Wednesday, January 11, 2012

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 10

ராஜாஜியுடன் ஈ.வே.ரா. பேசிய ரகசியம்! – கே.சி.லட்சுமிநாராயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 10

ராம.அரங்கண்ணல் கழகங்களில் ஒரு மூத்த உறுப்பினர். கருணாநிதி ஒரு பேச்சாளராக மட்டும் இருந்த காலத்திலேயே, அரங்கண்ணல் ஈ.வெ.ரா.வின் ‘குடியரசு’ அலுவலகத்தில் வேலை செய்தார். பிறகு ‘விடுதலை’ நாளிதழில் சேர்ந்து பணியாற்றினார்.

ஆரம்ப காலத்தில் அரங்கண்ணலுக்கு, அண்ணாதுரை மீது பற்றுக் கிடையாது. தமது நிலை சிறிது சிறிதாக மாறியதை, அவரே பின்னர் ‘திராவிடன்’ இதழில் எழுதிய ஒரு கட்டுரையில் ஒப்புக் கொண்டார். (26.9.1956)

அரங்கண்ணல் ‘குடியரசு’ அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, குடந்தை நகரில் திராவிடர் கழக உறுப்பினர்களின் கருப்புச் சட்டை மாநாடு நடந்தது. அதில் ஈ.வெ.ரா., அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். மாநாட்டுக்குப் போய்விட்டு ஈ.வெ.ரா. திரும்பினார். மாநாடு எவ்வாறு நடந்தது என்று அரங்கண்ணல் ஆர்வத்துடன் விசாரித்தார்.

“பெரியார் சொன்ன முதல் வார்த்தையே, ‘நல்லா திட்டிப்போட்டேனுங்க! குள்ள நரிப்பசங்க...ன்னு சொல்லிப் போட்டேன். பின்னே என்னாங்க, ஏன் கருப்புச் சட்டை போடாமே, இந்த அண்ணாதுரை, சின்னதம்பியெல்லாம் மேடைக்கு வரணும்?’ என்பதுதான்” என்று அரங்கண்ணல் எழுதியிருக்கிறார்.

அந்நாட்களில் திராவிடர் கழக உறுப்பினர்கள் எல்லோரும் கருப்புச் சட்டை அணிய வேண்டும் என்று ஈ.வெ.ரா. ஆணையிட்டிருந்தார். தம்மால் கருப்புச் சட்டை அணிய இயலாது என்று அண்ணாதுரை அந்த ஆணை வெளியானதுமே மறுத்து விட்டார். அவரைப் பின்பற்றி நெடுஞ்செழியன் முதலியவர்களும் கருப்புச் சட்டை போட மறுத்தார்கள்.

குடந்தை மாநாட்டில் அண்ணாதுரை கருப்புச் சட்டை போடாமல் மேடைக்கு வந்தார். ஈ.வெ.ரா.வுக்கு மிகுந்த கோபம் உண்டாயிற்று. மேடையிலேயே அண்ணாதுரையையும், மற்றவர்களையும் கடுமையாக ஏசிப் பேசிவிட்டார். தாம் அவ்வாறு செய்ததையே அரங்கண்ணலிடம் ஈ.வெ.ரா. தெரிவித்தார். 
அண்ணாதுரையின் பெயரை ‘அண்ணாதுரை, சின்னத்தம்பி’ என்று கூறி ஈ.வெ.ரா. கிண்டல் செய்ததைக் கவனிக்க வேண்டும்!

ஈ.வெ.ரா.வின் ‘குடியரசு’ அலுவலகத்தில் ஈ.வெ.ரா.வுடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு அமைந்ததால், அவரைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள முடிந்தது என்று அரங்கண்ணல் குறிப்பிட்டு இருக்கிறார்.

அப்போது சென்னையில் மே தின விழா நடந்தது. அதில் அண்ணாதுரை கலந்து கொண்டு பேசினார். அவரது அந்த உரையை என்.வி.நடராசன் அப்படியே எழுதி எடுத்துக் கொண்டு வந்தார். அதை, ஈ.வெ.ரா.வுக்குத் தெரியாமல் ‘விடுதலை’ நாளிதழில், ஒரு பிரமாதமான தலைப்பிட்டு அரங்கண்ணல் பிரசுரித்து விட்டார். அண்ணாதுரையின் உருவம் அடங்கிய ‘பிளாக்’கை ‘போர்வாள்’ அலுவலகத்திலிருந்து இரவலாக வாங்கி, கட்டுரையுடன் சேர்த்து வெளியிட்டு விட்டார்கள்.

