Wednesday, January 11, 2012

மத்திய அரசின் உண்ணாவிரத ஒழிப்புப் போராட்டம் – சத்யா

மத்திய அரசின் உண்ணாவிரத ஒழிப்புப் போராட்டம் – சத்யா 
ழலை ஒழிக்க அன்னா ஹஸாரே குழுவினர் போராடி வருவதற்குச் சமமாக, அவர்களது உண்ணாவிரதத்தை ஒழிக்க மத்திய அரசும் தீவிரமாகப் போராடி வருகிறது. அதன் விளைவாக கால வரையற்ற உண்ணாவிரதம் என்ற அறிவிப்பு, 15 நாளைக்குள் முடித்துக் கொள்ளும் உண்ணாவிரதமாகச் சுருங்கியுள்ளது. இந்த சுமுக(!) உடன்பாட்டை எட்ட, இரு தரப்பினரும் எப்படி வாதம் செய்திருப்பார்கள் என்று யோசித்துப் பார்க்கிறோம். 


கபில்சிபல் : இதோ பாருங்க. அநாவசியமா பிரச்சனை பண்ணாதீங்க. நாடு இருக்கிற நிலையிலே ஒரு நிமிஷம் உண்ணாவிரதம் இருக்கிறது கூட அரசியல் சட்டப்படி குற்றம். நாட்டுலே யாராவது சாப்பிடாம இருக்காங்களா? அவங்களுக்கெல்லாம் ஊழல் ஒழியணும்ங்கற எண்ணம் இல்லையா? அன்னா ஹஸாரே மட்டும் சாப்பிட மாட்டேன்னு ஏன் அராஜகம் பண்றாரு?

கெஜ்ரிவால் : நாட்டு மக்கள் ஆதரவோடத்தான் நாங்க இந்தப் போராட்டத்திலே இறங்கியிருக்கோம். ‘ஜன் லோக்பால்’ சட்டத்தை அரசு ஏற்கிற வரைக்கும் அன்னா ஹஸாரே உண்ணாவிரதத்தைத் தொடர்வார்.

சிதம்பரம் : நாங்களும் ஊழலை ஒழிக்கத்தான் பாடுபடறோம். அதனாலேதான் 2-ஜி ஊழல்லே கூட எங்களையும் மீறி சில பேர் கைதாகியிருக்காங்க. அதே வழிமுறையை நீங்களும் பின்பற்றலாமே?

சாந்தி பூஷண் : கடுமையான லோக்பால் சட்டம் வந்தாத்தான் ஊழலை ஒழிக்க முடியும். நாங்க என்ன வெளிநாட்டு பேங்குகளிலே பதுக்கியிருக்கிற கறுப்புப் பணத்தை மீட்கணும்னா உண்ணாவிரதம் இருக்கிறோம்? இனிமே நடக்கப் போற ஊழலைத் தடுக்கத்தானே சட்டம் கொண்டு வரணும்னு சொல்றோம்?

பிரணாப் முகர்ஜி : அன்னா ஹஸாரே நல்லா சாப்பிட்டு நூறு ஆண்டு காலம் ஊழலை எதிர்த்துப் போராடணும்ங்கறதுதான் எங்க ஆசை. அப்படியே உண்ணாவிரதம் இருந்தாலும், இப்படி பொது இடத்திலே இருக்கிறது நியாயமா? வீட்டுக்குள்ளேயே உண்ணாவிரதம் இருக்க கூடாதா? லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு ஒரு நியாயம். இவருக்கு ஒரு நியாயமா?

பிரசாந்த் பூஷண் : மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் இப்படிப் போராடறோம்.

சிதம்பரம் : மக்கள் எதுவும் தெரியாம நிம்மதியா இருக்காங்க. அவங்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, டென்ஷன் படுத்தணுமா? உண்ணா விரதத்துக்குப் பதிலா ‘உறங்காவிரதம்’ இருக்கட்டுமே. அரசு எந்தத் தடையும் பண்ணாது. 
கிரண்பேடி : உண்ணாவிரதம் காந்தி கடைப்பிடிச்ச வழிமுறை. அதனாலே அவர் வழியிலே...

