Wednesday, January 11, 2012

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 9

பெட்டியும், சாவியும் எங்கே? – கே.சி.லட்சுமி நாராயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 9

1944 – ஆம் ஆண்டில் சேலம் மாநாட்டில் ஜஸ்டிஸ் கட்சியின் ஒரு பிரிவினர், திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டு இயங்க ஆரம்பித்த இரண்டு வருடங்களில், திராவிடர் கழகத்தில் ஈ.வெ.ரா.வின் தலைமைக்கு ஒரு வலிமையான எதிர்ப்பு உருவாகி வளர்ந்து வந்தது.

“திராவிடர் கழக விவகாரங்களில் எவரையும் ஆலோசனை கலக்காமல் ஈ.வெ.ரா. சர்வாதிகாரியாகச் செயல்பட்டார்; கட்சியில் எவரையும் அவர் மதிப்பது இல்லை; கட்சியின் நிதி விவகாரங்கள், சொத்துக்கள் ஆகியவை பற்றி எவருக்கும் அவர் முறையாகத் தெரிவிப்பது இல்லை; கட்சியில் உள்ள எவரையும் தம் மனம் போன போக்கில் அலட்சியப்படுத்துகிறார்” என்று அண்ணாதுரை தரப்பினர் ஈ.வெ.ரா. மீது குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காகக் கூறினார்கள்.

திராவிடர் கழக உறுப்பினர்கள் குழப்பம் அடைந்தார்கள். சிலர் அண்ணாதுரையை ஆதரித்தார்கள்; சிலர் ஈ.வெ.ரா.வுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்; வேறு சிலர் ஈ.வெ.ரா.வுக்கும் நல்லவர்களாய், அண்ணாதுரைக்கும் வேண்டியவர்களாய் ஒட்டுப் போடப் பெருமுயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

ஈ.வெ.ரா.வின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமி நாயக்கர். அவர் சித்த வைத்தியராக விளங்கியவர்; பெரும் செல்வந்தர்; தூய்மையான வைணவர். அவர் எப்போதும் துவாதச திருநாமம் மேனியில் துலங்கக் காட்சி தருவார் என்று ராஜாஜி ஒரு பொது நிகழ்ச்சியில் ஒருமுறை குறிப்பிட்டார். கிருஷ்ணசாமி நாயக்கருக்குச் சம்பத், செல்வன், மிராண்டா, செல்லா என்று நான்கு மக்கள். மூத்த புதல்வர் சம்பத் பொதுவாழ்வில் இளமைக்காலம் முதல் அண்ணாதுரையுடன் சேர்ந்து பணியாற்றினார். தம்முடன் பழகியவர்களில் சம்பத் ஒருவரை மட்டுமே அவன், இவன் என்று அண்ணாதுரை பொது மேடைகளிலும் அன்புடன் குறிப்பிடுவார். அந்த அளவுக்கு இருவருக்கும் இடையே நெருக்கம் இருந்தது.


சம்பத்

திராவிடர் கழகத்தில், தனது சித்தப்பா ஈ.வெ.ரா.வின் தலைமைக்கு எதிராக, அண்ணாதுரையுடன் சம்பத் மிகவும் தீவிரமாக வேலை செய்தார். 
சம்பத் தகவல் 
“1949– ஆம் ஆண்டில்தான் திராவிடர் கழகத்திலிருந்து நாம் பிரிந்தோம். ஆனால், திராவிடர் கழகத்திற்குள் குமுறல் 1946– ஆம் ஆண்டு முதலே இருந்து வந்தது. திராவிடர் கழகம் ஒரு நல்ல அரசியல் கட்சியாக, ஜனநாயக முறைப்படி இயங்கவில்லை என்று அண்ணாதுரையும், நாங்களும் வருத்தப்பட்டோம்” என்று, 1961– ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கட்சி என்ற ஒரு புதிய கட்சியை ஆரம்பித்த பிறகு, அக்கட்சியின் துவக்க விழா கூட்டத்தில் நிகழ்த்திய நீண்டதொரு உரையில் ஈ.வெ.கி.சம்பத் கூறினார்.

அந்த நீண்ட உரையில் திராவிடர் கழகம் சம்பந்தமான பல செய்திகளை சம்பத் குறிப்பிட்டார். அவற்றைச் சுருக்கமாக கீழே தருகிறேன்.

“1947 ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தைத் துக்க தினமாக அனுசரிப்பது என்ற ஈ.வெ.ரா.வின் முடிவு தவறு என்ற எண்ணம், திராவிடர் கழகத்தின் பல இளைஞர்களின் உள்ளத்தில் இருந்தது. எனினும் அந்த எண்ணத்தை வெளியிட ஸ்தாபனத்தில் இடம் இல்லாமல் இருந்தது; வாய்ப்பு இல்லாமல் இருந்தது; கமிட்டிகள் கூடாத கமிட்டிகளாகவே இருந்து விட்டன.

