Tuesday, February 17, 2009

தமிழைப் படுத்தாதீர்கள்!!

தமிழ் என்பதே மிகவும் அழகான வார்த்தை.

த - வல்லினம்
மி- மெல்லினம்
ழ் - இடையினம், என்று தன் பெயரிலேயே மொழியியல் பிரயோகம் கொண்டது.

தமிழ் ரசனையுடன் இருந்தால், அதனை ரசித்து அனுபவிக்கத் தோன்றும்.

தமிழ் வெறியுடன் திரிந்தால், மற்றவர்களை அடிக்கத் தான் தோன்றும்.

பல பிறமொழி வார்த்தைகள் தமிழில் கலந்து தமிழாகிப் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. அதை எல்லாம் தமிழ்ப்படுத்துவது என்பது, தமிழைப் படுத்துவது தான்.

டம்ளர் என்பது தமிழ் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். குவளை என்பதே சரியான வார்த்தை. ஆனால் குவளை என்பது எத்தனைப் பேருக்கு புரியும். அதை விட எளிமையான டம்ளர் என்ற சொல்லைப் பயன் படுத்தினால் என்ன குடியா முழுகி விடும். இல்லை என்றால் அதையும் விட எளிமையான கிளாஸ் என்ற தமிழ் வார்த்தையைப் பயன் படுத்தினால் போகிறது.

இது போல், ரசீது, தயார், தயாரிப்பு, தம்புரா, வாத்தியார், லிங்கம், சிவம், ஜன்னல், ஆப்பிள், அதிகாரி, தந்தம், சூரியன், சந்திரன், நட்சத்திரம், விதி, மதி, சதி, சுகம், துக்கம், டீ, காபி, என்று ஆயிரக் கணக்கான ஏன், லட்சக்கணக்கான பிறமொழி வார்த்தைகள் தமிழில் இருக்கின்றன. லட்சம் என்பதே தமிழ் கிடையாது!!

இவற்றை எல்லாம் அப்படியே உபயோகிப்பது நலமா அல்லது கஷ்டப்பட்டு இவற்றிற்கு கொட்டை வடி நீர், சுய முயற்சியால் பெற்ற தற்காப்புக் குறைவு அடைவு (aids) என்று யாருமே உபயோகப்படுத்தாத வார்த்தைகளைக் கண்டுபிடிப்பது நலமா என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.