரின் அறிக்கை எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. நான் எந்தப் பதிலும் கூறாமல் இருந்து விட்டேன். எங்களைத் திராவிடர் கழகத் தோழர்கள் கூட்டத்திற்கு அழைப்பதை நிறுத்திக் கொண்டார்கள்” என்று கருணாநிதி எழுதியிருக்கிறார்.

(இந்த ‘நெஞ்சுக்கு நீதி’ தொடர் ‘குமுதம்’ இதழில் கருணாநிதி எழுதியது ஆகும்.)

ரகசியப் பேச்சு

1949 மே மாதம் 14– ஆம் தேதியன்று, அப்பொழுது இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியை, திருவண்ணாமலையில் ஈ.வெ.ரா. சந்தித்தார். அங்கு அவர் ராஜாஜியுடன் நீண்ட நேரம் பேசினார். ராஜாஜி – ஈ.வெ.ரா. சந்திப்பு பத்திரிகைகளில் வெளியாயிற்று.


திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களிடையே, அந்தச் சந்திப்பு ஒரு பெரிய கேள்விக்குறியையும், சலசலப்பையும் உண்டாக்கியது. சந்திப்பின் விவரங்களை அறிந்து கொள்ள திராவிடர் கழகத் தோழர்கள் முயன்றார்கள். ஆனால், அதுபற்றி ஒரு சிறிய செய்தியையும் ஈ.வெ.ரா. வெளியிடவில்லை.

பார்ப்பனர் – பார்ப்பனர் அல்லாதார் போராட்டத்தைத் திராவிடர் கழகம் மிகவும் தீவிரமாக நடத்திக் கொண்டிருந்த நேரம் அது. தினசரி காலையிலும், பகலிலும், மாலையிலும், இரவிலும் ராஜாஜியைப் பார்ப்பனர் என்று கூறித் திராவிடர் கழகத்தவர் ஏசிக் கொண்டிருந்த நேரத்தில், திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ.ரா., திருவண்ணாமலைக்கே சென்று ராஜாஜியுடன் நீண்ட நேரம் என்ன பேசினார் என்பதை அறிந்து கொள்ள, திராவிடர் கழகத்தவர் மிகவும் விரும்பினார்கள்.

28.5.1949 அன்று கோவையில் ஜி.டி.நாயுடு ஏற்பாட்டில் நடந்த ஒரு மாநாட்டில் ஈ.வெ.ரா.வும், அண்ணாதுரையும் கலந்து கொண்டார்கள். 
“ஈ.வெ.ரா.வும் ராஜாஜியும் சமீபத்தில் திருவண்ணாமலையில் சந்தித்தார்கள்; அது என்ன விஷயம் என்று இந்த மாநாட்டில் ஈ.வெ.ரா. எல்லோருக்கும் தெரியும்படி சொல்ல வேண்டும்” என்று ஜி.டி. நாயுடு பேசுகையில் கேட்டுக் கொண்டார்.

அந்த மாநாட்டில் ஈ.வெ.ரா.வுக்கு முன்பாகப் பேசிய அண்ணாதுரையும், இந்தக் கோரிக்கையை வெளியிட்டார்.

“அது முற்றிலும் எனது சொந்த விஷயம். அதுபற்றி மாநாட்டில் வெளியிட முடியாது” என்று ஈ.வெ.ரா. மிகுந்த கோபத்துடன் தமது உரையில் பதில் அளித்தார்!!

(தொடரும்)