“இந்த நிலையில்தான் தூத்துக்குடி (திராவிடர் கழக) மாகாண மாநாடு நடைபெறப் போவதாக அறிவிக்கப்பட்டது. உடனே தோழர் நெடுஞ்செழியன் தனது ‘மன்றம்’ இதழில், ‘இப்போது மாநாடு எதற்காகக் கூடுகிறது, கட்சியின் கமிட்டிகள் எல்லாம் செயலற்றுக் கிடக்கும்போது, மாநாட்டில் கூடுவதும் பேசுவதும் எதற்காக?’ என்றெல்லாம் எழுதினார்.

“உடனே இதுகுறித்து நாடு பூராவிலும் உள்ள கழகத் தோழர்களிடையே சிறு சர்ச்சை எழுந்தது. மாநாட்டிற்கு வந்தால், நெடுஞ்செழியன் அடிக்கப்படுவார் என்று கூடப் பேசப்பட்டது. உடனே நாங்கள் எல்லோரும் திருச்சியில் தோழர் சாம்பு இல்லத்தில் கூடி, தூத்துக்குடி மாநாட்டில் கலந்து கொள்வது இல்லை என்று முடிவு செய்தோம்” என்று சம்பத் தெரிவித்தார். அதன்படி தூத்துக்குடி மாநாட்டில் சம்பத்தும், அவரது ஆதரவாளர்களும் கலந்து கொள்ளவில்லை.

மாநாட்டிற்கு அண்ணாதுரை ஏன் வரவில்லை என்ற கேள்வி ஈ.வெ.ரா.விடம் கேட்கப்பட்டது. “இதுமாதிரி அவன் வரவில்லை, இவன் வரவில்லை என்று என்னிடம் கேட்காதீர்கள். இது என்ன பாட்டுக் கச்சேரியா, சுப்புலெட்சுமி ஏன் வரவில்லை என்று கேட்பதற்கு?” என்று ஈ.வெ.ரா. சூடாகப் பதிலளித்தார்.

எனினும் தூத்துக்குடி மாநாட்டை அண்ணாதுரை பகிஷ்கரித்ததால் ஏற்பட்ட விளைவுகளைச் சமாளிக்க ஈ.வெ.ரா. விரும்பினார் என்று தோன்றுகிறது. அந்த மாநாடு முடிந்த பிறகு, “இவர்களுக்கு என்ன மனக்குறை, கேட்டு வாருங்கள்” என்று அண்ணாதுரையிடம் பெத்தாம்பாளையம் பழனிச்சாமியை தூது அனுப்பினார். திராவிடர் கழகத்தில் இருந்த நிலைமைகளையும், தங்களது மனக்குமுறல்களையும், அண்ணாதுரையின் சார்பில் சம்பத் அவரிடம் எடுத்துச் சொன்னார். 
பெட்டியும் சாவியும்

பிறகு ஈ.வெ.ரா. ஒரு சமரச ஏற்பாட்டைத் தெரிவித்தார். அதன்படி பெத்தாம்பாளையம் பழனிச்சாமியை வரவேற்புக் கமிட்டித் தலைவராகப் போட்டு, ஈரோட்டில் ஒரு தனி மாநாடு நடத்துவது என்றும், அந்த மாநாட்டில் மனக்குறைகள் நீக்கப்படும் என்றும் ஈ.வெ.ரா. தெரிவித்ததாக சம்பத் தமது உரையில் விவரித்தார்.

ஈரோடு மாநாடு அண்ணாதுரை தலைமையில் 1948 அக்டோபர் 23, 24 ஆகிய நாட்களில் நடந்தது. 1947 ஆகஸ்ட் 15 துக்க நாள் கருத்து, எதிர்க் கருத்து சர்ச்சைக்குப் பிறகு அண்ணாதுரையும், ஈ.வெ.ரா.வும் அந்த மாநாட்டில் ஒரே மேடையில் கலந்து கொண்டார்கள்.

“பெட்டிச் சாவியை அண்ணாதுரை கைகளில் கொடுத்துவிட்டேன்” என்று அந்த மாநாட்டில் ஈ.வெ.ரா. அறிவித்தார். அதாவது கட்சியின் வரவு செலவுக் கணக்குகள் அடங்கிய நிதி, அண்ணாதுரையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது என்று ஈ.வெ.ரா. பகிரங்கமாகத் தெரிவித்தார்.

ஈ.வெ.ரா.வின் அறிவிப்பு கழக உறுப்பினர்களை ஏமாற்றிய ஒரு நாடகம் என்று அடுத்த வாரமே அண்ணாதுரை அம்பலப்படுத்தினார்.