மறுநாள் அலுவலகத்திற்கு ஈ.வெ.ரா. வந்ததும், அண்ணாதுரையின் சொற்பொழிவு பிரசுரமான இதழைப் பார்த்துப் பெருங்கோபம் கொண்டார். “பெருமாள் சோத்தைத் தின்றுவிட்டு, பெருமாளுக்குத் துரோகம் செய்கின்றான்க!” என்று அரங்கண்ணலையும், விடுதலை அலுவலகத்தில் பணிபுரிந்த பூ.கணேசன் என்பவரையும் குறிப்பிட்டு ஈ.வெ.ரா. கொதிப்புடன் கூறினார்.

ஈ.வெ.ரா.வின் அறிக்கை


ந்தச் சொல் உள்ளபடியே, என் மனத்திலும், நண்பர் கணேசு மனத்திலும் ஆழப் பதிந்தது! நாங்கள் ஒன்றும் சோற்றுக்கு வீங்கிப் போய் ‘விடுதலை’க்குப் போகவில்லை! விவரம் அறிந்தவர்களுக்குத் தெரியும், எங்களுடைய இல்லத்திலே தினசரி எத்தனை பேருக்குச் சோறு கிடைக்கிறது என்று. ஐயா(ஈ.வெ.ரா.) சொன்ன அந்த வாசகம், பெரியாருடைய மனத்தில், ‘தான்’ இருக்கிறதே ஒழிய ‘கழகம்’ இல்லை என்கிற உண்மையை உணர்த்திற்று” என்று அரங்கண்ணல் குறிப்பிட்டிருக்கிறார்.

“அண்ணாதுரை, பாரதிதாசன் ஆகியோர் மீது ஈ.வெ.ரா.வுக்கு ஓர் எரிச்சல் ஏற்பட்டு மிகப் பெரிதாக வளர்ந்து கொண்டிருந்தது” என்றும், “ஈ.வெ.ரா. கழகத்தைப் பொதுச் சொத்தாகக் கருதாமல், அதையும் ஒரு ஜமீன் போல எண்ணினார் என்பது மட்டும் என் போன்றோர்க்குத் தெளிவாகத் தெரிந்தது” என்றும் அரங்கண்ணல், தமது கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார். 
திராவிடர் கழகத்தில் இராம. அரங்கண்ணல் போன்றோர் மெல்ல மெல்ல ஈ.வெ.ரா.விடமிருந்து விலகி, அண்ணாதுரையை நெருங்கி வந்து கொண்டிருந்தார்கள்.

ஈ.வெ.கி.சம்பத், ‘விடுதலை’ அலுவலக நிர்வாகியாக இருந்தபோது ஒரு நிகழ்ச்சி நடந்தது. அப்போது மாவூர் சர்மா என்பவரின் தோட்டத்தில் பயிற்சி முகாம் நடத்திக் கொண்டிருந்த ஈ.வெ.ரா., ‘விடுதலை’யில் பிரசுரிப்பதற்காக ஒரு செய்தியைச் சம்பத்திற்கு அனுப்பினார்.

திராவிடர் கழகத்தில் இருந்த அழகிரி 28.3.1949 அன்று மரணம் அடைந்தார். அவர் மறைந்த சில நாட்களுக்குப் பிறகு தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் மாணவர்கள் மாநாடு ஒன்று நடந்தது. அதில் க.அன்பழகன், ஜனார்த்தனம், கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். ‘அழகிரியின் கடைசிக் காலத்தில் திராவிடர் கழகமும், ஈ.வெ.ரா.வும் அவரைச் சரிவரக் கவனிக்காமல் விட்டு விட்டார்கள்’ என்று அன்பழகனும், கருணாநிதியும் பேசினார்கள் என்ற தகவல் மாவூரில் இருந்த ஈ.வெ.ரா.வை எட்டியது.

“அன்பழகனையும் கருணாநிதியையும், திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் இனிமேல் கூட்டங்களுக்கு அழைக்கக் கூடாது” என்று ஓர் அறிக்கையைத் தயாரித்து, அதை ஒரு செய்தியாக வெளியிடுமாறு சம்பத்திற்கு ஈ.வெ.ரா. அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியை வெளியிட்டால் அன்பழகன், கருணாநிதி ஆகியோரின் பொதுவாழ்வு பாதிக்கப்படும் என்று கருதிய சம்பத், அது குறித்து ‘விடுதலை’ ஆசிரியர் குருசாமியுடன் பேசினார். பிறகு அண்ணாதுரைக்கு டெலிஃபோன் செய்து, செய்தியைப் போடுவது பற்றிக் கேட்டார்.