கபில்சிபல் : என்ன காந்தி? நாங்க பார்க்காத காந்தியா? எங்க கட்சியிலேயே ரெண்டு மூணு காந்தி இருக்காங்க. அவங்க வழியிலே போகலாமே. சரி, அப்படியே உண்ணாவிரதம் இருந்தாலும் டென் டூ ஃபைவ் அடையாள உண்ணாவிரதம் இருக்கலாமே. அவ்வளவு ஏன்? கூச்சத்தை விட்டா அரைநாள் கூட போதும்.

சாந்தி பூஷண் : சீச்சீ... அதனாலே ஒரு பலனும் கிடைக்காது.

கபில்சிபல் : அப்ப தொடர் உண்ணாவிரதம் இருங்க. டெய்லி ஒருத்தர். எத்தனை வருஷம் வேணாலும் தொடரலாம். இதையெல்லாம் விட்டுட்டு, சாப்பிடவே மாட்டோம்னு அடாவடி பண்றாரே. ஒரு சட்டம் கொண்டு வர்றதுன்னா சும்மாவா? எத்தனை கட்சிகள் ரகளை பண்ணி, எத்தனை தடவை சபையை ஒத்தி வெச்சு நிறைவேத்தற விஷயம் தெரியுமா?

பிரணாப் முகர்ஜி : சட்டத்தை நிறைவேத்தறது பார்லிமென்டோட வேலை. நீங்களே சட்டத்தை கையிலே எடுத்துக்கிட்டு பேயாட்டம் ஆடறதுக்கு ஆட்சியையா பிடிச்சுட்டீங்க? பிடிவாதம் பிடிக்காம, காலாகாலத்திலே அன்னா ஹஸாரே சாப்பிடறதுக்கு வழியைப் பாருங்க.

சிதம்பரம் : ஒரு தேர்தல்லேயாவது ஜெயிக்க முடியுமா உங்களாலே? கோடிக்கணக்கிலே செலவு பண்ணி தேர்தலை சந்திச்சிருந்தா, அந்த நஷ்டத்தை ஈடுகட்டணுமேன்ற கவலை இருந்திருக்கும். இப்படிப் பொறுப்பில்லாம, ஊழல் எதிர்ப்புக் கூச்சல் போட மாட்டீங்க.

கெஜ்ரிவால் : எங்க மசோதா அமலுக்கு வந்தா, 65 சதவிகிதம் ஊழலை கேரண்டியா ஒழிக்க முடியும்னு ஹஸாரே சொல்றாரு.
கபில்சிபல் : ஊழலைப் பத்தி எங்களுக்குத் தெரியுமா? அவருக்குத் தெரியுமா? அவர் பேச்சை நம்பறீங்களே. 65 சதவிகிதம் ஊழலை ஒழிக்கிறது, பாதிக் கிணறு தாண்டற மாதிரி. அரைகுறை வேலை செய்யறதுக்கு செய்யாமலே இருக்கலாம். அதான் எங்க வழி.

கிரண்பேடி : ஊழலை ஒழிக்கணும்ன்ற சிந்தனையே இல்லாம இருக்கீங்களே.

கபில்சிபல் : இப்படி வாய் கிழியப் பேசறீங்களே. நான் கேக்கறேன். ‘ஸி.ஏ.ஜி. ஒழிப்பு மசோதா’ தயாரிச்சு அனுப்ப முடியுமா உங்களாலே? ஊழல் இந்த அளவு விஸ்வரூபம் எடுத்ததுக்கே ஸி.ஏ.ஜி.தானே காரணம்?