“பெட்டிச் சாவியைக் கொடுத்ததாக பெரியார் பேசியதால், பலர் திராவிடர் கழகத்திற்கு நான் தலைவன் ஆக்கப்பட்டு விட்டேனோ என்று சந்தேகப்படுகிறார்கள். எப்போதும் போல் தி.பொ.வேதாசலம்தான் நிர்வாகத் தலைவர். இதில் ஒன்றும் மாற்றம் இல்லை” என்று அண்ணாதுரை ‘திராவிட நாடு’ இதழில் விளக்கம் தந்தார்.

“சாவியைக் கொடுப்பதாகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் ஐயா (ஈ.வெ.ரா.) சொன்னாரே தவிர, சாவியையும் தரவில்லை! பெட்டியையும் தரவில்லை! மாநாட்டில் மிச்சப்பட்ட பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பணத்தோடு, பெட்டியும் சாவியும் ஐயாவின் (ஈ.வெ.ரா.வின்) சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீரான்சாகிபு வீட்டில்தான் இருந்தன” என்று இராம.அரங்கண்ணல் சில ஆண்டுகளுக்குப் பிறகு, ‘திராவிடன்’ இதழில் (26.9.1956) எழுதி இந்த உண்மையை மீண்டும் பதிவு செய்தார். 
ஈ.வெ.ரா. பிரசாரம்

ஆக, “ஈரோடு மாநாடு முடிந்த பிறகும், திராவிடர் கழகத்தில் காரியங்கள் முன்போலவே நடைபெற்று வந்ததால், வெளியே மக்களிடையே அண்ணாதுரையும் ஈ.வெ.ரா.வும் ஒன்றுபட்டு விட்டார்கள் என்று பேசப்பட்டாலும், உள்ளே மனக்குமுறல் நீங்கிய பாடில்லை” என்று சம்பத் தமது உரையில் தெரிவித்தார்.

“அதன் பேரில், உள்ளே இருந்து கொண்டே அண்ணாதுரை ஒத்துழையாமை செய்யத் துவங்கினார். ‘திராவிட நாடு’ இதழில் கேள்வி–பதில் பகுதி ஒன்றைத் துவக்கினார். பல பத்திரிகை ஆசிரியர்கள் செய்வதைப் போலவே, இவரும் தானாகவே கேள்விகளை எழுதி, அதற்குப் பதில்களையும் எழுதினார். ‘நீங்கள் திராவிடர் கழகத்திலிருந்து விலகி விட்டீர்களா?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டு, அதற்கு ‘விலகவில்லை, ஒதுங்கியிருக்கிறேன்’ என்று பதிலும் எழுதினார். இந்தப் போக்கு பிடிக்காதவராக ‘இவர்கள் எல்லோரும் துரோகிகள்’ என்ற திண்ணைப் பேச்சை பெரியார் முடுக்கி விட்டார்” என்று சம்பத் தமது உரையில் மேலும் தெரிவித்தார்.

ஈரோடு மாநாட்டிற்குப் பிறகு, கரூர் நகரைச் சேர்ந்த திராவிடர் கழகத் தோழர்கள் சிலர் மீது, கலவர வழக்கு ஒன்று வந்து சேர்ந்தது. அந்த வழக்கை நடத்த ஈ.வெ.ரா. பணம் தர மறுத்து விட்டார். உடனே அண்ணாதுரையும், அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நிதியை மிச்சப்படுத்தி, கரூர் கலவர வழக்குக்காக ஈ.வெ.ரா.விடம் கொடுத்தார்கள்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகும் திராவிடர் கழகத்திற்குள் குமுறல் நீடித்து வந்தது. அண்ணாதுரையும், நெடுஞ்செழியன், சம்பத் முதலியவர்களும் கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல், பாரதி படிப்பகம் போன்ற பெயர்களில் உள்ள மன்றங்கள் சார்பில், பல ஊர்களில் நடந்த கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வந்தார்கள்.

அண்ணாதுரை ஓர் உல்லாச மனிதர் என்றும், சோம்பேறி என்றும் ஈ.வெ.ரா. மூலம் ஒரு பிரசாரம் தீவிரமாக நடந்தது. அண்ணாதுரை அரசியலுக்கு லாயக்கற்றவர் என்று காட்டவும் ஈ.வெ.ரா. முயன்றார். இந்த முயற்சிகள் அனைத்தையும் சில ஆண்டுகளுக்குப் பிறகு இராம.அரங்கண்ணல் ஒரு கட்டுரையில் அம்பலப்படுத்தினார்.

ஆதார நூல்கள்: 
கட்சிப் பிறந்தது - ஈ.வெ.கி. சம்பத் தமிழ்த் தேசியக் கட்சி துவக்க விழா கூட்டத்தில் நிகழ்த்திய உரை.
வெளியிட்டோர்: கண்ணதாசன் பதிப்பகம், 2/127, மவுண்ட்ரோடு, சென்னை - 6 (1961 ஜூலை)

(தொடரும்)