Thursday, October 6, 2011

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 2

தலித்துகளைப் புறக்கணித்த ஐஸ்டிஸ் கட்சி
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 2

தமிழகத்தின் ஒரு சிறந்த தேசியத் தலைவரான எம். பக்தவத்ஸலம், இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். விடுதலைக்குப் பிறகு பல ஆண்டுகள் தமிழ்நாட்டில் அமைச்சராகவும், பின்னர் முதலமைச்சராகவும் அவர் பணிபுரிந்தார். வாழ்க்கையில் எளிமை, ஆட்சியில் தூய்மை, நிர்வாகத்தில் நுண்ணறிவு ஆகியவற்றுக்கு இலக்கணம் வகுத்தவராக அவர் வாழ்ந்தார்.

எம்.பக்தவத்ஸலம்

ஜஸ்டிஸ் கட்சி ஒரு தேசத் துரோக அமைப்பே என்று அவர் அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார்.

“சமுதாயத்தின் பல்வேறு துறைகளில் பிராமண ஆதிக்கம் இருந்ததாகவும், அதை எதிர்ப்பதே தனது குறிக்கோள் என்றும் ஜஸ்டிஸ் கட்சி கூறிக் கொண்டது. பிராமணரல்லாதாரில் பலர் நன்கு படிக்காததால்தான், சமுதாயத்தில் முன்னணி நிலைக்கு வர முடியவில்லை என்ற உண்மையை மறந்த நிலையில் தொடங்கிய அந்த பிராமண எதிர்ப்பு, இந்தியாவுக்குச் சுதந்திரமே வேண்டாம் என்று கூறும் அளவுக்குப் பிற்போக்குத் தன்மையில் அழுந்தி விட்டது” என்று ஒரு பேட்டியில் பக்தவத்ஸலம் கூறினார்.

“ஜஸ்டிஸ் கட்சியின் பிறப்புக்கு எது காரணமாக இருந்த போதிலும், அது சுதந்திர இயக்கத்தையே எதிர்த்து, வெள்ளையருடன் குலவிக் கொண்டு அவர்கள் அளித்த பதவிகளிலே ஒட்டிக் கொண்ட, பச்சைத் தேசத் துரோக அமைப்பாக ஆகிவிட்டது” என்று அவர் தெரிவித்தார்.

“மக்கள் ஆதரவு இல்லாத – சுதந்திரமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்த ஜஸ்டிஸ் கட்சியின் வரலாறு, வெகு சீக்கிரத்தில் முடிவடைந்ததைப் பற்றி ஆச்சரியப்படுவதற்கில்லை. பழைய ஜஸ்டிஸ் கட்சியே பிறகு திராவிடர் கழகமாக மாறி, இன்று திராவிட முன்னேற்றக் கழகமாகக் காட்சி தருகிறது” என்றும் பக்தவத்ஸலம் குறிப்பிட்டார்.

அடக்குமுறைக் கொடுமை

ரௌலட் சட்ட எதிர்ப்பு (1919), ஜாலியன் வாலாபாக் படுகொலை எதிர்ப்புக் கிளர்ச்சி (1919), ஒத்துழையாமை இயக்கம் (1920), பிரிட்டிஷ் அரசு பரம்பரையின் கன்னாட் கோமகன் இந்திய வருகை பகிஷ்கரிப்புப் போராட்டம் (1921), வேல்ஸ் இளவரசர் வருகை பகிஷ்கரிப்புக் கிளர்ச்சி (1921), நாகபுரி கொடிப்போர் (1923), வைக்கம் சத்தியாக்கிரகம் (1924), நீலன் சிலையை அகற்றக்கோரி நடந்த வீரப்போராட்டம் (1927), சைமன் கமிஷன் எதிர்ப்புக் கிளர்ச்சி (1928), ஈடு இணையற்ற உப்புச் சத்தியாக்கிரகம் (1930), பிரிட்டனின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் வெள்ளி விழாக் கொண்டாட்ட பகிஷ்கரிப்பு (1934), தனி நபர் சத்தியாக்கிரகம் (1940), ஆகஸ்ட் இயக்கம் (1942) ஆகிய விடுதலைப் போரின் கிளர்ச்சிகளையும், சத்தியாக் கிரகங்களையும் ஜஸ்டிஸ் கட்சியினர் எதிர்த்து ரகளை செய்தார்கள். அவற்றுக்குப் பல வகைகளிலும் இடையூறுகளை விளைவித்தார்கள்.

அந்தக் கிளர்ச்சிகள், சத்தியாக்கிரகங்கள் பல ஜஸ்டிஸ் கட்சியின் ஆட்சியின்போது நடந்தன. ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியாளர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குப் பல அடக்குமுறைக் கொடுமைகளைச் செய்தார்கள்; தலைவர்களையும், தொண்டர்களையும் சிறைகளிலே அடைத்தார்கள்; சிறைகளில் கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டார்கள்.

