Wednesday, January 11, 2012

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 7

சி.சுப்பிரமணியம் தெரிவித்த உண்மை! – கே.சி.லட்சுமிநாராயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 7

ஈ.வெ.ரா. தலைமையில் நடந்த சேலம் மாநாட்டில், கீழ்க்கண்ட அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“திராவிடர் கழகத்தின் முக்கிய கொள்கைகளில் திராவிடர் நாடு என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம், மத்திய அரசாங்க நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லாததும், நேரடி பிரிட்டிஷ் செக்ரிட்டரி ஆஃப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதுமான ஒரு தனி (ஸ்டேட்) நாடாகப் பிரிக்கப்பட வேண்டுமென்ற கொள்கையை, முதற் கொள்கையாக சேர்க்கப்பட்டிருக்கிறது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது.”

(‘நமது குறிக்கோள்’, ‘விடுதலை’ வெளியீடு – 1948; பக்.38)

திராவிட நாடு என்ற பெயருடன் சென்னை மாகாணத்தின் வருங்கால ஆட்சி அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது சம்பந்தமான ஒரு கோரிக்கையை, இந்தத் தீர்மானம் தெரிவித்ததைக் காண்கிறோம்.

1940 – ஆம் வருடத்தில் திருவாரூரில் ஈ.வெ.ரா. தலைமையில் நடந்த மாநாட்டிலும், இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்ட திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தியும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன்.

“திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம், (பிரிட்டிஷ்) இந்திய மந்திரியின் நேர்ப் பார்வையின் கீழ் ஒரு தனி நாடாகப் பிரிக்கப்பட வேண்டும்” என்று அதில் கோரப்பட்டது. 
ஆனால் சேலம் மாநாட்டில், “பிரிட்டிஷ் செக்ரிட்டரி ஆஃப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதான ஒரு தனி (ஸ்டேட்) நாடாகப் பிரிக்கப்பட வேண்டும்” என்று கோரப்பட்டது. நேரடிப் பார்வையில் இருப்பது கூட போதாது என்று கருதி, பிரிட்டிஷ் செக்ரிட்டரி ஆஃப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்ற கோரிக்கையின் பொருள், இந்தியா முழுவதும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு வெளியேறிய பிறகும், சென்னை மாகாணத்தில் மட்டும் அது என்றென்றும் நீடித்திருக்கலாம் என்பதே ஆகும்.

இந்த தீர்மானம் ஈ.வெ.ரா., அண்ணாதுரை கூட்டத்தினரின் அடிமைப் புத்தியைத் தெளிவாக அம்பலப்படுத்தியது.

திராவிடம் என்ற சொல்லின் பொருள் தெளிவாக இல்லாத நிலையிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒருபுறம் ஐஸ்டிஸ் கட்சியினரை மிரட்டுவதற்கும், மற்றொருபுறம் தமிழகத்தைச் சேர்ந்த எளிய அப்பாவி மக்களைத் தனித் திராவிட நாடு என்ற கவர்ச்சிகரமான கோஷத்தின் மூலம் ஏமாற்றவும், இந்தத் தீர்மானத்தை ஈ.வெ.ரா., அண்ணாதுரை கூட்டத்தினர் பயன்படுத்தினார்கள்.

யுத்த ஆதரவுப் பிரசாரம்

ரண்டாம் உலக யுத்தத்தின் போது திராவிடர் கழகத்தினர் யுத்த ஆதரவுப் பிரசாரம் செய்தார்கள். ஈ.வெ.ரா.வின் தமிழ் தினசரிப் பத்திரிகையான ‘விடுதலை’, யுத்தப் பிரசாரத்திற்காகச் சென்னை மாகாண அரசுக்குக் குத்தகைக்குத் தரப்பட்டது.

“எங்களைப் பிரசாரத்திற்கு உயோகப்படுத்திக் கொள்ளுங்கள்; சுதந்திரத்திற்காகப் போராடும், சிறை வைக்கப்பட்டிருக்கும் தேசத் தலைவர்களை, நாக்கிலே நரம்பின்றி ஏச வேண்டுமா? நாங்கள் தயார். இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்துள்ள பிரிட்டனை உலகத்தின் ஜனநாயகக் காவலன் என்று புகழாரம் சூட்ட வேண்டுமா? அதற்கும் நாங்கள் தயார். எங்களுக்கு உரிய கூலியை மட்டும் கொடுத்து விட்டால் போதும் – என்ற கருத்துப்படும் வகையில் வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவும் இல்லாமல் பிரிட்டனுக்கு ஆதரவாக யுத்தப் பிரசாரம் செய்தார்கள், திராவிடர் கழகத்தினரும், ஜஸ்டிஸ் கட்சியினரும்.

