Friday, October 14, 2011

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 3

சுய மரியாதையற்ற கூட்டம் – கே.சி.லட்சுமி நாரயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 3

1919 – ஆம் ஆண்டில் ஈ.வெ.ரா. காங்கிரஸில் சேர்ந்தார். 1923 – ஆம் ஆண்டு வரையில் காங்கிரஸ் மகாசபையின் கொள்கைகளான கதர்த் திட்டம், மது ஒழிப்பு, ஹரிஜன ஆலயப் பிரவேசம், அனைவருக்கும் சம உரிமைகள் முதலியவற்றை ஆதரித்து ஈ.வெ.ரா. தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார்.


அன்றைய காங்கிரஸ் மகாசபையில் ஈ.வெ.ரா. சேர்ந்த மிகவும் குறுகிய காலத்திலேயே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் என்ற மிக உயர்ந்த பதவி அவருக்கு அளிக்கப் பெற்றது. காங்கிரஸில் ஓர் உயர்ந்த அந்தஸ்தும் அவருக்குக் கிடைத்தது.

ஈ.வெ.ரா.வுக்கு அந்தப் பெருமைகள் கிடைக்குமாறு செய்தவர் ராஜாஜியே! இந்த உண்மையைப் பல வருடங்களுக்குப் பின்னர் ஈ.வெ.ரா.வே பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்.

“என்னை ராஜாஜி அவர்கள்தான் முதலில் கோயம்புத்தூர் ஜில்லா காங்கிரஸ் செக்ரட்டரி ஆக்கினார். பிறகு, அவர்தான் என்னைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஆக்கினார். என்னிடம் முழு நம்பிக்கை வைத்து, என்னையே அவர், ‘நமது தலைவர் நாயக்கர்’ என்று அழைத்ததோடு, பார்ப்பனரில் வெகு பேரை என்னைத் தலைவர் என்று அழைக்கும்படி செய்தார்” என்று ஈ.வெ.ரா. ‘விடுதலை’ நாளிதழின் தலையங்கத்தில் (26.12.1972) எழுதியிருந்தார். அந்தத் தலையங்கம், ராஜாஜி அவர்கள் மறைந்த போது ஈ.வெ.ரா. எழுதியது ஆகும்.

இவ்வாறு ஈ.வெ.ரா.வே ஒப்புக் கொண்டுள்ளபடி, அவருக்கு மரியாதையையும், உயர்நிலையையும் அளித்த விடுதலை இயக்கமான காங்கிரஸ் மகாசபை பற்றிய அவரது நிலை, துரதிருஷ்டவசமாக 1924– ஆம் வருட ஆரம்பத்திலிருந்து மாற ஆரம்பித்து விட்டது. ஜஸ்டிஸ் கட்சியினரின் வலையில் அவர் விழுந்து விட்டார்.

ஈ.வெ.ரா. கூறிய சமூகச் சீர்திருத்தங்களைக் காங்கிரஸ் அலட்சியப்படுத்தியதால், அவர் வெளியேறினார் என்று சொல்ல முடியாது. உண்மையில் விடுதலை இயக்கக் கால காங்கிரஸ், சமூகச் சீர்திருத்தங்களில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தது. 
தீண்டாமை ஒழிப்பு, இளம் விதவைகள் மறுமணம், கலப்புத் திருமணம், மது ஒழிப்பு, ஹரிஜன ஆலயப் பிரவேசம், தேவதாசி முறை ஒழிப்பு, ஆலயங்களில் ஆடு, கோழி முதலியவற்றைப் பலியிடும் கொடுமைக்கு எதிர்ப்பு என்று பல சமுதாயச் சீர்திருத்தங்களை அன்றைய காங்கிரஸ் மகாசபை இந்தியா முழுவதும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தது. எனவே, ஈ.வெ.ரா. காங்கிரஸில் இருந்து கொண்டே சீர்திருத்தப் பிரச்சாரம் செய்திருக்கலாம்.

அன்றைய காங்கிரஸ் மகாசபையில் கடவுள் நம்பிக்கையற்ற சிலரும் உறுப்பினர்களாக இருந்தார்கள். நேருஜி ஒரு நாத்திகர் என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆகவே, கடவுள் மறுப்புக் கொள்கையைப் பின்பற்றிக் கொண்டே காங்கிரஸில் தொடர்ந்து ஈ.வெ.ரா. பணி புரிந்திருக்கலாம். எனினும், பகுத்தறிவுக்குப் பொருந்தக்கூடிய எந்தவிதமான காரணமும் இல்லாமல், காங்கிரஸிலிருந்து ஈ.வெ.ரா. வெளியேறி விட்டார்!

