Wednesday, January 11, 2012

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 8

ஈ.வெ.ரா.வுக்கு அண்ணாதுரை கடும் கண்டனம்! – கே.சி.லட்சுமிநாராயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 8

ந்திய சுதந்திரப் போராட்டத்தை ஆதரிக்காததும், சுதந்திரப் போராட்ட வீரர்களை நாக்கிலே நரம்பின்றி ஏசித் தூற்றியதும் மிகப் பெரிய தவறுகள் என்ற ஒரு சிறிய உறுத்தல், இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டு விடும் என்று தென்பட்ட காலகட்டத்தில், அண்ணாதுரைக்கு ஏற்பட்டது என்று தோன்றுகிறது.


விடுதலைப் போரில் ஈடுபட்டுத் தியாகங்கள் பல புரிந்தோரை, நிந்திப்பது தகாது என்று அவர் பேசவும் எழுதவும் ஆரம்பித்தார்.

மகாகவி பாரதியாரைப் பார்ப்பனர் என்று கொச்சை மொழிகளில் அன்றைய திராவிடர் கழகத்தினர் ஏசிக் கொண்டிருந்ததை, அண்ணாதுரை விரும்பவில்லை. பாரதியார் சமுதாய சீர்திருத்தச் செம்மல் என்று அவர் புகழாரம் சூட்டினார். பாரதி ஒரு மக்கள் கவிஞர் என்று சென்னை வானொலியில் அவர் உரை நிகழ்த்தினார்.

அதுமட்டுமின்றிப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்குப் பொற்கிழி வழங்கும் ஒரு விழா, அண்ணாதுரையின் பெருமுயற்சியால் 28.7.1946 அன்று நடந்தது. பாரதிக்குத் தாசன், அதாவது பாரதியாரின்அடிமை என்று தமது புனைப் பெயரை வைத்துக் கொண்ட, கனக சுப்புரத்தினத்திற்கு விழா எடுப்பதைத் திராவிடர் கழகத்தினரில் கணிசமானவர்கள் விரும்பவில்லை. அவர்கள் பாரதிதாசனைத் திட்டிக் கொண்டிருந்தார்கள். அவருக்குப் பொற்கிழி அளிக்க முன்வந்த அண்ணாதுரை மீதும் அவர்களது கோபம் பாய்ந்தது.

ஆனால், அண்ணாதுரை அது குறித்துக் கவலைப்படாமல் விழா ஏற்பாடுகளைக் கவனித்தார். அவரது அன்றைய நெருங்கிய சகாக்களான சி.வி.எம்.அண்ணாமலை, சி.டி.டி.அரசு, க.அன்பழகன், ஈ.வெ.கி.சம்பத் முதலியவர்கள் விழாவுக்காகத் தீவிரமாகப் பணி ஆற்றினார்கள். நாவலர் சோமசுந்தர பாரதியார், பேராசிரியர் ரா.பி.சேதுப் பிள்ளை, ப.ஜீவானந்தம், கி.ஆ.பெ.விஸ்வநாதம், டி.செங்கல்வராயன், ம.பொ.சிவஞானம், மு.வரதராசன் முதலியவர்கள் அந்த விழாவில் பேசினார்கள். அண்ணாதுரை பொற்கிழியைப் பாரதிதாசனிடம் அளித்தார்.

அந்த விழா கட்சி சார்பற்ற முறையில் நடந்தது. ஈ.வெ.ரா. அந்த விழாவில் கலந்து கொள்ளாமல் பகிஷ்கரித்தார்.
ஈ.வெ.ரா. அறிக்கை 
திராவிடர் கழகத்தில் இருந்த இளைஞர்களில் பலர் ஈ.வெ.ரா வுக்கு எதிராக அண்ணாதுரையை ஆதரித்தார்கள். 

கட்சியில் ஈ.வெ.ரா.வுக்கும், அண்ணாதுரைக்கும் இடையே பனிப்போர் ஆரம்பமாகி நடந்து கொண்டிருந்தது. ‘கட்சியில் ஈ.வெ.ரா., சர்வாதிகாரியாக நடந்து கொள்கிறார்’ என்று அண்ணாதுரை தரப்பினர் பிரசாரம் செய்தார்கள். 

கட்சியில் ஈ.வெ.ரா.வின் பணிகள் முடிந்து விட்டன என்றும், இனிமேல் அவருக்கு ஓய்வு தந்து விடலாம் என்றும் 29.9.1946 ‘திராவிட நாடு’ இதழில் அண்ணாதுரை ஓரளவு மறைமுகமாகவும், ஓரளவு பகிரங்கமாகவும் எழுதினார். 