சி.சுப்பிரமணியம் இளம் வயதில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். விடுதலை பெற்ற இந்தியாவில் அவர் தமிழ்நாட்டில் அமைச்சராகவும், பிறகு மத்திய அமைச்சராகவும் பணிபுரிந்தார். மகாராஷ்டிர மாநில ஆளுநராகவும் அவர் சிறிது காலம் பொறுப்பு வகித்தார். 


சி.சுப்பிரமணியம்

‘என் வாழ்க்கை நினைவுகள்’ என்ற தலைப்பில் சுப்பிரமணியம் தமது சுய சரித்திரத்தை எழுதியிருக்கிறார். ‘திருப்புமுனை’ என்ற தலைப்புக் கொண்ட அந்த நூலின் முதல் தொகுதியில், இரண்டாம் உலக யுத்தத்தின்போது அண்ணாதுரை, ஏகாதிபத்திய பிரிட்டிஷ் அரசின் பிரசாரகராக இருந்தார் என்ற செய்தி தரப்பட்டிருக்கிறது.

“பிரிட்டிஷ் அரசின் யுத்த முயற்சிக்குத் திராவிடர் கழகம் முழு ஒத்துழைப்பு அளித்தது” என்றும், “இந்தியாவில் பிரிட்டிஷ் அரசுக்கும் யுத்த முயற்சிகளுக்கும் இந்திய மக்களின் ஒத்துழைப்பைத் திரட்டுவதற்காக அண்ணாதுரை ஒரு பிரசாரகராக நியமிக்கப்பட்டார்” என்றும் சி.சுப்பிரமணியம் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

மனுவில் கையெழுத்து

ந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்து விடும் என்றிருந்த தருவாயிலும், ஆங்கிலேய அரசினர் இந்தியாவிலிருந்து வெளியேறக் கூடாது என்ற நிலையைத் திராவிடர் கழகம் எடுத்ததையும் சி.சுப்பிரமணியம் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

“இரண்டாது உலக யுத்தத்தின் இறுதியில் பிரிட்டிஷ் அரசுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையே இந்தியாவின் அரசியல் சுதந்திரம் பற்றிப் பேச்சுக்கள் ஆரம்பித்தபோது, இந்தியாவை விட்டு பிரிட்டிஷார் வெளியேறினால் ‘வடஇந்திய ஆரியர்கள்’ திராவிடர் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என்றும், எனவே பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து வெளியேறுவது விரும்பத்தக்கது இல்லை என்றும், ஒரு நிலையைத் திராவிடர் கழகம் எடுத்தது.

“கட்சித் தலைவர்கள் கையெழுத்திட்ட ஒரு மனுவைப் பிரிட்டிஷ் அரசுக்குத் திராவிடர் கழகம் அனுப்பியது. ‘இந்தியாவுக்கு விடுதலை வழங்குவது பற்றி பிரிட்டிஷ் அரசு சிந்திக்கக் கூடாது. எனினும் சுதந்திரம் வழங்க பிரிட்டிஷ் அரசு முடிவு செய்யுமானால், சென்னை மாகாணம் சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க விட்டு விடக்கூடாது. சென்னை மாகாணம் பிரிட்டிஷ் அரசின் பாதுகாப்பின் கீழ் தொடர்ந்து இருந்து வரவேண்டும்’ என்று அந்த மனு வற்புறுத்தியது” என்றும் சி.சுப்பிரமணியம் எழுதியிருக்கிறார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் இந்த மனு விவகாரம் குறித்த ஒரு விவாதத்தின்போது, அண்ணாதுரையை அமைச்சர் சி.சுப்பிரமணியம் நேரடியாகவே கேட்டார்.
(அப்போது காமராஜ் முதலமைச்சர்; சுப்பிரமணியம் அமைச்சர்; அண்ணாதுரை சட்டப் பேரவையில் தி.மு.க. கட்சியின் தலைவர்.)