ஈரோடு சுயமரியாதை மாநாடு

ஈ.வெ.ரா. காங்கிரஸிலிருந்து வெளியேறியதும், ஜஸ்டிஸ் கட்சியுடன் சேர்ந்து கொண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தீவிரமாக எதிர்த்தார்.

‘சுயமரியாதை இயக்கம்’ என்ற ஓர் அமைப்பையும் அவர் ஆரம்பித்தார். கடவுள் மறுப்புக் கொள்கைக்கு ஆதரவாக அந்த இயக்கத்தை அவர் நடத்தினார். ‘சுயமரியாதை உள்ள எவனும் எதற்காக மற்றவர்களுக்குத் தலைவணங்க வேண்டும்’ என்று அவர் கேட்டார்.

சுயமரியாதை என்ற சொற்கள் ஓரளவு கவர்ச்சிகரமாக இருந்தன. ஈ.வெ.ரா.வை ஆசிரியராகக் கொண்டிருந்த ‘குடியரசு’ என்ற பத்திரிகை, சுயமரியாதைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்தது.

நாடு முழுவதும் உப்புச் சத்தியாகிரக இயக்கம் மிகவும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், 1931– ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஈரோடு நகரில் சுயமரியாதை மாநாடு என்ற பெயரில் ஒரு மாநாட்டை ஈ.வெ.ரா. நடத்தினார். 



அந்த மாநாட்டிலும், பின்னர் நடந்த தேசிய சுயமரியாதை மாநாட்டிலும் முக்கியமான பங்கு வகித்த கோவை அ.அய்யாமுத்து, தமது வாழ்க்கை வரலாற்று நூலில் இந்த இரண்டு மாநாடுகள் சம்பந்தமாகவும், பல விவரங்களைத் தெரிவித்திருக்கிறார்.

அய்யாமுத்து சுதந்திரப் போராட்டத்தில் தமது மனைவியுடன் கலந்து கொண்டு சிறை சென்றவர். “கதர் இயக்கத்தில் அய்யாமுத்துவுக்கு இணையாகப் பணி செய்தவர்கள் யாருமே இல்லை. அவரது பணி ஒப்பற்ற ஒன்று” என்று மகாத்மா காந்தி அவரைப் பற்றி எழுதியிருக்கிறார்.

இனி, ஈரோடு சுயமரியாதை மாநாடு பற்றி விவரிப்பேன்.

ஈரோடு சுயமரியாதை மாநாட்டில், ‘சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் உப்புச் சத்தியாகிரக இயக்கத்தில் தீவிரமாகக் கலந்து கொள்ள வேண்டும்’ என்று வற்புறுத்திய ஒரு தீர்மானத்தை, ப.ஜீவானந்தம் என்ற இளைஞர் கொண்டு வந்தார்.

அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து அவர் மிகுந்த ஆவேசத்துடன் பேசினார். “சுதந்திரம் இல்லாத அடிமை நாட்டில் மக்கள் சுயமரியாதையுடன் வாழ முடியாது. எனவே, இந்தியாவுக்கு முதலில் சுதந்திரம் வந்தாக வேண்டும். ஆங்கிலேயரின் ஆதிக்க ஆட்சி அகற்றப்பட வேண்டும்” என்று ஜீவானந்தம் குறிப்பிட்டபோது, மாநாட்டில் பலத்த கைதட்டல் எழுந்தது.

ஜீவானந்தத்தின் தீர்மானத்தைக் கண்டு ஈ.வெ.ரா. கதிகலங்கிக் போய் விட்டார். அவரை எதிர்ப்பதற்குக் கோவை அய்யாமுத்துவை ஈ.வெ.ரா. பயன்படுத்திக் கொண்டார். ஈ.வெ.ரா செய்த சூழ்ச்சியின் விளைவாக ஜீவானந்தத்தின் தீர்மானம் தோல்வி கண்டது.