1947 ஆகஸ்ட் பதினைந்தாம் தேதியன்று இந்தியா சுதந்திர நாடாக மலரும் என்று அன்றைய ஆங்கிலேய அரசினர் அதிகாரபூர்வமாகத் தெரிவித்தபோது, திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ.ரா. ஓர் அறிக்கையை வெளியிட்டார். 

“ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி வட ஆரியர்களின் ஆதிக்கம் உதயமாகும் நாள். அந்த நாள் திராவிடர்களுக்குத் துக்க நாள். எனவே, திராவிடர் கழகம் அந்த நாளைத் துக்க நாளாக அனுசரிக்கும்” என்று தெரிவித்த ஈ.வெ.ரா.வின் அறிக்கை ‘விடுதலை’ நாளிதழிலும், பிற இதழ்களிலும் பிரசுரமாயிற்று. 

அண்ணாதுரை கண்டனம் 
ஈ.வெ.ராவின் அறிக்கை வெளியானதும், அன்றைய திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணாதுரை கோபத்துடன் கொதித்தெழுந்தார். அவர் ஈ.வெ.ரா.வின் துக்க நாள் அறிக்கைக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்து, ஒரு நீண்ட கட்டுரையை 10.8.1947 தேதியிட்ட ‘திராவிட நாடு’ இதழில் வெளியிட்டார். 

ஈ.வெ.ரா.வை எதிர்த்துக் கண்டனம் தெரிவித்து அண்ணாதுரை எழுதிய முதலாவது அறிக்கை அது ஆகும். அதற்கு முன்பாக அவர் மறைமுகமாகச் சில கண்டனங்களைத் தெரிவித்து இருந்தார் என்ற போதிலும், ஈ.வெ.ரா.வுடன் நேரடியாக மோதுவதற்கு அவர் தயாராகி விட்டதை அனைவருக்கும் எடுத்துக் காட்டுவதாக அந்தக் கண்டன அறிக்கை அமைந்தது. 

அண்ணாதுரையின் அந்த நீண்ட அறிக்கையின் சில முக்கியமான வாசகங்கள் கீழே தரப்படுகின்றன. 

“ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி இந்திய சுதந்திர தினம். புதிய இந்திய சர்க்காரின் அமைப்பு நாள். ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி பாகிஸ்தான் வெற்றி நாள். புதிய பாகிஸ்தான் சர்க்கார் அமைப்பு நாள். “ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் ஒழியும் நாள். உலகிலே பேசப்படும் நாள். வரலாற்றிலே இந்நாள் இடம் பெறுகிறது. 

“ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி, பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவு நாள். புதிய சர்க்காரின் தொடக்க நாள். புதிய சர்க்கார் தத்தமது ஆட்சி வட்டாரங்களிலே நல்லாட்சி நடத்தியாக வேண்டுமென்று வலியுறுத்த, அதற்காகக் கிளர்ச்சி செய்ய, போராட, யாருக்கும் உரிமை உண்டு. பிரிட்டிஷ் ஆட்சி அன்றைய தினம் நீங்குகிறது என்பது மக்களுக்குள்ள இந்த உரிமையை அதிகப்படுத்துகிறது. 

“நாட்டு மக்கள், அனைவராலும் ஒப்புக் கொள்ளப்படுவதும், மக்களின் பிறப்புரிமையுமாகிய சுயராஜ்யத்துக்காக, தாங்கள் சரி என்று கொண்ட திட்டங்களின்படி நடந்து, அதனால் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களை, சிறைவாசத்தை, தீவாந்தர சிட்சையை, தூக்கு மேடையைக் கூட மனமுவந்து ஏற்றுக் கொண்ட (விடுதலைப் போராட்ட) தியாகிகளுக்கு, வீரத்தை, தியாகத்தை, கொண்ட கொள்கைகளுக்காக கஷ்ட நஷ்டம் ஏற்க வேண்டும் என்ற கோட்பாட்டை மதிக்கும் திராவிடர் கழகத்தாராகிய நாம், வீர வணக்கம் செலுத்த வேண்டும். 

