Friday, October 28, 2011

ஜன்னல் வழியே

கருணாநிதி குடும்பத்தின் மீடியா வியாபாரம்! – துர்வாசர் 
ஜன்னல் வழியே

டக்கி வாசிப்பது என்பது தி.மு.கழகத் தலைவரிடமும் சரி, அதன் இதர தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடமும் சரி, அறவே கிடையாது. பதவியில் இருக்கும்போது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடித் தீர்ப்பது என்பது தி.மு.க.வின் வரலாறு. பதவியையும் செல்வாக்கையும் சொந்த நலன்களுக்காகத் துஷ்பிரயோகம் செய்வது என்பது அவர்களுக்குக் கைவந்த கலை. டாக்டர் கலைஞர் கருணாநிதி மகா தந்திரசாலி. தனது ஆசைகளையும் எண்ணங்களையும் எப்படியாவது நிறைவேற்றிக் கொள்வார்.முரசொலி மாறனை முதல் முதலாக மத்திய அரசில் நுழைத்ததே, தனக்கு டெல்லியில் நம்பகமான ஒரு ஆள் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். முரசொலி மாறனும் சரி, அவரது வாரிசுகளும் சரி, வியாபாரத்தில் வெகு சூட்டிகையானவர்கள். கையில் அதிகாரம் வேறு இருக்கவே, அதை வைத்து தங்களுடைய பிஸினஸ் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திக் கொண்டார்கள் என்பது உலகமறிந்த செய்தி.

மாறனுக்குப் பிறகு முத்தமிழ் வித்தகர் கருணாநிதி, பேரன் தயாநிதி மாறனை மத்திய அமைச்சகத்தினுள் நுழைத்தார். தொலைத் தொடர்புத் துறையைக் கேட்டுப் பெற்றார்.

தமிழ்நாட்டில் பல ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. ரயில்வே துறையைக் கேட்டுப் பெற்றால் அத்திட்டங்களை நிறைவேற்றலாம். ஆனால், கருணாநிதியும் அவரது குடும்பமும் ரயில்வே காண்ட்ராக்டர்களா என்ன, ரயில்வே துறையைக் கேட்டு வாங்கி ஆதாயம் அடைய? கருணாநிதி, மாறன் குடும்பங்கள் இரண்டுமே மீடியா வியாபாரிகள். மீடியா வியாபாரிகளுக்கு ரயில்வே எதற்கு?

93-ல் சாதாரண வீடியோ கேஸட்டுகளை விற்பனை செய்து வந்த கலாநிதி, தயாநிதிகள் சன் டி.வி.யை ஆரம்பித்தார்கள். 2000-ல் எஸ்.சி.வி.யைத் துவக்கினார்கள். ஹாத்வே போன்ற இதர கேபிள் டி.வி.க்களை தனக்குப் பின்புலமாக உள்ள தாத்தா கருணாநிதியின் அரசியல் செல்வாக்கு, மத்திய அரசிலுள்ள தொடர்பு இவற்றால் எஸ்.சி.வி. ஒழித்துக் கட்டியது. கலாநிதி, தயாநிதிகள், டி.வி. உலகில் பட்டம் பறக்கிற மாதிரி உயரே உயரே பறந்தார்கள்.

2004-ல் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சரான தயாநிதி, டெல்லியில் இருந்து கொண்டே சன் டி.வி.க்கு வேண்டிய சகலத்தையும் செய்து கொண்டிருந்தார். அடுத்தடுத்து கே. டி.வி., சன் நியூஸ், இதர மொழிச் சேனல்கள்.... என்று தென்னிந்தியாவில் தனது கால்களை சன் டி.வி. அகலமாக விரித்து வைத்து விட்டது. 
மத்திய அரசில் தொலைத் தொடர்பு மந்திரியாக இருக்கும் முன்னுரிமையை வைத்து ராஜ் டி.வி.க்கோ, விஜய் டி.வி.க்கோ கிடைக்காத வசதிகளை, சதா சர்வ காலமும் சிரித்துக் கொண்டே இருக்கும் தயாநிதி, தனது சன் குழுமத்துக்குச் செய்து கொடுத்துக் கொண்டே இருந்தார்.

பதவியும், தாத்தா கருணாநிதியின் பின்பலமும் இருக்கிற தைரியத்தில்தானே, தனது வீட்டில் சட்டத்துக்கு விரோதமாக தனி டெலிஃபோன் எக்ஸ்சேஞ்சையை இயக்கி இருக்கிறார் தயாநிதி?

2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கருணாநிதி குடும்பத்திலிருந்து ஏகப்பட்ட ‘நிதி’கள் சினிமா வினியோகத்திலும், சினிமா தயாரிப்பிலும் புற்றீசல் போல் கிளம்பி வந்து ஈடுபட்டார்கள். சன் குழுமம் ஹாத்வேயை ஒழித்துக் கட்டிய மாதிரி, பல சினிமா வினியோகஸ்தர்களையும், தயாரிப்பாளர்களையும் கதறடித்தனர் இந்த ‘நிதி’கள். விளைவு, இந்தக் கருணாநிதி குடும்பத்து ‘நிதி’களை மீறி சினிமாவில் யாரும் தலையெடுக்க முடியவில்லை.

சன் டி.வி. குழுமம், தினகரன், தமிழ் முரசு, குங்குமம் முதலான பத்திரிகைகள், சினிமா வினியோகம் என்று தமிழ்நாட்டு மீடியாவே கலாநிதியின் கைக்குள் வந்துவிட்டது. தமிழன் படிப்பதாக இருந்தால் தினகரனைத்தான் படிக்க வேண்டும்; பார்ப்பதாக இருந்தால் சன் டி.வி.யையோ, சன் பிக்சர்ஸ் வினியோகித்த திரைப்படத்தையோதான் பார்க்க வேண்டும் – என்ற நிலைக்குத் தமிழர்களைத் தள்ளி விட்டனர்.

மீடியா வியாபாரத்தில் தங்களை அடித்துக் கொள்ள ஆள் இல்லை என்கிற அளவுக்கு, இந்த இரண்டு நிதிகளும் வளரக் காரணமே பெரிய நிதியான கருணாநிதிதான். மீடியா வியாபாரம் செய்யக் கூடாது என்றில்லை. ஆனால், பதவி அதிகாரத்தையும், தங்கள் அரசியல் செல்வாக்கையும் துஷ்பிரயோகம் செய்து, மீடியா வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்கிற சுயநலம் கருணாநிதி குடும்பத்துக்குத்தான் உண்டு.

கருணாநிதி ‘ஏழு வயதிலிருந்தே பொது வாழ்வில் இருக்கிறேன், எட்டரை வயதிலிருந்தே பொதுவாழ்வில் இருக்கிறேன்’ என்று பீற்றிக் கொள்கிறார். அவர் பொது வாழ்வில் இருப்பதால், தமிழ்நாட்டு மக்களை உயர்த்தி விட்டாரோ இல்லையோ, சன் குழுமத்தையும், தனது கலைஞர் டி.வி.யையும் உயர்த்தி விட்டார்.

இத்தனை அதிகார துஷ்பிரயோகத்துக்கும் காரணமான கருணாநிதி இப்போது தனது பேரன் தயாநிதிக்குப் பரிந்து கொண்டு ‘இந்தியாவில் மீடியாவின் ஆட்சி நடக்கிறது...’ என்று மீடியாவைச் சாடுவது நல்ல கூத்துதான்.