Friday, February 20, 2009

விதி

விதி என்றால் என்ன? newton's law என்பதை newton-இன் விதி என்கிறோம். அதே போல the nature's law is விதி.

விதிப்படி நடக்கும் என்றால் இயற்கையின் படி, இயற்கை விதியின் படி நடக்கும் என்று பொருள். இயற்கையை யாராவது மாற்ற முடியுமா? நெருப்பில் கை வைத்தால் சுடும். மாடியிலிருந்து கீழே விழுந்தால் மண்டை உடையும். இது விதி.

நல்லது செய்தால் நல்லது நடக்கும். கெட்டது செய்தால் கெட்டது நடக்கும். இதுவே விதி. கெட்டவன் நன்றாக இருக்கிறானே, நல்லவன் எல்லாம் கஷ்டப் படுகிறானே என்று கேட்பவர்கள் உண்டு.

இந்த விதிக்கு அதிருஷ்டம் என்று ஒரு பேர் உண்டு. நாம் அதிருஷ்டம் என்பதை luck எனும் அர்த்தத்தில் தான் பயன்படுத்துகிறோம். ஆனால் உண்மையில் அதன் பொருள் கண்ணுக்கு தெரியாதது என்பதே ஆகும். திருஷ்டி- பார்வை, த்ருஷ்டம் - தெரிவது, அதிருஷ்டம் -தெரியாதது.

இந்த விதி என்பது கண்ணுக்கு தெரிவதில்லை. சில விதிகள் உடனே செயல் படும். சில விதிகள் அதற்குரிய நேரத்தில் செயல் படும். பப்பாளி மரம் 6 மாதத்தில் வளர்ந்து 2 வருடத்தில் பழம் கொடுக்கும். ஆனால் தென்னை மரம் 15 வருடங்கள் வளர்ந்த பின் தான் இளநீர் கொடுக்கும். ஒவ்வொன்றிற்கும் இயற்கை ஒரு கால நேரம் வைத்திருக்கிறது அல்லவா. அந்த அந்த நேரத்தில் தான் பலன் கொடுக்க ஆரம்பிக்கும். பலன் என்பதே பலம்(फलम), பழம் என்பதன் திரிபே ஆகும். to bear fruit, fructify என்பார்கள்.

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமைக்கும் ஏமாப் புடைத்து

என்றான் வள்ளுவன். பல பிறவிகள் உண்டு என்பதற்கு வள்ளுவமே சான்று.

வள்ளுவனை ஏன் சொல்கிறேன் என்றால் பகுத்தறிவுவாதிகளும் மறுக்க முடியாதவன் என்பதால்.

சில செயல்கள், கர்மங்கள் உடனே பலன் தரும். சில செயல்கள் பின் வரும் பிறவிகளில் தான் பலன் தரும்.

கடவுளை ஒப்பாதவர்கள் கூட இயற்கையை ஒப்புகிறார்கள். இயற்கை தப்பே செய்யாது என்று ஒத்துக் கொள்கிறார்கள். அந்த இயற்கை தான் இத்தனை ஏற்றத் தாழ்வுகளையும் படைத்திருக்கிறது. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை விடுங்கள்.
அதற்கு கம்யுனிஸ்ட்டுகள் முதற்கொண்டு பல பேர் பல காரணம் சொல்வார்கள்.

மற்றபடி தான் எத்தனை வித்தியாசங்கள். அழகில், அறிவில், நிறத்தில், நடத்தையில், ஒழுக்கத்தில் என்று இத்தனை விதமாக இயற்கை படைத்திருக்கிறதே. ஏன்? விதி. இயற்கையின் சட்டம். நாம் போடும் சட்டங்கள் போல் அதை வளைக்க முடியாது.

புண்ணியம் செய்தவன் நல்லபடி பிறக்க வேண்டும். பாவம் செய்தவன் துன்பம் அனுபவிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் இந்தப் பிறவியை மட்டும் பார்த்தால் குழப்பம் தான் மிஞ்சும்.