அந்நாட்களில் கள், சாராயக் கடைகள் நாடு முழுவதும் இயங்கின. அவற்றில் பெரும்பாலானவற்றை ஜஸ்டிஸ் கட்சியினரும், அவர்களது ஆதரவைப் பெற்ற குண்டர்களும் நடத்தினார்கள். காங்கிரஸின் நிர்மாணத் திட்டங்களிலே ஒன்று மதுவிலக்கு. மகாத்மா காந்தி விரும்பிய வண்ணம் தேசம் முழுவதும் கள், சாராயக் கடைகள் முன்பாக அன்றைய காங்கிரஸார் மதுவிலக்குப் பிரச்சார மறியல் செய்தார்கள். பெண்களும் அந்தப் பணியில் கலந்து கொண்டார்கள்.

கள், சாராயக் கடைகள் முன்பாக மறியல் செய்த ஆண்களையும் பெண்களையும், ஜஸ்டிஸ் கட்சியின் ஆதரவு பெற்ற குண்டர்கள் கடுமையாகத் தாக்கினார்கள்; பெண்களை மானபங்கம் செய்ய முயன்றார்கள். காவல் துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, இந்த அட்டூழியங்கள் அரங்கேறின.

கம்யூனல் ஜி.ஓ.

காந்தியடிகள், ராஜன்பாபு, நேருஜி முதலிய விடுதலை இயக்கத் தலைவர்கள் சென்னை மாகாணத்திற்கு வந்தபோது, அவர்களை எதிர்த்து வன்முறை ஆர்ப்பாட்டங்களை ஜஸ்டிஸ் கட்சி நடத்தியது என்ற செய்தியைப் பல சான்றுகளுடன் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் விவரித்திருக்கிறார். சுருக்கமாகச் சொல்லுவதானால், அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக என்னென்ன கொடுமைகளைச் செய்ய வேண்டுமென்று விரும்பினார்களோ, அந்தந்தக் கொடுமைகளையெல்லாம் ஜஸ்டிஸ் கட்சியும், அதன் ஆட்சியும் செய்தன என்பது வரலாறு.

ம.பொ.சி.

அன்றைய சென்னை மாகாணத்தில் 1920-ஆம் ஆண்டு முதல் 1934- ஆம் ஆண்டு வரை ஜஸ்டிஸ் கட்சியானது நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பரிபூர்ணமான ஒத்துழைப்பும் அதற்குக் கிடைத்தது. அத்தகைய சாதகமான சூழ்நிலையையும், வாய்ப்பையும் பெற்றிருந்த ஜஸ் டிஸ் கட்சியின் ஆட்சி, மக்களின் நலனுக்காகச் சாதனைகளைச் செய்ததா? என்னென்ன சாதனைகளைச் செய்தது?

பிராமணரல்லாதாரின் நலன்களைப் பாதுகாப்பதே தனது தலையாய பணி என்றும், அதற்காக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற கொள்கையைச் செயல்படுத்தப் போவதாகவும் ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பத்தில் மிகுந்த ஆடம்பரத்துடன் அறிவித்திருந்தது. எனினும், அக்கொள்கையைச் செயல்படுத்த அவசியமான ‘கம்யூனல் ஜி.ஓ.’வை ஜஸ்டிஸ் கட்சியின் ஆட்சி பிறப்பிக்கவில்லை.

காங்கிரஸார் அடங்கிய சுயராஜ்யக் கட்சியின் ஆதரவைப் பெற்று இயங்கிய டாக்டர் பி.சுப்பராயன் தலைமையிலான சுயேச்சை அமைச்சரவைதான், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்குச் சட்டப்படியான உத்தரவாதத்தை ஏற்படுத்தியது. ஆம், கம்யூனல் ஜி.ஓ. பிறந்தது டாக்டர் சுப்பராயன் ஆட்சியில்தான். சேதுரத்தினம் ஐயர் என்ற பிராமணரையும் அமைச்சராகக் கொண்டிருந்த அமைச்சரவைதான் இதைச் சாதித்தது என்று ம.பொ.சிவஞானம் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டி எழுதியிருக்கிறார்.

1937-ஆம் ஆண்டில் ராஜாஜி தலைமையில் அமைந்த காங்கிரஸ் ஆட்சி, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையைத் தொடர்ந்து அமல் செய்தது என்றும், அதற்குக் காங்கிரஸ் அரசு எத்தகைய எதிர்ப்பும் காட்டவில்லையென்றும் ம.பொ.சி. நினைவூட்டி இருக்கிறார்.