“தி.மு.க.வினரின் தேச பக்தி குறித்து, காங்கிரஸ் பிரதிநிதி என்ற வகையில் நான் சந்தேகம் கொள்ளக் கூடாது என்று, ஒரு விவாத்தின்போது அண்ணாதுரை கூறினார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும், சென்னை மாகாணத்தை மட்டும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வைத்திருக்க வேண்டும் என்று கோரி, பிரிட்டிஷ் அமைச்சரிடம் தரப்பட்ட மனுவில் கையெழுத்திட்டவர்களில் நீங்களும் ஒருவர் என்று அப்போது நான் அண்ணாதுரையைப் பார்த்துப் பரிகாசம் செய்தேன்.

“இந்தப் பின்னணியில் தி.மு.க.வினரின் தேச பக்தி குறித்து நாங்கள் சந்தேகப்படுவது நியாயமே. எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடம் அளிக்காமல் உங்களது தேச பக்தியை நீங்கள் (தி.மு.க.வினர்) நிலை நாட்டவில்லையென்றால், உங்களது கடந்த கால வரலாறு என்றும் நினைவில் இருக்கும் என்றும் நான் கூறினேன்” என்று சி.சுப்பிரமணியம் விளக்கமாகவே தெரிவித்திருக்கிறார்.

சட்டப் பேரவையில் நேருக்கு நேராக அண்ணாதுரையைப் பார்த்து, சி.சுப்பிரமணியம் கூறியவை இந்த வாசகங்கள்.

சென்னை மாகாணத்திற்கு மட்டும் சுதந்திரம் அளிக்காமல், ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் அதை என்றென்றும் அடிமைப் பகுதியாக வைத்திருக்க வேண்டும் என்று கோரிய மனுவில் கையெழுத்திட்டவர்களில் ஒருவர் அண்ணாதுரை என்ற உண்மையை, சட்டப் பேரவையில் அண்ணாதுரை எதிரில் வீற்றிருக்கச் சுப்பிரமணியம் தெளிவான சொற்களில் வெளியிட்டார்.

அண்ணாதுரை அதை மறுக்க இயலவில்லை. அதுதான் திராவிடக் கட்சிகளின் ‘வரலாறு.’

அநாகரிக ஏசல்கள் 
சேலம் மாநாடு முடிந்து, அதில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தைத் தொடர்ந்து, ஈ.வெ.ரா. தலைமையில் திராவிடர் கழகம் என்ற பெயரில் ஒரு திராவிடக் கட்சி செயல்பட ஆரம்பித்ததும், ஜஸ்டிஸ் கட்சியினரும், திராவிடர் கழகத்தவரும் பரஸ்பரம் மிகவும் அநாகரிகமாக ஏசிக் கொண்டார்கள்.

“நேற்று வரையில் எங்களிடம் அவ்வப்போது பணம் வாங்கிக் கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்தவர்கள், இன்று திடீரென்று விசுவாசம் மாறி விட்டார்கள்” என்று ஜஸ்டிஸ் கட்சியினர் பிரசாரம் செய்தார்கள்.

“ஜஸ்டிஸ் கட்சி ஆடம்பர ஆசாமிகளின் கூடாரம்; அதில் தொண்டர்களே கிடையாது” என்று அண்ணாதுரை தரப்பினர் பதில் பிரசாரம் செய்தார்கள்.

1947 ஆகஸ்ட் 15– ஆம் தேதி இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிக்கப்படும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது. உடனே ஈ.வெ.ரா. பலரையும் திடுக்கிட வைத்த ஓர் அறிக்கையை வெளியிட்டார்; அண்ணாதுரை கொதித்து எழுந்தார். ஈ.வெ.ரா.வின் அறிக்கையைக் கடுமையாகக் கண்டித்து, அவர் திராவிட நாடு இதழில் நீண்ட ஒரு கட்டுரையை எழுதினார். அந்த ‘வரலாறு’ அடுத்த இதழில்.

ஆதார நூல்கள்: 

1. என் வாழ்க்கை நினைவுகள் - முதல் தொகுதி: திருப்புமுனை.
எழுதியவர் சி.சுப்பிரமணியம்.
வெளியிட்டோர்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், அம்பத்தூர், சென்னை -98.
முதற்பதிப்பு ஜனவரி (1994)

2. விடுதலைப் போரில் தமிழகம் - இரண்டாவது தொகுதி.
ஆசிரியர். ம.பொ.சிவஞானம் - (1983).