தியாகம் புரிந்தோமா? 
“எனவே, ஆகஸ்ட் பதினைந்தாம் தேதியின் முக்கியத்துவத்தை உணரவும், அந்நாள் நமது கழகம் என்ன விதமான போக்கு கொள்ள வேண்டும் என்பதைக் கவனிக்கவும், அதற்குப் பிறகு நமது வேலை முறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்காகவும், நமது கழகத்தின் நிர்வாகக் கமிட்டியோ, முக்கியஸ்தர்களோ கூடி யோசித்திருக்க வேண்டும். 

“உலகம் முழுவதும் கூர்ந்து கவனிக்கும் ஒரு மகத்தான சம்பவத்தை, நமது கொள்கையை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு அளந்து பார்ப்பதோ, உதாசீனம் செய்வதோ சரியாகாது. அம்முறையில் ஏதும் செய்யப்படவில்லை. 

“அது நமக்குத் துக்க நாள் என்று நாம் கூறுகிறோம். சரியா? முறையா? ஒன்றுபடச் செய்யும் திட்டமா? காங்கிரஸ் எது செய்தாலும் எதிர்ப்பதே இவர்கள் வேலை என்று நம்மைப் பற்றிக் கூறப்படும் குற்றத்தை, நாமே வலியச் சென்று ஏற்றுக் கொள்ளும் செயல் அல்லவா இது? 

“நிர்வாகத் தலைவரின் (ஈ.வெ.ரா.வின்) அறிக்கை மறுநாளே வெளிவந்தது. அதிலே ஆகஸ்ட் 15 துக்க நாள் என்று குறிக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி (சுதந்திர நாள்) நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடாது என்று ‘விடுதலை’ அறிவித்தது. இந்தப் போக்கு விளக்கம் தருவதாகவோ, நமது எதிர்காலத்தைச் செம்மைப்படுத்தும் முறையாகவோ தோன்றவில்லை. 

“ஒரு திட்டத்துக்கு, ஒரு இன மக்களில் பெருவாரியானவர்கள் ஆதரவு இருக்கிறது என்பதை ஜனநாயக முறைப்படி, ஜனாப் ஜின்னா காட்டியே, வெற்றி பெற்றார். 

“அதுபோலவே, காங்கிரஸும், சுயராஜ்யக் கோரிக்கைக்குச் சகலரும் ஆதரவளிக்கிறார்கள் என்பதை, ஜனநாயக முறையான தேர்தல் முறைப்படியும், விடுதலைப் போர் நடத்தியும் காட்டி விட்டது. 

“நாம் ஆரம்ப கட்டத்தில், திட்டத்தை விளக்குவதில், அதற்கு ஆதரவு திரட்டுவதில் இருக்கிறோம். கிளர்ச்சி இல்லை, போர் இல்லை. இன்னமும், நமது உடலிலே இதற்காக தியாகத் தழும்பு ஏற்படவில்லை. குமரன் இல்லை, சிதம்பரம் பிள்ளை இல்லை! 


தீராத பழிச்சொல் 

“நம்முடைய வீர இளைஞர்கள் மீது இதுநாள் வரையில் சுமத்தப்பட்ட பழிச்சொல், நாம் பிரிட்டிஷாரின் அடிமைகள் என்பது. 

“அந்த பிரிட்டிஷாரின் ஆட்சி முடியும்போது நாம் துக்கம் கொண்டாடுவது, இந்தப் பழிச் சொல்லை, நாமாகவே நம் மீது சுமத்தும்படி, அவர்களை வற்புறுத்தி அழைப்பதாகும். 

“காங்கிரஸார் பழி சுமத்தியதுபோல, நாம் பிரிட்டிஷாரின் அடிமைகள் அல்ல என்பதை விளக்க நமக்கு ஒரு நாள், கடைசி நாள், ஆகஸ்ட் 15. நாம் ஏன் அந்தச் சந்தர்ப்பத்தை இழந்து அழியாத பழிச் சொல்லைத் தேடிக் கொள்ள வேண்டும்?” 

– இவ்வாறு அண்ணாதுரை அழுத்தந்திருத்தமாகக் கேள்விகளை எழுப்பினார். 

அண்ணாதுரையின் அறிக்கையை ஈ.வெ.ரா. அலட்சியப்படுத்தி ஒதுக்கி விட்டு, விடுதலைத் திருநாளைத் துக்க நாளாக அனுசரித்தார்; அழியாத பழிச் சொல்லைத் தேடிக் கொண்டார்! 

திராவிடக் கட்சிகளின் வரலாற்றில் ஒரு திருப்பு முனையை உருவாக்கிய ஒரு பெரிய நிகழ்ச்சி 1949– ஆம் ஆண்டில் அரங்கேறியது.