அண்ணாதுரையின் ஆலோசனைப்படி அந்தச் செய்தி வெளியிடப்படவில்லை. அந்தச் செய்தியை எப்படி வெளியிடுவது என்று, குருசாமி சென்று ஈ.வெ.ரா.வைக் கேட்டு வருவது நல்லது என்ற அண்ணாதுரையின் யோசனைப்படி, குருசாமியை சம்பத் அனுப்பி வைத்தார்.

குருசாமியைப் பார்த்ததும் ஈ.வெ.ரா. கேட்ட முதல் கேள்வி, “என்ன, அந்தச் செய்தியைப் போட்டு விட்டீர்களா?” என்பதுதான். குருசாமி, “செய்தியை எப்படிப் போடுவது என்று கேட்டுப் போகத்தான் வந்தேன்” என்று கூறினார். “செய்தியைப் போடுங்கள் என்றால், போட்டுவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, எப்படிப் போடுவது என்று கேட்கக் கூடாது”என்று ஈ.வெ.ரா. சொல்லி அனுப்பினார்.

இந்த விவகாரம் பற்றிக் கருணாநிதி அவரது ‘நெஞ்சுக்கு நீதி’ தொடரிலும் குறிப்பிட்டிருக்கிறார். 
“பெரியாரின் அறிக்கை எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. நான் எந்தப் பதிலும் கூறாமல் இருந்து விட்டேன். எங்களைத் திராவிடர் கழகத் தோழர்கள் கூட்டத்திற்கு அழைப்பதை நிறுத்திக் கொண்டார்கள்” என்று கருணாநிதி எழுதியிருக்கிறார்.

(இந்த ‘நெஞ்சுக்கு நீதி’ தொடர் ‘குமுதம்’ இதழில் கருணாநிதி எழுதியது ஆகும்.)

ரகசியப் பேச்சு

1949 மே மாதம் 14– ஆம் தேதியன்று, அப்பொழுது இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியை, திருவண்ணாமலையில் ஈ.வெ.ரா. சந்தித்தார். அங்கு அவர் ராஜாஜியுடன் நீண்ட நேரம் பேசினார். ராஜாஜி – ஈ.வெ.ரா. சந்திப்பு பத்திரிகைகளில் வெளியாயிற்று.


திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களிடையே, அந்தச் சந்திப்பு ஒரு பெரிய கேள்விக்குறியையும், சலசலப்பையும் உண்டாக்கியது. சந்திப்பின் விவரங்களை அறிந்து கொள்ள திராவிடர் கழகத் தோழர்கள் முயன்றார்கள். ஆனால், அதுபற்றி ஒரு சிறிய செய்தியையும் ஈ.வெ.ரா. வெளியிடவில்லை.

பார்ப்பனர் – பார்ப்பனர் அல்லாதார் போராட்டத்தைத் திராவிடர் கழகம் மிகவும் தீவிரமாக நடத்திக் கொண்டிருந்த நேரம் அது. தினசரி காலையிலும், பகலிலும், மாலையிலும், இரவிலும் ராஜாஜியைப் பார்ப்பனர் என்று கூறித் திராவிடர் கழகத்தவர் ஏசிக் கொண்டிருந்த நேரத்தில், திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ.ரா., திருவண்ணாமலைக்கே சென்று ராஜாஜியுடன் நீண்ட நேரம் என்ன பேசினார் என்பதை அறிந்து கொள்ள, திராவிடர் கழகத்தவர் மிகவும் விரும்பினார்கள்.

28.5.1949 அன்று கோவையில் ஜி.டி.நாயுடு ஏற்பாட்டில் நடந்த ஒரு மாநாட்டில் ஈ.வெ.ரா.வும், அண்ணாதுரையும் கலந்து கொண்டார்கள். 
“ஈ.வெ.ரா.வும் ராஜாஜியும் சமீபத்தில் திருவண்ணாமலையில் சந்தித்தார்கள்; அது என்ன விஷயம் என்று இந்த மாநாட்டில் ஈ.வெ.ரா. எல்லோருக்கும் தெரியும்படி சொல்ல வேண்டும்” என்று ஜி.டி. நாயுடு பேசுகையில் கேட்டுக் கொண்டார்.

அந்த மாநாட்டில் ஈ.வெ.ரா.வுக்கு முன்பாகப் பேசிய அண்ணாதுரையும், இந்தக் கோரிக்கையை வெளியிட்டார்.

“அது முற்றிலும் எனது சொந்த விஷயம். அதுபற்றி மாநாட்டில் வெளியிட முடியாது” என்று ஈ.வெ.ரா. மிகுந்த கோபத்துடன் தமது உரையில் பதில் அளித்தார்!!

(தொடரும்)