“தீண்டப்படாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டிருந்த சகோதரர்களுக்குப் பொதுக் குளங்களிலும், கிணறுகளிலும் நீர் எடுக்க உரிமை இல்லை. அந்த உரிமைக்காக நாம் முதலில் போராடுவோம்; பிறகு உப்புச் சத்தியாகிரக இயக்கத்தில் கலந்து கொள்வோம்” என்று அறிவித்த அய்யாமுத்துவின் சமரசத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுயமரியாதைச் சத்தியாகிரக கமிட்டி ஒன்றை நியமித்து, அந்தக் கமிட்டியார் சில கோவில்களையும் குளங்களையும் தேர்ந்தெடுத்து, அங்கெல்லாம் ஹரிஜன மக்கள் பிரவேசிப்பதற்காகப் போராட்டம் நடத்துவது என்றும், முடிவை முப்பது நாட்கள் காலவரையறைக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானத்தை அய்யாமுத்து எழுதிக் கொடுத்தார். ஈரோடு மாநாட்டில் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த அளவில் ஈரோடு மாநாடு முடிந்தது. 



தேசிய சுயமரியாதை மாநாடு


ஈரோடு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி ஈ.வெ.ரா. செயல்படவில்லை. எனவே, ப.ஜீவானந்தமும், கோவை அய்யாமுத்துவும் சேர்ந்து கோவை மாநகரில் ‘தேசிய சுயமரியாதை மாநாடு’ என்ற பெயரில் ஒரு மாநாட்டை நடத்தினார்கள். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக ஈ.வெ.ரா.வின் சுயமரியாதை இயக்கம் செயல்பட்டதை, அந்த மாநாட்டில் பேசிய எல்லோரும் எதிர்த்தார்கள்.

உப்புச் சத்தியாகிரகத்தில் சுய மரியாதை இயக்கத்தினர் பங்கு பெற வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தையும், ஆலயங்களிலும் பொதுக் குளங்களிலும், பொதுக் கிணறுகளிலும் ஹரிஜன மக்களுக்கு அனுமதி தர வேண்டும் என்பதற்காகப் போராட்டம் நடத்துவது என்று, ஈரோடு சுயமரியாதை மாநாட்டில் தீர்மானித்து விட்டு, பொறுப்பற்ற முறையில் மேல்நாட்டுக்குக் கப்பலேறிச் சென்றுவிட்ட ஈ.வெ.ரா.வின் கொள்கையைக் கண்டிப்பதாக மற்றொரு தீர்மானத்தையும், கோவை தேசிய சுயமரியாதை மாநாடு ஒருமனதாக நிறைவேற்றியது.

அந்த மாநாட்டில், தீர்மானங்களின் மீது பேசியபோதுதான், ஈ.வெ.ரா.வுக்கு மக்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்ற விருப்பம் உண்மையில் கிடையாது என்றும், இந்தியா சுதந்திரம் அடையக் கூடாது என்பதுதான் அவரது விருப்பம் என்றும் ஜீவானந்தம் முழக்கமிட்டார்.

கோவை தேசிய சுயமரியாதை மாநாடு முடிந்த பிறகு, அய்யாமுத்துவும், ஜீவானந்தமும் சுயமரியாதை இயக்கத்திலிருந்து விலகி, காங்கிரஸ் மகாசபை நடத்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்கள்.

ஜீவானந்தம் மிகச் சிறந்த பேச்சாளர்களுள் ஒருவர்; கொள்கைப் பற்று மிகுந்தவர். விடுதலை இயக்கத்தில் தீவிரமாகப் பங்கு கொண்ட அவர், பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆனார். அவர் இறுதிக் காலம் வரையில் தனி வாழ்வில் எளிமை பேணியவராக – தியாக சீலராக வாழ்ந்தார்.

கோவை தேசிய சுயமரியாதை மாநாட்டின் எச்சரிக்கையை அலட்சியப் படுத்திய சுயமரியாதை இயக்கமும், ஜஸ்டிஸ் கட்சியும் வன்முறை வழிகளைப் பின்பற்றின. விடுதலை இயக்கத்தில் தீவிரமாகப் பணிபுரிந்த இளைஞர் காமராஜைப் படுகொலை செய்ய முயற்சிகள் நடந்தன. அடுத்த இதழில் விவரங்கள்!


ஆதார நூல்: எனது நினைவுகள் (சுயசரித்திரம்) 962 பக்கங்கள்.
எழுதியவர் கோவை அ.அய்யாமுத்து,
வெளியிட்டோர் – வானதி பதிப்பகம், தி.நகர், சென்னை –17. (1973).