ஆக, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை பற்றி வாய் கிழியப் பேசியது ஜஸ்டிஸ் கட்சி. அதைச் செயல்படுத்தியது காங்கிரஸார் ஆதரவு பெற்ற அரசே என்பதைக் கவனத்தில் கொள்க.

தலித் புறக்கணிப்பு

ஏறக்குறைய பதினாறு ஆண்டு காலம் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, அதன் அமைச்சரவைகளில் ஒன்றில் கூட, இன்றைய தினம் தலித் என்று அழைக்கப்படும் ஹரிஜன சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை.

1935-ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் நடந்த முதலாவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு, தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றிருந்த பின்னரும், அது வற்புறுத்திய வாக்குறுதியை அளிக்க கவர்னர் தயங்கியதால், இடைக்காலத்தில் ஒரு பினாமி மந்திரி சபை கே.வி.ரெட்டி நாயுடு என்பவர் தலைமையில் அமைக்கப்பட்டது. அது மூன்று மாதங்கள் மட்டுமே ஆட்சி பொறுப்பில் இருந்தது. அந்த மந்திரி சபையில்தான் முதன் முதலில் ஒரு தலித், மாகாண கவர்னரின் தயவால் அமைச்சராக இடம் பெற்றார்.

பின்னர் முறைப்படி ராஜாஜியின் தலைமையில் அமைந்த காங்கிரஸ் மந்திரி சபையில் வி.ஐ. முனிசாமி பிள்ளை என்ற ஹரிஜன சகோதரர் மந்திரியாக இடம் பெற்றார். அந்த நியமனம் மிகப் பெரிய சமுதாயப் புரட்சியாகக் கருதப்பட்டது என்றும் ம.பொ.சி. விவரங்களுடன் தெரிவித்திருக்கிறார்.

ஜஸ்டிஸ் கட்சி மந்திரி சபைகளில் முஸ்லிம்களுக்கும் பிரதி நிதித்துவம் அளிக்கப்படவில்லை. ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் மந்திரி சபையில்தான் யாகூப்ஹாசன் என்ற முஸ்லிம் இடம் பெற்றார். அந்த நியமனம், அப்போது நிகழ்ந்த அதிசயங்களில் ஒன்றாகும் என்று ம.பொ.சி. வியந்து குறிப்பிட்டிருக்கிறார்.

தலித் மக்கள் புறக்கணிப்பு, முஸ்லிம்கள் புறக்கணிப்பு ஆகியவற்றையே ஜஸ்டிஸ் கட்சி அரசுகளின் ‘சாதனைகளாக’க் குறிப்பிடலாம்.

இன்னொன்றைச் சொல்லியாக வேண்டும். தேச பக்திக் கனலை மூட்டிப் பல ஆயிரம் மக்களை விடுதலைப் போரில் கலக்க வைத்து, வீரமிகு தியாகங்களைப் புரிய வைத்தவை மகாகவி பாரதியாரின் ஒப்பற்ற பாடல்கள். அந்தப் பாடல்களுக்கு, ஆங்கிலேய எஜமானர்களின் ஆணைப்படி தடை விதித்து, நீங்காத பழியைத் தேடிக் கொண்டது ஜஸ்டிஸ் கட்சியின் ஆட்சி.

வாழ்வு முடிந்தது

அன்றைய காங்கிரஸ் மகாசபை, முதன் முறையாக 1936-ஆம் ஆண்டில் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றது. ஜஸ்டிஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அநேகமாக அத்துடன் அதன் வாழ்வு முடிவடைந்தது என்று சொல்லலாம். அக்கட்சியில் இருந்தவர்களில் பலரே அதைக் குறை கூற ஆரம்பித்தார்கள்; பலர் வெளியேறிக் காங்கிரஸில் சேர மனுப் போடத் தொடங்கினார்கள்.

ஈ.வெ.ரா., தமது பொதுவாழ்வில் ஒரு திருப்பு முனையைச் சந்திக்க முயன்று கொண்டிருந்தார்.

“ஈ.வெ.ரா விரும்பியது சமுதாயச் சீர்திருத்தம் அன்று; இந்தியா சுதந்திரம் பெறக் கூடாது என்பதே அவரது விருப்பம்” என்று இளைஞராக இருந்தபோதே துணிவுடன் அம்பலப்படுத்தியவர் தோழர் ப.ஜீவானந்தம். அந்த ‘வரலாறு’ அடுத்த இதழில்.

ஆதார நூல்: எம்.பக்தவத்ஸலம் – எனது நினைவுகள் (சுயசரிதம்)
வெளியிட்டோர் – ஜனநாயக சேவா சங்கம், 11, வீரப்பெருமாள் முதலித் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5, 1972. ம.பொ. சிவஞானம் – விடுதலை போரில் தமிழகம் – இரண்டு தொகுதிகள்.

– கே.சி.லட்சுமி நாரயணன்