சாந்தி பூஷண் : நீங்க எங்க நோக்கத்தையே புரிஞ்சுக்காம பேசறீங்க. லட்சம் கோடி ரூபாய் ஊழலைக் கூட சாதாரணமா நினைக்கறீங்க.

சிதம்பரம் : அகலக் கால் வைக்காம, முதல்லே சின்னச் சின்ன ஊழலை ஒழிக்கப் போராடுங்களேன். ஆஸ்பத்திரியிலே ஆயா வாங்கற லஞ்சம், அரசாங்க ஆஃபீஸ்லே பியூன் வாங்கற லஞ்சம்னு எவ்வளவு இருக்குது? உங்க கவனத்தை அந்தப் பக்கம் திருப்பினா, நாங்க எங்க வேலையை ஃப்ரீயா கவனிக்க முடியுமில்லே?

கபில்சிபல் : அதை விடுங்க. நாங்க சாப்பாடு போட்டு பேட்டா கொடுத்து, கூட்டத்தைக் கூட்ட படாதபாடு படறோம். உங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு கூட்டம் வருது? இதுலேர்ந்தே நீங்க ஏதோ ஃப்ராடு பண்றீங்களோன்னு சந்தேகம் வருது.

பிரணாப் முகர்ஜி : அரசியல்லே இல்லாமயே கோடிக்கணக்கான பணம் எங்கிருந்து வந்தது? அமெரிக்கா கொடுத்ததா? இல்லே, தீவிரவாதிகள் கொடுத்ததா 
சிதம்பரம் : உங்க முகங்களைப் பார்க்கும்போதே மோடி ஆளுங்களோன்னு சந்தேகம் வருது.

கபில்சிபல் : எதிர்ப்பு தெரிவிக்கறதுக்கும் ஒருமுறை இருக்குது. சைலண்டா மத்தவங்க காதுலே விழாதபடி எதிர்க்கணும். ஆனா நீங்க வெறி பிடிச்ச மாதிரி ஊழலை எதிர்க்கிறீங்க.

கெஜ்ரிவால் : நீங்க என்ன சொன்னாலும் சரி, கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் உண்ணாவிரதம் இருக்கிறதுன்னு முடிவு செஞ்சிருக்கோம்.

கபில்சிபல் : என்ன பேசறீங்க நீங்க? உங்களுக்குத்தான் மூச்சு இருக்குதா? எங்களுக்கெல்லாம் இல்லையா? ஏதோ சில ஊழல்களைப் பத்தி அரைகுறையா தெரிஞ்சுகிட்டே இப்படி ஆத்திரப்படறீங்களே. முழு விவரமும் தெரிஞ்சுகிட்டு ஆட்சி நடத்தற எங்களுக்கு எப்படி இருக்கும்? நாங்க எப்பவாவது சாப்பிடறதை நிறுத்தியிருக்கோமா?

பிரணாப் முகர்ஜி : நீங்க இவ்வளவு தூரம் கெஞ்சறதாலே, உண்ணாவிரதத்தை அனுமதிச்சுத் தொலைக்கறதுன்னு முந்தா நாளே முடிவு பண்ணிட்டோம். மடமடன்னு ஒரு வாரத்துக்குள்ளே முடிக்கணும்.

சாந்தி பூஷண் : கட்டுப்படி ஆகாதுங்க. ஒரு மாசமாவது வேணும்.

சிதம்பரம்: சரி. உங்களுக்கும் வேணாம். எங்களுக்கும் வேணாம். 15 நாள்தான். அதுக்கு மேலேயும் உண்ணாவிரதம் தொடர்ந்தா, கடுமையான நிபந்தனைகள் பாயும். நிபந்தனைகளை டெல்லி போலீஸ் சொல்லும். கேட்டுக்குங்க. 
டெல்லி போலீஸ்: (1) யாரும் ஊழல் எதிர்ப்பு கோஷம் போடக் கூடாது. அது அரசாங்க விரோதச் செயலாகக் கருதப்படும். (2) 15 நாள்தான் உட்கார்ந்து கொண்டு உண்ணாவிரதம் இருக்கலாம். அதற்கு பிறகு கூட்டத்தினர் எந்த நேரத்திலும் எழுப்பப்படலாம் என்பதால், அதற்கு வசதியாக நின்று கொண்டே உண்ணாவிரதம் இருக்க வேண்டும். (3) போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள், இதற்கு முன் எந்த ஊழலிலும் ஈடுபட்டதில்லை என்று கலெக்டரிடம் சர்டிஃபிகேட் பெற வேண்டும்.

சந்தோஷ் ஹெக்டே : ஐயையோ! லஞ்சம் கொடுக்காம கவர்மென்ட்லே சர்ட்டிஃபிகேட் வாங்க முடியாதே?

டெல்லி போலீஸ் : அது உங்க பிரச்சனை. (4) உண்ணாவிரதப் பந்தல்லே, ஊழல் எதிர்ப்பு சம்பந்தமாக எந்த விளம்பரமும் செய்யக் கூடாது. அதுக்குப் பதிலா ராகுல், சோனியா கட்-அவுட் வெக்கலாம். (5) சட்டம் - ஒழுங்குப் பிரச்சனையைத் தவிர்க்க, உண்ணாவிரதம் இருக்கும் இடம் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட வேண்டும். (6) தினமும் ஒரு காங்கிரஸ் தலைவர் மேடைக்கு வந்து, உண்ணாவிரதத்துக்கு எதிராக வாழ்த்து தெரிவித்துப் பேசுவார்.

பிரசாந்த் பூஷண் : ஹா... காங்கிரஸ் தலைவரா? கோஷ்டி மோதல் நடக்குமே...?

டெல்லி போலீஸ் : கவலை வேண்டாம். கோஷ்டி மோதல் நடந்தாலும், நடக்குமோ என்ற சந்தேகம் வந்தாலும் போலீஸ் உடனடியாகச் செயல்பட்டு, கூட்டத்தைக் கலைத்துவிடும். (7) மத்திய அரசு காண்டீன் ஒன்று பந்தலின் நடுவில் அமைக்கப்படும். பிற்பகலில் ஒருமணி நேரம் லஞ்ச் பிரேக் விடவேண்டும். (8) பகலில் உண்ணாவிரதம் இருக்கத் தடையில்லை. இரவில் உண்ணாவிரதம் இருக்கக்கூடாது. அவரவர் வீட்டுக்கு சென்றுவிட்டு மறுநாள் திரும்பி வரலாம். (9) உண்ணாவிரதப் பந்தலுக்கு 25 கி.மீ.க்கு வெளியேதான் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

சந்தோஷ் ஹெக்டே : ஐயோ... அங்கேயிருந்து நடந்து வரணுமா?

டெல்லி போலீஸ் : அவசியமில்லை. ஓடியும் வரலாம். (10) மாணவர்கள் காலாண்டுத் தேர்வுக்குப் படிக்கிற நேரம் என்பதால், மாலை 6 மணிக்கு மேல் மைக் வைக்கக் கூடாது. (11) சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதற்காக, பந்தலுக்கு அருகே எங்கும் டாய்லட் வசதி ஏற்படுத்த கூடாது. தேவைப்படுபவர்கள் பஸ் பிடித்து வெளியூர் செல்லத் தடையில்லை. (12) போராட்ட முடிவில் ‘ஊழல் ஒழிந்துவிட்டது’ என்று அறிவிக்க வேண்டும் 
கெஜ்ரிவால் : இந்த நிபந்தனைகளை மீறினா என்ன பண்ணுவீங்க?

கபில்சிபல்: அன்னா ஹஸாரேவை மறுபடியும் கைது பண்ணி, ரெண்டு நாள் கழிச்சு விடுதலை பண்ணிடுவோம். அவர் வெளியே வந்து மறுபடியும் புதுசா உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கலாம்.